மார்க்சிய தத்துவத்தை செழுமைப்படுத்திய மகத்தான தலைவர் தோழர் ஸ்டாலின் - அ.அன்வர் உசேன்
தீக்கதிர்
தத்துவத்தையும் அதனை முன்னெடுக்கும் தலைவர்கள் குறித்தும் உரையாற்றிய தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்கள் மார்க்சியத் தத்துவத்தை நீர்த்து போகச் செய்தவர்களின் பட்டியலில் ஸ்டாலினை யும் குறிப்பிட்டார். மார்க்சியத் தத்துவத்தை செழுமைப்படுத்தி முன்னெடுத்த மகத்தான தலைவர்களில் ஒருவர் ஜோசப் ஸ்டாலின். பின் தங்கிய தேசத்தில் சோசலிச நிர்மாணம்/ தேசிய இனப்பிரச்ச னைகள்/ பாசிச எதிர்ப்புக் கோட்பாடுகள்/ மார்க்சியத் தத்துவத்துக்கு எளி மையான விளக்கங்கள்/ கட்சி அமைப்பு கோட்பாடுகளில் புதிய அணுகு முறைகள் என மார்க்சியத் தத்துவத்துக்கு ஸ்டாலினின் பங்கு குறிப்பிடத் தக்கது. அதனால்தான் காரல் மார்க்ஸ்/ பிரடெரிக் ஏங்கெல்ஸ்/ லெனின் ஆகிய ஆளுமைகளின் பட்டியலில் ஸ்டாலினையும் முன்வைக்கிறோம்.
பின் தங்கிய தேசத்தில் சோசலிச நிர்மாணம்
சோவியத் புரட்சிக்கு அடித்தளமிட்டவர் தோழர் லெனின் எனில் அந்த மகத்தான புரட்சியை பாதுகாத்து முன்னெடுத்துச் சென்ற பெருமை தோழர் ஸ்டாலின் அவர்களை சாரும். புரட்சி நடந்த ஏழே ஆண்டுகளில் லெனின் உயிர் நீத்தார். புரட்சிக்கு வெகு வலுவான அடித்தளத்தை லெனின் உருவாக்கியிருந்தார். எனினும் பிரச்சனைகள் ஏராளமாக இருந்தன. மிகமுக்கியமாக சித்தாந்த மோதல்கள் உருவாயின. ரஷ்யா எனும் பின் தங்கிய தேசத்தில் புரட்சி வெல்வது சாத்தியமா? பல தேசங்களில் புரட்சி குறுகிய காலத்தில் உருவாகாமல் ரஷ்யா எனும் ஒரே தேசத்தில் மட்டும் புரட்சி நீடித்து நிற்குமா? இது சாத்திய மில்லை என டிராட்ஸ்கி போன்ற தலைவர்கள் முன்வைத்தனர். சோவியத் புரட்சிக்கு பின்னர் குறுகிய காலத்தில் சில வளர்ந்த தேசங்களில் குறிப்பாக ஜெர்மனியில் புரட்சி நடக்கும் எனவும் அது சோவியத் புரட்சிக்கு உதவும் எனவும் மதிப்பிடப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. டிராட்ஸ்கி போன்ற தலைவர்களின் மதிப்பீடுக்கு மாறாக ரஷ்யா எனும் தனி தேசத்தில் புரட்சி சாத்தியம் என்பதை சித்தாந்த மட்டத்திலும் நடை முறையிலும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் லெனினுக்கு பின்னர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. ரஷ்ய மக்களின் உதவியுடனும் ரஷ்ய கம்யூ னிஸ்ட் கட்சியின் மிகப் பெரும்பான்மை ஆதரவுடனும் பொருளாதா ரத்தில் ஒரு பின் தங்கிய தேசத்தில் புரட்சி சாத்தியமே என நடைமுறை யிலும் சித்தாந்த அடிப்படையிலும் ஸ்டாலின் சாதித்துக் காட்டினார். சித்தாந்தத்தின் வெற்றி என்பது நடைமுறையில் நிரூபிக்கப்படுவது தான் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார். எனவே சோசலிச சித்தாந் தத்தை நடைமுறைப்படுத்துவதில் மக்கள் மற்றும் கட்சியின் முழு கவனத்தையும் செலுத்த ஸ்டாலின் உழைத்தார். உற்பத்தி சக்திகளை வளர்த்திட ஸ்டாலின் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. திட்ட மிட்ட பொருளாதாரம் எனும் கோட்பாடை சோவியத் ரஷ்யா முதன்முத லில் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப் பட்டன. ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் நான்கு ஆண்டுகளிலேயே நிறைவேற்றப்பட்டன. 1934ஆம் ஆண்டு ரஷ்யாவின் கடைசி வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூடு விழாவிற்கு தலைமை தாங்கிய ஸ்டாலின் பேசினார்: .
“முதலாளித்துவ நாடுகளில் மக்கள் வேலைகளை தேடிக்கொண்டுள் ளனர்; ஆனால் ரஷ்யாவில் வேலைகள் மக்களை தேடிக்கொண்டுள் ளன.” திட்டமிட்ட பொருளாதாரமும் ஐந்தாண்டுத் திட்டம் எனும் பொருளா தாரக் கோட்பாடும் ஸ்டாலின் தலைமையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த மிகப்பெரிய மார்க்சியப் பொருளாதார நடைமுறை ஆகும். முதலாளித்துவ உலகம் நெருக்கடியில் திணறிக்கொண்டிருந்த பொழுது சோவியத் யூனியன் சாதனைகளைப் படைத்துக் கொண்டி ருந்தது. பொருளாதாரத்தில் ஒரு பின் தங்கிய தேசத்தில் புரட்சி சாத்தி யமே என நடைமுறையிலும் சித்தாந்த அடிப்படையிலும் நிரூபித்த ஸ்டாலின், மார்க்சிய சித்தாந்தத்தில் புதிய அத்தியாயம் எழுதினார் எனில் மிகை அல்ல. ஸ்டாலின் மார்க்சியத்தை நீர்த்து போகச் செய்ய வில்லை; மாறாக செழுமைப்படுத்தினார்.
தேசிய இனப்பிரச்சனை
மார்க்சிய சித்தாந்தத்துக்கு ஸ்டாலின் அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பு “தேசிய இனப்பிரச்சனை” குறித்த கோட்பாடுகள் ஆகும். நவீன வரலாற்றில் தேசம்/ தேசியம்/ தேசிய இனப்பிரச்சனை ஆகி யவை குறித்து ஸ்டாலின் அவர்களின் கோட்பாடு கலங்கரை ஒளி போல அமைந்தது எனில் மிகை அல்ல. ஒரு மக்கள் குழு எப்பொழுது தேசமாக அல்லது தேசிய இனமாக அறியப்படுகிறது? இந்த கேள்வியை எழுப்பி அதற்கு ஸ்டாலின் பதில் தருகிறார். ஒரு தேசிய இனத்துக்கு பொதுவான மொழி அவசியம்; அதே சமயத்தில் ஆங்கிலம் எனும் ஒரே மொழியை பேசும் அமெரிக்காவும் பிரிட்டனும் ஏன் ஒரே தேசமாக இல்லை எனும் கேள்வியை எழுப்புகிறார். ஒரே தேசம் எனில் அது ஒரே பூகோளப் பகுதியாக இருக்க வேண்டும்; ஆனால் அது மட்டும் போதாது. ஒரே மாதிரியான பொருளாதார வாழ்வியல் முறை இருக்க வேண்டும்; இதுவும் கூட போதாது. பண்பாடு அடிப்படையிலான ஒரே மாதிரியான உளவியல் சிந்தனை இருக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் குறிப்பிடுகிறார். எனவே ஒரு தேசம் அல்லது தேசியம் எனில் பொதுவான மொழி/ பூகோளப் பகுதி/ பொருளாதார வாழ்வியல் முறை/ பொதுவான பண்பாடு அடிப்படையில் உருவான பொதுவான உளவியல் ஆகியவற்றின் அடிப்படையில் வரலாற்று ரீதியாக அமைந்த மக்களின் குழுதான் தேசமாக இருக்க இயலும் என்பதை விளக்குகிறார். எனினும் தேசிய சிந்தனையும் கோட்பாடுகளும் உழைக்கும் வர்க்கங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். அது முதலாளித்துவத்துக்கு மட்டுமே பயன்படும் எனில் அத்தகைய தேசியத்தால் எந்த பலனும் இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார். மேலும் தேசிய இனக் கோட்பாடு மாறாமல் அப்படியே இருப்பது இல்லை எனவும் காலம் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் அடையும் எனவும் குறிப்பிடுகிறார்.
தேசிய இனங்களின் சமத்துவம்
சோவியத் ஒன்றியம் வெவ்வேறான மொழியும் பண்பாடும் கொண்ட 15 குடியரசுகளை உள்ளடக்கியதாக இருந்தது. பெரியதும் சிறியதுமாக 60 தேசிய இனங்களும் குழுக்களும் இருந்தன. அத்தகைய ஒன்றியம் உருவானதிலும் அதனை கட்டிக்காத்ததிலும் ஸ்டாலின் மார்க்சிய அடிப்படையிலான தேசிய கோட்பாடுகளை பரிசோதித்தார். வெற்றிகர மாகச் சாதித்தார். 1936ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோவியத் அரசியல் சட்டம் 6 மாதங்கள் பொது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டது. 5.5 கோடி பேர் விவாதங்களில் பங்கேற்றனர். 43,000 திருத்தங்கள் உழைக்கும் மக்களால் முன்வைக்கப்பட்டன. அரசியல் சட்டம் குறித்த மக்களின் திருத்தங்கள் சிலவற்றை ஏன் நிராகரிக்கப்பட வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என ஸ்டாலின் விவரிக்கிறார். புரட்சி முடிந்து 19 ஆண்டுகள் ஆகிவிட்டதால் “பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமை” அகற்றப்பட வேண்டும் என பல திருத்தங்கள் முன்வந்தன. அவை நிராகரிக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் கூறினார். சோவியத் ஒன்றியம் என்பது சுய விருப்பத்தின் மூலம் அமைந்த தேசம். எனவே பிரிந்து போகும் உரிமையும் இருக்க வேண்டும் என விளக்கினார். lஇன்னொரு திருத்தம் சோவியத் நாடாளுமன்றத்துக்கு ஒட்டு மொத்த அவை ஒன்றும் தேசிய இனங்களுக்கான இன்னொரு அவையும் என இரு அவைகள் தேவை இல்லை என முன்வைக்கப்பட்டது. இதனை யும் ஸ்டாலின் நிராகரித்தார். சோவியத் ஒன்றியம் என்பது ஒருமுக தேசம் இல்லை. பன்முகத்தன்மை கொண்டது. அந்த பன்முகத் தன்மைக்கு அடித்தளம் பல தேசிய இனங்கள். ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனிப்பட்ட குணங்களும் பண்பாடுகளும் உண்டு. அவை உறுதியாக பிரதிபலிக்க வேண்டும் எனில் தேசிய இனங்களுக்கான தனி அவை நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என வாதிட்டார். l சோவியத் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சம எண்ணிக்கை யிலான உறுப்பினர்கள் இருக்க வேண்டும் எனும் திருத்தத்தை நியாய மானது என ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு குடியரசுக்கும் அதாவது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் ஒரு துணை ஜனாதிபதி இருக்க வேண்டும் எனும் தீர்மானத்தையும் வரவேற்று ஏற்றுக் கொள்ள முன்மொழிந்தார். ஸ்டாலின் அவர்களின் தேசிய இனக் கோட்பாடுகளும் நடைமுறையும் மார்க்சியத்தை மேலும் செழுமைப்படுத்தியது. திரு. ராசா கூறியது போல ஸ்டாலின் மார்க்சியத்தை நீர்த்துப் போகச்செய்யவில்லை.
பாசிசத்துக்கு எதிரான போர்
இன்றைய இந்தியாவில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்து பாசிசம் ஆகும். பாசிசம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு பதில் தேடும் பொழுது எவர் ஒருவரும் அடையும் இடம் இத்தாலி/ ஜெர்மானிய பாசிசம்தான். பாசிசத்தை எப்படி வரையறுப்பது? அதற்கு எதிராக எப்படிச் செயல்படு வது? ஆகிய சித்தாந்த மற்றும் நடைமுறைக் கோட்பாடுகளை உரு வாக்கியதில் ஸ்டாலின் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பாசிசம் முதலாளித்துவத்தின் மிக கொடூர சீரழிந்த வடிவம் என்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அது ஜனநாயக எண்ணம் கொண்ட முதலா ளித்துவப் பிரிவையும் அழிக்க முனைவதால் அந்தப் பிரிவின் ஒத்து ழைப்பையும் பெற வேண்டும் என்றார். தொழிலாளி வர்க்கத்தின் சுயேச்சை இயக்கங்கள் ஒருபுறமும் பாசிசத்துக்கு எதிராகச் செயலாற்ற முன்வரும் முதலாளித்துவப் பிரிவுகளுடன் ஒற்றுமை இன்னொரு புறமும் என இரு அணுகுமுறைகளை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதே சமயம் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையும் போராட்டங்களும்தான் பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்த முடியும் என்பதை விளக்கினார். ஸ்டாலினின் ஒற்றுமைக்கான வேண்டுகோளை முதலாளித்துவ நாடுகள் அங்கீகரிக்க மறுத்ததால் சோவியத் யூனியன் தன்னந்தனி யாகவே இட்லருக்கு எதிராகப் போராடியது. பின்னர் வேறு வழியின்றி சோவியத் யூனியனுடன் முதலாளித்துவ தேசங்கள் கை கோர்த்தன. பின்னர் பாசிசம் வீழ்ந்ததும் மனிதகுலம் காப்பாற்றப்பட்டதும் வரலாறு. பாசிச காலத்தில் மார்க்சியக் கோட்பாடுகளை உருவாக்கியதும் அவற்றை அமலாக்கியதிலும் வென்ற ஸ்டாலின் அவர்கள் அதனை நீர்த்து போகச் செய்தார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்த சோவியத் யூனியன்!
பாசிசத்துக்கு எதிரான இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனி யனுக்கு சுமார் 2.80 கோடி மனித இழப்புகள் மட்டுமல்ல; ஆலைகள், அணைகள், கிராமங்கள், சுரங்கங்கள், கால்நடைகள் என பல அழிந்தன. இந்த இழப்புகள் குறித்து பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதியாக பணி யாற்றியவரும் போர்க் காலத்தில் அமெரிக்க படை தளபதியாக இருந்தவ ருமான ஐசன்ஹோவர் தனது நினைவுக் குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “1945இல் நான் விமானத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது நான் கண்ட காட்சிகள் சொல்ல முடியாத மனவேதனையை அளித்தன. சோவியத் யூனியனின் மேற்கு எல்லையிலிருந்து மாஸ்கோ நகரம் வரை ஒரு வீடு கூட முழுமையாக இல்லை. அனைத்து வீடுகளும் அழிக்கப் பட்டிருந்தன. இந்த நிலப்பரப்பில் லட்சக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் (இட்லர் படைகளால்) கொல்லப் பட்டனர். இந்த எண்ணிக்கையை சோவியத் அரசாங்கத்தால் கணக்கீடு செய்ய முடியவில்லை என மார்ஷல் சுகோவ் என்னிடம் கூறினார்” (Crusade in Europe/by Dwight D.Eisenhower). எனினும் ஸ்டாலின் கலங்கவில்லை. சோவியத் மக்களை தட்டி எழுப்பினார். சோவியத் யூனியன் மறுகட்டமைப்புக்கு ஊக்கப்படுத்தி னார். மிக குறுகிய காலத்தில் ஃபீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து சோவியத் யூனியன் புத்துயிர் பெற்று எழுச்சி கொண்டது. 1953ஆம் ஆண்டு ஸ்டாலின் மறைந்த பொழுது சோவியத் யூனியன் அமெரிக்காவுக்கு இணையாக ஒரு வல்லரசாக வளர்ந்திருந்தது. இந்தியா உட்பட புதியதாக விடுதலை அடைந்த நாடுகளுக்கு நம்பிக்கை நட்சத்திர மாகத் திகழ்ந்தது. ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கலாம். அவை அவரது தனிப்பட்ட குறைகள் அல்ல. முதல் சோசலிச சமூகம் நிர்மா ணிக்கும் மகத்தான பணியில் உருவான குறைகள் அவை. எனினும் மார்க்சிய சித்தாந்தத்தை எந்த வகையிலும் ஸ்டாலின் நீர்த்துப் போகச் செய்யவில்லை. மாறாக அதற்கு தனது செழுமையான பங்கை செலுத்தி னார் என்பதுதான் உண்மை. அதனால்தான் இன்றும் ஸ்டாலின் லட்சோபலட்சக்கணக்கான மக்களால் நினைவு கூரப்படுகிறார்.
- தீக்கதிர்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு