கொள்ளை அடிப்பதில் அனைவரும் கூட்டுக் களவாணிகளா?

அறம் இணைய இதழ்

கொள்ளை அடிப்பதில் அனைவரும் கூட்டுக் களவாணிகளா?

இப்படியெல்லாம் கூட நடக்குமா? சட்டமும், நீதியும், ஆட்சி அதிகாரமும் செல்வாக்கானவர்களுக்கு சேவை செய்வதற்கான கருவிகளா? பணக்காரர்களின் மோசடிகளுக்கும், பித்தலாட்டத்திற்கும் தண்டனை என்பதே கிடையாதா? என நம்மை கொதிக்க வைக்கும் நிகழ்வுகளை கோர்வையாக பார்ப்போம்.

இந்தியாவில் ஆட்சியாளர்களும், தொழிலதிபர்களுமாக சேர்ந்து அதிகமாக ஏமாற்றுவது விவசாயிகளைத் தான்! இயற்கையையும், தங்கள் உழைப்பையும் மட்டுமே சார்ந்து வாழ்ந்த விவசாயிகளை தங்கள் நோக்கத்திற்கு ஏற்ற பயிர்களை ‘சாகுபடி செய்யும்படி’ வலியுறுத்துவதும் இவர்கள் தான்! பின்பு கூட்டாக மோசடி செய்து ‘விவசாயிகளை சாகும்படி செய்பவர்களும்’ இவர்கள் தான்!

அதற்கு சரியான உதாரணம் கரும்பு விவசாயிகள்! முன்பெல்லாம் கரும்பு என்பது அதிக விவசாயிகள் பயிரிடும் பயிர் அல்ல! இனிப்பு பயன்பாட்டுக்கு நாம் அறுபதாண்டுகளுக்கு முன்பு வரையிலும் பனைவெல்லத்தைத் தான் பயன்படுத்தி வந்தோம். அது மிகவும் சுவையானது மட்டுமல்ல, மிக ஆரோக்கியமானதும் கூட! ஆனால், பனை வெல்லத்திற்கு மாற்றாக கரும்பில் இருந்து கிடைக்கும் சீனியை மக்கள் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டது.

அதனால், கரும்பை பயிரிடச் சொல்லி அரசாங்கம் வற்புறுத்தியது! அப்படி பயிரிடும் கரும்பை பக்கத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் சேர்க்கும்படியும் அரசாங்கம் நிர்பந்தித்தது. அப்படி உற்பத்தியாகும் சர்க்கரையை நியாய விலைக் கடைகள் மூலமாக கொடுத்து சர்க்கரையை பயன்படுத்தவும் மக்களை பழக்கப்படுத்தியது. பிறகு அரசு ஆலைகள், கூட்டுறவு ஆலைகள் தவிர்த்து தனியார் ஆலைகளையும் களத்தில் இறக்கியது! இதற்கு பின்னணியில் ஒரு முக்கியமான நோக்கம் இருந்தது! அது தான் கரும்பு சர்க்கரையில் இருந்து கிடைக்கும் மோலாசஸ்! சர்க்கரை ஆலைகள் கரும்பில் இருந்து கிடைக்கும் சர்க்கரைக்கான பணத்தை மட்டுமே விவசயிகளுக்கு தருகின்றன! அதன் சக்கையான மோலாசஸ் மூலமாக அபரிமிதமாக கிடைக்கும் பணத்தின் சிறுபகுதியை கூட விவசாயிகளுக்கு தருவதில்லை!

இந்த மோலாசஸைக் கொண்டு தான் மது உற்பத்தியாளர்கள் அயல் நாட்டு வகை மதுவை தயாரிக்கிறார்கள்! மதுவைத் தயாரிப்பவர்கள் அரசியல்வாதிகள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அயல் நாட்டு மதுவை மக்கள் பழக வேண்டும் என்றால், அவர்கள் பனங் கள்ளை தடுக்க வேண்டும் என்பதால், கள்ளுக்கு தடையும் போட்டனர். இதனால், பல லட்சம் பனை விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாயினர்.

தமிழகம் முழுக்க பல்லாயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிட விவசாயிகளுக்கு நெருக்கடி தரப்பட்டது. சர்க்கரை ஆலைகளும் செல்வாக்கானவர்களாலேயே தொடங்கப்பட்டது! இவர்களுக்கு அரசாங்கத்தின் அனைத்துவித அனுசரணைகளும் கிடைத்தன! அதனால், கரும்பை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்தால் உடனே பணம் தரத் தேவையில்லை என்பது நடைமுறையானது. பின்பு சற்று காலம் தாழ்த்தலாம் என்பது நடைமுறையானது! பிறகு எவ்வளவு வேண்டுமானாலும் காலம் தாழ்த்தலாம் என்பதையும் அரசாங்கம் அனுமதித்தது. தற்போதோ கொள்முதல் செய்த கரும்புக்கு பணம் தராமல் மோசடி செய்வதும் தவறில்லை என்ற அளவுக்கு வந்து நிற்கிறது! அதைத் தான் ஆரூரான் சர்க்கரை ஆலையின் அசகாய மோசடிகள் நம் நெற்றிப் பொட்டில் அறைந்தது போல உணர்த்துகின்றன!

ஆரூரான் சர்க்கரை ஆலைகள் தஞ்சை மாவட்டத்திலும், கடலூர் மாவட்டத்திலுமாக நான்கு உள்ளன! இவற்றுக்கு சுமார் 25,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு விநியோகம் செய்து வந்தனர். இந்த விவசாயிகளுக்கு 2016 முதல் கரும்புக்கான பல கோடித் தொகையைத் தராமல் இழுத்தடித்தது இந்த நிர்வாகம். இத்துடன் தீடீரென்று உங்க பாக்கியைத் தருகிறோம். இந்த பாரத்தில் கையெழுத்து போட்டுத் தாங்க எனக் கேட்டு தஞ்சை மாவட்ட விவசாயிகள் சார்பில் 360 கோடியும் கடலூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் 90 கோடியும் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயரில் வங்கியில் கடன் வாங்கியுள்ளது இந்த நிர்வாகம். இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகளும் துணை போய் உள்ளனர்! இந்த கடனுக்கு வட்டியையும், அசலையும் சேர்த்துக் கட்டும்படி விவசாயிகளுக்கு நெருக்கடி தந்து கொண்டுள்ளது வங்கி நிர்வாகம்!

கொதித்து எழுந்த விவசாயிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருமண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை, சித்தூர்  ஆரூரான் சர்க்கரை ஆலை ஆகிய இரண்டு ஆலைக ளின் பெயரில் அந்நிர்வாகம் வங்கிகளில் ரூ.1454.58 கோடி கடன் வாங்கியிருந்த இந்த ஆலை, கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் தன் செயல்பாடுகளை நிறுத்தி வைத்து திவாகிவிட்டதாக அறிவித்துவிட்டது.

இந்த ஆலைக்குச் சொந்தமான சொத்துக்கள் சுமார் ஆயிரம் கோடிக்கு நிலமாகவும், தொழிற்சாலையாகவும் உள்ள நிலையில் அதைக் கைப்பற்றி வங்கிக் க்டனையும், விவசாயிகளுக்கான கடனையும் அடைப்பது தானே ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை. அப்படித் தானே நீதிமன்றமும் தீர்ப்பளித்து வழிகாட்டி இருக்க வேண்டும்.

ஆனால், நடந்தவை எல்லாம் பார்த்தால், நாம் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதாக நம்பப்படும் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் தான் வருகிறது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவல்துறைக்கும், கலெக்டருக்கும், முதல்வருக்கும் பல புகார் கடிதங்களை அனுப்பினர்! பல கட்டப் போராட்டங்களை நடத்தினர். அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தும் முறையிட்டனர். நியாயப்படி மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை மீது கடும் நடவடிக்கை எடுத்து , மோசடிப் புகாரில் அவர்களை சிறைக்குள் தள்ளி இருக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கும், வங்கிகளுக்கும் தர வேண்டிய கடன் தொகையை தந்திருக்க வேண்டும்.

கரும்புக்கான நிலுவைத் தொகையை கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்!

அதிரடி கட்டப் பஞ்சாயத்து;

ஆனால். இவை எதுவுமே நடக்கவில்லை.ஏதோ மறைமுக ஒப்பந்தம் நடந்தததோ என்னவோ..? எடப்பாடி அரசு ஆரூரான் ஆலைகள் , தேசிய கம்பெனிச் சட்டங்கள்  தீர்ப்பாயத்தில் முறையிட  அன்று அதிமுக அரசு அனுமதித்துவிட்டது. இந்த தீர்ப்பாயம் என்பது ஒரு மனசாட்சியில்லாத கட்டப் பஞ்சாயத்து அமைப்பாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு இந்த விவகாரத்தில் நடந்தவற்றைக் கொண்டு யாருமே எளிதில் உணரலாம்!

ஆரூரான் சர்க்கரை ஆலை வங்கிகளுக்கு தர வேண்டிய 1,454.58 கோடி கடனில் 85 கோடி ரூபாயை மட்டும் கொடுத்தால் போதும். அதையும் ஐந்து ஆண்டு களில் ஏழு தவணைகளாக செலுத்தினால் போதும் என, தேசிய கம்பெனிச் சட்டங்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது!   இந்த வகையில் வாங்கிய  வங்கிக் கடன்களில் 1369.58 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துவிட்டது! ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை!  இந்த ஆலை முதலாளிகள் இது வரை சம்பாத்தித்து சேர்த்த பல நூறு கோடிகள் என்னவாயிற்று? அவர்களின் பல சொத்துக்களை ஏன் பறிமுதல் செய்யவில்லை.. போன்ற எந்தக் கேள்விக்கும் விடை இல்லை.

விவசாயிகளிடம் கட்டப் பஞ்சாயத்து நடத்தும் சர்க்கரை ஆலை நிர்வாகம்.

இது போன்ற சூழல்களில், ‘விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்’ என்று நீதிமன்றம் ஏற்கனவே கூறிய போதும், ‘விவசாயிகளின் கரும்பு பண பாக்கி முழுவதையும் தர வேண்டியதில்லை 45 கோடி ரூபாயை ஓராண்டில் ஐந்து தவணைகளில் கொடுத்தால் போதும்’ என்று தீர்ப்பாயம்  கட்ட பஞ்சாயத்து செய்துள்ளது.

மேலும், விவசாயிகள் வயிற்றில் மட்டும் அடிக்கவில்லை! கரும்பு ஏற்றி வந்த வாகனங்களுக்கு தர வேண்டிய வாடகை பாக்கி ரூ.47.61 லட்சத்தில் 48 ஆயிரம் மட்டும் தந்தால் போதும் என்றும் கூறியுள்ளது. தொழிலாளர்கள், ஊழியர்கள் சம்பள பாக்கியில்  18.74 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துவிட்டு, 3.71 கோடி ரூபாயை மட்டுமே கொடுத்தால் போதும் எனக் கூறியுள்ளது!

‘விவசாயிகளுக்குத் தர வேண்டிய கரும்பு பண பாக்கிக்கு 15 சதவீதம் வட்டியுடன் வழங்கிட வேண்டும்’  என்று கரும்பு கட்டுப்பாடு சட்டம் உள்ள நிலையில் கொடுக்க வேண்டிய பணத்தைக் கூட முழுமையாக தராமல், அதிலும் மோசடியை அரங்கேற்றி உள்ளது, தேசிய கம்பெனி  சட்டங்கள் தீர்ப்பாயம்! இது உண்மையில் சட்டப் பஞ்சாயத்து தீர்ப்பாயமாகத் தெரியவில்லை. கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பாயமாகத் தான் தெரிகிறது.

திமுக ஆட்சியில் இன்னும் மோசடி!

தேர்தல் நேரத்தில் அரூரான் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் கடன்பாக்கி தீர்த்து வைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்! ஆனால், 18 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் எதுவுமே நடக்கவில்லை என்பது மட்டுமல்ல, இருக்கும் சூழல்களை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் ஆதாயம் பார்த்து வருவதாகத் தான் தெரிகிறது!

அடிமாட்டு ரேட்டுக்கு ஏலம்;

விவசாயிகளுக்கு கரும்பு பாக்கி தீர்க்கப்படாத நிலையில் ஆரூரான் சர்க்கரை ஆலைகளுக்கு சொந்தமாக 750 ஏக்கர் நிலம், இரண்டு பெரிய சர்க்கரை ஆலைகள், டிஸ்டிலெரி நிறுவனங்கள், மின்சாரம் உற்பத்திக்கான  இணைமின் நிலையங்கள் கொண்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ள நிலையில், வெறும் 145 கோடி ரூபாய்க்கு இந்த ஆலை ஏலத்திற்கு தரப்பட்டு உள்ளதானது ஒரு பெரும் மர்மமாக உள்ளது! அப்படி ஏலம் எடுத்தது முதலமைச்சர் குடும்ப உறுப்பினர் ஒருவரின் பினாமி நிறுவனமாகப் பார்க்கப்படும் கால்ஸ் டிஸ்லரிஸ் பிரைவேட் லிமிடெட் என்கிறார்கள்!

கோடிக் கோடியாக மதுபான உற்பத்தியில் சம்பாதிக்கும் இந்த மதுபான ஆலைகள் அதற்கு முக்கிய மூலப் பொருள்களில் ஒன்றான மோலாசஸ் தரும் விவசாயிகளுக்கு எதுவுமே தராமல் ஏமாற்றுவதற்கு என்று தான் முற்றுபுள்ளி வைக்கபடுமோ?

மத்திய, மாநில ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம், தொழில் அதிபர்கள் என அனைவருமே கூட்டுக் களவாணிகள் தான் விவசாயிகளையும், தொழிலாளிகளையும் ஏமாற்றுவதிலும், மக்களின் வரிப் பணத்தை கூட்டாக கொள்ளையடித்து  பங்கு பிரிப்பதிலும்! சட்டம், நீதி எதுவும் இவர்களை நெருங்குவதில்லை! இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரம் இன்னும் ஏழைகளை சரியாக எட்டவில்லை!

காந்தி தேசத்தில் விவசாயிகள், தொழிலாளிகளின் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொண்டுள்ளது என்பதே உண்மை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

aramonline.in /11886/fraud-sugar-cane-factories/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு