கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்த மாதிரி.. இலங்கையிடமிருந்து இந்தியா வாங்கிய வெட்ஜ் பேங்க் பற்றி தெரியுமா?

ஒன் இந்தியா தமிழ்

கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்த மாதிரி.. இலங்கையிடமிருந்து இந்தியா வாங்கிய வெட்ஜ் பேங்க் பற்றி தெரியுமா?

50 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னார் வளைகுடாவின் தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவு, இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. கச்சத்தீவு விவகாரத்தை தற்போதைய தேர்தலில் திமுக, காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த பாஜக முயற்சிக்கப் போய் புதிய புதிய விவாதங்கள் கிளம்பி இருக்கின்றன. இதில் ஒன்றுதான் 'வெட்ஜ் பேங்க்' என்பதும்.

1974-ம் ஆண்டு இலங்கையில் பாகிஸ்தான் விமானப் படை தளம் அமைக்க முயற்சித்தது. இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி சிறிமாவோ பண்டாரநாயகேவும் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்பட்டார். இது இந்தியாவுக்கு பேராபத்து என்பதால் பிரதமராக இருந்த இந்திரா காந்தி களமிறங்கினார். இலங்கையில் பாகிஸ்தான் விமான படை தளம் அமைப்பதைத் தடுக்கவே அப்போது இலங்கைக்கு தமிழ்நாட்டின் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது என்பதுதான் 50 ஆண்டுகாலமாக பேசப்பட்டு வரும் வரலாற்றின் சாராம்சம்.

கச்சத்தீவு - தமிழ்நாட்டு எதிர்ப்பு: கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பேசுபொருளாக இருந்தது. தமிழ்நாட்டின் திமுக எம்பிக்கள் 1960-களிலேயே கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் பேசினர். கச்சத்தீவு குறித்த ஆவணங்களை ஒழுங்குபடுத்தி வாதங்களுக்கு வலுசேர்த்தவர் முதல்வராக இருந்த கருணாநிதி. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது தமிழ்நாட்டின் முதல்வரான கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கச்சத்தீவு உரிமை ஒப்பந்தம்: இதன்பின்னரே 1976ல் கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்களுக்கான மீன்பிடி உரிமை உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம் உருவானது. கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்கள் நடமாடவும் வலைகளை உலர்த்தவும் அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்கும் உரிமையும் உறுதியானது.

பாஜகவின் திடீர் பாசம்: தற்போதைய லோக்சபா தேர்தலில் திடீரென பாஜக கச்சத்தீவை பேச வைக்கிறது. கச்சத்தீவை தாரைவார்த்தது காங்கிரஸும் திமுகவும்தான் என பழைய பல்லவியைப் பேசி தமிழ்நாட்டு மீனவர்கள் வாக்குகளை அறுவடை செய்ய முடியுமா? என நூல்விட்டுப் பார்க்கிறது. ஆனால் தற்போது கச்சத்தீவு விவகாரத்தின் போது இதுவரை பேசப்படாத வெட்ஜ் பேங்க் தீவு பற்றியும் பேசப்படுகிறது.

இலங்கையிடம் இருந்து பெறப்பட்ட வெட்ஜ் பேங்க்: தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு அருகே இருப்பது வெட்ஜ் பேங்க் எனப்படும் மணல் திட்டு தீவு. இது இலங்கைக்கு சொந்தமானதாக இருந்தது. கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கக் கூடியது. வங்க கடலும் அரபிக் கடலும் இந்திய பெருங்கடலும் சங்கமிக்கும் மணல் திட்டு தீவு பகுதி. இதனால் இயற்கை வளம் கொட்டிக் கிடக்கக் கூடிய தீவு. இத்தீவை இலங்கையிடம் இந்தியா பெற்றது 1970களில். அப்படிச் செய்தவரும் இந்திரா காந்தி அம்மையார்தான். அதுவும் கச்சத்தீவு கொடுக்கப்பட்ட காலத்தில்தான் வெட்ஜ் பேங்க் தீவையும் இலங்கையிடம் இந்தியா பெற்றது. கச்சத்தீவில், தமிழ்நாட்டு தமிழர்களுக்கான உரிமையை நிலை நிறுத்தக் கூடிய ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் வெட்ஜ் பேங்க் தீவுக்கும் இலங்கை நாட்டவருக்கு எந்த தொடர்புமே இல்லை; இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கப்பட்டதாகவே ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இருந்த போதும் கச்சத்தீவுக்கு பதில் வெட்ஜ் பேங்க் என்பதாகவே இப்போது பேசப்பட்டும் வருகிறது.

வெட்ஜ் பேங்க்: அதாவது கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அம்மையார்- காங்கிரஸ் கொடுத்ததே, வெட்ஜ் பேங்க் தீவைப் பெறுவதற்குதான் என்கிறது காங்கிரஸ் கட்சி. இந்தியாவின் நலனுக்காகவே கச்சத்தீவு கொடுக்கப்பட்டதாகவே நியாயப்படுத்தப்படுகிறது. கச்சத்தீவை ஒப்பிடுகையில் வளம் கொழிக்கக் கூடிய வெட்ஜ் பேங்க் தீவு பொக்கிஷமானது என்றெல்லாம் கொண்டாடப்படுகிறது இப்போது.
வெட்ஜ் பேங்க் என்பது 10,000 சதுர கிமீ கொண்டது. ஆழமற்ற கடல் பகுதி; மீன்வளத்தால் நிறைந்தது; சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதி என்றெல்லாம் மகுடம் சூட்டப்படுகிறது. இங்கே எண்ணெய் வளம் கொட்டிக் கிடக்கிறது. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு நிறைந்த பகுதியாக கணிக்கப்படுகிறது. இதனால் கச்சத்தீவுக்கு பதிலாக வெட்ஜ் பேங்க் பெறப்பட்டது எனவும் சொல்கின்றனர்.

ரணங்களை எங்கே சொல்வதாம்?: வெட்ஜ் பேங்க் தீவுக்காகவே கச்சத்தீவு கொடுக்கப்பட்டது என நியாயப்படுத்துகிறவர்கள், இந்திய நிலத்தின் பூர்வகுடிகளான தமிழர்களின் மீனவர்களின் வாழ்வாதார உரிமையை கச்சத்தீவு காவு வாங்கி கொண்டிருக்கிறது; 800க்கும் அதிகமான இந்திய குடிமக்களாகிய தமிழ்நாட்டு மீனவர்களின் உயிரை இலங்கை காவு வாங்க காரணமாகி இருக்கிறது இந்திரா இலங்கைக்கு கொடுத்த கச்சத்தீவு; கச்சத்தீவு கொடுக்கப்படதாலேயே நித்தம் நித்தம் நடுக்கடலில் செத்துப் பிழைக்கிறான் தமிழ்நாட்டு மீனவன் என்கிற ரணங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கச்சத்தீவு vs வெட்ஜ் பேங்க் என புதிய பல்ல்வியைப் பாடுகிறார்களே! என்கிற குமுறலும் தமிழ்நாட்டில் இருக்கிறது.

- ஒன் இந்தியா தமிழ்

https://tamil.oneindia.com/news/delhi/india-got-wadge-bank-from-sri-lanka-in-exchange-for-katchatheevu-595865.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு