செவிலியர்களை சிறுமைப்படுத்தும் தமிழக அரசு!
அறம் இணைய இதழ்
எளியவர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பது ஆட்சியாளர்களின் எழுதப்படாத சட்டமா? ”ஆள் கடத்தல் வேலையை அரசாங்கமே செய்யலாமா?” என்கிறார்கள் செவிலியர்கள்! ‘என்னது, அரசாங்கமே ஆள் கடத்தல் செய்கிறதா?’ ஆம், போராடும் செவிலியர்களை போலீஸ் வேனில் கடத்தி எங்கெங்கோ இறக்கி ஆறு நாட்களாக அலைக்கழிக்கிறது அரசு;
அரசு மருத்துவமனைகளில் ஐந்து முதல் பத்தாண்டுகளாகப் பணியாற்றும் செவிலியர்களை தொடர்ந்து தற்காலிக பணியாளர்களாகவே வைத்திருந்து அடிமாட்டுச் சம்பளத்திற்கு 10 மணி முதல்12 மணி நேரம் வேலை வாங்கி கசக்கி பிழிகிறது தமிழ்நாடு அரசு.
# எங்களை நிரந்தரம் செய்யுங்கள்!
# நிரந்தரமாக்கப்பட்ட நர்ஸுகளுக்கு தருவது போல 55,000 ஊதியம் எங்களுக்கும் தாங்க.
# ஒரே வேலையை செய்யும் ஒரு சாரருக்கு 55,000 மற்றொரு சாரருக்கு 18,000 என்றால் அது அநீதி இல்லையா?
# தேவைக்கு ஏற்ப பணியிடங்களை நிரப்பாமல், மூன்று பேர் செய்யும் வேலையை ஒருவரிடம் நிர்பந்திக்காதீர்கள். இதனால், நோயாளிகளின் உடல் நலன் காக்க வேண்டிய நாங்களே நோயாளியாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.. என்று தான் போராடி வருகின்றனர்.
டிசம்பர் -18 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள சிவானந்தம் சாலையில் போராடினார்கள். கடும் குளிரையும் பொருபடுத்தாமல் கலவரையின்றி போராடிய பெண் செவிலியர்களை வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றி ஐந்து மணி நேரங்கள் எங்கெங்கோ சுற்றி கடைசியில் கிளாம்பாக்கத்தில் இறக்கிவிட்டுள்ளனர்.
அடுத்த நாள் அங்கிருந்தவாறே போராடினர். இங்கே இவர்களை போராடவிட்டால் பஸ் ஏற வருபவர்கள் மூலம் தமிழகம் முழுமைக்கும் செய்தி பரவுகிறதே என்று அன்றிரவு அவர்களை அலேக்காக கடத்திச் சென்று ஊரப்பாக்கத்தில் இறக்கியுள்ளனர். உழைக்கும் மகளிர் அல்லவா? நெஞ்சில் உரம் நிறைந்திருக்குமன்றோ? அங்கும் போராடி உள்ளனர்.
‘அடடே இங்கும் போராடுகின்றனரே..’ என்று தூக்கிக் கொண்டு போய் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இறக்கிவிட்டுள்ளனர்.
அங்கும் போராடுகின்றனர். ”தேர்தல் வாக்குறுதி தந்தீர்கள். இனி இப்படி பொய் வாக்குறுதி தராதீர்கள். தந்த வாக்குறுதியை தராமல் தப்பிக்க அனுமதிக்கமாட்டோம்” என்று உறுதி குலையாமல் போராடி வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழ் நாட்ட்டரசின் சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமாருடன் ஒரு முறையும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இருமுறையும் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கடந்த ஆறு நாட்களாக இவர்கள் என்ன சாப்பிட்டு இருப்பார்கள்?
எப்படி தங்கள் இயற்கை உபாதைகளை கழித்திருப்பார்கள்?
எப்படி தூங்கி எழுந்தார்கள்?
இவர்கள் குடும்பத்தாரின் நிலை என்ன?
தன்னை ”அப்பா” என அனைவரும் சொல்ல வேண்டும் என்ற ஆசை மட்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு இருந்தால் போதுமா? ஒரு தந்தை தன் பெண்களை நடத்தும் முறை இது தானா?
ஓட்டு பொறுக்கி திட்டங்களுக்காக அரசு கஜானாவை காலி செய்து வள்ளல் பட்டத்தை பெற ஆசைப்படும் ஆட்சியாளர்கள், ஏழை எளிய தொழிலாளர்களை ஒப்பந்தகாரர்களுக்கு தாரை வார்த்து கமிஷன் அடித்து தங்கள் செல்வத்தை தான் பெருக்கிக் கொள்கிறார்கள்!
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ”ஆகா, உங்கள் கோரிக்கைகள் எல்லாம் மிக நியாயமானவை. எங்கள் தேர்தல் வாக்குறுதியிலேயே உங்க கோரிக்கைக்கு உத்திரவாதம் தருகிறோம், ஓட்டுப் போடுங்க” என்று ஆட்சிக்கு வந்து உட்கார்ந்த பிறகு, கமுக்கமாக கடந்து போனால்.., எவ்வளவு பெரிய துரோகம் இது? உழைத்து வாழும் எங்களுக்கு உரிமைகளை கேட்கும் தைரியம் இருக்காதா? என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது,தமிழ் நாடு செவிலியர் மேம்பாட்டுக் கழகம்.
உயர் நீதிமன்றம் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை ஏற்று தமிழக அரசிற்கு செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும்படி தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது தமிழக அரசு.
உச்சநீதிமன்றத்தின் இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், “எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். இலவசங்களை கொடுக்க பணம் இருக்கிறது. ஆனால் பணி செய்பவர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவு செகிறீர்கள்? உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தானே? அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது.
நாட்டிலேயே சிறந்த மாநிலம் என்று கூறும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது? நாட்டிலேயே சிறந்த மாநிலம் என்று கூறும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது? என கேள்வி எழுப்பியதோடு, தமிழ்நாடு அனைத்திலும் வளர்ந்த மாநிலம் , பொருளாதார ரீதியில் வளர்ந்த மாநிலம் என கூறுகிறீர்கள். ஆனால் சேவை செய்யும் செவிலியர்களுக்கு உரிய ஊதியத்தை கொடுக்க மறுக்கிறீர்கள். ஒப்பந்த செவிலியர்களை தமிழ்நாடு அரசு சுயநலத்திற்காக பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறது .ஆனால், ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள்! அவர்களுக்கு சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள்! இதை நாங்கள் ஏற்க முடியாது. என்று தமிழக அரசின் தலையில் குட்டு வைத்தனர்.
இது நடந்தது செப்டம்பர் 15. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என இரண்டு நீதிமன்றங்கள் சொல்லியும் தன் தவறுகளை திருத்திக் கொள்ள மறுத்து செவியர்களை சுரண்டும் ஆட்சியாளர்களால் தற்போதும் போராடி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஆட்சியாளர்களை மக்கள் மன்றம் தான் தண்டிக்க வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/23605/nurses-protest-continues/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு