புதிய தொழிலாளர் சட்டங்கள்: நவீன அடிமைமுறை உருவாக்கமும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு சட்ட அங்கீகாரமும்

சமரன்

புதிய தொழிலாளர் சட்டங்கள்: நவீன அடிமைமுறை உருவாக்கமும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு சட்ட அங்கீகாரமும்

மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சி இரண்டாவது முறை வென்றவுடனேயே (2019-20). 4 புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டுவந்தது. 2025 நவம்பர் 25 அன்று இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களும் தனது புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என மோடி அரசு கெடு விதித்துள்ளது.

பாசிச பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உட்பட, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் 28 மாநிலங்களில் குறைந்தது 17 மாநிலங்கள், புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக, விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை மாநில அரசு உருவாக்கும் வரை தற்போதுள்ள சட்டத்திற்கு முரண்படாத எந்தவொரு விதியும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்பதாகும். அதாவது மாற்றினாலும் மாற்றாவிட்டாலும் மத்திய அரசின் இந்தச் சட்டமே தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டது.

இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 44 தொழிலாளர் சட்டங்களை நீக்குவதற்கு பாசிச பாஜக அரசு கூறிய காரணங்களானது, அந்த சட்டங்கள் சிக்கலாக இருக்கிறது என்றும், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்றவகையில் மாற்ற வேண்டும் என்றும் கூறியது. அதற்காக பழைய சட்டங்களை ஒருங்கிணைப்பதாகவும் எளிமைப்படுத்துவதாகவும் கூறி அந்தச் சட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு, புதிய 4 சட்டத் தொகுப்புகளாக சம்பளம், சமூகப் பாதுகாப்பு, தொழில் உறவுகள், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் (Wage, Social Security, Industrial Relations, OSH Code) என மாற்றியுள்ளது. ஏற்கெனவே அரைகுறை உரிமைகளை உத்தரவாதம் தந்துகொண்டிருந்த சட்டத்தையும் தூக்கி எறிந்துவிட்டது. இது எளிமைப்படுத்துதல் அல்ல, நவீனமுறையில் தொழிலாளர்களின் உரிமையை முற்றாக ஒழிப்பதற்கானதாகும். 

இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் "தொழில் அமைதி" மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை என்ற பெயரில், அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் லாபத்தை எல்லையில்லாமல் உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டை நிதிமூலதனத்தின் பிடியில் கொண்டுவருவதாக உள்ளது.

21ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரம் 'சுதந்திரச் சந்தை' என்று கூறி மக்களை ஏமாற்றுகிறது. உலகமயமாக்கல் நாடுகடந்து சுரண்டலை சுதந்திரமாக்கியிருக்கிறது. தொழிலாளர் உரிமைகளை தகர்த்துள்ளது. இதற்காக இவர்கள் இரண்டு வழிமுறைகளை முதன்மையாக செய்கிறார்கள். எந்த நாட்டில் மிகக் குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைப்பார்களோ அங்கு தொழிற்சாலைகளைத் தொடங்குகிறார்கள். அங்கு தொழிலாளர் சட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் சுரண்டுகிறார்கள். இதைத்தான் Race to the Bottom என்று பெயர் சூட்டுகிறார்கள்.

இது உலகளவில் நிரந்தர வேலைவாய்ப்பை அழித்து ஒப்பந்த முறையை உருவாக்கியிருக்கிறது. விநியோகம் உட்பட பல துறைகளில் 'கிக் பொருளாதாரம்' (Gig Economy) எனும் தற்காலிக வேலை முறையை உருவாக்கியுள்ளது. 2024-ஆம் ஆண்டின் தொழிலாளர் உரிமை குறியீட்டின் (Labour Rights Index) படி, வளர்ந்த நாடுகள் உட்பட பல தேசங்களில் பாதுகாப்பான வேலை மற்றும் சமூக பாதுகாப்புக்கான சட்டங்கள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளன. 

இந்த மக்கள் விரோத, தொழிலாளர் விரோத காலனிய கால சுரண்டல் முறைக்கு வித்திட்டிருக்கும் நான்கு தொழிலாளர் சட்டங்களைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவின் நான்கு புதிய தொழிலாளர் சட்டம் - ஆதிமூலதனத் திரட்டலை உத்தரவாதம் செய்யும் நவீன கொத்தடிமைச் சட்டம்

44 தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து 4 சட்டங்களாக மாற்றியுள்ளது

இந்தியாவில் நடைமுறையில் இருந்த 44 சிக்கலான தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைப்பதாகக் கூறி, மத்திய அரசு அவற்றை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றியுள்ளது. இது எளிமைப்படுத்துதல் அல்ல, மாறாக தொழிலாளர் உரிமைகளை அழிப்பதாகும்.

1. ஊதியக் குறியீடு (Code on Wages, 2019) - முந்தைய குறைந்தபட்ச ஊதியச் சட்டம் உட்பட 4 சட்டங்களை ஒன்றிணைக்கிறது.

2. தொழிலாளர் உறவுகள் குறியீடு (Industrial Relations Code, 2020) - முந்தைய தொழிற்சங்க சட்டம், தொழில் தகராறு சட்டம் உட்பட 3 சட்டங்களை நீக்கி புதிதாக மாற்றியிருக்கிறது.

3. சமூகப் பாதுகாப்பு குறியீடு (Code on Social Security, 2020) - முந்தைய EPF, ESI உட்பட 9 சட்டங்களுக்கு மாற்றீடாக கொண்டுவந்துள்ளது.

4. தொழில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் குறியீடு (OSH Code, 2020) - முந்தைய 13 சட்டங்களை மாற்றியிருக்கிறது.

என நான்கு முக்கிய தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றியது.

ஊதியச் சட்டம் 2019, ஒப்பந்த கூலிமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது

ஊதியப் பாதுகாப்பு வழங்கப்படும் என்கிறது. ஆனால் 'ஊதியம்' என்ற சொல்லின் இலக்கணத்தையே மாற்றி அமைத்துள்ளது. முன்பு ஊதியம் என்பது அடிப்படைச் சம்பளம், அகவிலைப்படி மட்டுமல்லாது வீட்டு வாடகைப்படி (HRA), போனஸ், பயணப்படி (Conveyance), கூடுதல் நேர ஊதியம் (Overtime), பணிக்கொடை (Gratuity), பி.எஃப் (PF) பங்களிப்பு ஆகியவையும் ஊதியம் என்ற வரையறைக்குள் வரும். ஆனால் தற்போது ஊதியம் என்பது அடிப்படை ஊதியம் (Basic Pay), அகவிலைப்படி (DA), தக்கவைப்பு ஊதியம் (Retention Allowanve) என்பதை மட்டுமே கணக்கில் கொள்கிறது. இது ஒரு தொழிலாளி கையில் வாங்கும் சம்பளத்தை (Take-home pay) அதிகரிப்பது போலத் தெரிந்தாலும், நீண்ட கால அடிப்படையில் பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன. தொழிலாளர்களின் ஓய்வூதியப் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளது.  

இந்தச் சட்டத்தில் ஒரு முக்கியமான விதி உள்ளது. ஒரு தொழிலாளியின் மொத்த வருமானத்தில் (Gross salary), அடிப்படை ஊதியம் மற்றும் இதர சேர்க்கப்பட்டவை 50% க்குக் குறையாமல் இருக்க வேண்டும். இதைக் கார்ப்பரேட்டுகள் எப்படிப் பயன்படுத்துவார்கள் என்றால், மொத்தச் சம்பளத்தில் 50%-ஐ மட்டுமே 'ஊதியம்' எனக் கணக்கிடுவார்கள். மீதி 50%-ஐ 'இதர படிகள்' (Allowances) என்று காட்டிவிடுவார்கள். இதனால் நிறுவனங்கள் கட்ட வேண்டிய பி.எஃப் மற்றும் பணிக்கொடை தொகை பாதியாகக் குறையும்.

பணிப்பலன்கள் சட்டபூர்வமாக தொழிலாளியிடமிருந்து பறிக்கப்படும்

ஒரு தொழிலாளியின் மொத்தச் சம்பளம் ரூ.40,000 என்று வைத்துக்கொள்வோம். பழைய முறையில், மொத்தத் தொகையில் பெரும்பகுதிக்கு பி.எஃப் கணக்கிடப்படும். புதிய முறையில், அடிப்படை ஊதியம் ரூ.20,000 (50%) என்று கணக்கிடப்பட்டு, அதற்கு மட்டுமே பி.எஃப் பிடிக்கப்படும். இதன் விளைவாக நிறுவனத்தின் செலவு குறையும், தொழிலாளியின் சேமிப்பு (PF), பணிக்கொடை பாதியாகக் குறையும். இவை 'ஊதிய' கணக்கிலிருந்து நீக்கப்படுவதால், ஒரு தொழிலாளி ஓய்வு பெறும்போது கையில் கிடைக்கும் மொத்தத் தொகை கணிசமாகக் குறையும். 

நிறுவனங்களின் சுமையை குறைப்பதற்காவே (Cost to Company - CTC) புதிய சட்டத்தை கொண்டுவந்திருக்கிறது மோடி அரசு. இது தொழிலாளியின் நிகழ்காலத் தேவையை விட, அவர்களின் எதிர்காலப் நிதிப் பாதுகாப்பில் (Financial Securit) நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கியிருக்கிறது.

ஒரே நாடு, ஒரே அடித்தளக் கூலி

முன்பு ஒவ்வொரு மாநிலமும் அங்குள்ள வாழ்க்கைச் செலவு (Cost of Living), விலைவாசி ஆகியவற்றைப் பொறுத்து தனித்தனியாக குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்துக் கொண்டன. இப்போது மத்திய அரசு 'ஒரே நாடு, ஒரே அடித்தளக் கூலி' என்ற முறையைக் கொண்டுவந்திருக்கிறது.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் வாழ்க்கைத் தரமும், குறைந்தபட்சக் கூலியும் மற்ற மாநிலங்களை விட அதிகம். மத்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரைத்த ஊதியத்தை விட, மத்திய அரசு தற்காலிகமாக அறிவித்த ஊதியம் மிகக் குறைவாக உள்ளது. இது 21-ஆம் நூற்றாண்டின் விலைவாசிக்கு துளியும் பொருந்தாத ஒன்று. 'சட்டப்பூர்வமான பாதுகாப்பு' என்ற பெயரில் 'சட்டப்பூர்வமான சுரண்டலுக்கு' இது வழிவகை செய்கிறது.  அது மாநில அரசு நிர்ணயித்துள்ள அதிகப்படியான ஊதியக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்யும். மாநிலங்கள் தன்னிச்சையாக ஊதியத்தை உயர்த்துவதில் சிக்கல்கள் எழும். இது வளர்ந்த மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நியாயமான கூலியைப் பாதிக்கும்.

Race to bottom என்று கூறி கார்ப்பரேட்டுகள் அதிகக் கூலி தரும் மாநிலங்களை விட்டுவிட்டு, மத்திய அரசு நிர்ணயித்துள்ள இந்த மிகக் குறைந்த 'அடித்தள ஊதியத்தை' மட்டும் பின்பற்றும் மாநிலங்களை நோக்கி நகரத் தொடங்கும். 

தொழிலுறவுச் சட்டம் 2020 கார்ப்பரேட் நலச் சட்டமே

தொழிலாளர் உறவுகள் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு 'தொழிலாளரும்' ஒரு 'ஊழியராக' இருக்க முடியும் என்றாலும், ஒவ்வொரு 'ஊழியரும்' கட்டாயமாக ஒரு 'தொழிலாளராக' கருதப்பட வேண்டியதில்லை. எந்தெந்த விதிகள் 'ஊழியர்களுக்கு' பொருந்தும், மற்றும் எந்தெந்த விதிகள் 'தொழிலாளர்களுக்கு' மட்டுமேயானவை என்ற வரையறையை நிறுவனங்களே தீர்மானிக்கும் வகையில் இச்சட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதமான வேலைநிறுத்த உரிமையும் பறிக்கப்பட்டுவிட்டது

இனி எந்த ஒரு தொழிற்சாலையிலும், எந்தத் துறையிலும் வேலைநிறுத்தம் செய்ய வேண்டுமானால் 60 நாட்களுக்கு முன்பே நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஒரு உடனடிப் பாதிப்பு அல்லது திட்டமிட்ட விபத்து நடந்தால் கூட, தொழிலாளர்கள் உடனடியாக தங்களின் எதிர்ப்பைக் காட்ட முடியாது. 2 மாதம் காத்திருக்க வேண்டும் என்பது போராட்டத்தின் வீரியத்தை அழித்துவிடும்.

அதன் பிறகும் போராட முடியுமா என்றால் அதுவும் இல்லை. நோட்டீஸ் கொடுத்த பிறகு, அரசு ஒரு 'சமரச அதிகாரி'யை (Conciliation Officer) நியமிக்கும். அந்த அதிகாரி பேச்சுவார்த்தையைத் தொடங்கிய கணத்திலிருந்தே, தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யத் தடை விதிக்கப்படும். இந்தப் பேச்சுவார்த்தை முடியும் வரை அல்லது தோல்வியடைந்ததாக அறிவிக்கப்படும் வரை போராட முடியாது. நடைமுறையில் என்ன நடக்கும் என்றால், ஒரு நோட்டீஸ் கொடுத்தவுடன் அரசுப் பிரதிநிதிகள் உள்ளே வருவார்கள், சட்டப்படி போராட்டம் முடக்கப்படும். சாம்சங் போராட்டம் ஓர் உதாரணம். இந்த நடைமுறையில்லாத எந்தப் போராட்டமும் 'சட்டவிரோத வேலைநிறுத்தம்' எனக் கருதப்படும். இதற்காக தொழிலாளர்களுக்கு கடுமையான அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படப் புதிய சட்டத்தில் இடமுண்டு.

அதாவது தற்போதைய கார்ப்பரேட்டுகளின் நடைமுறையே - அவர்களின் விருப்பத்திற்கு தொழிலாளர்களை பழிவாங்கிவிட்டு, நீதிமன்ற படிகட்டுகளிலேயே அவர்களின் வாழ்க்கையை முடித்துவிடுவார்கள். இனி நீதிமன்றம் போவதற்குள்ளாகவே அவர்களின் வாழ்க்கையை முடித்துவிட இந்த புதிய சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இது தொழிலாளர்களுக்கு பாதுக்காப்பான சட்டமாம்(!!).

வேலையாட்கள் கையாளும் விதியில் (Hire and Fire Policy) மாற்றம்

முன்பு 100 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள், ஆட்களை நீக்கவோ அல்லது தொழிற்சாலையை மூடவோ அரசின் அனுமதி பெற வேண்டும். புதிய சட்டத்தின் கீழ் இந்த வரம்பு 100-லிருந்து 300-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இதன் பொருள், 300 பேருக்குக் குறைவாக வேலை செய்யும் நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும், அரசிடம் கேட்காமலேயே தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கலாம். இந்தியாவில் 90% தொழிற்சாலைகள் இந்த 300 பேர் வரம்பிற்குள்ளேயே வருகின்றன.

ஒரே நாடு, ஒரே பேச்சுவார்த்தை சங்கம் - இதுவே வேலைநிறுத்த உரிமையின் தாரக மந்திரம்

புதிய தொழில் உறவுகள் சட்டத்தின் (IR Code) படி, ஒரு தொழிற்சாலையில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரே ஒரு சங்கத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு. அந்தச் சங்கம் 51% தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இது நடைமுறையில் சாத்தியமில்லை.

ஏனெனில், தொழிற்சாலைகளில் தற்போது 70% முதல் 80% வரை ஒப்பந்தத் தொழிலாளர்களே உள்ளனர். இவர்கள் வெவ்வேறு ஒப்பந்ததாரர்களின் (Contractors) கீழ் வேலை செய்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைப்பது மிகவும் கடினம். ஒரு சங்கம் தொடங்கப் போகிறார்கள் என்று நிர்வாகத்திற்கு தெரிந்தாலே, அந்த ஒப்பந்ததாரரை மாற்றுவதன் மூலம் அல்லது அந்தத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதன் மூலம் நிர்வாகம் போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும்.

யதார்த்தத்தில் நிர்வாகமே தனக்குச் சாதகமான ஒரு பொம்மைச் சங்கத்தை உருவாக்கி, தொழிலாளர்களின் வாக்குகளைப் பிரித்து, எந்தச் சங்கமும் 51% தொழிலாளர்களின் ஆதரவை பெற முடியாதவாறு பார்த்துக்கொள்ளும்.

இதை CITU, AITUC, BMS, INTUC உட்பட இந்தியாவின் 10 மத்திய தொழிற்சங்கங்கள் 2020-ல் பொது வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு இந்த புதிய சட்டங்களை எதிர்த்தன.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின்(ILO), விதி 87 (Convention 87) சுதந்திரமாகக் கூடும் உரிமை (reedom of Association) மற்றும் விதி 98 (Convention 98) கூட்டு பேர உரிமை (Right to Collective Bargaining) ஆகியவற்றை இந்தியா ஏற்றுக் கையெழுத்திடவில்லை. இந்நிலையில் புதிய சட்டத்தின்படி தொழிற்சங்க விதிகள் சர்வதேச தரநிலைகளுடன் எந்த வகையிலும் ஒத்துப்போகவில்லை. இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடாம்(!!).

மொத்தத்தில் தொழில் செய்வதை எளிதாக்குதல் ("Ease of Doing Business") என்பது தொழிலாளர்களின் குரலை நசுக்குவதன் மூலமே சாத்தியம் என்று அரசு கருதுகிறது.

சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020

இந்தச் சட்டம் ஒன்பது பழைய சட்டங்களை (PF, ESI, Gratuity போன்றவை) ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறது. 

கிக் (Gig) மற்றும் பிளாட்பார்ம் (Platform) தொழிலாளர்கள் சட்டப்படி தொழிலாளர்கள் அல்ல

ஓலா, ஊபர், ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் முதல்முறையாகச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறையில் வேறாக உள்ளது.

இவர்களை 'தொழிலாளர்கள்' (Employees) என்று சட்டம் அங்கீகரிக்கவில்லை. மாறாக 'நலத்திட்ட பயனாளிகள்' என்று மட்டுமே கருதுகிறது. இதனால் இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அல்லது வேலை பாதுகாப்பு கிடையாது. அரசு சில நல திட்டங்களை (welfare schemes) கொடுக்கலாம். ஆனால் தொழிலாளர் உரிமை முழுமையாகக் கிடைக்காது. PF, ESI போன்ற கட்டாய உரிமைகள் இல்லை. அரசு சமூக நலத் திட்டமாக அறிவித்தால் மட்டுமே அவர்களுக்கு உண்டு.  அது உரிமையாக அல்ல. இவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதி எங்கிருந்து வரும் என்பதில் தெளிவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் 1-2% லாபத்தில் மிகச்சிறிய பங்கையே அளிக்க வேண்டும் என்கிறது. அதுவும் இவர்களின் உரிமையில்லை.

குறைந்தபட்ச ஊதியம் என்பது இவர்களுக்கு பொருந்தாது. வேலையிலிருந்து நினைத்த போது துரத்தினால் கூட எந்த பாதுகாப்பும் இவர்களுக்கு இல்லை. ஏன் என்றால் இவர்கள் தொழிலாளிகள் கிடையாது என்கிறது சட்டம். வேலை நிறுத்த உரிமை, கூட்டு பேர உரிமை இவர்களுக்கு கானல் நீர்.

கட்டுமானத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்

இந்தியாவில் கட்டுமானத் துறை, மிகப் பெரிய அளவில் அமைப்புசாரா தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது. இத்துறையில் 4 கோடி தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு கூட இல்லாத சூழலில், பல ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் (BOCW) சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம், ஓய்வூதியம், மகப்பேறு நலன், கல்வி உதவித்தொகை, கடனுதவி போன்ற பல நலன்களை வழங்குகிறது. இதற்கான நிதி, கட்டுமானத் துறையில் வசூலிக்கப்படும் சிறப்பு வரி (cess) மூலம் பெறப்படுகிறது.

இந்தச் சட்டத்தை ரத்து செய்வது கட்டுமானத் தொழிலாளர்களை கொத்தடிமைத் தொழிலாளர்களாக மாற்றும். சுமார் 4 கோடி தொழிலாளர்களின் பதிவுகள் செல்லாததாக்கப்படலாம்; 36 மாநில நல வாரியங்கள் கலைக்கப்படலாம். மேலும், தொழிலாளர்கள் புதிய திட்டங்களில் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.

புதிய திட்டங்களில், தொழிலாளர்களே பங்களிப்பு செலுத்த வேண்டிய நிலை உருவாகும்; இது  காலனிய காலத்தை விட  மோசமான உழைப்புச் சுரண்டலுக்கு இட்டுச்செல்லும்.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலை

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இதில் கூடுதல் பாதுகாப்பு எதுவும் இல்லை. 'குறிப்பிட்ட கால வேலை' என்ற முறை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான காலம் மட்டும் ஒருவரை வைத்துக்கொண்டு, பிறகு எவ்வித இழப்பீடும் இன்றி நீக்கிவிடலாம். இது நிரந்தர வேலைவாய்ப்பை முற்றிலுமாக ஒழித்துவிடும்.

முன்பு ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் வேலை செய்தால்தான் 'கிராஜுவிட்டி' கிடைக்கும். புதிய சட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இந்த 5 ஆண்டு வரம்பு நீக்கப்பட்டு, ஓராண்டு வேலை செய்தாலே 'புரோ-ரேட்டா' அடிப்படையில் கிராஜுவிட்டி வழங்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் நிறுவனங்கள் ஒருவரை ஓராண்டு கூடத் தொடர்ந்து வேலை செய்ய விடாமல் 'பிரேக்' கொடுக்கும் அபாயம் உள்ளது.

பதிவுக்கு தேசிய டிஜிட்டல் அடையாளம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கானோரை தொழிலாளர் நிலையிலிருந்து நீக்குகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை படு மோசமான நிலைக்கு மாறும்.

EPFO மற்றும் ESIC மீது அரசின் பிடி இறுகுகிறது

முன்பு அரசுப் பிரதிநிதிகள், முதலாளிகள், தொழிலாளர்கள் அல்லது தொழிற்சங்கங்கள் என மூன்று தரப்பும் சேர்ந்து கொள்கை முடிவுகள் எடுப்பார்கள். இதில் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் வாக்குரிமை இருந்தது. கூடுதலாக மாநில அரசுகள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் இருந்தனர். இந்த நிறுவனத்தின் மேலாண்மை அமைப்பு (Board) எதுவொன்றையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அரசே எதுவொன்றையும் நேரடியாக அறிவிக்க முடியும். கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக அரசே தொழிலாளர் மீதான பிடியை இறுக்குகிறது. 

இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் போன்ற சேவைகளைத் தனியார் நிறுவனங்களும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களின் சேமிப்பைப் பங்குச்சந்தை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைப்பதற்கு சட்டபூர்வமாக வழிவகை செய்துள்ளது.

தொழில் பாதுகாப்பு (OSH) சட்டம் 2020 தொழிலாளர்களை மீண்டும் காலனிய காலத்து இருண்டபக்கங்களுக்குள் தள்ளுகிறது.

தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் (OSH) சட்டம் 13 பழைய சட்டங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறது. இந்தச் சட்டம், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, நிறுவனங்கள் தடையின்றிச் செயல்படுவதையே (Ease of Doing Business) நோக்கமாகக் கொண்டுள்ளது.

முறைசாராத் தொழில்கள் (Informal Sector) புறக்கணிப்பு

இந்தச் சட்டம் பெரும்பாலும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது, இந்தியாவின் 90% தொழிலாளர்கள் முறைசாராத் துறையில் (Informal Sector) சிறிய நிறுவனங்களில்தான் பணிபுரிகின்றனர். இவர்கள் இந்தச் சட்ட வரம்பிற்குள் இல்லை என்பது ஒரு பெரிய மக்கள் தொகையினர் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதையே காட்டுகிறது.

ஆய்வாளர்களை கார்ப்பரேட் ஆலோசகர்களாக மாற்றியுள்ளது இச்சட்டம்

முன்பு கண்காணிப்பாளர் ஆக இருந்தவர் இப்போது ஆலோசகர்களாக மாற்றப்பட்டுள்ளார். நிறுவனங்களில் பாதுகாப்பு விதிகள் மீறப்படுகிறதா என்று ஆய்வு செய்வதை விட, நிறுவனங்கள் எப்படிச் சட்டத்திலிருந்து தப்பிப்பது அல்லது 'இணக்கமாக' நடப்பது என்று ஆலோசனை வழங்குவதே இவர்களின் பணியாக இருக்கும். இதற்கு சட்ட அங்கீகாரமும் தற்போது வழங்கப்பட்டுவிட்டது. அனைத்து நிறுவனங்களையும் ஆய்வு செய்வதற்குப் பதிலாக, கணினி மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு சில நிறுவனங்களை மட்டுமே ஆய்வு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது முதலாளிகள் பயமின்றி விதிமீறல்களில் ஈடுபட வழிவகுக்கும்.

பிரிட்டிஷ் காலனிய காலத்தின் வேலை நேரம் மீண்டும் அமல்

உலகம் முழுவதும் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமை 8 மணி நேர வேலை நேரம் ஒழிக்கப்பட்டு புதிய காலனியக் கட்டத்தில் 12 மணி நேரம் வரை வேலை வாங்குவதற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டுவிட்டது. காலனிய காலத்தில் கைரேகை தெரியும் வரை வேலை வாங்கப்படுவார்கள். அதாவது அதிகாலையில் வாங்கப்படும் கைரேகை பதிவை பார்க்க இயலாத அளவுக்கு வெளிச்சம் குறையும் வரை வேலை வாங்கப்படுவார்கள். இப்போது வண்ணமய விளக்குகளை ஏற்றி தொழிலாளர்களின் வாழ்வில் இருட்டை கொண்டுவந்திருக்கிறார்கள்.

இது 12 மணி நேரத்திற்கும் மேலாகவும், ஒரு காலாண்டிற்கு 125 மணி நேரம் வரை ஓவர் டைம் நீட்டிக்கலாம் என்கிறது இந்த புதிய காலனியச் சட்டம். முதலாளிகள் தொழிலாளர்களைக் கூடுதல் நேரம் வேலை வாங்கப் பயன்படுத்தும் ஒரு பெரிய ஓட்டையாகும். தொழிலாளர்களை தசை, இரத்தம், உணர்வுள்ள உயிராக பார்க்காமல், இயந்திரமாக, ஒரு கருவியாக பார்க்கும் நிலையையே இந்தச் சட்டம் உருவாக்கியுள்ளது. கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்திருக்கிறது.

கம்பெனி சட்டத் திருத்தங்கள் மற்றும் தொழிலாளர் - தொழில் நிலை

நிறுவனச் சட்டம் 2013 மற்றும் திருத்தங்கள்

இந்தியாவின் நிறுவனச் சட்டம் (Companies Act 2013) பல திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. 2017, 2019, மற்றும் 2020ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் கார்்ப்பரேட் ஆட்சியை (Corporate Governance) நவீனமயப்படுத்தியதால், திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் இந்த திருத்தங்கள் தொழிலாளர்-முதலாளி உறவில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது கவனமாக ஆராயப்பட வேண்டும்.

கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி (CSR - Corporate Social Responsibility) தொழிலாளர்களுக்குப் பயனில்லாத 'சமூகப் பொறுப்பு'

Companies Act 2013 2013-ன் Section 135 கீழ், ஒரு குறிப்பிட்ட அளவு நிகர லாபம் ஈட்டும் நிறுவனங்கள் 2% லாபத்தை CSR செலவினங்களுக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் உண்மையில் கார்ப்பரேட்டுகள் இந்த நிதியைக் கொண்டு தங்களுக்குச் சாதகமான விளம்பரங்களைச் செய்கின்றனவே தவிர, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ரத்தம் சிந்திய தொழிலாளர்களின் குடும்பக் கல்விக்கோ அல்லது மருத்துவத்திற்கோ பயன்படுத்துவதில்லை. தொழிலாளர் நலன் என்பது CSR-ன் நேரடிப் பட்டியலில் முக்கியத்துவம் பெறவில்லை.

NCLT மற்றும் நொடிந்துபோதல் மற்றும் திவால் சட்டம் 2016 - தொழிலாளர்களை வஞ்சிக்கும் சட்டம்

Insolvency and Bankruptcy Code (IBC) 2016-ன் கீழ், நிறுவனம் திவாலாகும் போது சொத்துக்களை விற்று பணத்தைப் பிரித்துக் கொடுப்பதில் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். முதலில் வங்கிகளுக்கும் (Financial Creditors), பிறகு அரசுக்கும் பணம் கொடுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் 'Operational Creditors' என்ற இரண்டாம் தரப் பட்டியலிலேயே வைக்கப்பட்டுள்ளனர். இதில் நீதிமன்றத் தாமதமும் சேர்ந்துகொள்கிறது. தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) வழங்கும் தீர்ப்புகள் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியமும் இல்லை, பிழைக்க வழியும் இல்லை. இறுதியில் மிச்சமான சொற்பப் பணமே அவர்களுக்குக் கிடைக்கிறது.

கம்பெனி சட்டத்தில் எந்த தொழிலாளர் பிரதிநிதித்துவமும் இல்லை

ஐரோப்பிய நாடுகளில் (ஜெர்மனி, நார்வே போன்றவை) கம்பெனி நிர்வாகக் குழுக்களில் (Board of Directors) தொழிலாளர் பிரதிநிதிகள் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இதனால் தொழிலாளர் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்படும். இந்திய நிறுவனச் சட்டத்தில் அதற்கு இடமே இல்லை. முடிவுகள் அனைத்தும் முதலாளிகளால் மட்டுமே எடுக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் வெறும் 'உற்பத்திக் கருவிகளாகவே' பார்க்கப்படுகின்றனர்.

ஒட்டுமொத்த பாதிப்பு - தொழிலாளர் நிலை மற்றும் தொழில்துறை

முறைசாரா தொழிலாளர்களின் நிலை

இந்தியாவின் மொத்த தொழிலாளர் சக்தியில் சுமார் 90%-க்கும் மேலானவர்கள் முறைசாரா தொழில்துறையில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது. முறைசாரா தொழில்துறையில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (Migrant Workers), வீட்டு வேலையாட்கள் (Domestic Workers), கட்டிட கட்டுமானத் தொழிலாளர்கள் போன்றோருக்கு இந்தச் சட்டம் பயனளிக்காது. இவர்கள் இப்போதும் சட்டத்திற்கு வெளியே, குறைந்த கூலியில் சுரண்டப்படுகிறார்கள்.

பெண் தொழிலாளர்களின் நிலை

ஊழியர்களின் ஒப்புதல் பெறப்பட்டால், அவர்களை காலை 6 மணிக்கு முன்பும், இரவு 7 மணிக்குப் பின்பும் பணிக்கு அமர்த்தலாம் என்று கூறுகிறது. அதாவது வேலையிலிருந்து துரத்தி விடுவதற்கான கார்ப்பரேட்டுகளிடம் உரிமை கொடுத்துவிட்டார்கள். அதன் பிறகு மிரட்டித்தான் ஒப்புதல் பெறுகிறார்கள். இனி இது சுதந்திரமாகவும், சட்டப்பூர்வமாகவும் நடக்கும். OSH சட்டம் 2020 பெண் தொழிலாளர்களை இரவுப் பணிக்கு நிர்ப்பந்திக்கிறது. ஆனால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விதிகளும் இல்லை. பேறுகால சலுகைச் சட்டத்தின் (Maternity Benefit Act) சில பாதுகாப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்றாலும், நடைமுறையில் சிறிய நிறுவனங்கள் பேறுகால விடுப்பு (Maternity Leave) வழங்குவதில்லை. இதைக் கண்காணிக்கும் 'ஆய்வாளர்' 'ஆலோசனையாளராக' மாற்றப்பட்டுவிட்டதால், பெண்கள் வேலையிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

அப்படியே கார்ப்பரேட்டுகளின் விதிமீறல்கள் கண்டுபிடித்தால் கூட ஒரு சல்லிக்காசுக்கும் பயனில்லை. கம்பெனி சட்டத் திருத்தங்கள் பல விதிமீறல்களை 'குற்றம்' என்ற பட்டியலிலிருந்து நீக்கி, வெறும் 'அபராதம்' கட்டினால் போதும் என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளன. இதுதான் கார்ப்பரேட் உலகம் என்கிறார்களோ(?!).

தொழில்துறையில் புதிய சட்டங்களின் தாக்கங்கள்

தொழிலதிபர்கள் அமைப்பான CII (Confederation of Indian Industry) போன்ற அமைப்புகள் மற்றும் மத்திய அரசு இந்தப் புதிய 4 சட்டத் தொகுப்புகளையும் 'தொழில் செய்வதை எளிதாக்கும்' (Ease of Doing Business௳) ஒரு புரட்சிகரமான மாற்றமாகப் பார்க்கின்றன. ஆனால், இதன் மறுபக்கம் தொழில்துறையின் நீண்டகால வளர்ச்சியைப் பாதிக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளது.

அதிக நேரம் வேலை வாங்குவதால் உற்பத்தி கூடும் என்பது ஒரு மாயை. 8 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு மனிதனின் உழைப்புத் திறன் 50% குறைகிறது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சோர்வினால் தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்பட 60% அதிக வாய்ப்புள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது நிறுவனங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதில் முடிகிறது. நஷ்டஈடு வழங்காமல் ஏமாற்ற, தொழிலாளர்களின் மீது ஒடுக்குமுறைகள ஏவும்.

'அமர்த்து மற்றும் துரத்து' (Hire and Fire) லாபத்தை குவிக்க உதவும் கருவியே

ஆட்களை வேலைக்கு எடுப்பதும், தேவை இல்லாதபோது நீக்குவதும் எளிதானால், அதிக முதலீடுகள் வரும் என்று கருதுகிறார்கள். ஆனால், வேலை பாதுகாப்பு இல்லாத இடத்தில் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு குறைகிறது. நிச்சயமற்ற தன்மையால் அச்சம் மேலோங்கி உற்பத்தித்திறன் (Productivity) மற்றும் வேலையின் தரம் (Quality) வீழ்ச்சியடையும், தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்க நிறுவனங்கள் முன்வராது. ஏனெனில், பயிற்சி பெற்ற பிறகு அவர்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம் என்ற சூழல் இருப்பதால், திறமையான உழைப்பாளர் சக்தியை இழக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது. 

காலவரையறை ஒப்பந்தம் (Fixed-Term Employment - FTE)

நிரந்தர வேலைக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட இந்த முறை, காகிதத்தில் சலுகைகளைத் தந்தாலும் நடைமுறையில் ஒரு "தூக்குக்கயிறு" போன்றது. புதிய சட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணிக்கொடை (Gratuity) ஓராண்டிலேயே உண்டு எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் நிறுவனங்கள் 11 மாதங்கள் முடிந்தவுடன் ஒப்பந்தத்தை முடித்துவிட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் புதிய ஒப்பந்தம் போடுவார்கள் (Breaking the Serviceமீ). இதன் மூலம் தொழிலாளிக்கு எவ்வித சட்டப்பூர்வ சலுகைகளும் கிடைக்காது. கேள்வி கேட்டால் "அடுத்த முறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது" என மிரட்டப்படுவார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு வித்திடும்

நேரடி வேலைவாய்ப்பைக் குறைத்து, இடைத்தரகர்கள் (Contractors) மூலம் வேலை வாங்கும் முறை சட்டப்பூர்வமாக்கப்படுவதால், தொழிலாளர்களின் உழைப்பில் ஒரு பெரும் பகுதியை இந்த இடைத்தரகர்கள் கமிஷனாகச் சுரண்டுவார்கள்.

இந்தியத் தொழில்துறையில் 'திறன் மிக்க உழைப்பாளர்கள்' உருவாவது தடுக்கப்படும். இது நீண்டகாலத்தில் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும். தொழிலாளர்களின் ஊதியம் குறைக்கப்படுவதாலும், வேலை பாதுகாப்பு இல்லாததாலும் அவர்களின் வாங்கும் திறன் (Purchasing Power) குறையும். மக்கள் கையில் பணம் இல்லையென்றால், சந்தையில் பொருட்கள் விற்காது. இது இறுதியில் கார்ப்பரேட்டுகளின் உற்பத்தியையே தேக்கமடையச் செய்யும். இது பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள மற்றும் பிற, மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லாத விதிகளான சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுதல், ஒருங்கிணைந்த பதிவு மற்றும் குறிப்பிட்ட கால வேலைக்கான பணிக்கொடை வழங்குதல் போன்றவை மாநில விதிகள் இயற்றும் வரை செயலுக்கு வந்துவிடும். அதே சமயம், மாநில அளவில் செயல்படுத்தப்பட வேண்டிய விதிகளுக்கு கூடுதல் கால அவகாசம் கொடுத்துள்ளது. இதை மக்கள் எதிர்ப்பு, தேர்தல் ஆகியவற்றுக்கு ஏற்ப பகுதி பகுதியாக நடைமுறைப்படுத்தவும் செய்யலாம். பாஜகவின் தொழிற்சங்கமான BMS சில சட்டங்களை ஆதரிக்கிறது. இரண்டு சட்டங்களில் மட்டுமே திருத்தம் கோரியிருக்கிறது. இது தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் பிரித்தாளும் முறையில் நடைமுறைக்கு கொண்டுவரும் தந்திரமாகவே இருக்கும்.

உலகமயமாக்கலும் தொழிலாளர் நலனும்

1991-களுக்குப் பிறகான உலகமயமாக்கலின் தாக்கம்

1991-ல் காங்கிரசு கட்சி தாராளமயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட பின்னர், பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் நுழைந்தன. உலக வர்த்தக அமைப்பு (WTO) உருவான பிறகு ஏகாதிபத்தியங்களின் உலகளாவிய வினியோக சங்கிலி வலுவடைந்தது. ஒவ்வொரு கட்டமாக இந்தியாவின் தேசிய தொழில்துறைகளை விற்பதற்கென்றே தனித் துறையை உருவாக்கி காங்கிரஸ் விற்க ஆரம்பித்தது.

சுரண்டலை வலுப்படுத்த ஏற்கெனவே போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமையை ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளும், உள்நாட்டு தரகு முதலாளிகளும் ஒழித்துக் கட்டிவிட்டனர். கொத்தடிமையாக நடத்தத் தொடங்கினர். அனைத்து தொழிற்சாலைகளிலும், அதன் இணைந்த மற்ற துறைகளிலும் ஒப்பந்தமுறை புகுத்தப்பட்டது. 

2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார பொது நெருக்கடி மிகப்பெரிய அரசியல் நெருக்கடியாக மாறியது. அதாவது கார்ப்பரேட்டுகள் அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தனது அரசியல் அதிகாரத்தைக் கொண்டு விவசாயிகள், தொழிலாளர்கள், ஜனநாயக சக்திகள் என அனைவரின் மீதும் தாக்குதல் நடத்தியது. ஆதிதிரட்டல் வடிவத்தை தன் சுரண்டல் வடிவமாக புதிய காலனிய நாடுகளில் செயல்படுத்தியது. ரஷ்ய ஏகாதிபத்தியம் தன் நெருக்கடியிலிருந்து மீண்டதும், அதன் தொடர்ச்சியாக சீன ஏகாதிபத்தியம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஊதிப் பெருகி அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குப் போட்டியாக வளர்ந்து வந்ததும் இந்த நெருக்கடி அவர்களுக்குள் மோதலாக மாறியது. மாறி மாறி அவைகள் ஆட்சி மாற்றத்தை பல நாடுகளில் நிகழ்த்தியது. சோனியா-மன்மோகன் ஆட்சி அன்று மிக மூர்க்கமாக அமெரிக்காவின் ஆணைக்கு அடிபணிந்து எல்லோர் மீதும் தாக்குதல் தொடுத்தது.  விருப்ப ஓய்வு ("VRS" - Voluntary Retirement Scheme) என்ற பெயரில் பலர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். வளர்ச்சி என்ற பெயரில் அந்நிய நிதிமூலதன  ஏகாதிபத்திய கும்பலிடம் நாட்டின் அனைத்து துறைகளையும் படிப்படியாக ஒப்படைத்தனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் சட்டங்களை செல்லாக்காசாக்கியது. இன்று காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, புதிய தொழிலாளர் விரோதச் சட்டங்களை செயல்படுத்துவதில் முன்னணியிலேயே உள்ளது. 8 மணி நேர வேலை நேரத்தை ஒழித்துக்கட்டுவதில் முந்திக்கொண்டு செயல்பட்டது. இவ்வாறு வரலாறு நெடுகிலும், காங்கிரசு இரட்டை வேடம் தரித்து தொழிலாளர்களை வஞ்சித்தே வருகிறது.

இந்தியாவில், பாசிச பாஜக ஆட்சி 2014ல் ஆட்சிக்கு வந்த பின்னர் அதன் தாக்குதல் நாலுகால் பாய்ச்சலில் அதிகரித்தது. தொழில்துறையை, இயற்கை வளத்தை, தொழிலாளர்களை மொத்தமாக ஏகாதிபத்தியத்திடம் அடிமையாக ஒப்படைக்க மூர்க்கமாகச் செயல்பட்டது. அதன் விளைவாக தொழிலாளர் உரிமைக் குறியீடு 2024ன் (Labour Rights Index 2024) அறிக்கையின்படி, உலகளவில் 145 நாடுகளில் நடத்திய ஆய்வுகள் தொழிலாளியின் வாழ்க்கைத் தரம் சிறிய நாடுகளை விடவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

சங்கம் அமைக்கும் சுதந்திரம் (Freedom of Association), இது அனைத்து உரிமைகளின் 'தாய் உரிமை' ஆகும். பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழிலாளர்கள் ஒன்று கூடிப் பேசவோ, சங்கம் அமைக்கவோ அனுமதிப்பதில்லை.

குடும்ப பொறுப்புகளும் வேலையும் (Family Responsibilities) 46% அளவுக்கு மட்டுமே பாதுகாக்கப்படுகிறது. வேலை நேரத்திற்கும், குடும்பத்துடன் செலவிடும் நேரத்திற்கும் இடையிலான சமநிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலை பாதுகாப்பு (Employment Security) என்பது வெறும் 37% மட்டுமே ஆகும். எப்போது வேலை போகும் என்ற அச்சத்திலேயே பெரும்பாலான தொழிலாளர்கள் வாழ்கின்றனர். இதனால் பி.எஃப் (PF), காப்பீடு (ESI) மற்றும் வேலை பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாடுகள் தங்களின் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை வலுவிழக்கச் செய்கின்றன. 2022 முதல் 2024 வரை உலகளவில் 99 சட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 70% மாற்றங்கள் தொழிலாளர் நலனுக்கு எதிராக பாதுகாப்பற்ற சூழலையே உருவாக்கியுள்ளன.

இளைஞர் தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது

ஐரோப்பிய இளைஞர் மன்றத்தின் (European Youth Forum 2024) அறிக்கையின்படி, இன்றைய இளைஞர்கள் வேலைக்குச் சென்றாலும், அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாகவே உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஐரோப்பாவில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் தங்களின் விருப்பத்திற்கு மாறாக, எந்த நேரத்திலும் நீக்கப்படக்கூடிய 'தற்காலிக ஒப்பந்த' வேலைகளில் உள்ளனர். வேலையிருந்தும் ஏழ்மை நிலை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. வேலை செய்தும் போதிய வருமானம் இல்லாமல் ஏழ்மையில் வாடும் இளைஞர்களின் எண்ணிக்கை 12.5% ஆக உள்ளது. இது பொதுவான மக்கள் தொகையைவிட (9%) அதிகம்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி புதிய அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ளது. இது கடுமையான உழைப்பு நேரத்தை குறைப்பதற்கு மாறாக அவர்களைக் கண்காணிக்கும் கருவியாக மாறியுள்ளது. மென்பொருள்கள் மற்றும் AI மூலமாக தொழிலாளர்களின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. இது அவர்களின் தனிமனித சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் பாதிக்கிறது. டிஜிட்டல் அடிமைத்தனத்தை புகுத்தியிருக்கிறது. அதாவது வேலை நேரம் முடிந்த பிறகும் போன், மின்னஞ்சல் வழியாக வேலை வாங்குவது அதிகரித்துள்ளது. வேலை நேரம் முடிந்த பிறகு, அலுவலகத் தொடர்புகளை (Calls/Emails) துண்டித்துக்கொள்ளும் (Right to Disconnect) சட்டப்பூர்வ உரிமை. தொழிலாளர்கள் தங்களின் வேலை நேரத்தைத் தீர்மானிப்பதில் அதிகாரம் (Working Time Autonomy) போன்ற புதிய உரிமைகள் 21-ஆம் நூற்றாண்டின் தொழிலாளர் உரிமைப் போராட்டத்தில் கூடுதல் கோரிக்கையாக மாறியிருக்கிறது.

கூட்டுப் பேர உரிமை (Collective Bargaining) தொழிலாளர்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம். லெனின் ஏன் சங்கம் தேவை என்ற காரணத்தினை கூறும் போது, நிராயுதபாணியாக உள்ள தொழிலாளி வர்க்கத்திற்கு இருக்கும் ஒரே ஆயுதம் இந்த கூட்டுப் பேரமே என்பார். கூட்டுப் பேர உரிமை அதாவது சங்கம் இல்லாத இடத்தில், தொழிலாளர் நலன் காக்கும் சட்டமே இருந்தாலும் அவை செல்லாக்காசாக்கப்படும். இந்நிலையில் சட்டங்களும் தொழிலாளர் உரிமையை பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு சுரண்டும் உரிமையை சட்டப்பூர்வமாக்க பல நாடுகளில் தொழிலாளர் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், தொழிலாளர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அவர்களுக்கு இருண்ட எதிர்கால வாழ்க்கையே இருக்கும். 

உலக தொழிலாளர் சட்டங்களின் நிலை மற்றும் பாதிப்பு

ILO-ன் கண்ணியமான வேலை அட்டவணை

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஒரு தொழிலாளிக்கு 10 அடிப்படை உரிமைகள் இருக்க வேண்டும் என்கிறது. (1) வேலை வாய்ப்புகள், (2) நியாயமான வருமானம், (3) சரியான வேலை நேரம், (4) குடும்ப சமரசம், (5) கட்டாய/குழந்தை உழைப்பு ஒழிப்பு, (6) வேலை நிலைத்தன்மை, (7) சமவாய்ப்பு, (8) பாதுகாப்பான வேலைச் சூழல், (9) சமூகப் பாதுகாப்பு, மற்றும் 

(10) சமூகமாக இருத்தல் மற்றும் சங்கம் அமைக்கும் உரிமை. ஒரு வேலை 'கண்ணியமானது' என்று சொல்லப்பட வேண்டுமென்றால் அங்கு மேற்கண்ட 10 நிபந்தனைகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால், 2024-ஆம் ஆண்டின் தொழிலாளர் உரிமைக் குறியீடு (Labour Rights Index) காட்டும் உண்மை நிலையோ வேறாக உள்ளது. 

தொழிலாளர் உரிமைக் குறியீடு 2024 இந்த பத்து பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டு 145 நாடுகளை மதிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்னவென்றால், 'கண்ணியமான வேலை' என்பது வெறும் ஊதிய விஷயம் மட்டுமல்ல; அது உரிமைகள், பாதுகாப்பு, மதிப்பு மற்றும் பேரம்பேசும் தகுதி ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியதே.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு, கன்வென்ஷன் 87 மூலம் வேலை நிறுத்த உரிமையும் உள்ளிட்டு என்று பெயரளவிற்கு கூறியது. ஆனால் ஏகாதிபத்தியங்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் இதை ஏற்க மறுத்தனர். தனது அரசியல் அதிகாரத்தைக் கொண்டு சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பி அந்த உரிமையை முடக்கி வைத்துள்ளனர். அதே போல் கன்வென்ஷன் 98, "முதலாளி-ஆதரவு சங்கங்கள்" (Yellow Unions௳) உருவாக்குவது தடை என்றது. ஆனால், எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களிலும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் தனக்கான தொழிற்சங்கத்தை அவை உருவாக்கி அதில் இருப்பவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. இந்திய அரசு, சர்வதேச தொழிலாளர் அமைப்பில் கையெழுத்திடவேயில்லை என்பது எந்தளவுக்கு இது தொழிலாளர் விரோத ஆட்சியை நடத்துகிறது என்பதை புரிந்துகொள்ளலாம். பாசிச மோடி ஆட்சியில், நிறுவனங்கள் நினைத்தபோதெல்லாம் ஊழியர்களை தூக்கி எறிவதும், 51% உறுப்பினர் ஆதரவு இருந்தால்தான் தொழிற்சங்கத்திற்கு அனுமதி என்பதும் அதன் ஒடுக்குமுறையின் உச்சம்.

பெண்களுக்கான சம வேலைவாய்ப்பு சட்டங்களை இயற்றியது. இது அவர்களைப் பாதுகாப்பதற்கு மாறாக பாதுகாப்பற்ற இரவு நேர வேலையை நிர்ப்பந்தப்படுத்தவே கார்ப்பரேட்டுகளுக்கு உதவியது. கட்டாய உழைப்பு (Forced Labour) இன்று பொதுப் போக்காக மாறியிருக்கிறது. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு (Child Labour) இன்று காகிதத்தில் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. 21 கோடி குழந்தை தொழிலாளர் இன்றும் கொடுமையாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகக் கொடுமையான ஈவு இரக்கமற்ற உழைப்புச் சுரண்டலாகும்.

கத்தார், சவுதி அரேபியா, குவைத்,UAE, ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் 'கஃபல தொழிலாளர் முறை' (Kafala System) சீர்திருத்தம் என்று கொண்டுவந்தது. வேலைமாற்றம் செய்ய தடைச் சான்று தேவையில்லை என்பதை நீக்கியிருக்கிறது. ஆனால் இன்றும் தொழிலாளர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படுகிறது. வீட்டுத் தொழிலாளர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சம்பளம் தருவதில் இழுத்தடிப்பு, வேலைக்கு ஆள் எடுக்க கட்டணங்கள் என உத்தரவாதம் இல்லாத நிலைமையே அங்கு தொடர்கிறது. 

இந்தோனேஷிய அரசு 'Job Creation Law' மூலம் தொழிலாளர் பாதுகாப்பை குறைத்துள்ளது. 'வேலை வாய்ப்பை உருவாக்குதல்' (Job Creation Law) என்ற பெயரில் தொழிலாளர் பாதுகாப்பைக் குறைத்து, குறைந்தபட்ச கூலி உரிமையைப் பறித்துள்ளது. கிர்கிஸ் குடியரசு, மொரோக்கோ ஆகிய நாடுகளில் குறைந்தபட்ச கூலி ஒப்பந்தமுறையைக் கூட மீண்டும் புதுப்பிப்பு செய்துகொள்ள முடியாது.  துருக்கி, நேபாளம், பிலிப்பைன்ஸ் நாடுகளின் தொழிலாளர்களின் வாழ்நிலையும் உரிமையும் படுபாதாளத்திற்கு சென்றிருக்கிறது. 

தொழிற்சங்கங்கள் போராடிப்பெற வேண்டிய உரிமைகள் 

ஒப்பந்த கூலி முறை, கார்ப்பரேட்டுகளுக்கு கேள்விகேட்பாறற்ற அதிகாரம் 

ஒப்பந்த கூலிமுறையையே முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். எப்போது வேண்டுமென்றாலும் தொழிலாளர்களை வெளியேற்றும் அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். 

12 மணி நேர வேலை முறையைத் திரும்பப் பெற்று, மீண்டும் 8 மணி நேர வேலை என்பதைச் சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.

விலைவாசி உயர்விற்கு ஏற்ப, கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் 'அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம்' என்பதை மாநில வாரியாகச் சீரமைக்க வேண்டும்.

'தனிமனித உரிமை' மற்றும் 'வேலை நேரத்திற்குப் பின் துண்டித்துக்கொள்ளும் உரிமை' (Right to Disconnect) ஆகியவற்றுக்காக போராட வேண்டும்.

சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப திருத்தங்கள்

ILO Convention 87 மற்றும் 98 ஆகியவற்றை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு 51% தொழிலாளர் ஆதரவு என்ற விதியை மாற்றி, ILOளி-ன் வழிகாட்டுதலின்படி 'அனைத்து தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளையும்' என்று மாற்ற வேண்டும்.

பாதுகாப்புத் திட்டங்களை அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும்

சமூகப் பாதுகாப்பு திட்டங்களை அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாயமாக விரிவுபடுத்த வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் 'ஆதார் இணைக்கப்பட்ட உலகளாவிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை' (Universal Social Security) அமல்படுத்த வேண்டும்.

கிக் (Gig) தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பி.எஃப் (PF) மற்றும் மருத்துவக் காப்பீடு (ESI) கட்டாயமாக்கப்பட வேண்டும்.

கம்பெனி நிர்வாகத்தில் தொழிலாளர் பிரதிநிதித்துவம்

ஜெர்மனியின் 'Codetermination' மாதிரியில், இந்தியாவிலும் பெரிய நிறுவனங்களின் Board of Directors-ல் தொழிலாளர் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்று Companies Act-ல் திருத்தம் கொண்டுவர வேண்டும். இது நிறுவனம் முடிவெடுக்கும் செயல்முறையில் தொழிலாளர் குரலை உறுதிப்படுத்தும்.

பொருளாதார போராட்டங்களை அரசியல் போராட்டத்தோடு இணைப்போம், பாசிசத்தை வீழ்த்துவோம்

பன்னாட்டு கார்ப்பரேட்டுகளும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் இணைந்து நடத்தும் இந்த 'அடிதளத்தி போட்டி' (Race to the Bottom), தொழிலாளர்களை நவீன அடிமை நிலைக்குத் தள்ளுகிறது. ஆனால், முதலாளித்துவம் தனது சொந்தக் குழியைத் தோண்டுபவர்களையும் தானே உருவாக்குகிறது என்பது மார்க்சிய விதி.

நான்கு தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துதல் என்ற பேரில் தொழிலாளர் உரிமைகளைப் பறித்துள்ளது மோடி அரசு. வேலையில் அமர்த்தவும் துரத்தவும் அதிகாரம் கொடுத்தது, தொழிற்சங்க உரிமை ஏட்டளவிலானதாக மாற்றியது, ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு முழுவதுமாக தள்ளுவது ஆகியவை தொழிலாளர் நலன் மட்டுமல்ல இந்திய பொருளாதாரத்தையும், மக்கள் நலனையும் குழி தோண்டி புதைக்கவே செய்யும்.

சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் இந்த அமலாக்கத்தைக் கண்டித்துள்ளது. "நவீன அடிமைகளாக" மாற்றிவிடும் என்று கண்டித்தது. 10க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கள் இதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தது. ஆனால் இதை அரசியல் கட்சிகள் ஒரு அரசியல் இயக்கமாக மாற்றவில்லை. 

ஏற்கெனவே தொழிலாளர் நலன் மாநில பட்டியலில்தான் இருக்கிறது. ஆனால், மாநில உரிமைகளை எதிர்கட்சிகள் ஆளும்மாநில அரசுகளும் கூட துறந்து வருகின்றன; தொழிலாளர்களுக்கு எதிரான பாசிச பாஜக அரசின் கொள்கைகளை அமல்படுத்த தயாராகிவிட்டன. காரணம் கார்ப்பரேட் சேவையில் இவர்களுக்கு பாஜகவோடு எந்த முரண்பாடும் கிடையாது. அதை தன் அதிகாரத்தில் செய்ய வேண்டும் என்று கருதுகிறதே தவிர சுதேசியத்தை வளர்ப்பதற்கான திட்டமோ, உழைக்கும் வர்க்கத்தை சார்ந்து நிற்கிற தேவையோ அவர்களுக்கு இல்லை. ஆகையால்தான், ஏகாதிபத்திய எதிர்ப்பை உள்ளடக்கிய பாசிச எதிர்ப்பு திட்டமோ, தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை தூக்கியெறிந்து சுதேசிய கொள்கையை வகுக்கும் திட்டமோ எந்தக் கட்சிக்கும் இல்லை.

சிபிஐ, சிபிஐ(எம்) கருநிலையிலான தொழிற்சங்கப் போராட்டத்தை மட்டுமே தொடர்ந்ததே தவிர அதை அரசியல் போராட்டமாக மாற்றவில்லை. கொத்தடிமை சட்டத்தை எதிர்த்து விவசாய சங்கம் முன்பு போராடிய போராட்டம் அளவிற்குக் கூட அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு போராட்டத்தை நடத்த இயலவில்லை. தொழிலாளிவர்க்கம் பலவீனமாகவே உள்ளது. இதை மாற்றவேண்டும் என்றால் பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தை கூர்மைப்படுத்த வேண்டும். மதவாத வடிவத்தை மட்டுமே பாசிசம் என்று கூறி பாசிசத்தின் பொருளியல் அடிப்படையை காண மறுக்கின்றார்கள். 

அமெரிக்கா மற்றும் அம்பானி அதானி நலன்களுக்காக பாஜக மேற்கொண்டுவரும் சட்டரீதியான பாசிச ஒடுக்குமுறையே இச்சட்டத் திருத்தம் ஆகும். சட்டத்தின் மூலமே பாசிசத்தை பலப்படுத்திக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. 

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்துவது என்பது அதன் ஒவ்வொரு தாக்குதலையும் முறியடிப்பதாகும். அதற்கு இந்தியாவின் மீதான அமெரிக்க ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும். உள்நாட்டில் அதற்கு சேவை செய்யும் பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த முன்வரவேண்டும். அதை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் உலகமயத்தை, தனியார்மயத்தை ஆதரித்துக் கொண்டே அதை வீழ்த்த முடியும் என்று ஏமாற்றுவதை அம்பலப்படுத்தி தொழிலாளர்கள், விவசாயிகள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர சக்திகள் ஒன்றிணைந்து பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரள்வதுதான் அதற்கு ஒரே தீர்வு. நம் நாட்டு உழைக்கும் வர்க்கம் மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட நாடுகளும், ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடக்கும் தொழிலாளி வர்க்கத்தையும் இணைத்துக்கொண்டு ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும்.

"உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! உங்கள் விலங்குகளைத் தவிர இழப்பதற்கு ஏதுமில்லை, வெல்வதற்கோ ஒரு பொன்னுலகம் உண்டு!"

- சமரன்