இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளடக்கம் சொல்வது எனன?
அருள் குமார்

”சமஸ்டி” - ”சுயநிர்ணய உரிமை” கிடையாது. இரு நாட்டு சர்வதேச உடன்படிக்கை மூலம் உள்ளக விவகாரமாக மாறிய இனப்பிரச்சினை.
*இனப்பிரச்சினை விவகாரம்' என்பது இந்திய இலங்கை அரசுகளின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதும், பொருளாதார ரீதியான திட்டங்கள் மாத்திரமே இலங்கையில் மீள் நல்லிணக்கத்தைக் கொண்டு வரும் என்ற அர்த்தப்பாடுகளும் உண்டு.
ஐந்து ஆண்டுகளுக்கான இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முழுமையான மற்றும் உண்மையான உள்ளடக்கம் தெரியாதவொரு நிலையில், வடக்கு கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தியதாகவே அது அமைந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள விபரங்கள், பல அர்த்தங்களைத் தருகின்றன. இரு பிரதான பொருள்கோடல்களைக் காண முடிகிறது.
ஓன்று, இலங்கைத்தீவின் உள்ளக விவகாரங்களில் புதுடில்லி தலையிடுவதைத் தவிர்த்தல். அதாவது இனப்பிரச்சினைத் தீர்வு பற்றிய விவகாரங்களில் 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட பேச வேண்டிய அவசியம் இல்லை என்ற உட்கருத்து விஜித ஹேரத்தின் விளக்கத்தில் இருந்து புரியக்கூடியதாகவுள்ளது.
இரண்டாவது, ஈழத்தமிழ் மீனவர்கள் - தமிழக மீனவர்கள் மோதும் விவகாரங்கள் ஒப்பந்தத்தில் இல்லை. அது வெறுமனே மீனவர் பிரச்சினை என்ற தொனி மாத்திரமே வெளிப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இந்திய குடியரசுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமே தவிர, ஒரு முறையான பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல என்றும் ஹேரத் விளக்குகிறார்.
ஆக இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பது இரு நாடுகளினதும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிதல் மாத்திரமே. ஒப்பந்தத்தின் கீழ் இந்திய - இலங்கை ஆகிய இரு அரசுகளினதும் இறையாண்மை, சமத்துவம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும் என்ற அம்சம் பிரதானமாகும். எந்த நாடும் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற வாசகம் மிக முக்கியமான விடயப்பரப்பாக ஒப்பந்தத்தில் பிரகாசிக்கிறது.
இந்திய - இலங்கை இராணுவக் கூட்டுப் பயிற்சிகள், மனித கடத்தல் போதைப்பொருள் மாஃபியாக்கள் பற்றிய தகவல் பகிர்வு மற்றும் இராணுவக் கூட்டுத் திட்டங்கள், அது பற்றிய ஒழுங்கு விதிகளை தயாரித்தல் போன்ற விடயங்களும் ஒப்பந்தத்தில் உள்ளன.
இந்தியாவுடன் வேறு எந்த பாதுகாப்பு வாக்குறுதிகளுக்கும் இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை என்று விஜித ஹேரத் பெருமையுடன் மார் தட்டியுமுள்ளார்.
இந்திய - இலங்கையின் தேசியப் பாதுகாப்பு என்ற விடயத்துக்குள் இனப்பிரச்சினை மற்றும் அதனால் எழும் போராட்டங்கள் அல்லது அழுத்தங்கள் பற்றிய விவகாரங்கள் போன்றவற்றில் புதுடில்லியும் கொழும்பும் இணைந்து எடுக்கும் முடிவுகளுக்கு முக்கியத்தும் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த முக்கியத்துவத்துக்குள் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இலங்கைத்தீவின் எந்தவொரு தளமும் பயன்படுத்தப்படமாட்டாது என்பதும் எந்தவொரு வல்லரசுகளின் கப்பல்களும் தேவையானபோது இலங்கைத்தீவின் துறைமுகங்களுக்கு வந்து செல்ல முடியும் என்பதும் புரிந்துணர்வு அம்சமாக ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
எந்தவொரு வல்லரசு நாடுகளுக்கு எதிராகவும் இலங்கைத்தீவை பயன்படுத்த முடியாதென இந்திய – சீன அரசுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார உறுதியளித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் இறைமை@ தன்னாதிக்கம் என்ற கட்டமைப்பை ஒருபோதும் எவருடனும் சமரசம் செய்ய முடியாது என்ற கடும் தொனியை விஜித ஹேரத் வெளிப்படுத்தினார். அதாவது ”சமஸ்டி ஆட்சி” - ”சுயநிர்ணய உரிமை” என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கு இந்தியாவும் இணங்கியுள்ளது என்பதை விஜித ஹேரத் சொல்லாமல் சொல்கிறார்..
இலங்கையின் இறைமை பிரிக்கப்பட முடியாது என்றும் உள்நாட்டு விவகாரங்களில் எந்தவொரு நாடும் தலையிட முடியாது எனவும் அமைச்சர் விஜத ஹேரத் அடித்துக் கூறியபோது நாடாளுமன்த்தில் இருந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் வாய் திறக்கவில்லை.
ஆக, இங்கே 'இனப்பிரச்சினை விவகாரம்' என்பது இந்திய இலங்கை அரசுகளின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதும், பொருளாதார ரீதியான திட்டங்கள் மாத்திரமே இலங்கையில் மீள் நல்லிணக்கத்தைக் கொண்டு வரும் என்ற அர்த்தப்பாடுகளும் விஜித ஹேரத்தின் விளக்கவுரையின் பொருள்கோடலாக அமைந்துள்ளன.
அதேநேரம் இந்திய - இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக சீனா பதிலளிக்க ஆரம்பித்துள்ளதாக முன்னிலை சோசலிஸக் கட்சி கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது. ஓப்பந்தத்தை விமர்சித்துள்ள கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, பங்களாதேஸ், நேபாளம் மற்றும் பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை சீனா ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
அதாவது இலங்கை இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் சீனா இலங்கையைச் சந்தேககிறது என்றும், சீனா, இலங்கையை ஒரு அமெரிக்க - இந்திய நட்பு நாடாக அவதானிக்கத் தொடங்கியுள்ளதாகவும் புபுது ஜயகொட எச்சரிக்கிறார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மையக் கட்சியான ஜேவிபிக்கு இன்று சாவல்மிக்க போராட்டச் சக்தியாக முன்னிலை சோசலிசக் கட்சி மாறியுள்ள நிலையில், இந்தியாவுடன் செய்யப்பட்டுள்ள பாதுகப்பு ஒப்பந்தம் பற்றியும் அதன் ஆபத்துகள் தொடர்பாகவும் மேலும் புதிய தகவல்களை இக் கட்சி வெளியிடும் என்று எதிர்பார்க்க முடியும்.
கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய - இலங்கை அரசுகள் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டன. அதனைக் கடுமையாக அன்று எதிர்த்த ஜேவிபி, இன்று 'இலஙகையின் இறைமையைப் பாதுகாத்தல'; என்ற அடிப்படையில் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பது அரசியல் வேடிக்கைதான். 1987 இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை தீயிட்டதும் இந்த ஜேவிபிதான்.
ஆனாலும் இந்திய அரசு, ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட இலங்கைத்தீவு விவகாரத்தில் எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களோடும் ஒத்துப் போக வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றுவதை இந்த ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்திய தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு என்ற இரு விடயங்களில் இந்தியாவோடு இலங்கை இணைய வேண்டும் என்ற கடுமையமான நிலைப்பாடு புதுடில்லியிடம் உண்டு. இந்தியாவின் இக் கொள்கை ஒருவகையில் அமெரிக்க நிலைப்பாடு சார்ந்தது என்ற முடிவுக்கும் வரலாம்.
ஏனெனில் இந்தோ – பசுபிக் பாதுகாப்புக்காக இந்தியாவைப் பிரதானப்படுத்தி அமெரிக்கா உருவாக்கியுள்ள ”குவாட்” இராணுவக் கூட்டணி, சீனாவை முற்றிலும் எதிர்க்கும் நோக்கிலானது. ஆகவே இப் பின்னணியில் இலங்கையை எந்த விலை கொடுத்தாயினும் இந்தியா அரவணைக்க வேண்டும் என்ற நியதியுள்ளது.
2022 இல் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளராக இருந்த கேணல் நளின் ஹேரத், இந்திய தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை அதிக கவனம் செலுத்தும் என்றும், கோட்டாபய புதுடில்லிக்கு வழங்கியிருந்த உறுதிமொழிகள் பற்றியும் விபரித்திருந்தார்.
ஆக இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை இலங்கையில் எவர் ஆட்சியில் இருந்தாலும் இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையை தங்கள் பக்கம் வைத்திருக்கும் அணுகுமுறையைக் கையாளுகின்றது என்பது நிதர்சனமாகிறது.
இப் பின்புலத்திலேதான் ஜேவிபியோடும் இந்தியா அணுகியுள்ளது. ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்தில் ஜேவிபி என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறதோ அதே எண்ணக் கருவுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கியுள்ளதை கைச்சாத்திட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தை வைகோ உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் கண்டித்திருக்கின்றனர். இன அழிப்பில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா ஏன் கைச்சாத்திட்டது என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் எதுவும் ஒப்பந்தத்துக்கு இதுரை எதிர்ப்பு வெளியிடவேயில்லை.
ஏனெனில் இந்தியாவை நேரடியாக எதிர்க்கும் தற்துணிவு தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் இல்லை. தமிழக அரசியல் கட்சிகள் கூட, புதுடில்லி, இந்திரா காந்தி காலத்தில் இருந்து இன்றைய மோடி வரை ஏன் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் எண்ணப்பாட்டுக்கு ஏற்ப இயங்குகின்றது என்ற எந்த ஆய்வுகளும் இன்றி வெறுமனே கோசமிடுகின்றன.
1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இருந்து இன்று வரை வெறும் எதிர்ப்புகளை மாத்திரமே காண முடிகிறது. ஆனால் இந்தியாவும் இலங்கையும் இன்றுவரை தாம் நினைத்த அரசியலை கன கச்சிதமாகக் காய் நகர்த்தி வருகின்றன. குறிப்பாக ”இலங்கை ஒற்றை ஆட்சி அரசு” என்ற கட்டமைப்பை இந்தியா பாதுகாக்கிறது.
அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையின் ஊடே தத்தமது பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்றவற்றிலும் இந்திய - இலங்கை அரசுகள் தங்கள் நலன்களை பரிமாறி வருகின்றன.
அதிலும் ஜேவிபி, ஈழத்தமிழர்களுக்கு எதிரான தமது அரசியல் நிலைப்பாட்டை இந்திய - இலங்கை பாதுகாப்பு என்ற சர்வதேச ஒப்பந்தம் மூலமாக நிறுவியுள்ளமை அவர்களுடைய அரசியல் சாணக்கியத்தைக் காண்பிக்கிறது. இந்த ஒப்பந்தத்தை பிரதான எதிர்க்கட்சிகள் கண்டித்திருந்தாலும், ஜேவிபியின் சாணக்கியத்தின் ஊடாகப் பெறப்பட்ட இந்த லாபங்களை அவர்களும் பயன்படுத்துவர் என்பது வெளிப்படையானது.
ஏனெனில் ”தமிழ்த் தேசியம்” என்பதை முற்றாக அழிக்க வேண்டும் என்பது சிங்கள அரசியல் கட்சிகளின் நீண்டகால கனவு.
இக் காரண - காரியத்தாலேயே, கட்சி முரண்பாடுகளுக்கு அப்பால் சிங்கள அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நிற்கின்றனர். இதனை இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் அம்பலப்படுத்தியுள்ளது.
அ.நிக்ஸன், பத்திரிகையாளர்
- அருள் குமார்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு