பொது சிவில் சட்டம்: செய்ய வேண்டியது என்ன?

அருஞ்சொல்

பொது சிவில் சட்டம்: செய்ய வேண்டியது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘வழிகாட்டுக் கொள்கைகள்’ குறித்து முழு அத்தியாயமே சேர்க்கப்பட்டிருக்கிறது. அதில் அரசமைப்புச் சட்டக் கூறு 44, நான்காவது அத்தியாயத்தில் உள்ள 18 சட்டக் கூறுகளில் ஒன்று. சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும், மக்கள் இடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்பதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 38 (2) கூறு, மக்கள் இடையே பொருளாதார நிலையிலும், முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகளிலும் சமமான களம் நிலவ வேண்டும் என்று வலியுறுத்துவது மிகவும் முக்கியமானது.

சமூக – பொருளாதார நீதி நிலவ வேண்டும் என்ற கருத்தில் நோக்கும்போது, அரசமைப்புச் சட்டத்தின் 39வது கூறின் வழிகாட்டுக் கொள்கை அந்த அத்தியாயத்துக்கே நடுநாயகமான தூண்போலத் திகழ்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 43வது கூறு மக்கள் அடிப்படையான எல்லாமும் பெற்று கண்ணியமாக வாழ்வதற்கான அளவுக்கு, வாழ்நிலை ஊதியம் தரப்பட வேண்டும் என்கிறது, அது கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நியாயமான விருப்பமும்கூட.

இப்படிப்பட்ட வழிகாட்டுக் கொள்கைகள் மீது எந்தவொரு விவாதமும் நடப்பதே இல்லை என்பதே துயரகரமானது.

முக்கியமான இந்த விஷயங்கள் எல்லாம் மோடி அரசின் விவாதப் பட்டியலிலோ செயல் பட்டியலிலோ இல்லை. ஆர்எஸ்எஸ் - பாஜகவின் அடுத்த செயல்திட்டம் காரணமாகவும் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்திய சில கருத்துகள் காரணமாகவும் அரசமைப்புச் சட்டத்தின் 44வது கூறு இப்போது அரசியல் விவாதங்களின் மைய விவாதப்பொருளாகிவிட்டது.

சொற்களுக்குப் பொருள் உண்டு

அரசமைப்புச் சட்டத்தின் 44வது கூறின் மொழிநடையைப் பாருங்கள்: “இந்தியா முழுமைக்கும் மக்களுக்கு சீரான சிவில் உரிமைகள் சட்டத் தொகுப்பு கிடைப்பதற்கு அரசு உறுதி எடுத்துக்கொள்ளட்டும்.”

சொற்களுக்குப் பொருள் உண்டு. ‘ஆலிஸ் இன் த ஒன்டர்லேண்ட்’ கதையில் ஆலிஸிடம் ஹம்ப்டி டம்ப்டி கூறுவதைப் போல ‘நான் என்ன பொருள் கூற விரும்புகிறேனோ அந்தப் பொருள்’ என்பது இந்த வார்த்தைகளுக்கு இல்லை; ‘சீரான’ என்பது ‘பொதுவான’ என்பதல்ல. ‘பெற முயற்சிப்போம்’ என்பது ‘பெற்றே தீருவோம்’ என்பதல்ல.

அம்பேத்கரும் அவருடைய சகாக்களும் வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்று ஏதும் அறியாதவர்கள் அல்ல. வரலாறு, மதம், சாதிப் பிரிவுகள், சமூக – குடும்ப அமைப்புகள், கலாச்சார பழக்க வழக்கங்கள், இந்திய மக்களின் மரபுகள் என்று அனைத்தும் அறிந்தவர்கள் என்பதால் நான்காவது அத்தியாயத்துக்கான வார்த்தைகளை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்துத்தான் வடித்திருக்கிறார்கள்.

பொது சிவில் சட்டம் (யுசிசி) என்பது தனிச் சட்டங்களைக் குறிக்கும் சுருக்கெழுத்துக் குறியீடாகும். அது வாழ்க்கையின் நான்கு முக்கிய பகுதிகளைப் பற்றியது: திருமணம் – மணவிலக்கு, மரபுவழி வாரிசு – சுவீகாரம், பருவ வயதுக்கு முந்தைய நிலை – பருவ வயது வரைக்குமான மூத்தவர் பாதுகாப்பு, தத்தெடுப்பு – ஜீவனாம்சம். கடந்த சில நூற்றாண்டுகளாக வெவ்வேறு பகுதி மக்களின் தனிச் சட்டங்கள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு வழிகளில் உருவாகிவந்துள்ளன.

அப்படி உருவாகிய காலத்தில், நாட்டை யார் ஆண்டார்கள் என்பதும் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. மதம் முக்கிய பங்காற்றி இருக்கிறது. மண்சார்ந்த மரபு, கருவளர் விகிதம், போருக்குப் பிந்தைய ஆட்சி மாற்ற விளைவு, இடப்பெயர்வு, அன்னியர்களின் செல்வாக்கு ஆகியவை தனிச் சட்டங்களை வெகுவாக மாற்றியிருக்கிறது அல்லது செல்வாக்கு செலுத்தியிருக்கிறது.

சீர்திருத்தம் தொடங்கியது 1955இல்

இன்றுள்ள நிலையில் தனிச் சட்டங்களில் ‘பால்’ (ஆண்-பெண்) அடிப்படையிலான பாகுபாடும், பால் அல்லாத வகைப் பாகுபாடுகளும் நிலவுகின்றன. அறிவியலுக்குப் பொருந்தாததும் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிப்பதுமான சில பழக்கங்கள் இன்றும் தொடருகின்றன. சமூகரீதியாகவே கண்டிக்கத்தக்க மரபுகளும் பழக்கங்களும் நிலவுகின்றன. தனிச் சட்டம் அனுமதிக்கும் இவை குறித்து நிச்சயம் விவாதித்து சீர்திருத்தியாக வேண்டும்.

தனிச் சட்டங்களைத் திருத்துவதும் புதிய செயல் அல்ல. அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திலிருந்தே அவை தேசிய செயல்திட்டத்தில் தொடர்கின்றன. சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றம் (1952-57) அதற்கு முதலிடம் தந்து உரிய நடவடிக்கைகளை எடுத்தது. அந்தச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர்களில் முன்னிலை வகித்தவர்கள் ஜவாஹர்லால் நேருவும், அம்பேத்கரும்.

ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றிய வைதீகர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையிலும் நான்கு பெரிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் இந்து மதச் சட்டங்கள் தொகுக்கப்படும் வேலையும் நடந்தது. அது மிகவும் புரட்சிகரமான நடவடிக்கை, ஆனால் அந்தப் புரட்சியும் சில வழக்கங்கள் அப்படியே தொடர அனுமதித்தது.

மக்கள் இடையே பாகுபாட்டை நிலைநிறுத்தும் எல்லா அம்சங்களும் மாற்றப்பட்டுவிடவில்லை; கூட்டுக் குடும்பம் என்பது இந்துக்களின் வாழ்க்கை வடிவம் என்று சட்ட நோக்கில் அங்கீகரிக்கப்பட்டது. திருமணங்களில் செய்யப்படும் சடங்குகளும் மரபுகளும் விதிவிலக்காகக் கருதப்பட்டு தொடர அனுமதிக்கப்பட்டன. கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ள இது மிகவும் முக்கியமானது காரணம், இந்தியாவில் பெரும்பாலான திருமணங்கள் சடங்குகள் அடிப்படையில்தான் நடத்தப்பட்டு புனிதம் பெறுகின்றன.

இதில் 1961, 1962, 1964, 1976, 1978, 1999, 2001, 2003 ஆகிய ஆண்டுகளில் மேலும் பல திருத்தங்கள் தனிச் சட்டங்களுக்குச் செய்யப்பட்டன. 2005 முதல் 2008 வரையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் மேலும் சில வகை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலே குறிப்பிடப்பட்ட நான்கு சட்டங்களில் மூன்றுக்குத் திருத்தங்கள் செய்யப்பட்டன.

அதில் புரட்சிகரமான திருத்தம் எதுவென்றால், தந்தையின் சொத்தில் மகனுக்குள்ளதைப் போல மகளுக்கும் சம உரிமை உண்டு என்பது. குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2005, உரிய பருவ வயதை எட்டாத சிறார் திருமண தடைச் சட்டம், 2006, பெற்றோர் – மூத்த குடிமக்களை அவர்களுடைய வாழ்நாள் வரையில் உணவு – உடை அளித்து உரிய கண்ணியத்துடன் பராமரிக்கும் சட்டம், 2007 ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

இந்தச் சீர்திருத்தச் சட்டங்களை அமல்படுத்த மாநில சட்டமன்றங்கள் சில தயங்கிய சமயங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டன. உச்ச நீதிமன்றம் 2017 ஆகஸ்ட் 22இல், ஒரே சமயத்தில் மூன்று முறை ‘தலாக்’ சொல்லி - மணவிலக்கு பெறும் முஸ்லிம்களின் வழக்கம் அரசமைப்புச் சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பளித்தது.

21வது சட்ட ஆணையத்துக்கு செவி மடுங்கள்

பழங்குடி மக்களுடைய தனிச் சட்டங்கள் பரிசீலனைக்கு வந்தபோது நாங்கள் அவகாசம் அளித்தோம், நிதானித்தோம். அரசமைப்புச் சட்டத்தின் 25வது கூறின்படி, அரசமைப்புச் சட்டத்தின் 366வது பிரிவு பட்டியலிட்ட பழங்குடிகளுக்கு இந்த நான்கு சட்ட திருத்தங்களும் அமல்படுத்தப்படவில்லை. அசாம், மேகாலயம், திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் பழங்குடிகள் வாழும் பிரதேசங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது பட்டியல் சேர்க்கப்பட்டது. அந்தப் பகுதிகளில் மாவட்டப் பேரவைகள், பிராந்தியப் பேரவைகள் ஆகியவை இறப்புக்குப் பிந்தைய சொத்துரிமை, திருமணம், மணவிலக்கு, இதர சமூக சடங்குகள் தொடர்பாக உள்ளூர் மரபுக்கும் தேவைக்கும் ஏற்ப சட்டங்களை இயற்றிக்கொள்ளலாம் என்று அனுமதிக்கும் பிரிவு சேர்க்கப்பட்டது.

பழங்குடி மக்களுடைய மதம், சமூகம் தொடர்பான நடவடிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் காப்பாற்ற நாகாலாந்து (அரசமைப்புச் சட்டம் 371ஏ), சிக்கிம் (அரசமைப்புச் சட்டம் 371எஃப்) மிசோரம் (அரசமைப்புச் சட்டம் 371ஜி) ஆகியவை சேர்க்கப்பட்டன. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி அமைப்புகள் தங்களுக்கும் அத்தகைய சிறப்புரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பிறகு முன்வைத்துள்ளன.

தனிச் சட்டங்களில் மேலும் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது நிச்சயமாக அவசியம்தான். 21வது சட்ட ஆணையும் இது தொடர்பாக அறிவுக்கூர்மை மிக்க ஆலோசனையை வழங்கியிருக்கிறது: “இந்த சட்ட ஆணையம், ‘பாகுபடுத்தும் சட்டங்களைத் திருத்துவது தொடர்பாக மட்டும்’ பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது; விரும்பத் தகாததும், அவசியமற்றதுமான ‘சீர்மையான பொது சிவில் சட்டம்’ (யுசிசி) என்ற அம்சத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. கலாச்சாரப் பன்மைத்துவத்தைக் குலைக்கும் செயல்களில் உடன்பட்டு சமரசம் செய்துகொள்ள முடியாது, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்ற கோரிக்கையால் இந்தியாவின் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.”

‘பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?’ என்ற வகையில் மட்டும் இதைப் பேச அனுமதிக்கும் வகையில் பிரதமர் இந்தப் பிரச்சினையைக் கொண்டுசெல்லப் பார்க்கிறார். இந்த அணுகுமுறை மக்களை - பேச வாயற்றவர்களாகவும், சாய்ந்தால் ஒரே பக்கம் சாயும் செம்மறி ஆடுகளாகவும் – கருதுகிறது.

முஸ்லிம் சட்டம் உள்பட அனைத்து தனிச் சட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக அனைத்து சமூகங்களுடனும் அர்த்தமுள்ள உரையாடலைத் தொடங்குவதற்கு நயத்தக்க நாகரிகமுள்ள அணுகுமுறையே தேவை. இதில் முக்கிய அம்சம் ‘சீர்திருத்துவது’ - ‘ஒருமையாக்குவது’ அல்ல.

(ப.சிதம்பரம்)

- அருஞ்சொல்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு