உடையும் ‘இந்தி்யா’ கூட்டணி

துரை. சண்முகம் - சந்திரன். தா - விகடன்

உடையும் ‘இந்தி்யா’ கூட்டணி

1
இந்தியா கூட்டணி என்பது வாக்காளர்களிடம் வாக்கை கறப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வைக்கோல் கன்னுக்குட்டி மட்டுமே.

பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதற்காக அது கொண்டு வந்த பல்வேறு ஜனநாயக விரோத திட்டங்களை கண்டித்து குரல் கொடுத்தாலும், 

துவக்கத்தில் இருந்தே பாசிச பாஜகவை அரசியல் ரீதியாக வரையறுத்து அதை முறியடிப்பதற்கு உரிய ஒரு பொது செயல் திட்டம் அதற்கான ஐக்கியம் 

கொள்கை ரீதியான உடன்பாடு ஒருமைப்பாடு என்பதை இந்தக் கூட்டணி கட்சிகள் அனைத்துமே வலியுறுத்தவில்லை. 

காரணம் இந்த ஒவ்வொரு கட்சிக்குமான உள் ஆதாயக்கணக்கு தேர்தல் அரசியலில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை பெறுவது என்பதை தாண்டி, ஒருங்கிணைந்த திட்டமிட்ட கண்ணோட்டத்தை தாங்களே ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. காங்கிரஸ் திமுக உட்பட இரு கட்சிகளுமே தமிழகத்தில் இதற்கு பொறுப்பு. 

அப்படி ஒரு மைய இலக்கு அதற்கான செயல் திட்ட ஒருங்கிணைப்பு திட்ட வகை உடன்பாடு இல்லாத காரணத்தால் தான், தேர்தல் முடிவுகளை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான ஆதாய முடிவுகளை தேடிக்கொண்டன. 

திமுக வின் இந்த அறிக்கை 

தேர்தல் முடிவுகளை ஒட்டிய காங்கிரசின் துரோகத்தை அம்பலப்படுத்துகிறது. இந்தியா கூட்டணி என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் காங்கிரசுக்கு ஏற்ற ஆதாய நடைமுறை என்பது இதற்கு முன்பே பல சம்பவங்களில் அம்பலமானதுதான்.

இதன் மூலம் இது பாசிச எதிர்ப்பு கூட்டணி என நம்ப வைத்து திமுகவுக்கு முற்போக்கு ஆற்றல்களை மடை மாற்றிய 

ஒட்டுக் குழுக்களின் தவறான அரசியல் மதிப்பீடுகளும் அம்பலமாகிறது. 

கடந்த காலத்தில் காங்கிரஸ்தான் மாற்று என்று ஒப்பீடு அரசியல் பேசியவர்கள் பாசிச எதிர்ப்புக்கான உள்ளடக்கத்தை தவறவிட்டு , காங்கிரஸ் திமுகவுக்கு இல்லாத அரசியல் தன்மையை முற்போக்கு முலாம் பூசிய கற்பனைகளை கைவிட வேண்டிய தருணம் இது.

திமுகவும் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து அதாவது தனது அரசியல் அதிகார தேவையில் இருந்து அனைத்தையும் முடிவு செய்கிறது. 

பாசிச எதிர்ப்பு சவடால்கள் அதற்கு தேர்தல் வாழ்நிலை மட்டுமே. 

ஆனால் ஒரு இடதுசாரி கண்ணோட்டத்திலான வர்க்க ஐக்கிய அரசியலை முன்னெடுக்க முடியாத பலவீனத்தில் தாங்கள் மேற்கொண்ட தவறான கண்ணோட்டங்களை பலரும் திருத்திக் கொள்வார்களா என்பதும் சந்தேகமே!

துரை.சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1027856873254442/?rdid=BNWCCNR7s8ue9pir

==================================

2
மம்தாவை காலி செய்திருக்கிறது பா ஜக

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சி தேர்தலில் தோல்வி பெற்றவுடன் அவருடைய கட்சியின் மெஜாரிட்டி சட்டமன்ற உறுப்பினர்களை 

ரிதபர்தா பானர்ஜி என்பவர்  தலைமையில் பிரித்து,

தனி அணியாக மாற்றி

அவரையே சட்டமன்றக் கட்சித் தலைவராக்கி மம்தாவை காலி செய்திருக்கிறது பா ஜக.

இந்த ரிதபர்தா பானர்ஜி யாரென்று பார்த்தால் சிபிஎம்மின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர்,

சிபிஎம்மின் இளைஞர் அமைப்பில் அகில இந்திய பொதுச்செயலாளராக இருந்தவராம்.

தோழர்களின் பதிவிலிருந்து கிடைத்த தகவல் இவைகள்.

தத்துவத்தை கைவிட்டு

நடைமுறை அரசியல் என்ற அடிப்படையில் மட்டும்

 ஆட்களை கட்சிக்குள் கொண்டு வரும்போது கட்சிக்கு ஏற்படுகிற மாபெரும் சேதம்தான் இவையெல்லாம்.

இப்போதும் தேர்தலிலேயே புரட்சி நடத்தி சமூக மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம் என்று நம்பும் கம்யூனிஸ்டு கட்சிகள்

மார்க்சிய , லெனினிய தத்துவத்தை கற்றுக் கொள்வது, கற்பிப்பது, முன்னிறுத்துவது, அதனடிப்படையில் திட்டங்களை வகுப்பது என்பதை ஏற்றுக் கொள்வது போலத் தெரியவில்லை.

மாறாக

நடைமுறை அரசியலையே மீண்டும் மீண்டும் முன்னிறுத்துகின்றன.

மக்களை மார்க்சியத்தின் பக்கம் ஈர்ப்பதற்கு பதில்

மக்கள் போகிற  பாதையிலேயே,

அதாவது 

கும்பல் அரசியலுக்கு வால் பிடிக்கும் போக்காக மாறிவிட்டது,

அதற்கேற்ற நபர்களே கட்சிகளில் முன்னணித் தலைவர்களாக,

கருத்துக்களை உருவாக்குபவர்களாக முன்னுக்கு வருகின்றனர்.

இங்கே மார்க்சிய லெனினிய கருத்துக்களை பரப்புவதே பத்தாம்பசலித்தனம் என்ற என்ஜிஓ அவதூறை இதுபோன்ற முன்னணிகளும் முன்வைப்பதன் மூலம் தத்துவம் பேசுவதையே கிண்டல், கேலிக்கு உள்ளாக்கி பேசாமலே செய்ய முயற்சிக்கிறார்கள்.

தேர்தலைத் தாண்டி புரட்சிகர அரசியல் என்று பேசுபவர்கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டு கட்சிகளை திட்டி,

அவதூறு பேசிவிட்டு திமுகவை தாங்கிப் பிடிப்பவர்களாக இருக்கிறார்கள் .

தோழர் தியாகுவின் சமீபத்திய திமுக, அதிமுக கூட்டணி பேச்சு இதற்கொரு உதாரணம்.

மருதையன், கோவன்  போன்றவர்களைப் பற்றி தனிப்பட்ட உதாரணங்கள் தரவேண்டியதில்லை

மொத்த செயல்பாடுகளுமே அப்படித்தான்.

இவர்கள் எல்லோரும்தான் வருங்காலத்தில் மார்க்சியத்தை இந்த மண்ணில் ஆழமாக விதைக்கப் போகிறவர்கள்

சிறப்பு

Chandran Dhamodaran

https://www.facebook.com/61557347300989/posts/122285120108244910/?rdid=svuhpAaqOynEcyzh

======================================


மம்தா பானர்ஜிக்கு புதிய சவால்?  உருவான இரண்டாம் அணி - சிவசேனா ஆகிறதா திரிணாமுல்? 

2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் ஆட்சியில் பறந்த திரிணாமுல் காங்கிரஸின் கொடியை இறக்கி, தங்களது காவி கொடியைப் பறக்கவிட்டிருக்கிறது பாஜக.

தோல்வியுற்றும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று முதலில் மம்தா பானர்ஜி அடம்பிடித்தார்.

ஆனால், அவர் ராஜினாமா செய்தாலும், செய்யாவிட்டாலும் தேர்தலில் வென்ற நபர் ஆட்சி அமைக்கலாம் என்கிற அரசியல் சாசனத்தின் படி, சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

பெர்சனல் தோல்வி

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி என்று பார்ப்பதை விட, மம்தா பானர்ஜியின் பெர்சனல் தோல்வியாக தான் பார்க்க வேண்டும்.

இதற்கு நேற்று கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய போராட்டங்களின் காட்சிகளே சாட்சி.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

இதை எதிர்த்து தான் மம்தா பானர்ஜி போராட்டத்தை அறிவித்திருந்தார்.

மேற்கு வங்கத்தின் தற்போதைய எதிர்க்கட்சி திரிணாமுல் காங்கிரஸ். நடந்து முடிந்த தேர்தலில், திரிணமுல் காங்கிரஸில் இருந்து 80 எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

திரிணமுல் காங்கிரஸிற்கு மொத்தம் 29 எம்.பி-கள் உள்ளன.

ஆனால், மம்தா பானர்ஜி நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை வெறும் 8 மட்டுமே. எம்.பி-க்களின் எண்ணிக்கை 6.

இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் மம்தாவின் செல்வாக்கு குறைந்துவிட்டதைக் காட்டுகிறது.

இரண்டாவது அணி

மேலும், எதிர்க்கட்சித் தலைவராக மம்தா தேர்ந்தெடுத்தவர் சோபன்தேப் சட்டோபாத்யாய். ஆனால், இவரை நியமிப்பதற்காக கொடுக்கப்பட்ட ஆவணங்களில் இருந்த கையெழுத்துகள் போலியானது என்று கட்சிக்குள் குரல்கள் எழுந்தன.

இதில் முக்கியமான குரல்கள் எம்.எல்.ஏ-க்கள் சந்தீபன் சாஹா மற்றும் ரிதபிரதா பானர்ஜி உடையது. அதனால், இவர்கள் இருவரும் உடனே கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

தற்போது ரிதபிரதா பானர்ஜி தனக்கு 59 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது என்றும், அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்றும் மேற்கு வங்க சட்டமன்றத்தில் வந்து நிற்கிறார்.

பூசலுக்கு என்ன காரணம்?

உட்கட்சிப் பூசலுக்கு பாஜக தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார் மம்தா பானர்ஜி.

ஆனால், அரசியல் விமர்சகர்களோ, திரிணாமுல் காங்கிரஸின் உட்கட்சிப் பூசலுக்கு சீனியர் தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டதும், மம்தாவிற்கு பின், திரிணாமுல் காங்கிரஸின் தலைமையாக மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியை முன்னிறுத்துவதும், அபிஷேக் பானர்ஜி ஐ-பேக் நிறுவனத்தை ஓவராக சார்ந்திருந்ததும், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாததும்தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

சந்தீபன் சாஹா மற்றும் ரிதபிரதா பானர்ஜி தலைமையிலான குழு 'கட்சித் தாவல் சட்ட'த்தின் கீழ் சிக்கிக் கொள்ளாமல், புதிய தலைமையை அமைத்துவிட வேண்டும் என்று பிளான் போடுகிறது.

அப்படி செய்தால் தான், 'தாங்கள் தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ்' என்கிற இமேஜை மக்களிடையே உருவாக்க முடியும்.

இப்போது தேர்தலில் தோற்றிருந்தாலும், திரிணாமுல் காங்கிரஸிற்கு என மேற்கு வங்கத்தில் நிச்சயம் இடம் இருக்கிறது. அதை தங்கள் பக்கம் இழுக்க விரும்புகின்றனர் ரிதபிரதா பானர்ஜி & கோ.

பாஜக-வின் ஆசை

இந்த அனைத்து காட்சிகளும் மகாராஷ்டிராவின் சிவ சேனாவை கண்முன்னே கொண்டு வருகின்றது.

ஆனால், ஏக்நாத் சிண்டேவின் சிவ சேனாவை பாஜக அணைத்துக் கொண்டது போல, திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பிரிந்து வருபவர்களை பாஜக சேர்த்துகொள்ளாது என்று கூறப்படுகிறது.

காரணம், ஒருவேளை, திரிணாமுலில் இருந்து அதிருப்தியில் பிரிந்து வருபவர்களை பாஜக சேர்த்துக் கொண்டால், மக்களின் அனுதாப அலை மம்தாவின் பக்கம் திரும்பும். அது மம்தாவிற்கு சாதகமாகவே அமையும்.

அதை வைத்து மம்தா சாதுர்யமாக காயை நகர்த்துவார்.

அதனால், திரிணாமுல் காங்கிரஸ் உட்கட்சிப் பூசலில் தள்ளாடுவதை மட்டுமே பாஜக ரசிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சரிந்தால், பாஜக-விற்கு போட்டியாக காங்கிரஸும், பிற இடதுசாரி கட்சிகளும் எழும். இதை பாஜக துளியும் விரும்பாது.

முக்கியமாக, இந்த உட்கட்சிப் பூசல் மம்தாவின் தேசிய அரசியல் ஆசைக்கும் முட்டுக்கட்டை போடும்.

ஆக, திரிணாமுல் காங்கிரஸிற்குள் உட்கட்சிப் பூசல் என்பது ஒரே கல்லில் மம்தாவின் அயர்ச்சி, காங்கிரஸ் எழுச்சி தடுப்பு என பாஜவக-விற்கு இரண்டு மாங்காய்கள்.

- விகடன் இணைய தளம்

https://www.vikatan.com/government-and-politics/mamata-banerjee-leadership-under-pressure-after-election-loss

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு