தணிந்தது வர்த்தகப் போர்: இந்தியா-அமெரிக்கா உறவில் புதிய திருப்பம்; மோடி - ட்ரம்ப் உறுதி

இந்தியன் எக்ஸ்பிரஸ்

தணிந்தது வர்த்தகப் போர்: இந்தியா-அமெரிக்கா உறவில் புதிய திருப்பம்; மோடி - ட்ரம்ப் உறுதி

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் மோடி பதில் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகளை விரைவாக முடிக்க இரு தரப்பும் முயன்று வருகின்றன.

இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்: டிரம்ப் - மோடி அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்துகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளின் குழுக்களும் உழைத்து வருவதாகத் தெரிவித்தார்.

டிரம்ப்பின் கோரிக்கையை வரவேற்ற பிரதமர் மோடி, இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள். இந்தியா - அமெரிக்க உறவின் வரம்பற்ற திறனைத் வளர்ப்பதற்கு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வழி வகுக்கும் என்று நம்புகிறேன். விரைவில் ட்ரம்ப்புடன் பேச ஆவலுடன் உள்ளேன்.

இந்த பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. அதிபர் டிரம்ப்புடன் பேசவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது சமூக வலைத்தளமான 'ட்ரூத் சோஷியல்'-ல், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வரும் வாரங்களில் எனது நண்பரான மோடியுடன் பேச நான் காத்திருக்கிறேன். 2 பெரிய நாடுகளுக்கும் இடையில் ஒரு வெற்றிகரமான முடிவு கிடைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

"இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சிறப்பு உறவு"

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கியதற்கு 25% கூடுதல் வரி விதித்த ட்ரம்ப், செப்.6 அன்று தனது நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டினார். அவர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் "சிறப்பு உறவு" இருப்பதாகவும், "கவலைப்பட ஒன்றுமில்லை" என்றும் கூறியிருந்தார்.

இதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிரதமர் மோடி, "அதிபர் ட்ரம்ப்பின் உணர்வுகள், நமது உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டை நான் ஆழமாகப் பாராட்டுகிறேன். அதை முழுமையாகப் பிரதிபலிக்கிறேன். இந்தியா-அமெரிக்கா ஒரு நேர்மறையான மற்றும் முன்னோக்கிய விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன" என்று பதிலளித்திருந்தார். ஏப்ரலில் இந்தியப் பொருட்களுக்கு 25% வரியும், ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக கூடுதல் 25% வரியும் விதித்த ட்ரம்ப்பின் அறிவிப்புக்குப் பிறகு, மோடி இந்த விவகாரத்தில் நேரடியாகப் பதிலளித்தது இதுவே முதல் முறையாகும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

https://tamil.indianexpress.com/international/india-us-are-close-friends-pm-modi-says-teams-working-to-conclude-trade-discussions-10067222

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு