பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்முறை: நீதிபதி சந்துரு பரிந்துரைகள் - கிளம்பிய எதிர்ப்பும், ஆதரவும்!

விகடன் இணையதளம்

பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்முறை: நீதிபதி சந்துரு பரிந்துரைகள் - கிளம்பிய எதிர்ப்பும், ஆதரவும்!

"மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றியில் திலகம் அணிய தடை விதிக்க வேண்டும்" - நீதிபதி சந்துரு

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் அரசு பள்ளி மாணவனை, சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டினார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவர் விரிவாக ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்து முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அதில், 'கள்ளர் மறுசீரமைப்பு பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்றவற்றை நீக்கி, அரசு பள்ளி என அழைக்க அரசாணை வெளியிட வேண்டும்.

பள்ளி பெயரில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே, புதிய பள்ளி துவங்க அனுமதி அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு சாதி பெயர் இருந்தால், அதை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளும், பள்ளிக்கல்வி துறையின் கீழ் உடனடியாக கொண்டு வர வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் இடமாற்றம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட சாதி அதிகமாக உள்ள பகுதிகளில், அதே சமூகத்தை சேர்ந்தவர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக, மாவட்டக் கல்வி அலுவலராக, தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக்கூடாது. ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது, சமூக நீதி சார்ந்த, அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும். தலைமை ஆசிரியர்கள் பட்டியலின, பழங்குடியின மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஆய்வு செய்து, ஆண்டறிக்கை தயார் செய்ய வேண்டும். பள்ளி, கல்லுாரி, பல்கலை ஆசிரியர்களுக்கு நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்.

சமூக பிரச்னைகள், சாதிய பாகுபாடு, பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் தடுப்பு போன்றவை குறித்து ஆசிரியர்களுக்கு கட்டாயம் பயிற்சி தர வேண்டும். வருகை பதிவேட்டில் மாணவர்களின் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. ஆசிரியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாதியை குறிப்பிட்டு மாணவர்களை அழைக்கக்கூடாது. வகுப்பறையில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் பெயர்களை அறிவிக்கக்கூடாது. அவர்களின் சாதி விபரங்களை ரகசியமாக வைக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றியில் திலகம் அணிய தடை விதிக்க வேண்டும். சாதிய அடையாளத்தை குறிக்கும் வகையில் சைக்கிள்களில் வர்ணம் தீட்டக் கூடாது. மாணவர்கள் செல்போன் எடுத்து வர தடை விதிக்க வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கண்டிப்பாக அறநெறி வகுப்புகள் நடத்த வேண்டும். வட்டாரத்திற்கு ஒரு பயிற்சி பெற்ற ஆலோசகரை நியமிக்க வேண்டும்.

'மாணவர் மனசு' என்ற தலைப்பில், மாணவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க, புகார் பெட்டி வைக்க வேண்டும். அதை பள்ளி நல அலுவலர் வாரத்திற்கு ஒரு முறை திறந்து, அதில் வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் தெரிவிக்கும் மாணவர்கள் பெயரை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். பள்ளியில் சமூக நீதி மாணவர் படை உருவாக்க வேண்டும். இதில், அனைத்து சமுதாய மாணவர்களும் இடம்பெற வேண்டும். அவர்களுக்கு தனி சீருடை, பயிற்சி போன்றவை வழங்கப்பட வேண்டும். அனைத்து பள்ளி நிறுவனங்களையும், கல்வி அல்லாத பயன்பாட்டிற்கு அனுமதிக்க கூடாது. சாதி பிரச்னை அதிகம் உள்ள பகுதிகளில், அரசு சிறப்பு நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும். அப்பிரிவு சா தி பிரச்னை ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து, பிரச்னை ஏற்படுவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருபுறம் வரவேற்பும், மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

"முன்னாள் நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கையின் பரிந்துரைகள் சர்ச்சைக்குரியதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இருப்பதாவும் சொல்கிறார்" பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா. மேலும் அவர், "இந்த அறிக்கையை மாநில அரசு முழுவதுமாக நிராகரிக்க வேண்டும். ஹிஜாப் அணிய தடைவிதித்தால் அது தவறு, ஹிஜாப் அணிய அனுமதி வேண்டும் என்று கூறும் ஒரு குழு இன்று, இந்துப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துவரக் கூடாது, கைகளில் கயிறு கட்டக் கூடாது என்கிறது. எப்படி நெற்றியில் திலகம் வைக்கக் கூடாது என்று கூறலாம்... எனவே ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைக்கும் விதமாக இந்த அறிக்கை இருக்கிறது. ஏதோ உள்நோக்கத்துடன் இந்த அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு இதை ஏற்கக் கூடாது என்று மைய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது." என தெரிவித்துள்ளார்.

ஆனால், 'ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கையை வரவேற்பதாக' வி.சி.க சொல்கிறது. தொல். திருமாவளவன் இது தொடர்பாக, ``நீதிநாயகம் சந்துரு அவர்களின் தலைமையிலான குழு தமிழக அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் சமூப்பொறுப்புணர்வுடன், தொலைநோக்குப் பார்வையுடன், உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. சாதி அடிப்படையில் மாணவச் சமூகம் சீரழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்கிற நல்லெண்ணத்தோடு பரிந்துரைகளை வழங்கியுள்ள நீதிநாயகம் சந்துரு அவர்களுக்கு எமது பாராட்டுகள். தமிழ்நாடு அரசு அப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

விசிக பொதுச் செயலாளர் எழில் கரோலின் "சமூகத்திலேயே சாதி வேண்டாம் என சொல்கிறோம். ஆகவே பள்ளி, கல்லூரிகளிலும் இருக்க கூடாது. கயிறு கட்டுதல், திருநீறு அணிதல், சிலுவை போட்டுக்கொள்ளுதல் தேவையில்லை. வெளிநாடுகளில் இதுபோன்று யாரும் செய்வது இல்லை. அங்கு சாதியையும் இல்லை. இடஒதுக்கீட்டுக்கு பயன்படுத்துகிறோம். ஆனால் குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வி சமமான அங்கீகாரத்தை கொடுக்கிறது. சாதி கட்டமைப்பை எப்படி உடைக்க வேண்டும் என்றுதான் படிக்கும் போது கற்றுத்தர வேண்டும். அப்போது ஆணவ கொலைகளை தடுக்க முடியும். ஆண், பெண் பாகுபாடு இருக்காது. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். ஆகவே இதை விசிக வரவேற்கிறது" என்கிறார்.

பல்வேறு தரப்பிலும் இதற்கு ஆதரவு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தேனியில் ஊராட்சி குழு கூட்டத்தில் இந்த அறிக்கையினை துணைத்தலைவர் கிழித்தெறிந்திருக்கிறார். மறுபக்கம் இது தேவையான ஒன்று என்ற ஆதரவு குரல்களும் எழுந்திருக்கிறது.

இதனிடையே, தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுவாவனது ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி, ``இந்துக்கள் அணியும் கோயில் ரட்சை, அதாவது கயிறு மற்றும் நெற்றி திலகம் ஆகியவற்றை தடை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கமிட்டி தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாக இணையதளத்தில் செய்தி பகிரப்படுகிறது. இது பொய்யான தகவல் என உண்மை கண்டறியும் குழு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக நீதியரசர் சந்துருவுடன் நேரடியாக பேசிய குழு அவரின் விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நீதியரசர் சந்துரு, ``ஒரு நபர் கமிட்டியின் நோக்கமே மாணவர்களிடையே சாதிய வேறுபாடுகளை களைவதுதான். சாதிய கயறுகளைப் போலவே சாதிய குறியீடாக சிலர் வண்ணத் திலகங்களை பயன்படுத்தக் கூடும் என்பதே எமது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொட்டு, திருநீறு, நாமம், குங்குமம் சந்தனப்பொட்டு முதலிய ஆன்மீக அடையாளங்களை தடை செய்ய அறிக்கை பரிந்துரைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

- விகடன் இணையதளம்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு