ஜனநாயகம் இனி மெல்லச் சாகும்
பரகால பிரபாகர்
இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்ற…
நமது நாட்டின் ஜனநாயத்திற்கு இது ஒரு சவாலான நேரம். நாம் ஒரு அமிர்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறது நமது அரசு. இப்போது நாம் நம் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் பெயர் ஆஸாத் கா அம்ரித் மஹோத்சவ். அரசும், ஆளுங்கட்சியும் சில குடிமைச் சமூக அமைப்புகளும் விழாக்களையும், விவாதங்களையும், கருத்தரங்குகளையும் நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தக் கொண்டாட்ட நிகழ்வுகள் உருவாக்கிய அதி உற்சாகம் வேகமாகத் தேய்ந்து விட்டது. அந்த மாபெரும் விழாக்களைக் குறித்து குடிமைச் சமூகத்துக்கு ஒரு மங்கலான நினைவே இருக்கிறதே தவிர, அவை கடத்திய செய்தி என்பது நினைவில் இல்லை. ஏனெனில், உண்மையில் அவை சொன்ன செய்தி என்ற ஒன்று இல்லை.
நம் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் நமக்குக் கொடுத்த வாய்ப்பையும், சூழலையும், இத்தனை பத்தாண்டுகளாக நாம் நடத்திய ஜனநாயகப் பயணத்தை ஒரு சீரிய வகையில் மதிப்பிடுவதற்காக நாம் பயன்படுத்தவில்லை. கொண்டாட்டங்கள் தேவைதான். ஏனெனில், கடும் சவால்களுக்கிடையே அரசியல் அமைப்பை ஒரு ஜனநாயகமாக வைத்திருந்த ஒரு சில நாடுகளில் நாமும் ஒன்று, ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் உள்ள பல நாடுகள் ராணுவ ஆட்சிகளுக்கும், கவர்ச்சியும் ஜனரஞ்சகமும் கொண்ட எதேச்சாதிரிகளுக்கும், கம்யூனிஸ்டு சர்வாதிகாரிகளுக்கும், மதப் பழமைவாதிகளுக்கும் பலியாகிவிட்டன. பெரும்பாலான பின் காலனிய நாடுகள் ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க முடியவில்லை. அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியா ஒரு ஜனநாயகச் சான்றாக நிற்கிறது.
ஆனால், சமீபகாலமாக அச்சுறுத்தும் ஒரு போக்கு நம் நாட்டில் நிலவுகிறது. நம் அரசியல் சொல்லாடல் மேலும் மேலும் ஜனநாயகமற்றதாகிக் கொண்டிருக்கிறது; பன்மைத்துவம், சகிப்புத்தன்மை போன்ற அடிப்படையான ஜனநாயக விழுமியங்கள் வலுவிழந்து கொண்டிருக்கின்றன; ஒன்றிய-மாநில உறவுகள் சீர்குலைந்து நம் கூட்டாட்சி அமைப்பில் ஆழமான வெடிப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன; நம் சட்ட மன்ற அமைப்புகள் செயலற்றுப் போய் விட்டன; நாட்டின் புள்ளிவிவரக் கட்டமைப்பு பலவீனப் படுத்தப்பட்டுவிட்டதால் அரசாங்கத்தை எதற்கும் பொறுப்பேற்கச் செய்ய முடியவில்லை; நம் ஊடகச் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது; எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் உரிமையின் மூச்சடைக்கப்பட்டுள்ளது; தடுப்புக் கம்பிகளாகச் செயல்பட வேண்டிய அரசு நிறுவனங்கள் வளைக்கப்பட்டுள்ளன; தகர்க்கப் பட்டுள்ளன. நம் நீதித்துறையின் சுதந்திரம் இன்று கேள்விக்குள்ளாகியிருக்கிறது. அரசின் அமலாக்கத்துறையும், விசாரணை அமைப்புகளும் ஆளும் கட்சியின் நலன்களைக் காப்பதற்காக ஏவிவிடப்பட்டிருக்கின்றன என்பதற்கான சான்றுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்தப் போக்குகள் அனைத்தையும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் செயல்படும் கண்காணிப்பு அமைப்புகள் வெளியிடும் தரவரிசைப் பட்டியல்கள் நம்மிடம் பிரதிபலித்துக் காட்டுகின்றன.
நமது குடியரசின் முக்கியமான இந்தத் தருணத்தில், நம் ஜனநாயகத்தின் நிலை குறித்தும் ஒரு சீரிய விவாதத்தை நடத்தி நம் அரசியல் அமைப்பில் ஜனநாயக உணர்வை ஆழமாக்கிடத் தேவையான வழிமுறைகளைக் கண்டடையும் முயற்சியில் நம் குடிமைச் சமூகம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். நமது 75 ஆண்டு கால ஜனநாயகப் பயணத்தை ஒரு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி, உண்மையைக் கண்டறியும் வகையிலான கேள்விகளை எழுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. நம் ஜனநாயக நடைமுறைகளை மதிப்பீடு செய்து அவை அளித்த பலன்கள் என்ன, அவற்றின் தோல்விகள் என்ன என்று காண வேண்டும், தோல்விகளுக்கும் குறைபாடுகளுக்குமான காரணங்களை விவாதிப்பதோடு மட்டுமல்லாமல் நாம் முன்னேறிச் செல்கையில் அவை மீண்டும் நிகழாமல் இருக்கத் தேவையான வழிகளையும் கண்டறிய வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய வெற்றிகளை அடையாளம் கண்டு, கொண்டாடி, அவற்றுக்கான காரணங்களையும் கண்டறிந்து, அந்த வெற்றிகளுக்கான காரணிகளை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த முயற்சியில் நாம் பிற சமூகங்களுடன், குறிப்பாக மேற்கத்திய சமூகங்களுடன், நம்மை ஒப்பீடு செய்யும் ஆர்வத்தினை கவனமாகத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு சமூகமும் தனித்தன்மை கொண்டது. ஒவ்வொரு சமூகத்துக்கே உரித்தான பிரச்சனைகளும், சவால்களும் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் அவற்றின் தீர்வுகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். எனவே, இந்தியாவிலிருக்கும் நாம் நம்முடைய சவால்களையும் குறைபாடுகளையும் அடையாளம் கண்டு, நம்முடைய தீர்வுகளைத் தேடி, நம்முடைய வாய்ப்புகளை மதிப்பிட வேண்டும்.
ஜனநாயகமற்ற அரசியல் கட்சிகள்
குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும் தேர்தல்கள் என்பதுதான் உலகம் முழுவதிலும் முக்கியமான ஜனநாயக நடைமுறை. அனைவருக்கும் வாக்குரிமை, நியாயமான, சுதந்திரமான தேர்தல்கள், நியாயமற்ற கட்டுப்பாடுகள் எதுவுமின்றி ஒருவர் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவும் பரப்பவும் இயல்வது _ இவைதான் இந்த நடைமுறையின் அடிப்படைகள். மக்கள் தம் குழுக்களை உருவாக்கிக்கொள்வது , நாட்டில் சுதந்திரமாக நடமாடுவது, தம் கருத்துகளை அமைதியான முறையில் பிரசுரித்துப் பரப்புவது ஆகியவற்றுக்கான உரிமைகள்தான் ஜனநாயக நடைமுறையை அர்த்தமுள்ளதாகவும், காத்திரமானதாகவும் ஆக்குகின்றன.
வேறு எங்கும் இருப்பதைப்போல் நம் நாட்டிலும் அரசியல் கட்சிகள்தாம் ஜனநாயகக் கருத்தின் அதி முக்கியமான வாகனங்கள். அவைதான் தேர்தல்களில் பங்கெடுத்து, அவர்களின் திட்டங்களை மக்களின் முன் வைத்து, அவர்களின் தீர்ப்பைக் கேட்டு, அது கிடைத்தால் அரசுகளை அமைத்து, வெற்றி பெறாவிட்டால் எதிர்க்கட்சியாக அமர்ந்து அரசாங்கத்தைப் பொறுப்பேற்கச் செய்யும் நிறுவனங்களாக உள்ளன.
ஆயினும், நம்முடைய அரசியல் அமைப்பில் செயல்படும் அரசியல் கட்சிகள் அனைத்தும், அல்லது பெரும்பாலான கட்சிகள், சாரத்தில் ஜனநாயகமற்றவை. வெகு சில விதிவிலக்குகள் இருந்தாலும், இன்றைய அரசியல் சூழலில் அவற்றுக்கு அதிக செல்வாக்கு இல்லையென்றே சொல்லலாம். காஷ்மீரிலிருந்து தமிழ்நாடு வரையிலான நம் அரசியல் வரைபடத்தைப் பார்த்தால், ஒவ்வொரு மாநிலத்திலும் ஆதிக்கம் பெற்றிருப்பவை குடும்பங்கள் நடத்தும் கட்சிகளோ அல்லது அதிகார வேட்கை கொண்ட நிதி வளம் மிக்க தனி நபர்களோ நடத்தும் கட்சிகளோதான். இவை குடும்பக் கட்சிகளாகும் தன்மை கொண்டவை. இந்தியாவின் மிகப் பழைய கட்சி எல்லா விதத்திலும் ஒரு குடும்பத்திற்குச் சொந்தமான கட்சிதான். தற்போதைய ஆளும் கட்சி, தோற்றத்தில் எப்படி இருந்தாலும் ஒரு நபரால், அதிகம் போனால் இருவரால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் கட்சி என்றே கூறலாம். நம் அரசியல் அமைப்பில் ஏறக்குறைய அனைத்து செல்வாக்கு மிகுந்த கட்சிகளிலும் உள்கட்சி ஜனநாயகம் சுத்தமாக இல்லை. இதை யாரும் எதிர்ப்பதில்லை; ஏனெனில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இது செளகரியமாக இருக்கிறது. குடிமைச் சமூகமோ இதைக் கண்டு கொள்வதில்லை; அல்லது இந்த அமைப்பில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர தனக்குச் சக்தியில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டது.
நம் நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தன்மை, அமைப்பு, நிதி ஆதாரம், தலைமையைத் தேர்ந்தெடுக்கும் முறை, கொள்கை வகுப்பதில் முடிவெடுக்கும் உட்கட்சி முறை ஆகியவை முழுமையான ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டும், இன்றைய சூழலில் நம் அரசியல் கட்சிகள் ஜனநாயக முறையில் செயல்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்த எதுவுமே இல்லை!
தனிப்பெரும்பான்மை பெற்ற சிறுபான்மையின் ஆட்சி
நம் நாட்டில் இதுவரை தனிப்பெரும்பான்மை பெற்ற அரசு இருந்ததில்லை. தனிப்பெரும்பான்மை பெற்ற சிறுபான்மைதான் இதுவரை இருந்த ஒவ்வொரு அரசையும் அமைத்திருக்கிறது. மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பெற்று இது வரை எந்தக் கட்சியும் ஆட்சிப் பொறுப்பேற்றதில்லை. ஆனால் இதை யாரும் கவனிக்கவில்லை; அதை விட மோசம், கவனித்தவர்கள் கூட அதை எதிர்த்ததில்லை. இது நம் அரசியல் அமைப்பு ஜனநாயகத்தன்மை கொண்டது என்கிற சான்றின் அடிப்படையையே தகர்க்கிறது.
இலக்கை முதலில் தொடுபவரே வெற்றியாளர் என்கிற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையை நாம் ஏற்றுக்கொண்டதன் மோசமான விளைவுகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வேட்பாளரோ அல்லது ஒரு கட்சியின் பிரதிநிதியோ அங்கு பதிவான வாக்குகளில் பெரும்பான்மை பெறத் தேவையில்லை. அவருக்கு அடுத்த போட்டியாளரை விட ஒரு வாக்கு அதிகம் பெற்றாலே போதும். பலமுனைப் போட்டிகளே வழக்கமாக இருக்கும் நம் நாட்டில் ஒரு வேட்பாளர் 30 அல்லது 35 சதவீத வாக்குகளைப் பெற்றாலே வென்று விடலாம். வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது சற்றே கூடுதலான உறுப்பினர்களின் ஆதரவுடனே சட்டமியற்றும் மன்றங்களில் மிருக பலத்தினைப் பெற்று விடுகின்றனர். அடிப்படையான ஜனநாயக விதியைத் தலைகீழாக்கும் இந்தப் போக்கினை நாம் இனியும் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது.
பிரதிநிதித்துவத்திற்கு மறுப்பு
இந்தத் தேர்தல் முறை நம் அரசியல் அமைப்பின் ஜனநாயகத்தன்மைக்கு அதே அளவு பாதிப்பை ஏற்படுத்தும் வேறு சில விளைவுகளையும் உண்டாக்குகிறது. இந்தக் கட்டுரையில் அவற்றில் சிலவற்றை முன்னிலைப்படுத்துவோம். தனக்கு அடுத்த போட்டியாளரை விட ஒரே ஒரு வாக்கினை அதிகம் பெற்று ஒருவர் வெல்லும்போது தொகுதியிலிருக்கும் பெரும்பான்மையான மக்களின் குரல்களுக்கு சட்டமியற்றும் அவைகளில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் விடுகிறது. இரண்டு கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ மட்டும் போட்டியிட்டு அவர்களில் ஒருவர் நூறு வாக்குகளில் 51-ஐப் பெறும்போதும் இந்த நிலையில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை. பின்வரும் ஒரு நிலைமையைக் கற்பனை செய்து பாருங்கள்: நூறு இடங்கள் இருக்கும் ஒரு சட்டமன்றத்தில் ஒவ்வொரு இடத்தையும் ஒரே வாக்கு வித்தியாசத்தில் ஒரு கட்சி வெல்கிறது. அடுத்த போட்டியாளரை விட ஒரே ஒரு வாக்கு அதிகம் பெற்று வென்ற கட்சியின் பிரதிநிதிகள் அனைத்து இடங்களையும் பிடித்துவிடுவார்கள். இந்த நிலையில் வென்ற கட்சிக்கும்/ பிரதிநிதிகளுக்கும் தோற்ற கட்சிக்கும்/பிரதிநிதிகளுக்குமிடையே மொத்த வாக்கு வித்தியாசம் வெறும் 100 மட்டுமே. இதனால் 49 சதவீத வாக்குகளைப் பெற்ற வேட்பாளரின் தொகுதியிலிருக்கும் 49 சதவீத மக்களின் கருத்துக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் விடுகிறது; அதாவது ரத்து செய்யப்படுகிறது. இப்படி அடிக்கடி நடக்க வாய்ப்பு இல்லையென்று முழுமையாகக் தெரிந்தபோதிலும் கூட, நம்முடைய ஜனநாயக அமைப்பின் குறைபாட்டை எடுத்துக்காட்டவே இப்படிப்பட்ட ஒரு கற்பனைக் காட்சி இங்கு முன் வைக்கப்படுகிறது. அப்படி நிகழாமல் இருப்பது சந்தர்ப்பவசமாகத்தான். எனவே, வெகுஜன ஜனநாயக உணர்வுகளைப் பிரதிபலிக்காத நம் குறைபாடுள்ள தேர்தல் முறையினால், முழு வீச்சில் இல்லாவிட்டாலும் ஒரு கணிசமான அளவுக்கு நமது சட்டமன்றங்களும், அதைத் தொடர்ந்து அரசுகளும் ஊனமடைந்துள்ளன.
விளையாட்டுப் பொருள் போன்றதுதான் நம் ஜனநாயகம்
நம் ஜனநாயகத்தை ஒரு விளையாட்டுப் பொருளாக மாற்றியிருக்கும் மற்றொரு குறைபாட்டையும் காண்போம். பல்வேறு சாதிகளையும், உப-சாதிகளையும், மதங்களையும், பிராந்தியங்களையும், மொழிகளையும் உள்ளடக்கிய பன்மைத்துவமான, அதிகபட்ச அடுக்கு நிலை சமுதாயம்தான் நமது. வழக்கமாக இந்த வகைப்பாடுகள் புவிவியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கின்றன.. குறிப்பிட்ட புவியியல் அமைப்புகளில் குவிந்து அடர்ந்திருக்கின்றன. குறிப்பிட்ட சாதிகளையும், உப ஜாதிகளையும், மதங்களையும் சார்ந்த மக்கள் நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்கின்றனர். அதே போல, குறிப்பிட்ட மொழிகளைப் பேசும் மக்களும் குறிப்பிட்ட புவியியல் பிரதேசங்களில் காணப்படுகின்றனர். .
நம்மைப் போன்ற பன்மைத்துவமான அடுக்கு நிலை அரசியல் அமைப்புகளில் பிரதேசம் சார்ந்த தேர்தல் தொகுதி அமைப்பின் காரணமாக சட்ட சபைகளில் பிரதிநிதித்துவத்தின் பிரதிபலிப்பு சிதைந்தே இருக்கிறது. ஓர் அரசியல் கட்சி 1000 வாக்குகளை ஏறக்குறைய சமமாக 100 தொகுதிகளில் பெற முடிந்தாலும் கூட சட்டமன்றத்தில் ஒரு இடத்தைக்கூட பெறும் வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் வேறு ஒரு கட்சி அதில் பாதியளவு வாக்குகளை ஒரு பிராந்தியத்தின் 10 தொகுதிகளில் வாங்கினால் கூட, அதற்கு 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துவிடுவார்கள். இதன் விளைவாக, மொத்தம் ஆயிரம் வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு சட்டமன்றத்தில் ஒரு இடம் கூட இருக்காது. ஐநூறு வாக்குகளை 10 தொகுதிகளில் வாங்கிய கட்சிக்கு, 10 இடங்கள் கிடைக்கும். நம் தேர்தல் முறையின் இந்த அம்சம் சாதிகளுக்கும், உபசாதிகளுக்கும், மத, பிராந்திய, மொழி அடையாளங்களுக்கும் நம் ஜனநாயக அமைப்பில் சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது.
தேச ஒற்றுமைக்கு அபாயம்
அனைத்து தென்னிந்திய மாநிலங்களும் சேர்த்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மூன்று அல்லது நான்கு பெரிய வட இந்திய மாநிலங்கள் அனுப்பும் பிரதிநிதிகளின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கும் வகையில் நமது அரசியல் பூகோளம் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதனால் சில பெரிய வட இந்திய மாநிலங்களில் வாழும் வாக்காளர்களின் கவலைகளுக்கும், நலன்களுக்கும், ஆசைகளுக்கும், பாகுபாட்டு உணர்வுகளுக்கும் ஏற்ற வகையில் அரசியல் கணக்கிடும் கட்சிகள் தென்னிந்திய மாநிலங்களை அதிகம் பொருட்படுத்தத் தேவையில்லாத நிலை உருவாகியிருக்கிறது. இன்னும் சிறிது காலத்தில் செய்யப்படவிருக்கும் தொகுதி மறு வரையறை நிலைமையை இன்னும் மோசமாக்கும் அபாயம் இருக்கிறது. இது நம் கூட்டாட்சி அமைப்புக்கு மட்டுமின்றி, தேச ஒற்றுமைக்கே மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடும்.
பெரும் நிலப்பரப்புகளில் வாழும் மக்களின் அரசியல் தேர்வுகளைப் புறக்கணித்துவிட்டு கூட, ஒரு கட்சி அதிகாரத்திற்கு வர முடியும் என்பதுதான் நிலைமை. அதேபோல, குறிப்பிட்ட மதங்களைப் பின்பற்றும், சில மொழிகளைப் பேசும், சில சாதிகளைச் சார்ந்திருக்கும் குடிமக்களைக் கூட ஒரு அரசியல் கட்சி புறக்கணிக்க முடியும். நம் சமுதாயத்தின் சில பிரிவினரின் நலன்களை மட்டும் பேணினாலே அரசியல் பலன் கிடைக்கும் என்று அரசியல் கட்சிகள் நினைக்கவும்கூடும். மறு புறத்தில், சில பிரிவினரையும் பிராந்தியங்களையும் தவிர்த்துவிட்டாலும் கூட இந்த அமைப்பில் தண்டனை ஏதும் கிடைக்கப்போவதில்லை.
ஜனநாயகம் இனி மெல்லச் சாகும்
1960களிலும் 70களிலும் ராணுவம் அரசுகளைக் கைப்பற்றியதாலும், தேர்ந்தெடுக்கப் பட்ட சர்வாதிகாரிகள் அரசியலமைப்புச் சட்டங்களை ரத்து செய்ததாலும், அவசரநிலை பிரகடனங்களினாலும் ஜனநாயகங்கள் இறந்தன. திடீர் அதிரடி நடவடிக்கைகளால் அப்போது ஒரேயடியாக ஜனநாயங்களை அழித்து விட முடிந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இன்று, கண்ணுக்குப் புலப்படாத முறைகேடுகளால் ஜனநாயகத்தின் மூச்சடைக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு அறிவிக்காமல் சர்வ அதிகாரங்களையும் கையிலெடுத்துக்கொண்டு நான் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லையென தலைவர்களாலும், கட்சிகளாலும், குழுக்களாலும் சொல்ல முடிகிறது. அப்படிச் செய்ய இயலும்; ஜனநாயகத்தைக் காக்கும் நிறுவனங்களையும் கட்டுமானங்களையும் வலுவிழக்கச் செய்யும் இந்த வேலைதான் நம் நாட்டில் இன்று நடந்து கொண்டிருக்கிறது. புதிய தகவல் தொழில்நுட்பம் இந்தப் போக்கிற்குச் செய்யும் உதவி கொஞ்சநஞ்சமல்ல.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்களை நடத்துவதே ஜனநாயகம் என்று ஆக்கப்பட்டுள்ளது. உரையாடல், விவாதம், அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ளுதல், பலதரப் பட்ட கருத்துகளுக்கு செவி சாய்த்தல் ஆகியவற்றின் மூலம் ஆள்வதே ஜனநாயகம் என்கிற கருத்து இப்போது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மொத்த வாக்குகளில் சிறுபான்மை வாக்குகளைப் பெற்று, சட்ட மன்றங்களில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் கட்சிகள் தாம் மக்களின் அதிகாரபூர்வ ஆதரவைப் பெற்று விட்டதாகக் கூறிக் கொள்கின்றன. தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அடுத்த தேர்தல் வரை தாம் எதற்கும் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் இல்லையென்று கட்சிகள் நினைக்கின்றன. சட்டங்களுக்கான ஆலோசனைகள் சட்ட மன்றங்களில் விவாதிக்கப்படுவதில்லை. நம் மக்களுக்கு நீண்ட கால விளைவுகளை உண்டாக்கும் மசோதாக்கள் சபையில் அறிமுகப் படுத்தப் பட்டு, வாக்கெடுப்பில் ஒப்புதல் பெற்று சட்டங்களாகின்றன; ஆனால் இப்படி நிறைவேற்றப் பட்ட சட்டங்களை தனக்குத் தேவைப் படும்போது அரசுகள் தங்கள் நலனைக் கருத்தில் கொண்டு எவ்வித விவாதமும் இன்றி தயக்கமே இல்லாமல் உற்சாகமாக திரும்பப் பெற்றுக் கொள்கின்றன. ஊடகங்களுக்கோ அல்லது வேறு ஏதாவது குடிமைச் சமூக அமைப்புக்கோ தலைவர்கள் பதில் சொல்லத் தயாரில்லை.
செயலிழந்த சட்டமன்றங்கள் மறைமுக நிர்வாகிகளாய்….
நமது சட்ட மன்றங்கள் செயலிழந்து விட்டன. இப்போதெல்லாம் மக்கள் தம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில்லை; அவர்கள் முதலமைச்சர்களையும், பிரதமர்களையும்தான் தேர்ந்தெடுக்கின்றனர். தம் சட்டமியற்றும் பணியின் அடிப்படையில் வேட்பாளர்கள் வாக்கு கேட்பதில்லை. அடிப்படையில் நிர்வாகத் துறையின் கீழ் வரும் விஷயங்களைக் குறித்து அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளின் அடிப்படையில்தான் வாக்கு கேட்கிறார்கள். ஒரு விதத்தில் நமது சட்டமன்றங்கள், வெறும் நிர்வாக இயந்திரங்களாகிவிட்டன. இதுகுறித்து காத்திரமான ஆய்வு தேவை.
தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் சட்டமியற்றும் பணியின் மதிப்பு குறைக்கப்பட்டதால் நமது தேர்தல் முறை பாழ்படுத்தப்பட்டிருக்கிறது. சட்டமியற்றுவதிலும் அது தொடர்பான பணிகளிலும் ஈடுபாடே இல்லாதவர்கள் சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியில் ஆக்ரோஷமாக ஈடுபடுகிறார்கள். தேர்தலில் வெல்வதற்காக ஏராளமான நிதியையும் பிற செல்வங்களையும் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள். சட்டசபை உறுப்பினராவது அரசு நிர்வாகத்தின் உறுப்பினராவதற்கான தகுதியை ஏற்படுத்துகிறது என்பதுதான் இதற்குக் காரணம். எனவே, சட்ட மன்ற உறுப்பினராக வேண்டும் என்கிற ஆசை அடிப்படையில் அரசு நிர்வாகியாக வேண்டும் அல்லது அரசு நிர்வாகத்தில் செல்வாக்கு வேண்டும் என்கிற ஆசைதான். இப்படியாக, சட்டமன்ற உறுப்பினராவது நிதியாதாரத்திலும் பிற வகைகளிலும் பெரும் பலனக்கிறது. வசதி வாய்ப்புள்ள தனி நபர்களிடையே சட்டமன்றங்களுக்குச் செல்ல நடக்கும் ஆக்ரோஷமான போட்டிக்கு அடிப்படைக் காரணம் இதுதான்.
சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அரசு நிர்வாகத்தில் இடம்பெறக்கூடாது, ஓர் ஆண்டின் பெரும்பகுதியில் அவர்கள் சட்டமியற்றும் பணியில் மட்டும் ஈடுபட வேண்டும், அரசு நிர்வாகம் எடுக்கும் முடிவுகளின் மீது செல்வாக்கு செலுத்த முடியாது என்கிற ஒரு நிலைமையை கற்பனை செய்து பாருங்கள். அநேகமாக, ஒரு சில மரியாதைக்குரிய நபர்கள் தவிர, இன்றிருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்த தேர்தலில் வேட்பு மனு கூட தாக்கல் செய்யமாட்டார்கள். எம்.பி, அல்லது எம்.எல்.ஏ. ஆகும் முயற்சியில் கோடிக்கணக்கான ரூபாய்களை தேர்தல் பிரச்சாரத்திற்குச் செலவிட மாட்டார்கள். நமது சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான செலவு, நம்பமுடியாத அளவிற்கு மலிவாகிவிடும். நமது ஜனநாயகத்தின் இந்த அம்சம் குறித்தும் மறு பரிசீலனை தேவை.
கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் அபாயகரமான கவர்ச்சி
தற்போது அனைவருக்கும் வாக்குரிமை என்கிற அடிப்படையிலான தாராளவாத பலகட்சி ஜனநாயக மாடல் ஒன்று மாற்றாக வைக்கப்பட்டு தீவிரமாக பரப்பப்படுகிறது. இது முக்கியமாக சீனத்திலிருந்து வருகிறது. பல வளர்ந்து வரும் நாடுகளிலுள்ள, குறிப்பாக சீனத்தின் அரசியல் மற்றும் பொருளாதார இருப்பு அதிகமாகி வரும் நாடுகளிலுள்ள அரசியல் மேட்டுக் குடியினரிடையை இந்த மாடல் ஏற்புடையதாகி வருகிறது. அது முன்வைக்கும் கருத்து சுருக்கமாக இதுதான்: தாராளவாத ஜனநாயகங்களில் தேர்தல்களில் வெல்பவர்களுக்கு அரசுகளை நடத்துவதற்கும் பொது விவகாரங்களை மேலாண்மை செய்வதற்கும் தேவையான அனுபவமும், நிபுணத்துவமும் இருப்பதில்லை; தேர்தல்களில் குறைவானவர்களே வாக்களிக்கின்றனர்; பெரும்பாலானோருக்கு தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் குறித்து ஆழமான அதிருப்தி இருப்பதால் இந்தத் தேர்தல் முறையில் கிடைக்கும் முடிவுகள் கேள்விக்குரியவையாகின்றன; இதன் விளைவாக, வலுவான நிர்வாகத்தையும், அதை விட முக்கியமாக பொருளாதார வளர்ச்சியையும் மக்களுக்கு செழிப்பான வாழ்க்கையைக் கொடுக்கவும் இந்த ஜனநாயகங்களால் முடியவில்லை. சீனத்தில் நடப்பதுபோல் அரசை நடத்தும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவும் நியமிக்கப்படவும் வேண்டும் என இந்த மாற்றினை முன் வைப்பவர்கள் கூறுகின்றனர்.
பலகட்சி ஜனநாயகமும், பொருளாதார வளர்ச்சியும் உள்ளார்ந்து ஒத்துப்போவதில்லை என்று நிறுவ அவர்கள் கடும் முயற்சி செய்கின்றனர்; குறிப்பாக, ஏழை நாடுகளில் இதுதான் நிலை என்கிறார்கள். தத்தமது நாடுகளின் தேர்தல் முறைகளில் இருக்கும் ஊனங்களையும் தவறுகளையும் கண்டு விரக்தியடைந்திருக்கும் மூன்றாம் உலக நாடுகளின் மேட்டுக் குடிகள் பலருக்கு மேற்கூறிய மாடல் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். அந்த மாடலை முன் வைப்பவர்களைப் பொறுத்த வரையில் பேச்சுரிமை, நியாயமான நேர்மையான தேர்தலுக்கான வாக்குரிமை ஆகியவற்றைக் காட்டிலும், சாதிய, மத, கலாச்சார, தேசிய அடையாளங்களை நிலைநிறுத்துவதும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவது முக்கியமானது. கலாச்சார-தேசிய அடையாளங்களை நிலைநிறுத்தும் சாத்தியம், வலிமையான அரசைக் கட்டுவது, திறன்மிகு நிர்வாகம், விரைவான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்தல் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, நியாயமான பிரதிநிதித்துவம், அரசைப் பொறுப்பேற்கச் செய்தல், எதிர்ப்பினை வெளிப்படுத்தும் உரிமை, சமூகப் பன்மைத்துவத்தை வளர்த்தல் போன்றவை முக்கியமானவை அல்ல.
நம் தாராளவாத ஜனநாயகத்தின் குறைபாடுகளையும், தவறுகளையும் நாம் உடனடியாக சரி செய்யவில்லையெனில், கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் ஏதாவது ஒரு வடிவத்தின் மீது கவர்ச்சி ஏற்பட்டு இறுதியில் நம்மில் பெரும்பாலோரின் தேர்வாகவே ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. நமது அரசியல் அமைப்பின் ஜனநாயக சாரத்தை அழித்து விட்டு அதன் சடங்கு போன்ற தோற்றங்களையும், வடிவங்களையும் மட்டுமே வைத்திருப்பது நம் கவனத்திற்கே வராமல் போய்விடும்; அல்லது அதை சகித்துக்கொள்ளும் நிலையும் ஏற்படும். அக்கறையே இல்லாத மன நிலை, சகித்துக்கொள்வது என்று மாறி பின்னர் ஏற்றுக்கொள்வது என்றும், அதற்குப் பின் அதே விருப்பமான ஒன்று என்கிற இடத்திற்கு வருவதற்கு, அதிக காலமாகாது. ஒரு பத்தாண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குள் நம் அரசியல் தளத்தில் நம் கண்டிருக்கும் பெரும் மாற்றங்கள் நாம் இனியும் மெத்தனமாக இருக்கக்கூடாது என்று நம்மை உந்தித் தள்ள வேண்டும்.
எனவே, நமது ஜனநாயகத்தைக் குறித்து ஒரு முழுமையான விவாதம் இன்றைய அவசரத் தேவையாகி இருக்கிறது. அதற்கு இதை விடச் சிறந்த நேரம் இருக்கவே முடியாது. இது அவசரம் என்பது மிகையாகாது.
theaidem.com /ta-the-question-of-democracy-in-india/
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு