வ.உ.சி. - சுதேசியத்தின் அடையாளம்

- முத்துக்குமார் சங்கரன்

வ.உ.சி. - சுதேசியத்தின் அடையாளம்

1908 மார்ச் 4

தூத்துக்குடி கடற்கரையில் இரண்டாயிரம் மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பெருத்த ஆரவாரத்துக்கிடையே வ.உ.சிதம்பரனார் எழுந்து பேச ஆரம்பித்தார். 

 நண்பர்களே!

முதலில் நான் உங்கள் அனைவரையும் அமர்ந்திருக்க வேண்டுகிறேன் நம்மில் ஒரு சிலரிடம் யாரேனும் வம்புச் சண்டை இழுத்து, இந்த இடத்தில் அமைதியைக் குலைத்திட முயற்சிப்பார்கள்.  நாம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் அதனால் தான் சொல்கிறேன். எல்லோரும் முதலில்.அமருங்கள்.

(மக்கள் சிதம்பரனார் சொல்படி கேட்டு அமைதியாக மணல் தரையில் அமர்ந்தார்கள்)

நான் கூறியவுடன் நீங்கள் அமர்ந்தது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது. இங்கே எப்பேர்ப்பட்ட ஒற்றுமை நிலவுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல அடையாளமாகும்.

நாம் இதுவரை தொழிற் சங்கங்களைப் பற்றியும் சுதேசி இயக்கம் பற்றியும் பிரசங்கித்துக் கொண்டிருந்தோம். நாம் இனிமேல் தொழிற்சாலைகளைப் பற்றிப் பேசுவோம். ஆங்கிலேயன் எதற்காக நம்மிடம் இருந்து பஞ்சை வாங்கி ஏற்றுமதி செய்து லாபம் பார்க்கிறான். அதை நாமே ஏன் செய்யக்கூடாது? பஞ்சு நம்முடையது .அந்த பஞ்சைப் பக்குவப் படுத்துகின்ற தொழிலாளிகள் நம்முடையவர்கள். நிலைமை இப்படி இருக்கும் பொழுது நம்முடைய உழைப்பைச் சுரண்டி அவனை எப்படி லாபம் சம்பாதிக்க அனுமதிக்கலாம்? சிந்தித்துப் பாருங்கள். இரண்டு பஞ்சு வியாபாரிகள் இப்போது ஒன்று சேர்ந்தால் நாளை முதல் இந்தத் தொழில் நம்முடையது. நாளை முதலே நாம் லாபம் பார்க்க ஆரம்பித்து விடலாம்.

(இந்த சந்தர்ப்பத்தில் வ உ சி.க்கு மாலை அணிவிக்கப்பட்டது இப்பொழுதும் கைதட்டும் முயற்சிகள் தடுக்கப்பட்டன). 

நாமே நம்முடைய ஊருக்குப் பஞ்சைக் கொண்டு வருவோம். நாமே பஞ்சை அடிப்போம் . நாமே விற்போம் . நாமே லாபம் சம்பாதிப்போம். நான்கைந்து பஞ்சு வியாபாரிகள் ஒன்றாக இணைந்தால் போதும். இந்தத் தொழிலை நாம் கைப்பற்றி லாபத்தை நமக்குள் பங்கு பிரிக்கலாம்.

 சுதேசி கப்பல் கம்பெனி ஏற்கனவே செயல் புரிய ஆரம்பித்து விட்டது அது பிரிட்டிஷ் இந்தியாவின் கப்பல் கம்பெனிக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியா கப்பல் கம்பெனி மூடப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடுத்து நாம் கை வைக்க வேண்டியது பஞ்சாலைத் தொழிலில் தான். அதைக் கைப்பற்றுவது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. ஏற்கனவே மதுரையிலும் சேலத்திலும் உள்ளவர்களிடம் இருந்து எனக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன அவர்கள் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் முதலீடு செய்யவும்  தயாராக இருக்கிறார்கள். 

முக்கால்வாசி பணி முடிந்த மாதிரிதான் என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் கால் பாகம் பணியை  செய்து முடித்துத் தூத்துக்குடி மக்கள் தங்கள் உழைப்பைத் தர வேண்டும் அவ்வளவுதான். நீங்கள் எல்லோரும் எனக்கு ஒத்துழைப்புத் தருவீர்கள் என்றால் பஞ்சிலிருந்து நூல் எடுப்பதற்கும் துணிகளை நெய்வதற்கும் ஆன மிகப்பெரிய தொழிற்சாலையை இங்கே நிறுவிக் காட்டுவேன்.

பம்பாயில் மொத்தம் எண்பது மில்கள் இருக்கின்றன அவற்றில் வெறும் பத்தொன்பது மில்கள் தாம் பிரிட்டிஷ் காரர்களுக்குச் சொந்தமானது மீதி அறுபத்தியொன்றும் சுதேசிகளின் கையில் தான் இருக்கின்றன. நமக்கு உதவி செய்வதற்கு நமது உறவுகள் தயாராக இருக்கும்பொழுது நாம் ஏன் துணிந்து அந்தத் தொழிலில் இறங்கக் கூடாது?

இரண்டு பஞ்சாலைகளை ஆரம்பித்து விடலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் முதலில் ஒன்றை ஆரம்பிப்போம் என்று கடிதம் எழுதி இருக்கிறேன்.

நாம் ஆரம்பிக்கவிருக்கும் இந்தப் புதிய தொழில் முயற்சியில் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா?

நாம் ஆரம்பிக்கவிருக்கும் இந்தப் புதிய தொழில் முயற்சியில் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா? இது நிச்சயமாக நல்ல லாபம் தரக்கூடிய தொழில்தான்

 எனக்கு உங்களுடைய சம்மதம் மட்டும் தான் வேண்டும். . ஆண்டவன் நமக்குத் துணை இருப்பார்.

முதலில் நாம் இரண்டு விதமான ஆலைகளை நிறுவ வேண்டும்  நூற்பாலை ஒன்றும்  பஞ்சைப் பிரித்தெடுக்கும் அரவை ஆலை ஒன்றும் ஆக இரண்டு ஆலைகளை நிறுவ வேண்டும். நம் மேலூரில் ஏற்கெனவே ஆரம்பித்த பஞ்சு ஆலை சங்கம் சரியாக ஓடவில்லையே என்று நினைக்காதீர்கள் அப்பொழுது சீசன் சரியாக இல்லை. இப்பொழுது சீசன் மிகவும் நன்றாக இருக்கிறது. இப்போது ஆரம்பித்தால் மிகப் பெரிய வெற்றி நிச்சயமாகப் பெறலாம்.

நம்மை நாம் முன்னேற்றிக் கொள்ள இதுதான் சரியான சந்தர்ப்பம். சுதேசிக் கப்பல் கம்பெனி எவ்வாறு உறுதியாக செயல்பட்டு வருகிறதோ அதேபோல் பஞ்சாலையும் நிச்சயமாக வெற்றிகரமாக அமைந்தே தீரும்

நம் மீது கிரிமினல் வழக்குகள் போட முயற்சிப்பார்கள் நாம் எந்த குற்றக் செயலையும் செய்து விடாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் சிவில் கிரிமினல் வழக்குகளுக்காக கோர்ட்டுகளுக்கு அலைவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். இந்த போலீஸ், நீதிபதி, சிவில் கோர்ட் இவர்களிடமிருந்து ஒரு வருடம் நாம் ஒதுங்கி இருந்து விட்டோம் என்றால் நமக்கு இவையெல்லாம் தேவையே இல்லை என்று முடிவு கட்டிவிடலாம். 

என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு மட்டும் நீங்கள் செவி சாய்த்தீர்கள் என்றால் நிச்சயமாக நாம் சுயராச்சியத்தைப் பெற்று விடலாம். இந்த நகர சபையின் நிர்வாகக் குளறுபடிகளையும் நாம் நிச்சயம் சரி செய்து விடலாம்.

இன்று காலையில் நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் ஒரு வக்கீல் தனக்கு சவரம் செய்யத் தொழிலாளியை வரவழைத்து இருக்கிறார் பாதி வேலை நடந்து கொண்டிருக்கும்போது அந்தத் தொழிலாளி வக்கீலிடம் நீங்கள் சுதேசியத்துக்கு எதிரானவரா என்று கேட்டிருக்கிறார்.  அதற்கு அந்த வக்கீல்  முட்டாள் என்று திட்ட அந்தத் தொழிலாளி கோபித்துக் கொண்டு பாதி வேலையில் விட்டு சென்று விட்டாராம்.

( மக்கள் சிரித்து முடித்த பின் வ.உ.சி.தொடர்கிறார்)

எனது பிரசங்கத்தை முடிக்கும் முன்பு நான் சொல்ல விரும்புவது நம் நகரத்தில் நல்ல ஒற்றுமை நிலவுகிறது சுதேசிக் கம்பெனியில் உங்களுக்கு இருக்கும் அக்கறையை நீங்கள் எப்படி வெளிப்படுத்த வேண்டும் தெரியுமா? யார் சரக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்? யார் கப்பல் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள்? என்று விசாரித்து அவர்களிடம் பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி கப்பலில் பயணம் செய்யாதீர்கள் என்று எடுத்துரைப்பீர்கள் என்றால் நிலைமை சீக்கிரம் முன்னேற்றம் அடையும்."

 -- முத்துக்குமார் சங்கரன்

(தூத்துக்குடி_நினைவலைகள் நூலில் இருந்து)

https://www.facebook.com/share/1HtnMXrYap/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு