அமீர் ஐதர் கான்: தலைசிறந்த தோழர்! தலைமுறைகளை வளர்த்தெடுத்த தோழர்!

துரை. சண்முகம்

அமீர் ஐதர் கான்: தலைசிறந்த தோழர்!   தலைமுறைகளை வளர்த்தெடுத்த தோழர்!

தலைசிறந்த தோழர்!

 தலைமுறைகளை வளர்த்தெடுத்த தோழர் 

அமீர் ஐதர் கான்!

நினைவு நாள்: 26, டிசம்பர் 

  பாகிஸ்தான் ராவல்பின்டிக்கருகே பிறந்தவர். 

பம்பாய் தொழிலாளர்களை கம்யூனிச அரசியலில் அணி திரட்டியவர். 

கப்பல்களில் மாலுமி மற்றும் அமெரிக்கா ஜெர்மன் என பல நாடுகள் அலைந்து திரிந்து பயின்றவர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டவுடன் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்ய துணிந்தவர்.

கட்சியின் வேலை தேவைக்கு ஏற்ப நாட்டில் எந்த ஊரில் தனியே விட்டாலும் துணையாய் தொழிலாளர்களை அமைப்பாய்த் திரட்ட கூடிய ஆற்றல் மிகுந்த கம்யூனிஸ்ட் அவர். 

அமைப்பின் ஆணைக்கு இணங்க சென்னையில் தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிச அரசியல் பரவவும் தொழிலாளர்களை அமைப்பாக்கவும் எந்த நம்பகமான முன் உதவியும் இன்றி சங்கர் என்ற புனைபெயரில் வேலை செய்தார் அமீர் ஐதர்கான்.

ஒரே ஒரு தொடர்பு முகவரியை வைத்துக்கொண்டு புதிதாக சென்னையில் அவரை தொடர்பு கொள்ள ,  அந்த ரயில்வே தொழிலாளி அரசு உளவாளிகளின் பயத்தால் சந்திப்பையே தவிர்த்து விட்டார். 

அன்றாடம் ரயில்வே தொழிலாளர்களை சந்திப்பது அன்றைக்கு இருந்த சென்னை ஆலை தொழிலாளர்களை சந்திப்பது, ரகசியமாக தொழிலாளர்களுக்கு முழக்கங்களை கொண்ட துண்டறிக்கைகளை தயாரித்து அவர்களை அரசியல் படுத்துவது, தெருவோரங்களில் படுத்து கிடப்பது என்று கம்யூனிச அரசியலை விதைக்க எந்த நிலத்திலும் ஊன்றி நின்றார்.

பிறகு தொடர்புகள் கிடைக்க சென்னையில் பாஷ்யம் அய்யங்கார் போன்ற வழக்குரைஞர்களின் தொடர்பும் அவர்களையும் அரசியல் படுத்தி வேலைக்குள் இழுக்கும் திறனும் பெற்றவராக இருந்தார். 

தலைமறைவாக வேலை செய்யும் காலத்திலேயே சென்னை மெரினா பீச்சில் ஒரு குதிரைக்காரரை போலீசு திட்டி அடிக்கும்போது அமீர் ஐதர்கான்  அதை தட்டி கேட்டு தொழிலாளியையா அடிக்கிறாய்? என போலீசையும் தாக்கி விட்டு தப்பி விடுகிறார். 

தான் ஆடாவிட்டாலும் தனது வர்க உணர்வு ஆடும் எனும் கம்யூனிச உணர்வின் உருவமாக தோழர்.

ஒருமுறை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தும் போது மரியாதை குறைவாக நடத்திய நீதிபதியைப் பார்த்து நீங்கள் வசதியாக உட்கார்ந்து கொண்டு 

தொழிலாளிக்காக போராடும் எங்களை நெடுநேரம் நிற்க வைத்து அவமானப்படுத்துகிறீர்களா? என்று துணிந்து நீதிமன்றத்திலேயே கேட்டார். 

கம்யூனிசம் என்பது சில காத்தாடிகள் கதை விடுவது போல சோறு மட்டுமல்ல சுயமரியாதையும் என வாழ்ந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். 

அமீர் ஐதர்கான் சென்னை சிறையில் இருக்கும் 

போதுதான் காங்கிரசில் இருந்த சீனிவாசராவ் அவர்களை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வகுப்பெடுத்து கம்யூனிசம் பேசி கம்யூனிஸ்ட் கட்சிக்கு வென்றெடுக்கிறார். எதிலும் சிறைப்படுத்த முடியாத பாட்டாளி வர்க்க உணர்வின் நட்சத்திரங்கள் கம்யூனிஸ்டுகள் என்பதை நடைமுறையில் காட்டியவர் கான்!

சென்னையில் சிறை வைத்தால் அனைவரையும் கம்யூனிஸ்டாக மாற்றுகிறார்! என்று பயந்த போலீஸ் அதிகாரிகள் இவரை சேலம் சிறைக்கு மாற்றுகிறார்கள்.

தாய் தந்தை சொந்த ஊர் குடும்பத்தை எல்லாம் இழந்து சிறைக்கு வந்த சீனிவாசராவ் அன்புக்குரிய தோழர் அமீர் ஹைதர் கானை பிரிந்ததை பெருந்துயரமாகக் கொள்கிறார்.

தன்னையும் சேலம் சிறைக்கு மாற்றும்படி சிறைத்துறையிடம் வேண்டுகிறார். அரசியலை பிரிவதையே உண்மையான பிரிவாக துயரமாக கருதிய அருமையான கம்யூனிஸ்டுகள் இவர்கள். 

இவர்களின் ஒருநாள் மனத் துணிச்சலான வர்க்க போராட்டத்தை இங்கு எந்த சீர்திருத்தத் தலைவரும் சந்தித்தது இல்லை. தொழிலாளர் வர்க்கத்துக்காக துணிந்து சிந்தித்ததும் இல்லை. 

காலங்கள் கடந்தாலும் 

உழைக்கும் வர்க்க நியாயங்களின் உதிரங்களாய்

அரசியல் நீரோட்டமாய் உயிர் பண்பாய் ஓடிக்கொண்டிருக்கும் தோழர் அமீர்வதர்கான் அரசியல் நினைவுகளை போற்றுவோம்! கைப்பற்றிக் கொள்வோம்! 

   - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/898418172864980/?rdid=Sst98h6bt2h4LUSG

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு