இடது முன்னணி அரசின் இதயத்தை உலுக்கும் ஆஷா பணியாளர்கள்!

அறம் இணைய இதழ்

இடது முன்னணி அரசின் இதயத்தை உலுக்கும் ஆஷா பணியாளர்கள்!

எட்டு மாதங்களுக்கு மேல் அசராமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ஆஷா சுகாதார பணியாளர்கள். இந்த போராட்டம் ஒட்டுமொத்த கேரளாவின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. ”12 மணி நேர வேலைக்கு சம்பளம் ஏழாயிரம் போதாது” என போராடும் பெண்களை காவல்துறை கைது செய்தும் போராட்டம் ஓயாதது இடது முன்னணி அரசுக்கு தலைவலியாகி உள்ளது;

அடிப்படையில் இவர்கள் அடித்தட்டு உழைப்பாளிகள். மக்களின் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதற்காக நேரம் காலம் பார்க்காமல் சேவை செய்பவர்கள் தான் ஆஷா பணியாளர்கள். இந்தப் பணிக்கு பத்தாம் வகுப்பு அடிப்படை கல்வித் தகுதியாகும். 25 தொடங்கி 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகம் பணியாற்றுகிறார்கள். அதிலும் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் ஆகியோர் அதிகமாக வேலை செய்யும் துறையாக இது உள்ளது. குறிப்பாக குடும்பத்தின் முழு பொருளாதாரச் சுமையையும் தாங்கக் கூடிய தாய்மார்களே இவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ASHA-க்கள் நோய்த்தடுப்பு களப் பணியாளர்கள்.  2006 முதல், கிராமங்கள் தொடங்கி நகர்ப்புறங்கள் வரை சுகாதாரப் பராமரிப்பு பணிகளை ASHA-க்கள் செய்து வருகின்றனர். அவர்கள் கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள், வீடுகளில் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கண்காணிக்கிறார்கள், குழந்தை தடுப்பூசிகளை உறுதி செய்கிறார்கள், காசநோய் நோயாளிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்கிறார்கள், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வைப் பரப்புகிறார்கள். கூடுதலாக, அவர்கள் அடிப்படை சுகாதாரம், அத்தியாவசிய மருந்துகள், முதலுதவி மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு அறிக்கைகளை வழங்குகிறார்கள்.

எதற்கும் நேரமில்லாத அளவுக்கு வேலைப் பளு.  காலையில் விழித்தெழுந்தால் ஓய்வில்லாமல் குடும்பத்தை பராமரிக்கவும் நேரமின்றி பனிரெண்டு மணி நேரம் வேலை செய்கிறார்கள்.

நோயாளிகள் பற்றிய தரவைச் சேகரித்து,உதவுவதோடு பணிகள் முடிவதில்லை.  பின்னர் வீட்டிற்கு வந்து அதை செயலிகளில் பதிவேற்ற வேண்டும்.   நோயர்களின் ஆதார் எண்கள், தொழில், வயது, பாலினம், மருத்துவ வரலாறு, பாலியல் ஆரோக்கியம், மாதவிடாய் சுழற்சிகள், மது அருந்துதல், புகையிலை பயன்பாடு, இரவு வியர்வை, எடை இழப்பு, சுவாசப் பிரச்சினைகள் மற்றும் மன ஆரோக்கியம். ..என ஒவ்வொன்றாக பதிவிடுவதற்குள் களைத்து போகிறார்கள்.  தூங்குவதற்கே நேரம் கிடைக்காத உழைப்பை தந்தும் இவர்களை தொழிலாளர்களாக கூட கேரள அரசு அங்கீகரிக்க மறுக்கிறது. மாறாக, தன்னார்வலர்கள் என்று சொல்லி தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது என்கிறது.

ஒரு நாளைக்கு ரூ. 233 அல்லது சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்தச் சம்பளத்தை மாதாந்திர அளவில் பார்த்தால் ஏழாயிரம் தான் வருகிறது. இதில் எப்படி குடும்பம் நடத்துவது? பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியுமா? துணிமணி வாங்க முடியுமா?  தரவுகள் தருவதற்காக பயன்படுத்தப்படும் கைப்பேசி பில் செலவுகளும், போக்குவரத்து செலவுகளும் எங்களால் சமாளிக்க முடியவில்லை…எனக் கூறும் இவர்கள் பல்லாண்டுகளாக கேட்டுப் பார்த்தும் பயனின்றி போனதால், போராட்டத்தில் குதித்துவிட்டனர்.

இந்த ஆண்டு பிப்ரவரி 10 முதல், தலைமை செயலகத்திற்கு வெளியே உள்ள நடைபாதையே இவர்களின் போராட்டக் களமானது. பெண்கள் இங்கேயே தார்பாய்க்குள் தூங்குகிறார்கள். சமூக ஆர்வலர்கள் தரும் உணவு மற்றும் மருந்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். சிவில் சமூகக் குழுக்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வருகை தந்து இஒவர்களிடையே பேசிச் செல்கிறார்கள். வயநாட்டுக்கு வருகை தந்த பிரியங்கா காந்தி கூட, ஆஷாக்களை சந்தித்து “பொது சுகாதாரத்தின் உண்மையான முதுகெலும்பு” என்று கனிவோடு பேசினார். பல நாட்கள் போராட்டம் தொடர்பாக மெளனமாக இருந்த முதல்வர் பினராய் விஜயன் கண் துடைப்பாக ஒரு கமிட்டி போட்டார். ஆனால், ஆஷாக்கள் மீதான அவதூறுகள் ஆளும் தரப்பால் பரப்பட்ட வண்ணம் உள்ளது.

இவர்களின் கோரிக்கை மிக, மிக நியாயமானது;

# மாதச் சம்பளம்  ₹21,000. வேண்டும்.

# நிரந்தர ஊழியர்களாக அங்கீகாரம் தர வேண்டும்.

# ஓடாய் உழைத்து ஓயும் காலத்தில் ₹5 லட்சம் ஓய்வூதிய பணிக் கொடையாக வேண்டும்.

# மருத்துவக் காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு வசதிகள் வேண்டும்.

இவை நிறைவேற்றவே இயலாத கோரிக்கைகள் அல்ல. ஆனால், இவற்றை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? என்பதற்கு இடது முன்னணி அரசு விளக்கமளித்துள்ளது.

’’2023-24 நிதியாண்டிற்கு மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட ரூ.826.02 கோடியில், ரூ.189.15 கோடி மட்டுமே பெறப்பட்டது.  ஆஷா பணியாளர்களுக்கான ஊக்கத் தொகைக்கான நிதி உட்பட ரூ.636.88 கோடி வழங்கப்படாமல் இருக்கிறது. ஒன்றிய அரசு ஆஷா பணியாளர்களுக்கு என வெறும் இரண்டாயிரமே தருகிறது. இவர்கள் ஊதியத்தில் மத்திய அரசு 60 சதவிகிதம் தர வேண்டும். மாநில அரசு 40 சதவிகிதம் தான் தர வேண்டும். ஆனால், நாங்கள் தான் மிக அதிகமாகத் தருகிறோம். 26,000  ஆஷா சுகாதார தன்னார்வலர்களுக்கான நிதியை மத்திய அரசு தன் பங்கை தந்தால் சரியாக இருக்கும்…’’ என்கிறது, இடது முன்னணி அரசு.

மத்திய அரசு மாற்றான் தாய் மனப் பான்மை கொண்டதாக உள்ளது என்பது உண்மை. அதே சமயம் வேலை பார்ப்பது இந்த மண்ணின் மக்கள். அவர்களின் வேலையும் இந்த மண்ணின் மக்களுக்கானதே. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இவர்களுக்கான வாழத் தகுந்த சம்பளத்தை நிர்ணயித்து, உத்திரவாதப்படுத்த வேண்டியது இடது முன்னணி அரசு தான். போராடும் உழைப்பாளிகளை காவல்துறையைக் கொண்டு ஒடுக்குவது இடது முன்னணி அரசு என்று சொல்வதற்கு இலக்கணமாகாது.

(சாவித்திரி கண்ணன்)

அறம் இணைய இதழ்

https://aramonline.in/23090/asha-workers-struggle-in-kerala/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு