1,751 கோடி தேர்தல் பத்திரங்கள்! ரூ3.7 லட்சம் கோடி காண்டிராக்டுகள்!
அறம் இணைய இதழ்
பாஜகவின் “புனிதர்” வேடம் கலைந்து, கிரிமினல் தோற்றம் தேர்தல் பத்திர விவகாரத்தில் அம்பலப்பட்டுள்ளது. லஞ்சத்தையே சட்ட பூர்வமாக்கி, பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதை நியாயப்படுத்தி சரித்திரம் படைத்துள்ளது! எதிர்கட்சிகளை முடக்கி, குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெறத் துடிக்கிறது;
ஊழலுக்கு எதிரான இந்தியா – India Against Corruption- என்ற போராட்டத்தில் ஊடுருவி வளைத்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்தது பாரதீய ஜனதா கட்சி.
‘ நான் லஞ்சம் வாங்க மாட்டேன், யாரையும் லஞ்சம் வாங்கவும் அனுமதிக்க மாட்டேன் ‘ என்று வீர வசனம் பேசி, மோடி இந்திய மக்களை தனக்கு வாக்களிக்க வேண்டினார்.
ஆனால் என்ன நடந்தது?
அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்கு பெற்று வெற்றி பெற கண்டவர்களிடமும் நன்கொடை பெறுவதால் தேர்தலில் கறுப்பு பணமும் , கள்ள பணமும் பெருமளவு ஊடுருவி, இந்திய அரசியலரங்கின் ஊழலின் ஊற்றுக் கண்ணாக தேர்தல் நன்கொடைகள் திகழ்கின்றன!
பிப்ரவரி மாதம் உச்ச நீதி மன்றம், ”மோடி அரசின் தேர்தல் நன்கொடை பத்திர திட்டத்தை செல்லாது” எனத் தீர்ப்பளித்தது. ”இத் திட்டம் லஞ்சம் பெறுவதை சட்டபூர்வமாகும் திட்டம்! எனவே, இது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என உச்ச நீதிமன்றம் கூறியது, மோடியின் முகத்திரையும் கிழிந்தது!
விவரங்களை கேட்ட பொழுது, இந்திய மக்களின் பொதுச் சொத்தான ஸ்டேட் வங்கி அந்த விவரங்களை ( ஒன்றிய அரசின்) அழுத்தத்தால் தர மறுத்தது, நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்ற பயமோ, பொதுத்துறையில் உள்ள வங்கியின் “மாண்பு” உடைபடுமே என்ற விவஸ்தை கூட இல்லாமல் முரண்டு பிடித்தது. இன்று இந்திய மக்களின் நம்பிக்கையை , நன்மதிப்பை இழந்து நிற்கிறது ஸ்டேட் வங்கி.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் சில, நம்மை பயமுறுத்துகின்றன.
# 37 நிறுவனங்கள் பா ஜ க விற்கு 1,751 கோடி பெறுமான பத்திரங்களை கொடுத்துள்ளன.
இவற்றை கொடுத்ததன் மூலம் 3.7 லட்சம் கோடி ரூபாய் பெறுமான 179 அரசாங்க ஒப்பந்தங்களை பெற்று அபார பலன்களை அடைந்துள்ளன.
# 41 நிறுவனங்கள், ஒன்றிய அரசின் அமைப்புகளான சி.பி.ஐ, ஐ.டி., மற்றும் இ.டி., ஆகியவற்றால் சோதனைக்கும், ரெய்டுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன! ரெய்டின் பலனாக ரூ 2,471 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவானது நன்கொடை பெற்றுள்ளது!
# 30 போலி நிறுவனங்கள் ( Shell Companies) சுமார் 1,50 கோடி ரூபாய் பா ஜ க விற்கு கொடுத்துள்ளன என்ற விவரங்கள் இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இப்படி தங்கள் நலனுக்காக பணத்தை அள்ளி வீசும் பணமுதலைகளைப் பற்றி வாக்களிக்கும் மக்கள் எந்த விவரமும் தெரிந்து கொள்ளக் கூடாது , ‘தான் யாருக்காக இருக்கிறோம்’ என்ற அடிப்படை உண்மை அம்பலப்படக்கூடாது என்ற கிரிமினல் எண்ணத்தின் வெளிப்பாடே, அருண் ஜெய்ட்லீயின் மூளையில் உதித்து மோடியால் 2018ல் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திர திட்டமாகும்!
சமூகத்தில் நடக்கும் தவறுகளையும் குற்றங்களையும் தடுக்கவும் களையவும் காவல்துறையும், புலனாய்வு அமைப்புகளும் உள்ளன. வணிகச் சூழலில் ஒழுங்கையும், நெறிமுறைகளையும் அமல்படுத்த கண்காணிக்க வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் உள்ளன.
ஆனால், இவ்வமைப்புகள் யாவும் சமூக ஒழுங்கை நிலைநாட்டுவதில்லை, அரசமைப்பு நேர்மையை உறுதி செய்வதில்லை, குற்றவாளிகளை இனங்கண்டு, தீர விசாரித்து தண்டனை பெற்றுத் தருவதில்லை.
மாறாக குற்றமிழைக்கும் நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் ( தேர்தல் பத்திரங்கள்) பெற்றுக் கொண்டு அவர்களை விட்டு விடுவதும், அரசு ஒப்பந்தங்களை கையூட்டு (பத்திரங்கள்) பெற்றுக் கொண்டு அளிப்பதும், ஒப்பந்த பணிகளில் விபத்தோ, கோளாறோ நடந்தால் அதற்கு தண்டிக்காமல் லஞ்சம் பெற்றுக் கொண்டு விட்டுவிடுவதும் இன்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. (உத்தரகாண்ட் சுரங்கப் பாதை விபத்து, குஜராத் மோர்பி பால விபத்து)
இத்தகைய ஈனச் செயல்களில் தான் இன்றுள்ள சி.பி.ஐ.,ஐ.டி., மற்றும் இ. டி ஆகிய துறைகள் பாஜக அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இது தவிர, எதிர்கட்சியை சார்ந்த சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி, பிளாக் மெயில் செய்து, அல்லது பண ஆசை, பதவி ஆசை காட்டி தூக்கும் வேலையை இவ்வமைப்புகள் செய்கின்றன.
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை கவிழ்க்க இவ்வமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்கட்சிகளின் ஆட்சியில் உள்ள அமைச்சர்களையும் , ஹேமந்த சோரென், அரவிந்த் கெஜ்ரிவால் என இரண்டு முதலமைச்சர்களையும் சி.பி.ஐ, இ.டி போன்றவற்றைக் கொண்டு சிறை பிடித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.
சார்பு நிலை இன்றி நடுநிலையாக இருந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அமைப்புகள், இன்று சாரமிழந்து ஆளுங்கட்சியின் ஏவல் நாய்களாக மாறியுள்ளன.
லோக்பால் அமைப்பு வேண்டும் என்று அன்று (2013ல்) அண்ணா ஹசாரே , பிரசாந்த் பூஷன், கெஜ்ரிவால் ,யோகேந்திர யாதவ் போன்றோர் நடத்திய போராட்டத்தால் ஆட்சிக்கு வந்த பா ஜ க இன்று லோக்பாலை பற்றி பேசுவது கூட கிடையாது. சி.பி.ஐ மற்றும் சி.வி.சி போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று கூவியவர்கள் இன்று சி.பி.ஐ
மட்டுமின்றி வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை சோரம் போகச் செய்துள்ளனர் .
தேர்தல் பத்திர முறைகேடுகளை இன்று யார் விசாரிக்க முடியும்?
புலனாய்வு அமைப்புகளையே புலனாய்வு செய்ய வேண்டிய வேலை இதுவாக இருக்கையில் முறைகேடுகளை நடுநிலையாக இருந்து யார் விசாரணை செய்வர்? என்ற கேள்வி இன்று இந்தியாவில் பூதாகரமாகத் தோன்றியுள்ளது.
நடுநிலை தவறாமல் சுதந்திரமான தேர்தல்களை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் இன்று அரசமைப்பு பொறுபில் உள்ள முதல் வரை ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பு அத்து மீறி கைது செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
சட்ட விரோதம் என தீர்ப்பளிக்கப்பட்ட பணத்தின் மூலம் மட்டுமே 8,000 கோடிக்கு மேல் குவித்து வைத்திருக்கும் பாஜ கட்சி ஒருபுறம்,
வெறும் 14 லட்ச ரூபாய் கணக்கு வித்தியாசத்திற்கு காங்கிரஸிடம் 200 கோடி அபராதம் வசூலிக்கும் வருமான வரித்துறை, அதற்காக , இயற்கை நீதிக்கு மாறாக அக் கட்சியின் அனைத்து கணக்குகளையும் தேர்தல் நேரத்தில் முடக்குவதை வேடிக்கை பார்க்கிறது தேர்தல் ஆணையம். அதை அனுமதிக்கிறது நீதி மன்றம்!
பல மாநிலங்களில் தலைமைச் செயலர், தலைமைக் காவலர் , அரசு அதிகாரிகள் ஆகியோரை பந்தாடும் தேர்தல் ஆணையம் வருமான வரித்துறையையும்,அமலாக்கத்துறையையும் கண்டு கொள்ள வேண்டுமல்லவா?
அரசமைப்பு அதிகாரத்தில் உள்ள ஒரு முதல்வரை தேர்தல் சமயத்தில் ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பு கைது செய்வது சாதாரண நிகழ்வு அல்ல, அதைப் பற்றி குறைந்த பட்சம் ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கலந்தாலோசிக்க தேர்தல் ஆணையம் ஏன் முன்வரவில்லை.
இந்திய நீதி மன்றங்கள் கடந்த எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகள் செயல்படும் விதம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. Bail is the norm, Jail is an exception பிணை கொடுப்பதே வளமையான நடைமுறை. சிறைக்கு அனுப்புவது அரிதான செயல் என்ற கொள்கை பெரிதும் பேசப்படுகிறதே யொழிய, இந்திய நீதி மன்றங்கள் -கீழமர்வு நீதிமன்றங்கள் முதல் உயர்நீதி மற்றும் உச்சநீதி மன்றங்கள் வரை – பிணை கொடுக்கும் முறை ஒரே சீராக இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை உடனுக்குடன் விசாரிக்க மறுப்பதும், தனி நபர் உரிமை, பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் போன்ற விஷயங்களில் அத்து மீறும் அரசின் ஜனநாயக விரோதப் போக்கை கடிவாளம் போட்டு நிறுத்தும் அதிகாரம் இருந்தும் அதை கையிலெடுக்க நீதிமன்றங்கள் தயங்குவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
மாறாக, ஆட்சியாளர்களின் எதேச்சதிகாரத்தை முட்டுக் கொடுக்கும் செயல் ஆகும்.
ஜனநாயகத்தின் ஆணிவேர்களாக இருக்கும் நீதி மன்றங்கள் , சுய அதிகாரமுடைய அமைப்புகள், சார்புநிலையற்ற காவல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இன்று நிலை குலைந்து போயிருக்கிறது. இந்த சீர்கேட்டிற்கான காரணம், மோடி கும்பலின் பத்தாண்டு கால ஆட்சி தான்.
இந்த நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்திருப்பது இந்திய அரசியல் கட்சிகளுக்கு பாஜக அரசு விடுத்துள்ள எச்சரிக்கை என்றே கூற வேண்டும்.
இதன் மூலம் மூலம் பாஜகவிற்கு அரசியல்ரீதியாக பின்னடைவுதானே ஏற்படும் என சிலரும், பாஜக இத்துடன் காலி என சில தமிழ் ஊடகத்தினரும் கூறுகின்றனர்.
ஆனால், தங்களை யாராலும் எதிர்க்க முடியாது, மீறி முயற்சித்தால் கெஜ்ரிவால் நிலைதான் உங்களுக்கும் என எதிர்கட்சியை சார்ந்த முதல்வர்களுக்கும், தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கின்றனர் ஆட்சியாளர்கள் என்றே நமக்கு தோன்றுகிறது.
தேர்தல்களில் பாஜகவினர், தாங்கள் விரும்பும் இலக்கை எப்படியும் எட்ட, எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருப்பதை நாட்டு மக்கள் எப்படி எதிர் கொள்ளப் போகின்றனர்?
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
அறம் இணைய இதழ்
aramonline.in /17243/electoral-bonds-bjp-gaining/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு