கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் பங்கேற்பு செயல் தந்திரமா? போர்த்தந்திரமா?

மஞ்சுளா.G

கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் பங்கேற்பு   செயல் தந்திரமா? போர்த்தந்திரமா?

தேர்தலில் பங்கேற்பதை குறித்து இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே வேறுபாடு நிலவுகிறது. சிபிஐ, சிபிஐ(எம்) ஆகிய கட்சிகள் தேர்தல் பங்கேற்பை ஏற்கின்றன. சில சிபிஐ(எம்எல்) கட்சிகளைத் தவிர்த்து மற்ற சிபிஐ(எம்எல்), மாவோயிஸ்ட் கட்சிகள் தேர்தலை புறக்கணிக்கின்றன.  

தேர்தலில் பெருமளவிற்கான வெற்றியை நீங்கள் பெறுவதில்லையே? என கேள்வி எழுப்பப்படும்போது, தேர்தல் வெற்றி மட்டுமே எங்கள் நோக்கமல்ல, மக்கள் போராட்டங்களை கட்டியெழுப்புவதை முக்கியமானதாக கருதுகிறோம் என்றே இக்கட்சிகள் கூறுகின்றன. அதோடு, இடதுசாரி கட்சிகள் அனைத்துமே முதலாளித்துவ தனியுடைமையை ஒழித்து சோசலிச சமூகம் அமைப்பதை நோக்கமாகவும் பெரும்பாலான கட்சிகள் அதன் முதற்கட்டமாக ஜனநாயக புரட்சியை நடத்திமுடிக்க வேண்டும் எனவும் அதற்கான தனி திட்டத்தையும் கொண்டுள்ளன. 

இடதுசாரிகளிடையே தேர்தல் புறக்கணிப்பு, ஆதரவு என்ற மாறுபட்ட கண்ணோட்டம் காணப்படுவதால், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் பங்கேற்கலாமா? கூடாதா? அதற்கான மார்க்சிய வழிகாட்டுதல் என்ன? என்ற கேள்வி எழுகிறது. ‘முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாமா?’ என்று இடதுசாரி கம்யூனிசம்-இளம் பருவக் கோளாறு என்ற நூலில் தனி ஒரு அத்தியாயத்தையே லெனின் எழுதியுள்ளது இதற்கான பதிலாக அமைகிறது.

அதில் “முதலாளித்துவ நாடாளுமன்றங்களையும் இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் உங்களிடம் இல்லாதவரை, அவற்றில் நீங்கள் வேலை செய்தே ஆகவேண்டும்” என்கிறார் லெனின். மேலும், “போல்ஷிவிக்குகளான நாங்கள் படுமோசமான எதிர்புரட்சி நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொண்டோம். இவ்வாறு பங்கு கொண்டதானது, ருஷ்யாவில் முதலாவது முதலாளித்துவப் புரட்சிக்கு(1905) பிறகான, இரண்டாவது முதலாளித்துவப் புரட்சிக்கும்(பிப்ரவரி 1917), பிற்பாடு சோசலிசப் புரட்சிக்கும்(அக்டோபர் 1917) பாதையைச் செப்பனிடுவதற்குப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்க கட்சிக்குப் பயனுள்ளதாக இருந்ததுடன்கூட அத்தியாவசியமாகவும் இருந்ததென்பதை அனுபவம் தெளிவு படுத்தியிருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

அதோடு, “முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கு கொள்வதை எல்லா நிலைமைகளிலும் நிராகரிக்க கூடாது என்று பொதுவாகவே யாராவது கருதினால், அது தவறே ஆகுமென்பதில் சந்தேகமில்லை. புறக்கணிப்பு பயனுள்ளதாயிருக்கும் நிலைமைகளை வரையறுக்க இங்கு நான் முயற்சிப்பதற்கில்லை. ஏனெனில் இந்தக் கட்டுரையின் நோக்கம் அவ்வளவு விரிவானதல்ல” என்கிறார்.

இவற்றிலிருந்து, எல்லா காலங்களிலும் தேர்தலில் பங்கேற்க வேண்டும் அல்லது தேர்தலை நிரந்தமாக புறக்கணிக்க வேண்டும் என்ற இரண்டுமே தவறு என்பதே மார்க்சிய நிலைபாடு என நாம் கொள்ளலாம். தேர்தல் பங்கேற்பை ஒரு செயல்தந்திரம்(tactics) என்பதாக அக்கட்டுரை குறிப்பிடுகிறது.

போர்த்தந்திரம் (strategy) மற்றும் செயல்தந்திரம்(tactics)

தேர்தல் பங்கேற்பு என்பது ஒரு செயல்தந்திரம்(tactics) மட்டுமே — அது போர்த்தந்திரம்(strategy) அல்ல. “போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் என்பவை பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை வழிநடத்தும் ஒரு அறிவியலாகும்” என்கிறார் ஜோசப் ஸ்டாலின். அவர் எழுதிய ‘லெனினிசத்தின் அடிப்படைகள்’ என்கிற நூல் போர்தந்திரம், செயல்தந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக உள்ளது. 

அதில், போர்த்தந்திரம்(Strategy)என்பது – “புரட்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தொழிலாளி வர்க்கம் பிரதான தாக்குதலை எந்த திசையில் தொடுக்க வேண்டும் என்பதை நிச்சயிப்பதும் புரட்சி சக்திகளை அதற்கு ஏற்றாற்போல் எப்படியெப்படி அமைத்து எங்கெங்கு நிறுத்துவது என்று விரிவாக திட்டம் வகுப்பதும், புரட்சியின் அந்த குறிப்பிட்ட கட்டம் பூர்த்தியாகும் வரையில் அந்த திட்டத்தை நிறைவேற்ற போராடுவதேயாகும்” என்கிறார்.

அதாவது, ஒரு குறிப்பிட்ட கட்டம் முழுமைக்குமாக, கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவிருக்கும் வர்க்கப் போராட்டத்தில் மக்களின் முக்கிய எதிரி யார்? போராட்டம் யாருடைய தலைமையில்? யாருடனெல்லாம் அணிசேர வேண்டும்? என்பதை தீர்மானிப்பதாகும். ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு இது அடிப்படைத்திட்டம்(Strategy) ஆகும். 

செயல் தந்திரம்(tactics) என்பது – “புரட்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைக் கடக்கிறபோது, இடைவழியில், இயக்கத்தின் வெள்ளம் பெருகுவதும், வடிவதும், புரட்சியின் அலை ஓங்குவதும், ஓய்வதுமான ஒப்பு நோக்கில் குறுகியதான காலகட்டத்தில் தொழிலாளி வர்க்கம் நடந்துகொள்ள வேண்டியதின் முறையை நிர்ணயிப்பது” ஆகும் என்கிறார். 

அதாவது, புரட்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் எழும் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப தேர்தலில் பங்கேற்பதா? புறக்கணிப்பதா? வேலைநிறுத்தமா? ஆயுதம் தாங்கிய எழுச்சியா? போராட்டமா? கிளர்ச்சியா? என்பதான வடிவங்களில் எதை பயன்படுத்துவது என்பதை தீர்மானித்து செயல்படுத்துவதாகும். “செயல்தந்திரம்(tactics) என்பது போர்த்தந்திரத்துக்கு (Strategy) உட்பட்டதாகும்” என்கிறார் ஸ்டாலின். புரட்சியின் ஒரு கட்டத்தில் போர்த்தந்திரம் மாறாமல் இருக்கும்போது, செயல்தந்திரம் பலமுறை மாறக்கூடும். இவற்றை தெளிவாக புரிந்து கொள்ள ரஷ்யப் புரட்சியின் நடைமுறை அனுபவத்தை சுருக்கமாக பார்ப்போம். 

ரஷ்ய புரட்சியின் இலக்கு

‘ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின்’ 1903ஆம் ஆண்டு காங்கிரசில் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டம்(Programme) இரண்டு பகுதிகளை உள்ளடக்கியிருந்தது.

  1. குறைந்தபட்ச திட்டம் - ஜாரின் எதேச்சதிகார ஆட்சியை வீழ்த்தி ஜனநாயக குடியரசை நிறுவ வேண்டும். அதற்கு பொது வாக்குரிமை, பேச்சு, எழுத்திற்கான சுதந்திரம், 8மணிநேர வேலை, நிலச்சுவான்தார்களால் பறிக்கப்பட்ட நிலங்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு வழங்குதல், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடுதல். இதன் சாரம்: முதலில் புரட்சியின் ஜனநாயக கட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.

  2. உயர்ந்தபட்ச திட்டம் - சோசலிச புரட்சி நடத்தப்பட்டு முதலாளித்துவ தனியுடைமை ஒழிக்கப்பட வேண்டும். சுரண்டலை ஒழித்து ஆலை, நிலம் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்களை பொதுவுடைமை ஆக்குதல், பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியை நிறுவுதல், அதன்வழியே வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்குதல் என்பதாகும்.

புரட்சியின் முதல் கட்டம் (1903 – 1917 )

கட்சியின் குறைந்தபட்ச திட்டத்தின்படி, புரட்சியின் முதல் கட்டத்தில் முக்கிய எதிரி ஜார் ஆட்சியாகும். ஜாராட்சியை வீழ்த்த, பாட்டாளி வர்க்கமானது ரஷ்யாவின் மிதவாத முதலாளி வர்க்கத்தை தனிமைப்படுத்தியும் அதேநேரத்தில் விவசாய வர்க்கத்துடன் இணைந்தும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை நடத்த வேண்டும் என்றார் லெனின். பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சி என்பது அன்றைக்கு லெனினால் முன்வைக்கப்பட்ட ஒரு புதிய போர்தந்திரமாகும்(Strategy)

ஏனெனில், இதற்கு முன்னதாக வரலாற்றில் நடைபெற்ற முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகள் அனைத்தும், உழைக்கும் மக்களின் எழுச்சியை பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்டதாகும். ஆனால் ரஷ்யாவில் அன்றைக்கு இருந்த மிதவாத முதலாளிகள் ஜாருடன் சமரசம் செய்ததன் மூலம் முடியாட்சியை தக்கவைக்க முயன்றனர்.  அதேசமயத்தில் ரஷ்யாவின் தொழிலாளர் வர்க்கம் எழுச்சியோடு போராடிக் கொண்டிருந்தது.

ஏனெனில், 1900-1903 காலகட்டத்தில் ரஷ்யாவில் 3000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர். வலிமையான போராட்டங்களையும் நடத்தி வந்தனர். அப்போராட்டங்கள் வேலைநிறுத்தத்தோடு நின்றுவிடாமல் ஜாரின் எதேச்சதிகார ஆட்சி ஒழிய வேண்டும் என்ற அரசியல் போராட்டமாக வளர்ச்சியடைந்தது. ஜாரின் அரசு போராடிய தொழிலாளர்களை கைது செய்து கொடூர தண்டனைகளை விதித்தது.

உலகளவில், சந்தைகளை கைப்பற்றுவதற்கான ஏகாதிபத்திய போர்கள் அப்போது நடைபெற்று வந்தன. தங்கள் மீதான சுரண்டலுக்கு எதிராக அந்நிய ஏகாதிபத்தியங்களை எதிர்த்து எழுச்சியோடு போராடிக் கொண்டிருந்த சீன மக்களை அடக்குவதற்காக ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகளோடு சேர்ந்து ஜாருடைய துருப்புகளும் சீன மக்கள் எழுச்சியை கொடூரமாக அடக்கியதோடு சீன பிரதேசங்களில் ரயில் போடும் உரிமையைப் ரஷ்யா பெற்றது. 

ஜப்பானோ தன் பங்கிற்கு கொரியா, மஞ்சுரியா, மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளை கைப்பற்ற முயற்சித்தது. இதற்காக ரஷ்யாவின் மீது 1904ம் ஆண்டு போர் தொடுத்து அதன் போர்ட் ஆர்தர், சக்கிலின் தீவுகளின் பாதியை ஜப்பான் கைப்பற்றியது. இந்த நாசகர போரை ரஷ்ய மக்கள் வெறுத்தனர். இச்சமயத்தில்தான் போல்ஷ்விக் கட்சி தொழிலாளர்களை திரட்டி பெரிய வேலைநிறுத்தங்களை செய்து வந்ததோடு, போர்நிறுத்தம் கோரியும் போராடியது. ஆனால் மிதவாத முதலாளிகளோ ஜாரின் மன்னராட்சியை அகற்ற முனையாமல் தங்களுக்கு ஆதாயம் அளித்த போரையும் ஜாரையும் ஆதரித்து வந்தனர். 

போரின் கொடுமை, வேலையின்மை, வறுமையை நீக்க கோரிய மனுவை 1905ம் ஆண்டு ஜனவரி9 அன்று ஜாரிடம் கொடுக்க சென்ற தொழிலாளர்களையும் போல்ஷ்விக்குகளையும் ஜார் அரசு சுட்டுக் கொன்றது. இரத்தம் தோய்ந்த ஞாயிற்றுக் கிழமை என இது வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இதன்பின் தொழிலாளர்களுடைய புரட்சி போராட்டம் பெரும் வீச்சை அடைந்தது. இச்சமயத்தில் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் சோவியத்துகளை உருவாக்கத் தொடங்கியிருந்தனர். நகரிலுள்ள சகல மில்களிலிருந்தும் ஆலைகளிலிருந்தும் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சபைகள் தான் சோவியத்துகள் எனப்பட்டன. 

தொழிலாளர்களின் எழுச்சி மிகுந்திருந்த இக்காலகட்டத்தில் புரட்சி சக்திகளை பிளவுபடுத்துவதற்காகவும் படைகளை ஒன்றுகுவித்து புரட்சியை தாக்கி அழிப்பதற்கான காலஅவகாசம் பெருவதற்காகவும் மக்களுக்கு எந்தவித பிரதிநிதித்துவமும் அளிக்காத ஒரு பெயரளவிற்கான டூமா(நாடாளுமன்றம்) கூட்டப்படும் என ஜார் அரசு அறிவித்தது. 

முன்னதாக விவாதிப்பதற்கு மட்டுமானதாக இருந்துவந்த புலிஜின் டூமாவை சட்டமியற்றும் அதிகாரம் கொண்டதாக மாற்றியமைப்பதாக ஜார் அரசு கூறினாலும், அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்படாத நிலையில் நிலச்சுவான்தார்கள், முதலாளிகளுக்கு மட்டுமே பெரும்பான்மை அளிக்க கூடியதான மோசடியை எதிர்த்துப் போராடுவதற்காக அந்த டூமாவை போல்ஷ்விக்குள் புறக்கணித்து பெரும் வேலைநிறுத்தம், கிளர்ச்சிகள் எனும் செயல்தந்திரத்தை கடைப்பிடித்தனர். இதன் மூலம் மக்களுக்கு பலனில்லாத புதிய டூமா அமைக்கப்படுவதையே போல்ஷ்விக்குகள் தடுத்து நிறுத்திவிட்டனர்.

முதல் டூமா -  புறக்கணிப்பு

இருப்பினும், 1905ம் ஆண்டின் இறுதியில் தொழிலாளர்களின் எழுச்சியை ஒடுக்குவதில் ஜார் அரசு வெற்றி பெற்றது. 1906ம் ஆண்டு விட் டூமா எனப்படும் முதல் டூமாவை அமைத்தது. இந்த முதல் டூமாவில் பங்கெடுப்பதை போல்ஷ்விக்குகள் புறக்கணித்தனர். புரட்சி பின்வாங்கி தணிந்து கொண்டிருந்த நேரத்தில் அப்புறக்கணிப்பு நடந்ததால் நம்மால் டூமாவை கூட்டாமல் நிறுத்துமளவிற்கு ஜாரை நிர்பந்திக்க முடியாமல் போனது. முதல் டூமாவை புறக்கணிப்பு செய்ததானது தவறே ஆகும் என பின்னாளில் லெனின் குறிப்பிட்டார்.

அப்போது பதவியிலிருந்த ஜார் இரண்டாம் நிக்கோலஸ் முழு அதிகாரத்தையும் தானே வைத்திருக்க விரும்பினார். ஆனால் டூமாவில் இருந்த லிபரல்கள், விவசாய பிரதிநிதிகள் அவரது அதிகாரத்தை குறைக்க விரும்பியதால் முதல் டூமாவை 72நாட்களில் ஜார் அரசே கலைத்துவிட்டது. இரண்டாவது டூமாவை கூட்டுவதாக அறிவித்தது. 

இரண்டாம் டூமா

புரட்சி தணிந்து கொண்டிருந்ததால் இரண்டாவது டூமாவிற்கு நடக்கவிருந்த தேர்தல்களில் பங்கேற்பது என போல்ஷ்விக்குகள் முடிவெடுத்தனர். “மிதவாத முதலாளிகளின் தலைமையிலான கான்ஸ்டிடுஷனல் டெமாக்கிரட் கட்சியினருடன் ஒரு கோஷ்டியாக அமர்ந்து அதனுள் சட்டமியற்றும் வேலையை செய்வதற்காக போல்ஷ்விக்குகள் போகவில்லை. புரட்சியின் நலன்களுக்குச் சாதகமான ஒரு அரசியல் மேடையாக அதை உபயோகப்படுத்த சென்றார்கள். இதற்கு மாறாக, கான்ஸ்டிடுஷனல் டெமாக்கிரட்டுடன் தேர்தல் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என மென்ஷ்விக்குகள் வலியுறுத்தினர்”. என போல்ஷ்விக்குகள் எந்த நோக்கத்திற்காக டூமாவிற்குள் சென்றனர் என்பதை ‘சோவியத் கம்யூனிஸ்ட்(போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு’ நூல் குறிப்பிடுகிறது. ஒரு முதலாளித்துவ கட்சியின்பால் போல்ஷ்விக் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை பற்றியும் விவாதிக்கப்பட்டு விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. 

இரண்டாவது டூமா அமைக்கப்பட்டு மிக குறுகிய காலத்திலேயே அதனையும் ஜார் அரசாங்கம் கலைத்தது. அதிகாரம் முழுவதையும் தன் கையில் குவித்துக் கொள்ளும் விருப்பம் நிறைவேறாததால் 1907 ஜூன் 3 அன்று இரண்டாம் டூமா பலவந்தமாக கலைக்கப்பட்டது. டூமாவில் இருந்த சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த 65பேர் கைது செய்யப்பட்டு சைபிரிய சிறைக்கு நாடு கடத்தப்பட்டனர். தொழிலாளர் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டதோடு போராடிய ஆயிரக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். லெனின் தப்பித்து வெளிநாடு சென்றார்.

மூன்றாவது டூமா

தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு குறைந்த பிரதிநிதித்துவமும் நிலச்சுவான்தார்கள், பணக்காரர்களுக்கு அதிக அதிகாரமும் வழங்கும் ஒரு சட்டத்தை இயற்றிய பின்பு 1907 நவம்பர் மாதத்தில் மூன்றாவது டூமாவை அமைத்தது ஜார் அரசு. டூமாவின் மொத்த 442 உறுப்பினர்களில் 18பேர் மட்டுமே சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். இவர்கள் தொழிலாளர் பிரச்சினைகள், அரசு அடக்குமுறை, முதலாளித்துவ சுரண்டல் பற்றி டூமாவில் நேரடியாக பேசினார்கள். அரசின் பொய்கள், போலியான ஜனநாயகம் ஆகியவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்கள். பாட்டாளி வர்க்க அரசியலை மக்களிடம் கொண்டு செல்லும் மேடையாக டூமாவை போல்ஷ்விக்குகள் மாற்றினர். 

1908-1912ம் வருடம் வரையில் புரட்சி இயக்கம் தணிந்து போய்க் கொண்டிருந்த அந்நேரத்தில், புரட்சியாளர்கள் மீது பிரதமர் ஸ்டோலிபினின் கடும் ஒடுக்குமுறையை செலுத்திய அக்காலகட்டத்தில் சட்டபூர்வமாக கிடைத்த சின்னஞ்சிறிய சந்தர்ப்பங்களையும் (நோயாளி நலசங்கங்கள், தொழிற்சங்கங்கள் முதல், சட்டசபை மேடை வரை) யாவற்றையும் போல்ஷ்விக்குகள் பயன்படுத்தினர்.  

இதனிடையே 1910, 1911ம் வருடங்களில் நிலச்சுவான்தார்களை எதிர்த்து விவசாய இயக்கம் தீவிரமடைந்தது. 1912ல் லீனா தங்கவயல் வேலைநிறுத்தத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 500பேருக்கு மேல் குண்டடிப்பட்டு பலர் உயிரிழந்த படுபாதக படுகொலையானது மீண்டும் தொழிலாளர் எழுச்சியைத் துவக்கியது. லீனா படுகொலையைப் பற்றி டூமாவில் சமூக ஜனநாயக கட்சியின் பிரதிநிதியின் கேள்விக்கு ‘அப்படித்தான் நடந்தது. இனியும் அப்படித்தான் நடக்கும்’ என்று ஜார் அரசின் அமைச்சர் திமிருடன் அளித்த பதிலால் சூறாவளி போல் சூழன்றெழுந்தது புரட்சி பேரலை. 3லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதைக் குறித்து ‘புரட்சிகரமான புத்தெழுச்சி’ என்ற தலைப்பில் லெனின் கட்டுரை ஒன்றை எழுதினார். வேலை நிறுத்தத்தை ‘வேலைநிறுத்த நோய்’ என்று கூறி அதை நிறுத்திவிட்டு, மனுபோடும் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் எனக்கோரிய டிராட்ஸ்கியின் சந்தர்ப்பவாத நிலைக்கு மாறாக, போல்ஷ்விக்குகள் காட்டிய புரட்சி பாதையை தொழிலாளி வர்க்கம் பின்பற்றியதை லெனின் அதில் சுட்டிக்காட்டுகிறார். 

ஆளும்வர்க்கத்தை அம்பலப்படுத்த நாடாளுமன்றத்தை உபயோகித்த அதேவேளையில், தொழிலாளர்களை விவசாயிகளை அமைப்பாக்குவதற்கான களப்பணியிலும், பத்திரிகைகள் மூலம் சிந்தாந்த பணியிலும் போல்ஷ்விக்குகள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

நான்காவது டூமா

1912ம் ஆண்டு நான்காவது டூமாவிற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, ஜாரை ஆதரித்த கட்சிகளையும் மிதவாத முதலாளிகளையும் தாக்கி, தன்னுடைய சொந்த முழக்கங்களை முழங்கி போல்ஷ்விக் கட்சியானது சுயேட்சையாக டூமா தேர்தலில் போட்டியிட்டது. ஜனநாயக குடியரசு வேண்டும். 8மணிநேர வேலை, நிலச்சுவான்தார்களிடம் இருந்து நிலத்தை பறிமுதல் செய்! என்பன அதன் முழுக்கங்களாக இருந்தன. போல்ஷ்விக் கட்சியின் குறைந்தபட்ச செயல் திட்டமே தேர்தலில் நேரடி முழக்கமாக முன்வைக்கப்பட்டது என்பது கவனிக்கதக்கது.

1912–1917 காலப்பகுதியில் நான்காம் டூமா செயல்பட்ட காலத்தில், பாட்டாளி வர்க்கத்தின் குரலை ஒலிக்க ‘தொழிலாளர்கள் இடுகின்ற கட்டளை’ (Workers’ Mandates) என்ற ஒரு முக்கியமான நடைமுறை உருவானது. தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் கூடி, தேர்தல் பிரதிநிதிகளை (electors) தேர்வு செய்தனர்; அவர்கள் மூலம் டூமா பிரதிநிதிகள் மறைமுகமாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதனுடன், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை எழுதி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கட்டளையாக அளித்தனர். அதில் ‘ஜார் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும், அதேசமயம் ஜார் ஆட்சியுடன் சமரசம் செய்ய முயன்ற மிதவாத முதலாளித்துவ அரசியல் சக்திகளையும் எதிர்க்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை அளித்தனர்.  பிராவ்தா பத்திரிகை இந்த கட்டளைகளை வெளியிட்டு, நாடு முழுவதும் பரப்பியது. இதன் மூலம் டூமா ஒரு வர்க்கப் போராட்டத்தின்  மேடையானது.

டூமா உறுப்பினர் தனிநபராக அல்லாமல் பாட்டாளி வர்க்கத்தின் குரலானார். டூமாவில் வேலை செய்ததோடு நில்லாமல் அவர்கள் மில்களுக்கும் பாக்டரிகளுக்கும் சென்று கட்சியின் முடிவுகளை விளக்கி கூறினார்கள், புதிய கட்சி அமைப்புகளை நிறுவினார்கள். நான்காவது டூமாவில் போஷ்விக்குகளுக்கு 6 பிரதிநிதிகளும், மென்ஷ்விக்குகளுக்கு 7 பிரதிநிதிகளும் இருந்தனர். 

1914ல் முதலாம் உலகயுத்தம் துவங்கியது. ரஷ்ய உலோகத் தொழிற்சாலைகள் பிரெஞ்சு முதலாளியிடமும் எண்ணெய் கிணறுகள் பிரிட்டிஷ், பிரெஞ்சு முதலாளிகளுக்கும் சொந்தமாக இருந்தன. இதனால் லாபத்தின் பெரும்பகுதி அந்நியநாட்டு வங்கிகளுக்கு சென்றது. பிரான்ஸ், பிரிட்டனிடம் ஜார் மன்னன் கோடிக்கணக்கான கடன் வாங்கியிருந்தான். இவையனைத்தும் அரைஅடிமை நாடாக ரஷ்யாவை மாற்றியிருந்தது. 

யுத்த ஒப்பந்தங்களின் மூலமாக கொள்ளைஇலாபம் சம்பாதிக்கவும் அதேசமயத்தில் யுத்த நிலைமையை பயன்படுத்தி புரட்சி இயக்கத்தை நசுக்கவும் உலகப்போரில் பிரான்ஸ், பிரிட்டன் கூட்டணியில் ஜாரின் ரஷ்யா இணைந்தது. ரஷ்ய மக்களும் சோர்ந்திருந்த இராணுவத்தினரும் யுத்தத்திற்கு தயாராக இல்லை. பழைய மில்களையும், வளர்ச்சியடையாத தொழிற்சாலைகளை கொண்டதாக, பண்ணைடிமை முறையில் வறுமையில் வாடிய விவசாயிகளை கொண்டதான நிலைமைகளே அன்றைய ரஷ்யாவில் இருந்தது. நிலச்சுவான்தார்கள் ஜாரின் முதுகெலும்பாய் இருந்தனர். நிலச்சுவான்தார்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சி பெருமுதலாளிகளுடன் இணைந்து மக்களை யுத்தத்தில் தள்ளியது.

மிதவாத முதலாளிகளும் ஜாரை ஆதரித்தனர். சோசலிச புரட்சியாளர்கள், மென்ஷ்விக்குகள் முதலிய குட்டிமுதலாளித்துவ கட்சிகளும் ‘தாய்நாட்டை காப்பாற்ற யுத்தம் தேவை’ என்றுக் கூறி ஜாரை ஆதரித்தன. போல்ஷ்விக் கட்சி மட்டும்தான் ஜாரின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து நிலச்சுவான்தார்கள், முதலாளிகள், ஏகாதிபத்திய யுத்தம் ஆகியவற்றை எதிர்த்து உறுதியான போராட்டத்தை நடத்தியது. 

இது தேசப்பாதுகாப்பிற்கான யுத்தம் அல்ல. அந்நிய பிரதேசங்களை கைப்பற்றுவதற்கான கொள்ளைக்கார யுத்தம். அதனால் தொழிலாளர்கள் யுத்தத்தை எதிர்க்க வேண்டும் என அறைகூவல் விடுத்தது. தொழிலாளி வர்க்கம் போல்ஷ்விக்குகளை ஆதரித்தது. ஆனால், யுத்த ஆரம்பக் கட்டத்தில் பணக்கார விவசாயிகள், படிப்பாளிகள் யுத்தவெறி கொண்டு ஜாரைத்தான் ஆதரித்தனர். 

தனியொரு நாட்டில் சோசலிச புரட்சி

“ஓரிடத்திற்கோரிடம் வித்தியாசமான பொருளாதார வளர்ச்சியும் அரசியல் வளர்ச்சியும் ஏற்படுத்துவது முதலாளித்துவ சமூக அமைப்பின் நிரந்தரமான விதி. ஆகவே சோசலிசம் வெற்றியடைவதென்பது முதலில் அநேக தேசங்களிலோ, அல்லது தனியான ஒரு தேசத்திலோ சாத்தியமாகும். போராட்டத்தில் வெற்றிகாணும் தேசத்திலுள்ள பாட்டாளி வர்க்கம், முதலாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து தன்னுடைய சோசலிசப் பொருளுற்பத்தியை உருவாக்கும். இக்காரியத்தை செய்தவுடன் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கு – முதலாளித்துவ உலகத்திற்கு – நிகராகத் தலைநிமிர்ந்து கம்பிரமாக நிற்கும். தன்னுடைய லட்சியத்தின்பால் மற்ற தேசங்களில் ஒடுக்கப்பட்டு கிடக்கும் மக்களை கவர்ந்திழுக்கும்” என்ற கருத்தை 1915ம் ஆண்டே ‘ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் முழுக்கம்’ என்ற கட்டுரையில் லெனின் கூறியிருந்தார். 

சோசலிச புரட்சி பற்றிய இந்த புதிய கோட்பாடு வளர்ச்சியடைந்து வந்த புதிய ஏகாதிபத்திய நிலைமைகளை கொண்டு லெனின் வரையறுத்ததாகும். தனி ஒரு நாட்டில் புரட்சி என்பது லெனின் முன்வைத்த ஒரு புதிய போர்தந்திரமாகும்(strategy). ஏனெனில் அதற்கு முன்னதாக முதலாளித்துவம் வெகுவாக வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில்தான் புரட்சி துவங்கும் எனவும் அப்புரட்சி பிற நாடுகளுக்கு பரவும் என்ற கோட்பாடே இருந்து வந்தது.

யுத்தத்தில் லட்சக்கணக்கான ரஷ்ய மக்கள் பலியானார்கள். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. போரில் ஜாரின் இராணுவம் தொடர் தோல்விகளை சந்தித்தது. மக்கள் ஜார் அரசை வெறுத்தனர். 1917 ஜனவரியில் பெரும் வேலைநிறுத்தங்கள் துவங்கின. பிப்ரவரி 23(மார்ச்8) அன்று ஜார் ஆட்சியை எதிர்த்து பெண்கள் வீதிகளில் இறங்கி ஆர்பாட்டம் செய்தனர். பிப்ரவரி 26 அன்று இப்போராட்டம் ஆயுதம் தாங்கிய எழுச்சியாக மாறியது. இந்நிலையில் ‘ஆயுதம் தாங்கிய போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும், தற்காலிக புரட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்’ என போல்ஷ்விக் கட்சி மக்களை அறைகூவி அழைத்தது.

பெட்ரோகிராடில் இருந்த இராணுவ துருப்புகள் மக்களை சுடமுடியாது என்றுக் கூறி புரட்சி செய்த மக்களுடன் இணைந்தன. தொழிலாளர்களும் வீரர்களும் ஜார் அரசனுடைய அமைச்சர்களையும் தளபதிகளையும் கைது செய்தனர். சிறைகளில் அடைப்பட்டு கிடந்த புரட்சியாளர்களை விடுதலை செய்தனர்.  பிப்ரவரி புரட்சி வெற்றியடைந்தது. ஜார் ஆட்சி வீழ்த்தப்பட்டது.

புரட்சியின் இரண்டாம் கட்டம் (1917 பிப்ரவரி-அக்டோபர்)

நான்காவது டூமா உறுப்பினர்களாக இருந்த மிதவாத முதலாளிகள் 1917 பிப்ரவரி 27ல் ஒன்றுகூடி அரசாங்க டூமாவிற்கான தற்காலிக கமிட்டி ஒன்றை அமைத்தனர். ஜாருக்கு ஆதரவாக இருந்தவரையே அக்கமிட்டியின் தலைவராக நியமித்தனர். போல்ஷ்விக்குகளுக்கு தெரியாமல் சோசலிச புரட்சிகாரர்கள் மற்றும் மென்ஷ்விக்குகளுடன் அந்த கமிட்டி இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி முதலாளித்துவ தற்காலிக அரசை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டு ஜாரின் நம்பிக்கைக்கு உரிய ஒருவர் அரசின் தலைவராக்கப்பட்டார். கெரன்ஸ்கி இந்த அரசில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்த கெரன்ஸ்கி என்பவர் முதலாளித்துவக் கட்சியை சேர்ந்தவரல்ல. சோசலிச புரட்சிகர கட்சியை சேர்ந்தவர். 

இவ்வாறு மக்கள் போராடி பெற்ற அரசியல் அதிகாரத்தை சோவியத்தின் நிர்வாக குழுவில் பதவி வகித்த சோசலிச புரட்சிக்கட்சி தலைவர்களும் மென்ஷ்விக் தலைவர்களும் முதலாளிகளின் காலடியில் சமர்ப்பித்தனர்.

இருப்பினும் இந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் கூடவே அதற்குப் பக்கத்தில் தொழிலாளர், இராணுவ வீரர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மற்றொரு அரசாங்கமாக சோவியத்துகளின் கையிலும் அரசியல் அதிகாரம் இருந்தது. ஆனால், ஆட்சி அதிகாரத்தை முழுமையாக தாங்களே எடுத்துக் கொள்ள முடியும் என்ற தெளிவில்லாமல் தொழிலாளர்களும் விவசாயிகளும் அந்த இடைக்கால அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.

தொழிலாளர்களும், இராணுவ வீர்ர்களும் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்து சட்டசபைக்கு அனுப்பினர். ‘போர்நிறுத்தம் வேண்டும்’ என்ற மக்கள் கோரிக்கையை இந்த பிரதிநிதிகள் நிறைவேற்றுவார்கள் என நம்பினர். ஆனால் பெரும்பான்மை சோவியத்துகளில் குட்டிமுதலாளித்துவ சோசலிச புரட்சிகாரர்கள் மற்றும் மென்ஷ்விக்குகள் தலைமை வகித்தனர். இவர்கள் யுத்தம் தொடருவதற்கு சம்மதித்து மிதவாத முதலாளிகளுடன் திறைமறைவில் ஒப்பந்தம் செய்துக் கொண்டு பாட்டாளிகளுக்கு துரோகமிழைத்தனர். 

முதலாளிகளின் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கும் வரையிலும் சோசலிஸ்ட் புரட்சியாளர்கள், மென்ஷ்விக்குகள் ஆகிய சமரசவாதிகளின் ஆதிக்கம் சோவியத்துகளில் இருக்கும் வரையிலும் போர்நிறுத்தமோ, உணவோ, நிலமோ பெற முடியாது என்பதை பெரும்கிளர்ச்சிகள் செய்வதன் மூலமாக அல்லாமல் மக்களிடையே நிதானமான விளக்கப்பிரச்சாரம் மூலம் மட்டுமே செய்ய வேண்டும் என்ற செயல்தந்திரத்தை இந்த தருணத்தில் போல்ஷ்விக்குகள் மேற்கொண்டனர்.

சோசலிசத்திற்கு மாறி செல்லுதல்

1917 ஏப்ரல்24ல் கூடிய போல்ஷ்விக்குகள் மாநாட்டில், மாறிய நிலைமைகள் விவாதிக்கப்பட்டு புரட்சியின் இரண்டாவது கட்டமான சோசலிசத்திற்கு மாறிச் செல்ல வேண்டும் என்ற லெனினின் ஆய்வுரைகள் ஏற்கப்பட்டு ‘சகல அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. பாராளுமன்ற குடியரசுக்கு பதில் சோவியத் குடியரசு ஏற்படுத்த வேண்டும் என்றார் லெனின். 

இதன் அர்த்தம், இடைக்கால முதலாளித்துவ அரசிடமும் சோவியத்துகளிடமும் அரசாங்க அதிகாரம் பாதியாக பிரிந்திருப்பதை ஒழித்து விட்டு முழு அதிகாரத்தையும் சோவியத்துகள் எடுத்துக் கொண்டு நிலச்சுவான்தார், முதலாளிகளின் பிரதிநிதிகளை விரட்டியடிக்க வேண்டும் என்பதாகும். இதை பொதுமக்களுக்கு சளைக்காமல் விளக்கி கூற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

அந்த முடிவின்படி விவசாயிகளுக்கு நிலம், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை, முதலாளித்துவ தனியுடமையை ஒழித்தல், யுத்தத்தின் ஏகாதிபத்திய தன்மை ஆகியவற்றையும் மென்ஷ்விக்குகள் மற்றும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களின் துரோகத்தையும் பொறுமையுடன் மக்களுக்கு விளக்கி கூறும் பணியை கட்சி செய்தது. 

ஜூன் 18 அன்று தலைநகர் பெட்ரோகிராடில் தொழிலாளர்கள் ஒரு ஆர்பாட்டம் நடத்தவேண்டி கட்சி வேண்டுகோள் விடுத்தது. அதைஏற்று தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆர்பாட்டங்களில் ‘யுத்தம் ஒழிக! முதலாளிகளின் மந்திரிகள் ஒழிக! சகல அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே!’ என்று நான்கு இலட்சம் தொழிலாளர்கள் முழக்கமிட்டனர். 

இருப்பினும் இடைக்கால அரசாங்கம் போரை கைவிடாமல் தாக்குதலில் ஈடுபட்டு தோல்வியடைந்தது. ‘போர் நிறுத்தம் செய்வோம்! சமாதானத்திற்காக பாடுபடுவோம்!’ என்ற வாக்குறுதியை இடைக்கால அரசாங்கம் மீறியது வெட்ட வெளிச்சமாகியதால், கோபமடைந்த தொழிலாளர்களும் இராணுவ வீரர்களும் ‘சகல அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’ என முழக்கமிட்டு மிகபெரிய தொடர் ஆர்பாட்டங்களை நடத்த துவங்கினர்.

தொழிலாளர்களின் அமைதியான ஊர்வலங்கள் மீது இடைக்கால அரசு நடத்திய கடும்தாக்குதல்களில் தொழிலாளர்களும் இராணுவ வீரர்களும் இரத்தவெள்ளத்தில் ஆழ்த்தப்பட்டனர். போல்ஷ்விக்குகள் மீது ராஜதுரோக குற்றஞ்சாட்டப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.  நிலைமை மாறியதால் கட்சி தலைமறைவாக செல்வதென்ற செயல்தந்திரத்திற்கு மாறியது. 

தலைமறைவான கட்சி 1917 ஜூலை 26முதல் ஆகஸ்ட் 3வரை இரகசிய காங்கிரஸ் ஒன்றை நடத்தியது. அச்சமயத்தில் மென்ஷ்விக் மற்றும் சோசலிஸ்ட் புரட்சிகாரர் கட்சியில் இருந்த தொழிலாளர்களும், இராணுவ வீர்ர்களும் அக்கட்சிகளின் கார்டுகளை ஆத்திரத்துடன் கிழித்தெறிந்து போல்ஷ்விக் கட்சியில் சேர மனு அளித்துக் கொண்டிருந்தனர். 

இந்நிலையில்தான் ‘சமாதான முறையில் புரட்சி வளர்ச்சியடைகிற காலம் முடிவடைந்து விட்டது. ஆயுதம் தாங்கிய எழுச்சி, சோசலிச புரட்சியை நோக்கி செல்வது’ என கட்சி காங்கிரஸ் முடிவெடுத்து ‘போராடும் படைகளை அமையுங்கள்! கட்சி கொடியின் கீழ் திரளுங்கள்!’ என உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுத்தது.

இச்சமயத்தில் இடைக்கால அரசாங்கமானது முதலாளித்துவ, நிலச்சுவான்தார் சக்திகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டும் நோக்கில் கவுன்சில் ஒன்றை கூட்டியது. அதில் பங்கேற்ற கெரன்ஸ்கி ‘நிலச்சுவான்தார்களின் நிலங்களை எடுத்துக் கொள்வதற்கு விவசாயிகள் செய்யும் முயற்சி இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்’ என வெளிப்படையாக மிரட்டினான். இராணுவ தளபதி ஜெனரல் கோர்னிலாவ் ‘சோவியத்துகளை ஒழிக்க வேண்டும்’ என கூறினான். 

ஆகஸ்ட் 25 அன்று ‘தாய்நாட்டை பாதுகாக்க விரும்புகிறேன்’ என்று பிரகடனம் செய்த கோர்னிலாவ் பெட்ரோகிராட் நகர சோவியத்துகள் மீது படையை ஏவினான். இதைத் எதிர்த்து ஆயுதம்தாங்கி போரிட கட்சியின் மத்தியக்குழு அறைகூவல் விடுத்தது. கோர்னிலாவ் படையை எதிர்ப்பதற்காக திரண்ட செம்படை பெரிய படையாக வளர்ந்தது. 

சோவியத்துகளை அழிப்பதில் நிலச்சுவான்தார்கள் வெற்றி பெற்றால் அடுத்து தங்களையும் தாக்குவார்கள் என்பதை இந்நிகழ்வால் விவசாய வர்க்கம் உணர்ந்தது. அதுவரை ஊசாலாட்டம் கொண்டிருந்த மத்தியதர விவசாய வர்க்கமும் போல்ஷ்விக் கட்சி மட்டுமே யுத்தத்திலிருந்து நம்மை மீட்கும் நிலச்சுவான்தார்களை நசுக்கும் என்பதை உணர்ந்து போல்ஷ்விக்குகளை ஆதரித்தது. 1917ம் வருடம் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் விவசாயிகள் பண்ணைகளை கைப்பற்றுவது பெருமளவு அதிகரித்தது. இவ்வாறு பெருமளவிலான விவசாயிகளும் புரட்சியில் இணைந்தனர். பாக்டரிகளிலும் மில்களிலும் ராணுவ பகுதிகளிலும் சோவியத்துகளுக்கு புதிதாக நடைபெற்ற தேர்தலில் சோசலிஸ்ட் போல்ஷ்விக் கட்சி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

ப்ரீ- பார்லிமெண்ட் புறக்கணிப்பு

கோர்னிலாவ் படையெடுப்பை சோவியத்துகள் முறியடித்ததால் தோல்வியடைந்த சோசலிசப் புரட்சியாளர்களும், மென்ஷ்விக்குகளும் புரட்சியின் எழுச்சியை தடுப்பதற்காக 1917 செப்டம்பரில் அகில ரஷ்ய ஐனநாயக மாநாட்டை கூட்டினர். அம்மாநாட்டிற்கு சோசலிச கட்சியின் பிரதிநிதிகள், சமரச போக்குள்ள சோவியத்துகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், வர்த்தகர் அமைப்புகள், இராணுவ பிரதிநிதிகள், முதலாளிகளின் அமைப்புகள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.  குடியரசின் தற்காலிக மன்றம் என்ற ஒன்றை அம்மாநாடு அமைத்தது. 

இதற்கு ப்ரீ- பார்லிமெண்ட்(பூர்வாங்க சட்டசபை (pre-parliament) என்று பெயர். இந்த பார்லிமெண்டின் துணைகொண்டு புரட்சியை தடுத்துவிடலாம், முதலாளித்துவ பாராளுமன்ற பாதையில் திருப்பிவிடலாம் என சமரசவாதிகள் நம்பினார்கள். (அதாவது, முதலாளிகளின் பிரதிநிதிகளுக்கு இடமளிக்காத சோவியத் குடியரசுக்கு பதிலாக, முதலாளிகளின் பிரதிநிதிகளை கொண்ட வழக்கமான சட்டசபையை அமைத்துவிடலாம் என நம்பினர்)

இந்த ப்ரீ- பார்லிமெண்டை புறக்கணிப்பது என போல்ஷ்விக் கட்சியின் மத்தியக் கமிட்டி முடிவெடுத்தது. ஆனால் ப்ரீ- பார்லிமெண்டில் இடம்பெற்றிருந்த காமனெவ், டியோடோரோவிச் போன்ற போல்ஷ்விக்குகள் அதைவிட்டு வெளியேற விரும்பவில்லை. அவர்களை கட்டாயப்படுத்தி வெளியேறும்படி செய்தது கட்சி.

பெரும்பாலான மக்கள் நம் திட்டத்தை ஆதரிக்கிறார்கள் எனக் கூறிய லெனின் 1917 அக்டோபர் 20 அன்று பெட்ரோகிராட் வந்தார். அக்டோபர் 23 அன்று நடைபெற்ற மத்தியக் கமிட்டியில் ஆயுதம்தாங்கிய எழுச்சியை ஆரம்பிப்பது என தீர்மானம் செய்யப்பட்டது. பெட்ரோகிராடில் சோவியத்தின் புரட்சி இராணுவக்குழு அமைக்கப்பட்டது.  புரட்சிக்கு வழிகாட்ட மத்திய செயலகமும் தலைவராக ஸ்டாலினையும் அக்டோபர்29 அன்று நடைபெற்ற மத்தியக்குழுவின் விரிவாக்கப்பட்ட கூட்டம் தேர்வுசெய்தது. 

நவம்பர் 6 அன்று லெனினினும் ஸ்மோலினிக்கு வந்து எழுச்சியை வழிநடத்தினார். நவம்பர் 7 அன்று புரட்சிகர படை வீரர்கள் செந்தொண்டர்கள் சேர்ந்து ரயில்வே நிலையம், தபால் அலுவலகம், தந்தி அலுவலகம், அமைச்சர்களின் அலுவலகங்களை கைப்பற்றினர்.  

ப்ரீ- பார்லிமெண்ட் கலைக்கப்பட்டது. மத்தியக்குழுவிற்கு தலைமை செயலகமாக இருந்த ஸ்மோல்னி புரட்சியின் தலைமை செயலகமாகியது. புரட்சிகர இராணுவ பகுதியினர் செம்படையோடு இணைந்து செயலக உத்தரவுகளை நிறைவேற்றினர். கடற்படையின் அரோரா போர்க்கப்பல் தன் பீரங்கிகளை குளிர்கால அரண்மனையின் மீது திருப்பியது.

நவம்பர் 7 அன்று போல்ஷ்விக்குகள் ரஷ்ய மக்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் முதலாளித்துவ இடைக்கால அரசு வீழ்த்தப்பட்டது அரசாங்க அதிகாரம் முழுவதும் சோவியத்துகளிடம் வந்துவிட்டது என பிரகடனப்படுத்தினர். பெட்ரோகிராடில் ஆயுதம் தாங்கிய எழுச்சி வெற்றி பெற்றது. நவம்பர் 8 அன்று கூடிய சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் போர்நிறுத்த சமாதான சட்டத்தை அங்கீரித்தது. நிலத்தில் இருந்த தனிச்சொத்துரிமையை ஒழிப்பதற்கான சட்டமும் அன்றே ஏற்கப்பட்டது.

ஜார் வீழ்த்தப்பட்டபின் பொறுப்பேற்றிருந்த முதலாளித்துவ இடைக்கால அரசானது புதிய அரசியல் அமைப்பு(constitution) உருவாக்குவது என முன்னரே திட்டமிட்டிருந்தது. போல்ஷ்விக்குகள் ஆட்சியை கைப்பற்றிய பின்பு தேர்தலை ரத்து செய்யாமல் அதனை நடத்தவே அனுமதித்திருந்தனர். 1918, ஜனவரி5 அன்று அதற்கான சட்டசபை முதன்முறையாக கூடியது. ஆனால் சமாதானம், நிலம், சோவியத்துகளிடம் அதிகார மாற்றம் ஆகியவை குறித்து சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் அங்கீகரித்த சட்டங்களை அச்சபை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அன்றே அச்சபை கலைக்கப்பட்டது. 

இவ்வாறு பாராளுமன்றம், வேலைநிறுத்தம், ஆயுத போராட்டம் என்ற அனைத்து போராட்ட வடிவங்களையும் தங்களின் திட்டத்திற்கு பயன்படுத்தி உலகப்போரை உள்நாட்டு போராக மாற்றிய போல்ஷ்விக்குகள் புரட்சியில் வென்றனர். 

ஆனால் அன்றைக்கு ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளின் முறையான நாடாளுமன்ற அமைப்பில் பெரும்பான்மையை கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் சோசலிச புரட்சியை நடத்திடவில்லை. “இரண்டாவது அகிலம் தன்னுடைய அழிவுக்கு தானே வழிதேடிக் கொண்டதின் காரணம் சட்டசபை முறையை அது செயல்தந்திரமாக உபயோகப்படுத்தியது அல்ல. அந்த சட்டசபை முறை என்ற போராட்ட வடிவத்தின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தியதும், அவை ஒன்றே போராட்ட வடிவங்கள் வேறெதுவும் இல்லை என்று நினைத்ததும் தான். பகிரங்கமான புரட்சி போராட்டங்கள் வெடிக்கும் காலம் வந்தபோது சட்டசபை முறைக்கு அப்பாற்பட்ட போர்வடிவங்களில் போராட வேண்டியது என்ற பிரச்சனை முன்நின்றபோது இரண்டாவது அகிலத்தை சேர்ந்த கட்சிகள் எதிரே நின்ற புதிய கடமைகளை செய்யத் தவறின” என ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.

 ஸ்டாலினுக்கு பிறகான குருசேவ் காலத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாடு கைவிடப்பட்டு, அமைதியான வழியில் சோசலிசம் என்பது சோவியத் ரஷ்யாவில் முன்னெடுக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு CPSU 20வது காங்கிரசில் முன்வைக்கப்பட்ட ‘அமைதியான மாற்றம்’ குறித்த நிலைப்பாடு, ஆயுதப் புரட்சியின் அவசியத்தை பொதுவான விதியாக மறுத்ததுடன், தேர்தல் மற்றும் சட்டபூர்வ வழிகளின் வாய்ப்பை சோசலிசத்திற்காக முன்வைத்தது என்பது திருத்தல்வாதத்திற்கு வழிவகுத்தது என்ற விமர்சனங்கள் உள்ளன.

 இந்தியாவில் தெலுங்கானா போராட்டத்திற்கு பிறகு 1951ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் பங்கேற்பது என முடிவெடுத்தது. 1964, 1967ல் கட்சி பிளவுபட்டதில் துவங்கி இன்று பல கட்சிகள் உருவாகியுள்ளன. இன்றுவரையிலும் நாடாளுமன்ற பங்கேற்பா? ஆயுத போராட்டமா என்பது இந்திய இடதுசாரிகளிடையே தொடர் விவாதமாக இருந்து வருகிறது. தேர்தலா, ஆயுதபோராட்டமா என்பது போராட்ட வடிவம் சம்மந்தப்பட்டது. செயல்தந்திர பிரச்சனையான இது போர்தந்திர பிரச்சனைபோலவும் இதுவே புரட்சியின் திசைவழி என்பதுபோல் இப்பிரச்சனை விவாதிக்கப்பட்டு கையாளப்படுகிறது. 

உண்மையில், இந்திய இடதுசாரிகளிடையே இந்திய அரசுக்கு எந்த முதலாளி வர்க்கம் தலைமை தாங்குகிறது? முதன்மை எதிரிகள் யார்? எதிரியை எதிர்ப்பதற்கான புரட்சிகர அணியில் யார் யாரை இணைத்துக் கொள்வது? இந்த அணிக்கு தலைமை தாங்கும் வர்க்கம் எது? உள்ளிட்டவற்றில் அதாவது, அடிப்படை திட்டத்திலேயே((strategy) வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு கட்சியும் தாங்கள் ஏற்கனவே முன்வைத்த திட்டத்தில் சில மாற்றங்களையும் செய்து வந்துள்ளன. 

திட்டம் குறித்து ஒருமித்த கருத்தை எட்டாமல், குறிப்பிட்ட சூழலில் எத்தகைய போராட்ட வடிவத்தை மேற்கொள்வது என்பதில் ஒன்றுபடாமல் வெறுமே இடதுசாரி ஒற்றுமை குறித்து பேசுவது போதுமானதா? என்ற கேள்வி எழுகிறது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் பங்கேற்கிறதா இல்லையா என்பது மட்டும் அதன் புரட்சிகர தன்மையை நிர்ணயிக்காது; அது எந்த வர்க்க நலனுக்காக, எந்த போர்த்தந்திரத்தின் கீழ் செயல்படுகிறது என்பதே அதனை தீர்மானிக்கும் என்பதே ரஷ்ய புரட்சியின் நடைமுறை உணர்த்தும் பாடமாக உள்ளது.

- மஞ்சுளா.G

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு