சாதி ஆணவக் கொலைகளை தற்போதைய சட்டங்களால் தடுக்க முடியாதது ஏன்?

பிபிசி நியூஸ் தமிழ்

சாதி ஆணவக் கொலைகளை தற்போதைய சட்டங்களால் தடுக்க முடியாதது ஏன்?

சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கைக்கு சட்டமன்றத்தில் பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படையில் தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து, முதல்வரின் கருத்தை விமர்சித்தும், ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கோரியும் குரல்கள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. நடைமுறையில் உள்ள சட்டங்களால் ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியாதது ஏன்?

ஆங்கிலத்தில் ‘Honour Killings’ என அழைக்கப்படும் கொலைகள், பெரும்பாலும் சொந்த குடும்பத்தாராலேயே, கெளரவத்திற்கு இழுக்கு நிகழ்ந்ததாக கருதி இழைக்கப்படும் கொலைக் குற்றங்கள் ஆகும்.

இந்தியாவில் இந்தக் குற்றங்களுக்கு பெரும்பாலும் சாதி தான் குறிப்பான காரணியாக உள்ளது. எனவே, சாதி எதிர்ப்பில் உறுதியான இயக்கங்கள் இந்தக் கொலைகளை ‘சாதி ஆணவக் கொலைகள்’ என்றே பெயரிட்டு அழைக்கின்றனர்.

இத்தகைய ஆணவக் கொலைகளில் ஈடுபடுவது கொலையானவரின் குடும்பத்தாராக இருப்பதாலும், உறவினர்கள், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் சாதி அமைப்புகள் கூட்டுச் சதியில் ஈடுபடுவதாலும் அரசு இந்த வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வழக்குகளில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக அரசு உறுதி கூறினாலும், நடப்பில் உள்ள சட்டங்களின் போதாமையை செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, சாதிய வன்கொடுமையாக அமைந்த ஆணவக் கொலைகளாக இருந்தாலும் கூட கீழே குறிப்பிட்டது போன்ற சில நேரங்களில் எஸ்சி/எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது.

1. திருமணம் செய்துகொண்ட ஆண் – பெண் இருவரும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் எனில், இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ கொல்லப்பட்டால்.

2. ஆண் -பெண் இருவரும் பட்டியல்/பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், ஆணவக்கொலை நடந்தால்.

3. இணையரில் ஒருவர் பிற்பட்ட சாதியாக இருந்து, சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த இணையரில் பட்டியல் சாதியினராகவோ/பழங்குடியினராகவோ இல்லாத ஒருவர் கொலை செய்யப்பட்டால்.

ஐ.பி.சி 302 மட்டும் போதுமா?

இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், பட்டியல் சாதி இளைஞரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

“அந்த பெண்ணை அவரது தந்தையே மரத்தில் தூக்கிட்டு தொங்கவிட்டு, கொன்றுள்ளார். மிகுந்த அச்சமுற்ற பெண்ணின் கணவன், காவல்நிலையத்திற்கு சென்று வழக்குத் தொடுக்கவே ஒரு வாரம் ஆகிவிட்டது. அதன் பின்னர் தான் இந்தக் கொலை நடந்த விபரமே வெளிச்சத்திற்கு வந்தது. அது வரை அந்த ஊரில் இருந்தவர்களுக்கு இப்படியொரு குற்றம் நடந்தது தெரியும் தானே?. ஆனாலும் ஏன் எந்த புகாரும் எழவில்லை” என்று குறிப்பிடும் எவிடன்ஸ் அமைப்பின் கதிர்,

“இந்த வழக்கில் எஸ் சி எஸ் டி சட்டம் பொருந்தாது. இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்காகத்தான் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த வழக்கினை இரண்டு நபர்களுக்கு இடையிலான தகராறு காரணமாக நடைபெற்ற கொலை என்று மட்டும் பார்க்க முடியுமா? கொலை செய்த நபரை ஒரு ஊரே காப்பாற்றுகிறது. இதை எப்படி ஐ.பி.சி 302-ன் கீழ் கையாண்டு உரிய நியாயம் வழங்க முடியும்” என கேட்கிறார்.

ஆணவக் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களாகவும் இருப்பதால், பெண் வீட்டாரே பெரும்பாலும் ஆணவக் கொலையில் ஈடுபடுகின்றனர். பட்டியல்/பழங்குடியை சேர்ந்த ஒரு இணையரை பெண் தேர்வு செய்துவிட்டார் என்பதை குடும்பங்கள் அவமானமாக கருதுகின்றனர். அதன் காரணமாக இந்த பெண்கள் கொல்லப்படுகிறார்கள். குற்றத்தின் அடிப்படை சாதி வன்கொடுமையாக இருக்கும்போது, கொல்லப்பட்டவரின் சாதிப் பின்னணியை மட்டும் வைத்து வழக்குகள் பதியப்படுவதாக செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எஸ்.சி /எஸ்.டி வழக்கு கோருவது ஏன்?

எஸ்.சி./ எஸ்.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஆறு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், ஒரு வருடத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. ஆனால், கொலை வழக்காக இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் பதிவு செய்யப்பட்டால், இது போன்ற காலக்கெடு கிடையாது.

எஸ்.சி./ எஸ்.டி. சட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்டவர், தனக்காக வாதிட சிறப்பு அரசு வழக்கறிஞரை பெற்றுக் கொள்ள முடியும். வேறு வழக்குகளில் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படுவதற்கு அரசின் முன் அனுமதி வேண்டும்.

“எஸ்.சி./ எஸ்.டி. பொருந்தாத வழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்டவர் பெரும் தொகை செலுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞரை தனக்காக வாதிட நியமித்துக் கொள்வார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுபவமிக்க மூத்த வழக்கறிஞர்கள் இருக்க மாட்டார்கள். அது சமமான போட்டியாக இருக்காது” என்கிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ்.

“சாதி மறுப்பு திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்ற வழக்குகளை விரைந்து நடத்திட அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்ற உத்திரவாதத்தை முதல்வர் தனது உரையில் தெரிவித்த போதிலும், அது எப்படி அமலாகிறது என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும் என்கின்றனர் செயல்பாட்டாளர்கள்.

உதாரணமாக, அரியலூர் தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், சதி செய்வது குறித்த இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 பி காவல்துறையினரால் சேர்க்கப்படவில்லை.

“முதலில், அரியலூர் மகிளா நீதிமன்ற வழக்கறிஞர் தான் இந்த வழக்கை நடத்தி வந்தார். வழக்கு தொடங்கி ஆறு ஆண்டுகள் கழித்து அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்ட பிறகே, வழக்குக்கு முக்கியமான 120 பி பிரிவு சேர்க்கப்படாமல் இருப்பது கவனிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் இருந்துமே குற்றம் சுமத்தப்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. அரசு வழக்கறிஞர் இல்லாவிட்டால், அதுவும் சாத்தியமாகியிருக்காது” என்றார்.

பட்டியல் சாதிக்குள் கொலைகள்

சமீபத்தில், விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஆண், பள்ளர் சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால், அருந்ததியர் சமூகத்து இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பந்தமாக அந்த பெண்ணின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டது தலித் சமூகத்தை சேர்ந்தவர், கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர். எனவே இந்த வழக்கில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பொருந்தாது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளர் சமூகத்துப் பெண்ணை பறையர் சமூகத்து இளைஞர் காதலித்து வந்ததால், அவர் கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவத்தில் தலித் அல்லாதவர்கள் ஈடுபட்டிருந்ததால், இந்த வழக்கு எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும். ஆனால், இதை ஆணவக் கொலையாக பதிவு செய்ய மறுத்து வரும் போலீஸார் ஆதாயக் கொலையாக பதிவு செய்ய முயல்கின்றனர் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கலையரசன் தெரிவிக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கொளத்தூரில் உப்பளத்தில் வேலைப் பார்த்து வந்த பள்ளர் சமூகத்து பெண்ணும் பறையர் சமூகத்து ஆணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் வீட்டார் புதுமண தம்பதிகள் தங்கி இருந்த வீட்டுக்கு இரவில் சென்று அவர்களை வெட்டி கொலை செய்து விட்டனர்.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தாக்கியவர் தாக்கப்பட்டவர் இருவருமே தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்த வழக்குக்கு பொருந்தாது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னமும் நிவாரணம் ஏதும் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட குடும்பம் காத்திருக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளை சுட்டிக்காட்டும் செயல்பாட்டாளர்கள், இதுவும் சிறப்பு சட்டத்தின் அவசியத்தை எடுத்துக் காட்டுவதை குறிப்பிடுகின்றனர்.

நிவாரணம் கிடைக்கப் போராட்டம்

2012ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆணவக் கொலை சம்பவத்தில் கொல்லப்பட்டவர் பட்டியல் சாதியை சேர்ந்தவர், அவரது மனைவி தேவர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த கொலை எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்காக பதிவு செய்யப்பட்டது. எனினும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்க முடியவில்லை.

கணவனை இழந்து பாதிக்கப்பட்ட பெண் பட்டியல் சாதி அல்லாதவர் என்பதால் எஸ்.சி/எஸ்.டி சட்டப்படியான நிவாரணம் அவருக்கு கிடைக்காது என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்ட போது, இறந்த போன பட்டியல் சாதி கணவரை நம்பியிருந்த அவரது மனைவிக்கு நிவாரணத்தொகையை பெற ஏன் தகுதி இல்லை என கடுமையாக கேள்வி எழுப்பியது ஆணையம். மறுநாளே அவரது மனைவிக்கு நிவாரணத்தொகை கிடைத்தது, அரசு வேலையும் கிடைத்தது.

பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள் ஆணவக் கொலை

பிற்படுத்தப்பட்ட சாதியாக வகைப்படுத்தப்பட்ட வெவ்வேறு சாதிகளில் இருவர் செய்துகொள்ளும் திருமணங்களிலும் ஆணவக் கொலைகள் நடக்கின்றன.

2013ம் ஆண்டு கோவையை சேர்ந்த கவுண்டர் பெண், வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஆணை காதலித்து வந்ததால், அந்த பெண்ணின் குடும்பத்தார், அந்த பெண்ணை கொன்றுவிட்டனர்.

2015ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் நம்பியான்விளை பகுதியில் நாடார் சமூகத்து ஆணும், மறவர் சாதி பெண்ணும் காதலித்து வந்ததால், பெண்ணின் குடும்பத்தார் அந்த ஆணை கொன்று விட்டனர்.

“இதுபோன்ற வழக்குகள் உள்ளூர் அளவில் இரு சாதிக்காரர்களும் அமர்ந்து பேசி முடிக்கப்படுகின்றன. சில சமயம் கொலை வழக்குகளாக பதியப்பட்டாலும் வழக்கு விசாரணை நீர்த்துப் போய் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்” என்று சாமுவேல்ராஜ் கூறினார்.

“தமிழ்நாட்டில் ஆணவக் கொலை சம்பவங்களில் இது வரை ஆறு வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆறு வழக்குகளுமே எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும் வாய்ப்புள்ள வழக்குகளாகும். பிற்படுத்தப்பட்டோருக்கு இடையில் நடைபெறும் ஆணவக் கொலைகள் ஏன் அதிக கவனம் பெறுவதில்லை? அந்த வழக்குகளில் ஏன் தண்டனை வழங்கப்படுவதில்லை?” என்று கேள்வி எழுப்புகிறார் எவிடன்ஸ் கதிர்.

திருமணம் செய்துகொண்டு, ஆணவக் குற்றங்களுக்கு இலக்காகும் தம்பதிகளை தங்க வைப்பதற்கு “பாதுகாப்பு மையங்கள் எங்கே?” என்றும் கேள்வி எழுப்புகிறார் கதிர். “மதுரையை சேர்ந்த விமலா தேவி தலித் இளைஞரை திருமணம் செய்ததற்காக ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதல்களில் ஒன்று பாதுகாப்பு மையம் அமைப்பது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்பு மையம் இருந்திருந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டிருக்குமா?” என்று அவர் கேட்கிறார்.

பாலினப் பார்வை தேவை

ஆணவக் கொலைகளை சாதி அடிப்படையிலோ, சட்டம் ஒழுங்கு என்ற விதத்திலோ மட்டும் பார்ப்பது போதாது, பெண்ணுக்கு எதிரான குற்றமாகவும் அவை உள்ளன என்பது செயல்பாட்டாளர்களின் வாதம்.

குடும்பத்தாரால் “தனது வாழ்க்கை துணையை பெண் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. ஒரு ஆணவக் குற்றத்துக்கு சாதி மட்டுமே காரணம் கிடையாது. பாலினம், வர்க்கம், கலாசார வழக்கம் என 14 காரணங்கள் இருக்கின்றன" என்கிறார் கதிர்.

"எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் கீழ் ஆணவக் குற்றங்கள் அனைத்தையும் விசாரிக்க முடியாது. ஏனென்றால் ஆணவக் குற்றங்களில் பாதிக்கப்படுவது எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் மட்டும் கிடையாது. ஆனால் ஆணவக் குற்றங்களுக்கான தனிச்சட்டம், அது எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கும் முழுமையான சட்டமாக இருக்கும்.” இந்த பார்வையுடன் முறையாக அணுகினால் தாதான் ஆணவக் கொலைகளின் தீவிரம் தெரியவரும் என்றார் கதிர்.

(சாரதா வி)

https://www.bbc.com/tamil/articles/c4ngldznkyro

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு