மோர்பி பால விபத்து: தனியார்மய லாபவெறி

துருப்பிடித்த கம்பிவடத்திற்கு கிரீஸ் கூட போடாமல் பெயிண்ட் அடித்து மாட்டிய தனியார் நிறுவனம்!

மோர்பி பால விபத்து: தனியார்மய லாபவெறி

எப்ஐஆரில் ‘ஒரேவா’ நிறுவன உரிமையாளரின் பெயர் எங்கே?

“மோர்பி பாலத்தை புனரமைத்த ‘ஒரேவா’ நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் பெயர் ஏன்  எப்ஐஆரில் இடம்பெறவில்லை? அதேபோல முதல்வர் உள்ளிட்ட  மாநில அமைச்சர்கள் ஏன் பதவி விலகவில்லை? விபத்து குறித்து  கேள்வியெழுப்பினால் அது சோகத்தை அதிகரிப்பதாக அர்த்தமா?  ஏன் பதில் தர மறுக்கிறீர்கள்? விபத்து நடந்து 48 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகியும் இந்த கேள்விகளுக்கு பாஜக-வும், குஜராத்  மாநில அரசும் இன்னும் ஏன் பதிலளிக்கவில்லை?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோர்பி பால ஊழல் குறித்து  மோடி பேசுவாரா?

“கடந்த 2016-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த பாலம் விபத்துக்கு அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ஊழல்தான் முக்கியக் காரணம் என்று பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். தற்போது குஜராத்திலும் அதேபோன்ற விபத்து நேரிட்டுள்ள நிலையில், குஜராத் அரசை பிரதமர் விமர்சிப்பாரா?” என்று திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் குணால் கோஷ் கேள்வி  எழுப்பியுள்ளார். “பாஜக-வால் மிகைப்படுத்தப்படும் குஜராத் மாட லின் உண்மை நிலை, மோர்பி பாலம் விபத்தால் அம்பலமாகியுள்ளது” என்று திரிணாமுல் கட்சியின் எம்.பி. சுஷ்மிதா தேவும் விமர்சித்துள்ளார்.

சோகத்தையும் கேலிக்கூத்தாக்கிய மோடி வருகை!

“மோர்பி மருத்துவமனைக்கு மோடி வருகையை முன்னிட்டு, மருத்துவமனையில் மின்னல் வேகத்தில் நடந்த புனரமைப்புப் பணிகள் நமக்கு முன்னாபாய் எம்பிபிஎஸ் (தமிழில் வெளியான வசூல் ராஜா எம்பிபிஎஸ்) படத்தையே நினைவூட்டுகிறது. சோக  நிகழ்வுகளைக் கூட கேலிக்கூத்தாக்க நினைப்பதால், சில நேரங்களில், நடக்கும் நிகழ்வுகள் நகைச்சுவைக்கு மிக அருகே வந்து விடுகின்றன” என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். புனரமைப்புப் பணிகள் நடந்த புகைப்படத்தையும் அவர் பக்கத்தில் இணைத்துள்ளார்.

குஜராத் முதல்வர் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

மோர்பி தொங்குபால விபத்திற்கு பொறுப்பேற்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார். “பாலம்  எவ்வளவு நபர்கள் வரைத் தாங்கும்? அது வலுவாக உள்ளதா?  என எவ்விதச் சான்றிதழும் பெறாமல், மக்களை அதிக எண்ணிக்கையில் பாலத்தில் அனுமதித்துள்ளனர். இது மனிதர்களால் ஏற்பட்ட  தவறல்ல; அரசு நிர்வாகத்தின் தவறு. இதற்காக முதல்வர் மாநில  மக்களிடம் கண்டிப்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று திக் விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தடயவியல் அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்

காந்தி நகர், நவ.2- குஜராத்தில் அறுந்து விழுந்த  மோர்பி தொங்கு பாலத்தின் கேபிள்கள் துருப்பிடித்து இருந்ததும், புனரமைப்புப் பணி மேற்கொண்ட தனியார் நிறுவனம், பாலத்தின் கேபிள்களை மாற்றாமல், கேபிளுக்கு எண்ணெய், கிரீஸ்கூட போடாமல் பெயிண்ட் அடித்து, பாலிஷ் மட்டுமே செய்து பாலத்தை திறந்திருப்பதும் தடயவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும், கேபிள்களை மாற்றி யிருந்தால் 142 பேர் பலியான துயரம் நடந்திருக்காது என்றும், பாலப் புனரமைப்பு பணிக்காக ‘ஒரேவா குழுமத்தால்’ நியமிக்கப்பட்ட  இரண்டு பொறியாளர்களும் தகுதி வாய்ந்தவர்கள் இல்லை என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோர்பி நகரில் ஓடும் மச்சூ ஆற்றின் குறுக்கே, 1879-ஆம் ஆண்டு  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொங்குபாலம் அமைக்கப்பட் டது. 1.25 மீட்டர் அகலமும், 233 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாலம் சிறந்த சுற்றுலா தளமாக இருந்து வந்தது.

இந்த பாலம் அமைக்கப்பட்டு 143 ஆண்டுகள் ஆகிவிட்டதால், அதனை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான காண்ட்ராக்ட், அஜந்தா கடிகார நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான ‘ஒரேவா குழுமம்’ வசம் வழங்கப்பட்டது.  அந்த நிறுவனமும் கடந்த 6 மாதங்களாக புனரமைப்புப் பணியை மேற்கொண்டு, கடந்த அக்டோபர் 26- குஜராத்தி நாளன்று மோர்பி  தொங்கு பாலத்தை பயன்பாட்டிற்குத் திறந்துவிட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 30 அன்று இந்தப் பாலம்  அறுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், 142 பேர் மச்சூ ஆற்றில் மூழ்கி பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஒரேவா குழுமத்தின் 2 மேலாளர்கள், 2 துணை ஒப்பந்ததாரர்கள், டிக்கெட் புக்கிங் செய்த கிளார்க், பாதுகாவலர் என 9 பேரை கைது  செய்த காவல்துறையினர், அவர்களை மாஜிஸ்திரேட் நீதிமன்ற மூத்த சிவில் நீதிபதி எம்.ஜே. கான் முன்பு செவ்வாயன்று ஆஜர்படுத்தினர். அத்துடன், விபத்து தொடர்பான தடயவியல் அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.

விசாரணை அதிகாரியான மோர்பி துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.ஏ.ஜாலா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தடயவியல் அறிக்கை தொடர்பான வாய்மொழி சமர்ப்பிப்புகளையும் வழங்கினார். அதில், “தொங்கு  பாலத்தின் (ஜூல்டா புல்) கேபிள் ‘துருப்பிடித்து இருந்தது’” என்றும் “கேபிள் பழுது பார்க்கப்பட்டு இருந்தால், இது சம்பவம் நடந்திருக்காது” என்றும் ஜாலா அதிர்ச்சி கரமான தகவல்களை வெளியிட் டுள்ளார். மேலும், “மோர்பி பாலத்தில்  எத்தனை பேர்களை அனுமதிக்கலாம் என்பதற்கான திறனை நிர்ணயிக்காமலும், அரசாங்க அனுமதியின்றியும் அக்டோபர் 26 அன்று பாலம் திறக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் கருவிகள் அல்லது உயிர்  காக்கும் காவலர்கள் பயன்படுத்தப்படவில்லை. பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பின் ஒரு பகுதியாக, தளம் (டெக்) மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. காந்தி நகரில் இருந்து வந்த தடய அறிவியல்  ஆய்வக (Forensic Science  Laboratory - FSL) குழு அறிக்கையின்படி வேறு எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. பாலத்தை கேபிள்கள் எனப்படும் கம்பி வடங்களே தாங்கியிருந்தன. ஆனால், அந்த கேபிளில் எண்ணெய் அல்லது கிரீஸ் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. கேபிள் உடைந்த இடத்தில் கேபிள் துருப்பிடித்து இருந்தது. கேபிளை சரி செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. என்ன மாதிரியான  பராமரிப்பு வேலை நடந்தது, அது  எப்படி செய்யப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை. புனரமைப்புக்காக கொள்முதல் செய்யப்பட்ட - பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் அதன் தரம் சரி பார்க்கப்பட்டனவா? என்பன போன்ற விவரங்கள் விசாரணை செய்யப்பட உள்ளன” என்று டிஎஸ்பி ஜாலா கூறியுள்ளார். 

“ஒப்பந்ததாரர்களின் பொறியாளர்கள் இருவரும் தகுதியான பொறியாளர்கள் இல்லை. தவிர,  ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால்,  காப்பாற்றுவதற்கான உயிர்காக்கும் சாதனங்களும் அங்கே இல்லை”  என்பதையும் டிஎஸ்பி ஜாலா தனது வாக்குமூலத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.  அரசுத் தரப்பில் வழக்கறிஞர் எச்.எஸ். பஞ்சால் ஆஜரான நிலையில், அவர், மரத்தாலான பாலத்தின் தளத்தை அலுமினியத் தளமாக மாற்றியுள்ளனர். இதனால்  ஏற்பட்ட அதிக எடையைத் தாங்காமலும் பாலம் உடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், “கடந்த 2007-ஆம்  ஆண்டு இந்த பாலத்தை சீரமைக்க  கொடுத்த அதே ஒப்பந்ததாரரிடமே 2022-ஆம் ஆண்டிலும் சீரமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களையே 2 முறை தேர்வு செய்ததற்கான காரணம் என்ன? என்பதை விசாரிக்க வேண்டும்” என்று விசாரணையின் போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே, ‘ஒரேவா’ நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர்கள் தீபக் பரேக் மற்றும் தினேஷ்பாய் மஹாசுக்ராய் டேவ், ஒப்பந்ததாரர்கள் பிரகாஷ்பாய் லால்ஜிபாய் பர்மர் மற்றும் தேவங்பாய் பிர காஷ்பாய் பர்மர் ஆகிய 4 பேருக்காக, சுரேந்திர நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.கே. ராவல் ஆஜரானார். அவர், “பாலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தீபக் பரேக்கிற்கு எந்தப் பங்கும் இல்லை  என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். ‘ஒரேவா’ நிறுவனத்தில் மீடியா மேலாளராக இருப்பதாகவும் கிராஃபிக் வடிவமைப்பை  மட்டுமே தான் கையாண்டதாகவும் பரேக் நீதிபதியிடம் கூறினார்.  அத்துடன் நிற்காத அவர், “நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை  அனைவரும் மிகவும் கடினமாக உழைத்தார்கள். ஆனால் கடவுளின் விருப்பம் (பகவான் நி இச்சா)  இதுபோன்ற ஒரு துரதிர்ஷ்டவச மான (142 பேர் பலியானது) நிகழ்வு  நடந்தது” என்று கொஞ்சமும் உறுத்தல் இல்லாமல் பழியைத் தூக்கி கடவுள் மீது போட்டுள்ளார்.

வெல்டிங், எலக்ட்ரிக் பொருத்துதல் போன்ற வேலைகளை மட்டுமே ஒப்பந்ததாரர்கள் கையாள்வதாகவும், அவர்கள் பெற்ற பொருட்களின் அடிப்படையில் அவர்கள் அதைச் செய்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர் ராவல் தெரிவித்தார். ‘ஓரேவா’வின் இரண்டு  மேலாளர்கள் பாலத்தை பழுது பார்ப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை கவனித்துக்கொள்வதாகவும், புதுப்பித்தல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அரசு தரப்பு கூறியபோது, இரு மேலாளர்களுக்கும் “பாலத்தின் தகுதியைக் கண்டறிதலில் தங்களுக்கு எந்தப் பங்கும்  இல்லை” என்று அவர்கள் தரப்பில் மறுப்பு தெரிவித்தனர். முடிவில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.ஜே.கான் பொறியாளர்கள் இருவர் உள்பட 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது. அத்துடன் பாலத்தின் காவலர், நுழைவுக் கட்டணம் வசூலிப்பவர் உள்பட 5 ஊழியர்களை நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

- தீக்கதிர்

கட்டுரையாளரின் வலைதள பக்கத்திற்கு செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://theekkathir.in/News/states/Delhi/morbi-suspension-bridge-accident-that-claimed-142-innocent-lives

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு