வறண்டது வீராணம்! அலட்சியம் காட்டும் அரசு!

அறம் இணைய இதழ்

வறண்டது வீராணம்! அலட்சியம் காட்டும் அரசு!

வீராணம் ஏரி, கடலூர் மாவட்ட காவேரி டெல்டா விவசாயிகளின் கருவூலமாகும். சென்னைக்கு தண்ணீர் தரும் தாய்மடியாகும். கடல் போல காட்சியளிக்கும் இந்த ஏரி, இன்றைக்கு  தண்ணீர் இன்றி, வறண்டு கிடக்கிறது! மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் நீர் ஆதாரம் நிர்மூலம் ஆனதற்கான காரணங்கள் என்ன?

வீராணம் ஏரி என்பது தென்னாற்காடு மாவட்டத்தின் பிரதான நீர் ஆதாரமாகும். கடலூர் மாவட்டத்தில் நாட்டார் மங்களத்தில்  உள்ள வீராணம் ஏரி,  காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார் கோவில், சிதம்பரம், புவனகிரி, சேத்தியாதோப்பு பகுதிகளில் உள்ள பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாகத் திகழ்கிறது.

அதோடு, இந்த ஏரி சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக சென்னை மக்களின் நான்கில் ஒரு பகுதி தேவையை இந்த ஏரித் தண்ணீர் தான் நிறைவேற்றுகிறது.

ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பெருமை கொண்ட, இந்த பரந்து, விரிந்த வீராணம்

ஏரிக் கரையின் மொத்த நீளம் 16 கி.மீ.

ஏரியின் மொத்த சுற்றளவு 48 கி.மீ.

ஏரியின்  அகலம் 5.6 கி.மீ.

இந்த ஏரியின் நீர்மட்ட அளவு 47.50 அடியாகும்.

ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1,465 மில்லியன் (1.465 டி.எம்.சி) கன அடியாகும்.

இந்த ஏரியின் மொத்த நீர்பிடிப் பரப்பு 165 சதுர மைல்களாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயந்திரங்கள் உதவியின்றி  மனித உழைப்பினால் மட்டுமே கட்டி எழுப்பப்பட்ட பிரம்மாண்ட ஏரி, உலகிலேயே இது தான்!

சோழ மன்னன் ராஜாதித்தனின் விருப்பப்படி, ஏரிக்கு அவரது தந்தை பெயரில் ‘வீர நாராயணன் ஏரி’ என்றும் பெயரிடப்பட்ட இந்த ஏரி, காலப் போக்கில் பெயர் மருவி வீராணம் ஏரியாகிவிட்டது. கல்கியின் பொன்னியின் செல்வனில் இந்த வீராணம் ஏரியின் எழிலை ரசித்தவாறு, வந்தியதேவன் குதிரையில் வருவதைச் சொல்லி இருப்பார். திரைப்படம் பார்த்தவர்களும் மறந்திருக்க முடியாது.

காவிரி கொள்ளிடத்தின் கீழணையிலிருந்து வடவாறு வழியாக இந்த அணைக்கு நீர் வருகிறது, மற்றும் ஏராளமான ஆறுகள் ஏரிக்குள் பாய்ந்து வருகின்றன. மற்றொருபுறம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 188 கி.மீ பயணித்து, கல்லணைக்கு வந்து சேர்ந்து, கல்லணையில் இருந்து கொள்ளிடத்தின் வழியாக 81 கி.மீ பயணித்து, கீழணையை வந்தடைந்து, அங்கு தேக்கப்பட்டு வடவாறு வழியாக 22 கி.மீ பயணித்து வீராணம் ஏரிக்கு வந்து சேரும் வகையில் அமைந்திருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு கூட மேட்டூரில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இரண்டு மூன்று நாட்களில் வீராணம் வந்து சேர்ந்தது. ஆனால், தற்போதோ, மாதக்கணக்கில் காத்திருக்கும் அவலம். அப்படியும் வராமல் போவதும் நடக்கின்றது. இந்த லட்சணத்தில் தான் நீர்வழிப் பாதைகளின் பராமரிப்பை இங்குள்ள ஆட்சியாளர்கள் கையாள்கிறார்கள்!

ஏரியின் கிழக்கு கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்கு கரையில் 6 மதகுகள் மூலமாகவும் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியின் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் 85,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன! இப்படிப்பட்ட ஏரியைத் தான் தற்போது காலி மைதானமாக்கியுள்ளனர்.

முன்பெல்லாம் இந்த ஏரி  ஆண்டுக்கு ஏழெட்டு முறை நிரம்பியது. இதனால், வீராணம் ஏரியை நம்பியுள்ள விளை நிலங்களில் முன்பு மூன்று போகமும் பயிரிடப்பட்டது. காலப் போக்கில் அது இரண்டு போகமாகி, ஒரு போகமாகி, தற்போது அதுவும் சிரமமாகியுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால்கள் பல்லாண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்து போயுள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். மழை காலங்களில் நீர் பெருக்கெடுத்து ஏரிக்குள் நீர் வரும் போது, அங்கே தூர்வாரப்படாமல் குவிந்திருக்கும் வண்டல் மண்ணால், போதுமான தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. இதனால், வெளியேற்றப்படும் தண்ணீர் பெரும் பயிர்சேதங்களை ஏற்படுவதோடு, மக்கள் வாழும் குடியிருப்புகளையும் வெள்ளத்தில் மூழ்கடிக்கச் செய்து, வீணாகச் சென்று கடலில் கலக்கின்றது! இதனால் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி, வெள்ளம் இரண்டிலுமே கடலூர் மாவட்டம் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இழப்பிற்கு மேல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் துவண்டு போய்விட்டனர். விவசாயிகளில் கடனாளியாகாதவர்கள் அபூர்வம்!

இந்த வண்டல் மண்ணை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளை அனுமதித்தால் அது விவசாயிகளுக்கு மட்டும் பயனில்லை. அரசுக்கும் வருமானமாகும். ஆனால், அவ்வப்போது வீராணம் ஏரியை தூர் வாருவதாக போடப்பட்ட பல கோடி பட்ஜெட்டுகளால் எந்தப் பெரிய பலன்களையும் ஏறி பெறவில்லை. தற்போதும் கூட சுமார் 270 கோடிகளுக்கு தூர்வார பட்ஜெட் போட்டுள்ளனர். பொதுவாக இது போன்ற திட்டங்களில் உரிய பலன்கள் கிடைக்காமல் போவதோடு,  காண்டிராக்டர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் பைகளே நிரம்பி வருகின்றன! இந்த துரோகம் மன்னிக்க முடியாததாகும்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வீராணம் வறளத் தொடங்கியதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் அரசுக்கு தூர்வாற அனுமதிக்கும்படி எழுதிய கடிதத்திற்கு இன்று வரை பதில் இல்லை. தேவையற்ற மணல் குவாரிகளுக்கு உடனடி அனுமதி தரும் ஆட்சியாளர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஆண்டுக்கணக்கில், மாதக் கணக்கில் அலட்சியப்படுத்தி வருவது தான் கொடுமையிலும் கொடுமை.

ஒரு காலத்தில் தென்னாற்காடு மாவட்டத்தின் பெரும் சிறப்பாக பார்க்கப்பட்ட ஆர்டிசீயம் ஊற்றுகளால் சிறிதளவு மண்ணைத் தோண்டினாலே தண்ணீர் தானாக சுரந்து, தேனாக இனிக்கும். தற்பொழுதோ, அவை மாயமாகிவிட்டன! எப்போது நெய்வேலி சுரங்கம் நிறுவப்பட்டதோ அப்போது முதல் இவை காணாமல் போயின எனலாம். சுரங்கத்திற்காக நூறு அடிக்கு மேல் மண்ணை வெட்டி எடுப்பதனால், நீர்கள் அனைத்தும் அதை நோக்கி சென்று விட்டது. ஆக விவசாயத்திற்கு பயன்பட்ட நீர்நிலைகள், ஊற்றுக்கள், ஆறு, குளங்கள், வீராணம் ஏரி அனைத்தையும் நாசமாக்கியது நெய்வேலி சுரங்கம். இதுமட்டுமல்ல, பெரு மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமாகவும் இந்தச் சுரங்கமே காரணமாகும். அத்தகைய கேடுகள் விளைவித்த நெய்வேலி சுரங்கத்தை தற்போது விரிவாக்கம் செய்து தென் ஆற்காடு மாவட்டத்தை பாலைவனமாக்கி கொண்டுள்ளனர்.

வறண்டு போன ஏரியில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்!

இதனால், தற்போதெல்லாம் இந்த ஏரி வருடத்தின் பெரும்பாலான நாட்களில் வறண்டே காணப்படுகிறது. கோடை காலத்திலோ முற்றிலும் வறண்டு விடுகிறது. இதனால் ஏரிலிருந்து நேரடியாக தண்ணீர் எடுக்க முடியாத நிலையில், அதிகாரிகளால் தண்ணீரை சேமிப்பதற்கான திட்டத்தில், அந்த பகுதியை சுற்றி 45 அடி ஆழ்துளை கிணறு  உருவாக்கப்பட்டு, நிலத்தடி நீரை குழாய் வழியாக சென்னைக்கு  235 கிமீ தூரத்திற்கு குடிநீா் எடுத்து வரப்பட்டது. அது படிப்படியாகக் குறைந்து தற்போது அதையும் செய்ய முடியாத நிலை அவல நிலைக்கு ஏரியை கொண்டு வந்து விட்டனர் ஆட்சியாளர்கள்!

தினமும் சென்னைக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் தந்து வந்த ஏரியை எவ்வளவு கண்ணும் கருத்துமாக காத்திருக்க வேண்டும்? விவசாயத்திற்கு ஆதாரமான நீர் ஆதாரங்களைக் காப்பதில் கடுகளவும் அக்கறையற்று விவசாயிகளின் கோரிக்கைகள், நீர்வள நிபுணர்கள், வல்லுனர்களின் ஆலோசனைகள் எதையும் பொருட்படுத்தாமல் ஏரியைக் காயப் போடுகின்றனர்! இதைப் பார்ப்பவர்களின் மனம் பதைக்கிறது. வறண்டு கிடப்பது ஏரி மட்டுமல்ல, நம் வாழ்க்கையும் தானே!

(சாவித்திரி கண்ணன்)

அறம் இணைய இதழ்

aramonline.in /17909/veeranam-lake-dried/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு