அரசு நிர்வாகத்தை அலங்கோலமாக்க சதியா!
அறம் இணைய இதழ்
நெருப்பை எடுத்து பஞ்சு குடோனில் வைப்பது போல, வெறுப்பை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரத் தடையில்லை என்கிறது பாஜக அரசு! இது நாள் வரை ஆர்.எஸ்.எஸ் ஏன் தனிமைபடுத்தப்பட்டது? அரசு நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ் மயமானால் ஏற்படும் விளைவுகள் என்ன..?
ஜூலை திங்கள் 9 அன்று ஒரு சுற்றறிக்கையை சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளது மோடி – அமித்ஷா கும்பல். இதில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ள ஆணைகளை மாற்றி புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
“எந்த அரசு அலுவலரும் தமது பணிக்காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது அமைப்பில் உறுப்பினராக இருத்தல் கூடாது. அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளிலோ, இயக்கங்களிலோ கலந்து கொள்ளக் கூடாது “ என்பதே 30/11/1966, 25/07/1970, மற்றும் 28/10/1980 தேதிகளில் வெளியிடப்பட்ட ஆணைகளின் சாராம்சமாகும்.
இத்தகைய அறிவுறுத்தல் உண்மையில் இந்திய அரசு 1949-ல் சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது, அரசு அலுவலர்களின் நடத்தை விதிகளாக ( The Government Servants’ Conduct Rules1949) வெளிவந்த அறிவுறுத்தல்களின் தொடர்ச்சியே ஆகும்.
அமித் ஷாவின் தலைமையிலுள்ள உள்துறை அமைச்சகம் ஜூலை 9 அன்று வெளியிட்ட இந்த அறிவிப்பு ஜூலை 23 அன்று தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் X பதிவில் அம்பலப்படுத்திய பின்னரே, இந்திய பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிட்டன!
உயர் ஆதிக்க சக்திகளின் அமைப்பான ஆர். எஸ். எஸ். மற்றும் இஸ்லாமியர் அமைப்பான ஜமாத் – ஈ- இஸ்லாமி ஆகிய அமைப்புகளோடு அரசு அலுவலர்கள் எந்தவித ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது, அரசியல் கட்சிகளில் மற்றும் அமைப்புகளில் அரசு அலுவலர்கள் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்று இருந்த நடத்தை விதிகளை இப்பொழுது ஷா மாற்றுவதன் நோக்கம் என்ன?
இதன் மூலம் மோடி அரசு இந்திய ஜனநாயக மற்றும் மத சார்பற்ற அரசமைப்பிற்கு ஊறு விளைவிக்கும் அமைப்புகளின் பட்டியலில் இருந்து ஆர். எஸ். எஸ். அமைப்பை விலக்கி வைத்துள்ளதன் பொருள் என்ன?
இதற்கு முன்பிருந்த மொரார்ஜி அரசோ, வாஜ்பாய் அரசோ செய்யத் துணியாத நடவடிக்கையை இப்பொழுது செய்வதன் மூலம் மோடி அரசு என்ன சொல்ல விரும்புகிறது?
இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு விசேஷ சலுகைகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு என எலும்புத் துண்டை வீசுவார்கள்..! அதன் பிறகு அரசுத் துறைகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்மயமாகிவிடும். அதிகார வர்க்கமே பார்ப்பனியமயமாகும். பாரபட்ச அணுகுமுறைகள் பட்டவர்த்தனமாக அரங்கேறும். சமூக நீதி சவக் குழிக்கு போகும். எளியோர் உரிமைகள் நசுக்கப்படும். ஏய்த்து பிழைப்போர் கைகள் ஓங்கும்.
மூன்று முறை , 1948, 1975 மற்றும் 1992 ஆண்டுகளில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் புனிதர்களின் இயக்கமாக இப்பொழுது மாறி விட்டதா?
மகாத்மா காந்தியை 1948 ஜனவரி 30ல் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பை சார்ந்த நாதுராம் கோட்சே என்பவன் சுட்டுக் கொன்ற பொழுது , நாட்டில் மத துவேஷத்தையும், வன்முறையையும் தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்தியதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அன்றைய இந்திய அரசு , பிப்ரவரி 4, 1948 ல் தடை செய்தது.
ஆர்.எஸ்.எஸ் .ஸின் நடவடிக்கைகள் இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய நாட்டுக்கும் ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தல் என அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் உறுதியாக கூறினார் . இதை ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு ( நிறுவனர். ஜனசங்கம்) ஜூலை 18, 1948 ம் ஆண்டு எழுதிய கடித்த்திலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆர் எஸ் .எஸ் அமைப்பின் தனிப்பெரும் தலைவரான ‘குருஜீ’ எம். எஸ். கோல்வால்க்கர் அவர்களுக்கு , சர்தார். பட்டேல் 1948ம் ஆண்டு செப்டம்பரில் எழுதிய கடித்த்தில் “ஆர் எஸ் எஸ் அமைப்பு வகுப்புவாத விஷத்தை நாட்டில் பரப்புகிறது, இதனால், இந்திய நாடும், சமூகமும் பெரும் பாதிப்புக்குள்ளாக நேர்கிறது. காந்தியடிகளின் கொலையும் இதனால் தான் நிகழ்ந்தது” என்று கூறியுள்ளார்.
காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு சங்கிகள் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை ஆனந்தத்தை வெளிப்படுத்தியதை நாடு மறக்க முடியுமா?
நாட்டின் அரசமைப்பு சட்டத்தையும், தேசீயக் கொடியான மூவர்ணக் கொடியையும் மதிக்காமல் அவற்றை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். கூறி வந்ததை இந்திய மக்கள் மறக்க முடியுமா?
அகண்ட பாரதத்தை நிறுவுவதும், இந்து ராஷ்டிரத்தை ஏற்படுத்துவதுமே தங்களது குறிக்கோள் என்று இன்றும் கூறி வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சமூக கலாச்சார அமைப்பு அல்ல, அது ஒரு தெளிவான அரசியல் இலக்கை கொண்ட அரசியல் அமைப்பாகும்.
இந்துக்களின் நல்வாழ்வுக்காக இயங்குவதாக கூறிக் கொண்டு வகுப்பு வாதத்தையும், மத வெறியையும் தூண்டிவிடும் இந்த அமைப்பு இஸ்லாமிய வெறுப்பையும், பயத்தையும் விதைத்து இந்துக்களை அரசியல் ரீதியாக ஒன்று திரட்டி ஆட்சியில் அமருவதே இவர்களது நோக்கம்.
இதற்காக 40க்கும் மேற்பட்ட அமைப்புகளை உருவாக்கி ஆர். எஸ். எஸ். வழி நடத்துகிறது.
அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் (ABVP) இந்து ஜாக்ரன் மன்ச், விஷ்வ இந்து பரிஷத் , சுதேசி ஜாக்ரன் மன்ச், சன்ஸ்கார் பாரதி போன்ற பல அமைப்புகளை துவக்கி வழி நடத்தும் ஆர்.எஸ் .எஸ் ஸின் மறைமுகமான அரசியல் அமைப்பு தான் பாரதிய ஜனதா கட்சி (BJP) .
ஆக்டோபஸ் போன்று அனைத்து அமைப்புகளையும் தங்களது பல்வேறு கரங்களால் கட்டுக்குள் வைத்திருக்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
இந்து என்ற பரந்த வெளியில் ஆன்மீகம் சடங்கு பூஜை புனஸ்காரம் என்ற போர்வையில், வழிபாட்டுத்தலங்களான கோவில்களிலும், அதையொட்டிய கலை கலாச்சார அமைப்புகளிலும் மேல் சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டி கோலோச்சும் ஆர்.எஸ்.எஸ்ஆட்சி பீடத்தை நெருங்கு முன்னரே, அரசு அமைப்புகளான நீதித் துறை, காவல் துறை மற்றும் நிர்வாகத்துறைகளில் ஊடுறுவி வகுப்புவாத நச்சை பரப்பிக் கொண்டிருந்தனர்.
ஆட்சியாளர்கள் தடை செய்தாலும், பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து சமரசம் செய்யும் இந்த இயக்கம் தடை தீக்கம் வந்தவுடன் மீண்டும் கைவரிசையை காட்டியதை 1949-ல் காணலாம்.
1975- ல் அவசர காலத்தில் தடை செய்யப்பட்ட ஆர் எஸ். எஸ் இந்திரா காந்தியுடன் சமரசம் செய்து கொள்ள பல முயற்சிகள் செய்ததற்கு, அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் தியோரஸின்மன்னிப்பு கடிதங்களே சாட்சியாகும்.
1977- ல் ஜனதா ஆட்சியின் போது ஜனதா கட்சியின் உறுப்பினர்களாக இருந்து கொண்டே ஆர்.எஸ்.எஸ். ஸின் அடியாளாக தொடர்ந்த வாஜ்பாய் அத்வானி போன்ற முன்னாள் ஜனசங்க கட்சியினர் இரட்டை உறுப்பினர் பிரச்சினை எழும்பியவுடன் ஜனதா கட்சியிலிருந்து விலகி ஆட்சியைக் கவிழத்த வரலாறு நாடறியும். சங்கிகளின் விசுவாசம் எங்குள்ளது என்று நாட்டு மக்களுக்கும் தெரியும்!
1984- ல் பிரதமர் இந்திரா சீக்கிய காவலர்களால் சுடப்பட்டு இறந்த போது, மூண்ட தில்லி கலவரத்தில் ஆர்.எஸ். எஸ். ஸின் பங்கு அளப்பரியது. இந்த கலவரத்தில் காங்கிரஸ் கட்சியினரே கண்டனத்திற்குள்ளானாலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு – சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்களை திரட்டி வன்முறையில் ஈடுபட்டது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையான ஊடகங்கள் உள் நோக்கத்துடன் இதை இருட்டிப்பு செய்தன.
கலவரம் இந்திய நாட்டில் எங்கு நடந்தாலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கை வரிசையை அங்கு காண முடியும். அத்வானியின் ரத யாத்திரையில் தொடங்கி, வழி நெடுக இஸ்லாமியருக்கெதிரான வன்முறையைத் தூண்டிய சங்கிகள், ஷிலனயாஸ், கர சேவை என மத சடங்குகளை முன் வைத்து சமூகத்தில் பிளவுகளையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டு அரசியல் ஆதாயம் தேடியது.
பாபர் மசூதி இடிப்பு (1992) மும்பை கலவரம், ஆகியவற்றால் மீண்டும் தடை செய்யப்பட்ட ஆர். எஸ் எஸ். இயக்கம் தடையிலிருந்து வெளி வந்தாலும், வகுப்பு வாத கோட்பாட்டிலிருந்தும் வன்முறையிலிருந்தும் ஒரு போதும் வெளியே வந்ததில்லை.
குஜராத் கலவரம்(2002), சம்ஜுதா ரயில் குண்டு வெடிப்பு, மேலேகான் குண்டு வெடிப்பு, முசாபர்நகர் கலவரம் (2013) என லக்னோ, வதோதரா, கந்தமால், இந்தோர் , தமிழகத்தில் உள்ள மண்டைக்காடு கலவரம் வரை அனைத்திலும் ஆர்.எஸ். எஸ் கரங்கள் இருந்தது என்பது ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு.
இத்தகைய ஜனநாயக விரோத, சமத்துவ விரோத, மத நல்லிணக்க விரோத , இந்திய அரசமைப்பு விரோத அமைப்பான ஆர்.எஸ். எஸ் ஸின் நடவடிக்கைகளிலும் பயிற்சி வகுப்புகளிலும் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள அனுமதித்தால், இந்திய அரசும் அதன் ஆட்சியும் ஜனநாயகத் தன்மையுடன் இருக்க முடியுமா? சமத்துவத்தையும், சமநீதியையும்
நிலைநாட்ட முடியுமா? அரசமைப்பச் சட்டத்தை தான் காப்பாற்ற முடியுமா?
ஆர் எஸ் எஸ் சகாக்களில் கலந்து கொள்ள அரசு அலுவலர்க்கு அனுமதி அளித்தால் அவர்கள் அக்கூட்டங்களில் பங்குபெறும்முன்னரே பிரார்த்தனையில் கலந்து கொண்டு உறுதி மொழியும் எடுக்க வேண்டும் .
என்ன அந்த பிரார்த்தனை?
‘ என் இனிய தாயகமே, உன்னை வணங்கி உன் தாழ்பணிந்து நிற்கிறேன்
இந்துக்களின் தேசமே, இது காறும் எம்மை சிறப்புடன் வளர்த்துள்ளாய்!
ஓ புனித தேசமே, நற்குணங்களை தோற்றுவித்த பரம்பொருளே!
உன் முன்னால் மீண்டும், மீண்டும் சிரந்தாழ்த்தி ,தாள் பணிந்து வணங்குகிறேன்!
உங்களது உயரிய லட்சியத்திற்காக எங்களது இடுப்பு கச்சைகளை இறுக்கி கட்டி தயாராக உள்ளோம். அந்த லட்சியத்தை அடைய எங்களுக்கு உன் பேரருளை வழங்குவாயாக!
அடுத்து அந்த உறுதிமொழி,
“எல்லாம் வல்ல இறைவனே உன் முன்னும் , எனது முன்னோர்கள் முன்னும் இந்த உறுதி மொழியை நான் எடுக்கிறேன் (பிரதிக்ஞை pratigya)
என்னுடைய புனித மதமான இந்து மதத்தையும், இந்து கலாச்சாரத்தையும் பேணி வளர்த்தெடுப்பதன் மூலம் பாரத வர்ஷத்தை மேன்மையடையச் செய்வதற்காக நான் ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கத்தில் உறுப்பினராகி இணைகிறேன். அங்கு எனக்களிக்கப்படும் பணியை உண்மையுடனும், நேர்மையாகவும், சுய விருப்பு வெறுப்பு இன்றி, இதய சுத்தியுடன் மனப்பூர்வமாக நிறைவேற்றுவேன் .
நான் இந்தப் பணியில் என் இறுதி மூச்சுவரை விடாது செயல்படுவேன்.
பாரத் மாதா கி ஜே!”
இப்படி பிரார்த்தனை செய்து உறுதி மொழி எடுக்கும் அரசு அலுவலர்கள் இந்திய அரசியல் சாசனப்படி மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை கட்டிக் காக்க பணி புரிவார்களா? அல்லது இந்து ராட்டிரம் அமைய பணிபுரிவார்களா?
இந்து ராட்டிரம் அமைப்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நமது தேசீயக் கொடியை ஏற்றுவதுமில்லை, மதிப்பதுமில்லை.
இந்திய அரசமைப்பு சட்டத்தை இவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை! இவர்கள் ஏற்றுக்கொள்வது மனு தர்மத்தை தான் (மனு ஸ்மிருதி)
ஒரே தேசம், ஒரே மதம், ஒரே தலைவர், ஒரே சித்தாந்தம் என ஒற்றை மொழி பேசும் இந்த சனாதனவாதிகளின் நோக்கமெல்லாம் ஒற்றை ஆட்சி முறையே (unitary state) தவிர கூட்டாட்சி முறை (federal state) அல்ல .
இத்தகைய ஆதிக்க சக்திகளின் அமைப்பான ஆர். எஸ். எஸ் அமைப்பை புனிதர்களின் அமைப்பாக சித்தரித்து அதன் நடவடிக்கைகளில் பங்கு பெற அரசு ஊழியர்களுக்கு எந்த தடையும் இல்லை என்று உத்தரவிடுவதன் மூலம் தங்களைச் சாடும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் சமரசமாக போக மோடி விரும்புவதை குறிக்கிறது என்றே கொள்ள வேண்டும்!
சுய அதிகாரமுடைய அரசியல் சாசன அமைப்புகளை எல்லாம் காயடித்த பின் எஞ்சியிருக்கும் அரசு ஊழியர்கள் , ராணுவத்தினர், காவலர்கள் ஆகியோரையும் சங்கிகளாக மாற்றும் முயற்சியே இந்த அப்பட்டமான உத்தரவு!
நமக்கு புரிவது நாயுடுவிற்கும், நித்தீஷிற்கும் எப்பொழுது புரியும்?
ஆர்.எஸ்.எஸில் அரசு ஊழியர்கள் சேர்ந்தால் இந்த நாடு, சுடு காடாவதை யாராலும் தடுக்க முடியாது. மக்கள் விழிப்புணர்வோடு ஆர்த்தெழுந்து இதை தடுக்க வேண்டும்.
(சா.அருணாசலம்)
அறம் இணைய இதழ்
https://aramonline.in/18653/govt-employee-join-rss/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு