அதானி உள்பட 12 நிறுவனங்களுக்கு விருப்பப்படி நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கிய மத்திய அரசு

ஸ்ரீகிரிஷ் ஜலிஹால்

அதானி உள்பட 12 நிறுவனங்களுக்கு விருப்பப்படி நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கிய மத்திய அரசு

மத்திய பிரதேச மாநிலம், சிங்கிராலி வனப்பகுதியில் உள்ள 250 மில்லியன் டன் எடை கொண்ட நிலக்கரி சுரங்கத்தை கடந்த 2022, ஆகஸ்ட் 17ம் தேதி அதானி குழுமத்துக்கு மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் ஒதுக்கியது.

சிங்கிராலி வனப்பகுதியில் உள்ள கோந்த்பஹைலே உஜ்ஹேனி கிழக்கு நிலக்கரி மண்டலத்தை ஏலம் கேட்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. அதானி குழுமம் மட்டும் ஏலம் கேட்டதால், வெற்றிகரமான ஏலதாரர் என அறிவித்து, அந்த குழுமத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது.

விதிகளில் திருத்தம்

இது தொடர்பான ஆவணங்களை “ தி ரிப்போர்டர்ஸ் கலெக்ட்டிவ்” ஆய்வு செய்தது. அதில் நிலக்கரி ஒதுக்கீடு விதிகளை மத்திய அரசு சத்தமில்லாமல் திருத்தி அமைத்ததால், ஏலம் எடுக்க எந்த நிறுவனங்களும் வராதபோது, எளிதாக அந்த நிலக்கரி சுரங்கங்களை அதானி குழுமத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது எனத் தெரியவந்தது.

நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும்போது, போட்டியாளர்கள் யாரும் வராமல் ஒரு நிறுவனம் மட்டும் ஏலம் எடுக்க வந்திருந்தால், மத்திய அரசு அந்த நிலக்கரி சுரங்கத்தை தனி ஏலதாரருக்கு ஒதுக்க போதுமான அதிகாரத்தை கொண்டுள்ளது என்று அந்த ஆவணங்களில் இருப்பது கண்டறியப்பட்டது.

நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கு புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்திய நரேந்திர மோடி அரசின் வெளிப்படைத்தன்மையின் உறுதியான கூற்றுகளில் இருந்து விதிகள் முரண்படுகின்றன.

2014ம் ஆண்டு , நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்கில்,உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, நிலக்கரி சுரங்கங்களை தன்விருப்பப்படி, தன்னிச்சையாக ஒதுக்குவதற்கு தடை விதித்து 204 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவையே மத்திய அரசின் திருத்த விதிகள் குறைத்து மதிப்பிட்டுள்ளன.

12 நிறுவனங்கள்

மத்திய அரசு தன்விருப்பப்படி நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அதானி குழுமம் மட்டும் பயன் அடையவில்லை. ஏலம் எடுக்க நிறுவனங்கள் வராததால், 12 தனியார் நிறுவனங்களுக்கு இந்த நிலக்கரி சுரங்கங்களை அரசு ஒதுக்கியுள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்தது வேதாந்தா குழுமம்,ஜேஎஸ்டபிள்யு, பிர்லா கார்ப்பரேஷன் உள்ளிட்ட சில நிறவனங்கள் அடங்கும்.

ரிப்போர்ட்ஸ் கலெக்டிவ் நடத்திய புலன்விசாரணையில், மத்தியப் பிரதேசத்தில் பாதுகாப்பு மிகுந்த வனப்பகுதியில் எவ்வாறு நிலக்கரி சுரங்கத்தை ஏலம் விட மத்திய மின்துறை லாபி செய்தது என்பது தெரியவந்துள்ளது.

இந்த லாபி குழுவில் அதானி குழுமம் ஒரு உறுப்பினராக இருந்து இரு நிலக்கரி சுரங்கங்களில் ஒன்றுக்கு தனிநபராக ஏலத்துக்கு விண்ணப்பித்து, ஒதுக்கீடு பெற்றது.

ஒரே ஒரு ஏலதாரர் மட்டுமே நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு வரும்போது, தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எவ்வாறு தன் விருப்பப்படி ஒதுக்கீட்டு செய்கிறது என்பதை இந்தத் தொடரின் பகுதி இரண்டு வெளிப்படுத்துகிறது.

அதானி குழுமத்தின் பதில்

இது தொடர்பாக ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் இதழ், அதானி குழுமத்துக்கு மின்அஞ்சல் மூலம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு அதானி குழுமத்தின் செய்தித்தொடர்பாளர் மின்அஞ்சலில் அளித்த பதிலில் “ மத்திய நிலக்கரி அமைச்சகம் நடத்திய வர்தத்கரீதியான நிலக்கரி சுரங்க ஏலத்தில், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நிறுவனங்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்பட்டது.

சுரங்க ஏல நடைமுறை அனைத்தும் வெளிப்படையான ஏல நடைமுறையில் நடந்தது. போட்டியில் பங்கேற்பாளர்களைத் தடுக்க எந்தவிதமான நிதி மற்றும் தொழில்நுட்ப தகுதிகளையும் வகுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

வேதாந்தா குழுமம் என்ன சொல்கிறது

வேதாந்தா அலுமினியம் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ அரசின் நிபந்தனைகளுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டு நடக்கும் ஏலத்தில் நாங்கள் நேர்மையாக செயல்படுகிறோம். இந்த ஏலத்தில் அதிகமான அனுபவம் மற்றும் வர்த்தகரீதியாக செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு ஏல வாய்ப்பு வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்

அதிகாரமிக்க செயலர்கள் குழு

வர்த்தகரீதியாக நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்யும் முறை 2020ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி அரசால் கொண்டுவரப்பட்டது. இதன்படி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தன்விருப்பப்படி ஒதுக்க, 4 அரசுத்துறைகளின் செயலாளர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்த 4 துறைகளின் செயலர்கள் சேர்ந்த குழுவை, “அதிகாரமிக்க செயலர்கள் கமிட்டி” என்று அழைக்கப்படுகிறது. இந்த குழுதான், தனி ஏலதாரராக ஒருநிறுவனம் வந்துவிட்டால் சுரங்கத்தை யாருக்கு ஒதுக்கீடு செய்வது, செய்யக்கூடாது என்பதை முடிவு செய்யும்.

அதானி குழுமம் விண்ணப்பம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிங்கராலி நிலக்கரி பகுதியை அதானி குழுமம் இருமுறை ஏலத்துக்கு விண்ணப்பித்தது, 2021, மார்ச் மாதமும் 2021, செப்டம்பர் மாதத்திலும் விண்ணப்பித்தது. முதல் சம்பவத்தில் நிலக்கரி சுரங்க ஏலத்துக்கு ஒரு நிறுவனம் மட்டும் விண்ணிப்பித்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நிறுவனத்தின் அடையாளம் வெளியிடப்படவில்லை. ஆனால் 2வதுமுறையாக அதானி குழுமம் மட்டும் விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து அதிகாரமிக்க செயலர்கள் குழுவுக்கு அதானி குழும விண்ணப்பத்தை மத்திய அரசு பரிந்துரைத்து, அதானி குழுமத்துக்கு ஒதுக்கலாமா என்று முடிவெடுக்கக் கோரியது.

ஆனால், மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மற்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தில் “ மத்திய அரசு தன் விருப்பப்படி நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடாமல் தனியாருக்கு ஒதுக்குவது 2014ம் ஆண்டு முந்தைய முன்ஒதுக்கீடு முறையின் நவீன முறை. இது தன்னிச்சையானது” எனத் தெரிவித்தது.

தனியாருக்கு விற்க அவசியமில்லை

லக்னோவில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் பிரியான்ஷூ குப்தா கூறுகையில் “ மத்திய அரசு தன்விருப்பப்படி நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்யும் முறை 1990களில் தொடங்கியபோது, இந்த நாட்டின் மின்உற்பத்தியை அதிகப்படுத்த தேவை ஏற்பட்டது. இன்று சூழல் முற்றிலும் வேறுபட்டது. இப்போது நாம் உபரி நிலக்கரி காலகட்டத்தில் உள்ளோம்.

போதிய போட்டியை ஈர்க்க முடியவில்லை என்பதற்காக தனியார் நிறுவனங்களுக்குத் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. எந்த விலை கிடைத்தாலும், நாட்டின் வளங்களை மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் விற்கிறது என்பதைத்தான் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக ஆட்சியை வழங்குவோம் என்று முழக்கமிட்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்தது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 204 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்து 2014, ஆகஸ்டில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நிலக்கரி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக, ஏல முறையின்றி, ஆய்வுக்குழுவை மோடிஅரசு அமைத்தது.

நிலக்கரி சுரங்க ஏலத்துக்கு புதிய சட்டம்

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட 204 நிலக்கரி சுரங்கங்களை மறு ஏலம் விடுவதற்காக புதிய சட்டங்களை 2015ம் ஆண்டு மோடி அரசு வகுத்தது. தனிச்சட்டம் மூலம் 204 நிலக்கரி சுரங்கங்களும் ஏலம் விடப்பட்டன. சில சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கும், சிலவற்றை அரசுக்கும் ஒதுக்கீடு செய்தது.

இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று மத்திய அரசு 2015ம் ஆண்டு தெரிவித்தது. பல ஆண்டுகளாக, தனியார் நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கங்களை குறைந்த விலையில் ஏலம் எடுப்பதை எளிதாக்கும் வகையில் ஏல விதிமுறைகளை அரசாங்கம் ஒதுக்கி வைத்தது. நாட்டில் நிலக்கரி உற்பத்திக்கான உபரித் திறன் இருப்பதாக அதிகாரிகள் கூறினாலும் அரசு தொடர்ந்து இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறது

ஏல ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை தேவை எனக் கூறிய ஐந்து ஆண்டுகளுக்குள், மோடி அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு மூலம் தனியார் நிறுவனங்களுக்கு இணையான ஒதுக்கீடு வழியை உருவாக்கியது.

2020ம் ஆண்டு அதிகாரமிக்க செயலர்கள் குழுவை மத்திய அரசு உருவாக்கியது.மத்திய அரசின் 4 துறைகளின் செயலர்கள் கொண்ட இந்த குழுதான், எந்த நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்யலாம், தனிஒருவர் ஏலதாரராக வந்தால் அவருக்கு சுரங்கத்தை ஒதுக்கீடு செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு எடுக்கும்.

இந்த முடிவுக்குப்பின் அதானி குழுமம், மத்தியப்பிரதேசத்தில் உள்ள சிங்கராலி வனப்பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்க ஏலத்தில் பங்கேற்றது. வேறு எந்த நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்காததால், சிங்கராலி வனப்பகுதியில் உள்ள மாரா மஹான் நிலக்கரி சுரங்கத்தை அதானி குழு பெறுவதற்கு லாபியில் ஈடுபட்டது.

அரசுக்கு வருவாய் இழப்பு

எரிசக்தி மற்றும் சுத்தமான காற்றுக்கான ஆய்வு மையத்தின் இயக்குநர் நந்திகேஷ் சிவலிங்கம் கூறுகையில் “ விலை குறித்து புரிதல் இல்லாமல், அறியாமல், நிலக்கரி சுரங்கங்களை வழங்கியதால், 2014ல் நடந்த நிலக்கரி ஊழல் முழுக்க முழுக்க, அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. நிலக்கரியை வெளிப்படையான முறையில் ஏலம் விட வேண்டும் என்ற எண்ணம் என்னவாயிற்று? அந்த எண்ணம் மெல்ல கலைவதைப் பார்க்கிறோம்.

நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுக்க யாரும் முன்வராவிட்டால் அரசு சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும், அதற்கான தேவை ஏற்படும்போது, யார் முதலில் வருகிறார்களோ, நல்லவிலை தரும் நிறுவனத்துக்குவழங்கலாம். ஆண்டுக்கு ஏறக்குறைய 800 முதல் 900 மில்லியன் டன் நிலக்கரி நமக்குத் தேவை.

மத்திய அரசு 2 கோடி டன் நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்தால், அதற்கு தேவை ஏதும் இருக்காது. நிலக்கரியில் 85 சதவீதத்தை மின் உற்பத்திக்குதான் பயன்படுகின்றன, 75 சதவீத மின்உற்பத்திநிலக்கரியில் இருந்து எடுக்கப்படுகிறது. ” எனத் தெரிவித்தார்

மோடி அரசு ஆட்சிக்கு வந்தபின், முதல்முறையாக நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விட்டது. அப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் எடுப்பதில் கடும்போட்டியிட்டன. வெளிப்படைத்தன்மையில் கவனம்

அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊடகங்களுக்கு 2015ம் ஆண்டு அளித்த பேட்டியில் “ இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில், குறிப்பாக நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகிறோம். நம்பிக்கையை மேம்படுத்துகிறோம், இதன் மூலம் முதலீட்டை ஈர்ப்பதற்கும், உயர்ந்த பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமாக அமையும்” எனத் தெரிவித்தார்.

ஆனால் அடுத்தடுத்த சுற்று ஏலத்தில், போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அதன் விளைவாக, அரசுக்கு கிடைத்த வருமானமும் குறைந்தது. முதல் 5 சுற்று ஏலத்தில் 71 நிலக்கரி மண்டலத்தை மத்திய அரசு ஏலம்விட்டதில் 31 சுரங்கங்கள் மட்டுமே ஏலம் போயின.

வணிகரீதியிலான நிலக்கரி சுரங்கங்கள்

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, வணீகரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் கோவிட்-19 போன்று தேசத்துக்கு பெரிய அழிவை ஏற்படுத்தியது. இந்த வர்த்தகரீதியிலான நிலக்கரி சுரங்கம் வெட்டிஎடுத்தல் முறையை மோடி அரசு கொண்டுவருவதற்குமுன், மின்உற்பத்தி மற்றும், அனல்மின் நிலையத்தை நடத்தும் நிறுவனங்கள் அந்தந்த தேவைக்கு மட்டுமே ஏலம் எடுக்க தகுதி பெற்றிருந்தன. ஆனால், வர்த்தகரீதியான நிலக்கரி வெட்டி எடுத்தலில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மோடி அரசு தளர்த்தியது.

இந்தத் திட்டத்தின்படி, நிலக்கரி சுரங்கத்துக்கு அதிக ஏலத்தொகை கொடுக்க விரும்பும் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்படும். நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் பெறும் தனியார் நிறுவனங்கள் வருமானத்தில் ஒருபகுதியை அந்தந்த மாநில அரசுக்கு ஒதுக்கும் முறையும் கொண்டுவரப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை மேலும் எளிதாக்க, ஏலத் தொகைக்கான அடிப்படை விலையை மத்திய அரசு மேலும் குறைத்து, நிறுவனங்கள் பங்கேற்பை எளிதாக்கியது முதல் சுற்று ஏலத்தில் அறிவித்தது.

இந்த ஏலம் இரு நிலைகளில் நடத்தப்பட்டது, ஒன்று தகுதிச்சுற்று, இரண்டாவது ஒரு நிறுவனத்துக்கு நிதிவசதி போதுமான அளவு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதாகும்.

தொழில்நுட்ப சுற்றில் குறைந்தபட்சம் இரு நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும். 2 நிறுவனங்களுக்கு குறைவாக யாரேனும் பங்கேற்றால், ஏலம் ரத்து செய்யப்படும். முதல் சுற்றில் பங்கேற்ற நிறுவனங்கள்தான் 2வது சுற்றுக்குள் செல்ல முடியும்.

அங்கு ஒருநிறுவனம் மட்டுமே பங்கேற்றிருந்தால், அதன் கோரிக்கை ஏற்கப்படும். அதிகாரமிக்க குழு, நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்வதா வேண்டாமா என்று முடிவு செய்யும்.

இதன்படி 2022, ஆகஸ்ட் 17ம் தேதி, அதிகாரமிக்க குழுவினர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோந்த்பஹேரா உஜ்ஹேனி கிழக்கு நிலக்கரி சுரங்கத்தை, அதானி குழுமத்தின் துணை நிறுவனாமான எம்.பி. நேச்சுரல் சிரோசர்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவன்துக்கு ஒதுக்கியது.

எந்தவிதமான போட்டியும் இன்றி குறைந்தபட்சம் 5 சதவீத வருமானப் பகிர்வுடன் அதானி குழுமம் நிலக்கரி சுரங்கத்தைப் பெற்றது. இதன்பின் டோக்கிஸ்த்2 என்ற நிலக்கரி சுரங்கம், டுவென்டி பர்ஸ்ட் சென்சுரி சுரங்க நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த3 ஆண்டுகளில் இதுபோன்று 12 சுரங்கங்களை மத்திய அரசு தனியாருக்கு வழங்கியுள்ளது.

முதலில் பரிசோதனைக் குழுவினர் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்தார்கள், இப்போது, 4 துறைகளின் செயலர்கள் கொண்ட அதிகாரமிக்க குழுவினர் ஒதுக்கீடு செய்கிறார்கள். பெயர்தான் மாற்றம் வேறு மாற்றம் ஏதும் இல்லை என்று லக்னோ ஐஐஎம் குப்தா, “தி கலெக்டிவிடம்” தெரிவித்தார்

நிலக்கரி 2030 தொலைநோக்குத் திட்டம்

மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்ட நிலக்கரி 2030 தொலை நோக்குத் திட்டத்தில், 2017ம் ஆண்டுவரை மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிலக்கரி சுரங்கம் என்பது, இந்தியாவுக்கு 2030ம் ஆண்டுவரை மின்தேவையை நிறைவு செய்யும் என்று தெரிவித்திருந்தது.

ஆனால், கொரோனா பெருந்தொற்று, உலகப் பொருளாதார மந்தநிலை ஆகியவை மின்தேவையின் அளவை அதிகரித்துள்ளது. இந்தியாவின் மின்தேவை ஆண்டுக்கு 6% அதிகரிக்கும் என்று ஆதித்யா லோலா, சிவலிங்கம், குப்தா, சுனில் தையா ஆகியோரின் ஆய்வு கூறுகிறது.

ஆனால் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் மின்தேவையால், 2030ம் ஆண்டுக்குள் 1200 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், போதுமான மின்உற்பத்திக்காக 2,200 மில்லியன் டன் நிலக்கரி கொள்ளவு கொண்ட சுரங்கங்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசு தெரிவிக்கிறது.

எழுத்து: ஸ்ரீகிரிஷ் ஜலிஹால்

ஆதாரம்: ரிப்போர்டர்ஸ் கலெக்ட்டிவ்

தமிழலில்: ப்ரிதிவிராஜ்

savukkuonline.com /news/Centralgovernmentallottedcoalminesatwillto12companiesincludingAdani/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு