உயர் கல்வித் தளத்தில் இத்தனை பித்தலாட்டமா?

அறம்.இணைய இதழ்

உயர் கல்வித் தளத்தில் இத்தனை பித்தலாட்டமா?

250 மடங்கு கட்டண உயர்வு! ஏழை, எளிய அரசுக் கல்லூரி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போட்டுள்ளது சென்னை பல்கலைக் கழகம். சமத்துவம், சமூக நீதி, சனாதான எதிர்ப்பு பேசும் திராவிட இயக்க ஆட்சியில் முதல் தலைமுறை மாணவர்களை முளையிலேயே கிள்ளி எரிவதை புரிந்து கொள்ள முடியவில்லை..!

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னைப் பல்கலைக்கழகம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அடிக்கடி செய்திகளில் வருகிறது. தற்போது சத்தமில்லாமல் ஒரு அநியாயத்தை அப் பல்கலைக்கழகம் செய்து வருகிறது. முனைவர் பட்ட மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கும் போது செலுத்த வேண்டிய கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். முழு நேர முனைவர் பட்ட ஆய்வு செய்யும் மாணவர்கள் இதுவரை ரூ.1௦௦ செலுத்தி ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து வந்தார்கள். இப்போது இந்த ரூ.1௦௦ ஐ ரூ.25,௦௦௦ ஆக உயர்த்தி இருக்கிறார்கள். ரூ.1௦௦ எங்கே இருக்கிறது? ரூ. 25,௦௦௦ எங்கே இருக்கிறது? கிட்டத்தட்ட 25௦ மடங்கு.

ஒரு அரசுப்பல்கலைக்கழகம் இந்த மாதிரி அநீதியில் ஈடுபடுமா? அதே போல் பகுதி நேர முனைவர் பட்ட மாணவர்கள் இதுவரை ரூ.5௦௦௦ ஐ ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் போது செலுத்தி வந்தார்கள். ஆனால், தற்போது இது ரூ.35,௦௦௦ ஆக உயர்த்தி இருக்கிறார்கள். ரூ.5௦௦௦ எங்கே இருக்கிறது? ரூ.35,௦௦௦ எங்கே இருக்கிறது? இதில் கொடுமை என்னவென்றால், இவ்வளவு மடங்கு கட்டணத்தைஉயர்த்தியிருக்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாக இணைய தளத்தில் போட்டால் பிரச்சினை வரும் என்று தெரிந்து இணைய தளத்தில் போடாமல் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கும் மாணவர்களிடம் இந்த புதிய கட்டணத்தை செலுத்தினால் தான் உங்கள் ஆய்வுக் கட்டுரையை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று வற்புறுத்தி பணத்தைக் கட்ட சொல்லி, பேருக்கு ஒரு ரசீது கொடுக்கிறார்கள்.

தமிழகத்தில் தான் உயர்கல்வி பயில்வோர் அதிகம். அதிலும் முனைவர் பட்ட ஆராய்ச்சி பெறுவோரும் தமிழகத்தில் அதிகம். காரணம், இங்கே அரசு கல்வி நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கி வருவது தான். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு இனி சாமானியனும், முதல் தலைமுறை மாணவர்களும் பி.எச்.டி எனப்படும் முனைவர் பட்டம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் இருப்பதாக தெரிகிறது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணத்தை வசதி உள்ள மாணவர்கள் மிக எளிதாக கட்டி விடுவார்கள். ஆனால் எளிய, வசதியில்லாத, முதல் தலை முறை, மாணவர்களால் எவ்வாறு கட்ட இயலும்? அவர்கள் பி.எச்.டி ஆய்வுக்கு வருவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து விடுவார்கள். இதைத்தான் இந்த சமூக நீதி அரசு விரும்புகிறதா?

கட்டண எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களிடம் ஊடகத்தினர் பேட்டி!

சென்னை நகரத்தில் பல்வேறு அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் ஆடவர் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி என பல்வேறு கல்லூரிகள் உள்ளன. இதில் எந்தப் பின்னணி கொண்ட மாணவர்கள் பயில்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இக் கல்லூரிகளில் உள்ள முனைவர் பட்ட மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். இப்படிப்பட்ட மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து முனைவர் பட்டம் வரை வருவதே கடினமாக இருக்கும் சூழ்நிலையில், இந்த புதிய கட்டண உயர்வு அவர்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.

அதே போல் பகுதி நேர முனைவர் பட்டப்படிப்பு பயில்பவர்கள் பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் மிகக்குறைந்த சம்பளத்துக்கு உதவி பேராசிரியர்களாக வேலை பார்ப்பவர்கள் தான். அவர்களின் ஒரு மாத சம்பளமே ரூ.35,௦௦௦ இருக்காது. இப்போது அவர்களும் இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டக் கட்டணத்தை கட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள். ‘ஏழை, எளிய மாணவர்களுக்கு டாக்டரேட் ஆசை வரலாமா? அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டால் ஆசிரியர், பேராசிரியராகும் தகுதிக்கு ஆப்பு வைத்து விடலாம்’ என்ற நோக்கமா? தெரியவில்லை.

”பல்கலைக்கழகம் நிதிச்சுமையில் இருக்கிறது. கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது” என்று சென்னை பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படியே வைத்துக் கொண்டாலும், இத்தனை மடங்கு கட்டணத்தை உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம்? இன்னும் சொல்லப் போனால் கட்டண உயர்வை நியாயமான அளவில் உயர்த்தினால் முனைவர் பட்டமாணவர்கள் கட்டத் தயாராக இருப்பதாகவே கூறுகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே பல்வேறு முனைவர் பட்ட மாணவர்கள் வேறு வழியில்லாமல் தங்களையே நொந்து கொண்டு இவ்வளவு மடங்கு கட்டணத்தைக் கட்டியிருக்கிறார்கள். ஒரு தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் செய்யும் காரியத்தை அரசுப் பல்கலைக்கழகமே செய்தால் இந்தக்  கொடுமையை எங்கு போய் சொல்வது?

உண்மையில் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு தார்மீக அறம் இருந்தால் இந்தக் கட்டண உயர்வை அதிகாரப்பூர்வமாக தங்களது இணையதளத்தில் போட வேண்டுமல்லவா? இணைய தளத்தில் இன்னும் பழைய கட்டணவிகிதமே இருக்கிறது. ஆனால் மாணவர்களிடம் வாங்குவதோ உயர்த்தப்பட்டக் கட்டணம். அப்படி என்றால், சட்டரீதியாக தவறல்லவா? இக் கட்டண உயர்வை எதிர்த்து இரு வாரங்களுக்கும் முன்பு வெவ்வேறு கல்லூரிகளில் பயிலும் முனைவர் பட்ட மாணவர்கள் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். உடனே காவல்துறையை வைத்து மிரட்டி அனுப்பி விட்டார்கள்.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் பல்கலைக் கழக துணைவேந்தர் கவுரியைக் கேட்ட போது, ”கட்டண உயர்வு குறித்து எந்த ஒருகோப்பிலும் நான் கையெழுத்து இடவில்லை. அப்படி ஒரு வேளை இருந்தால் நான் விசாரிக்கிறேன்” என்று பதில் கூறி சமாளிக்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கு விசாரித்துக் கொண்டே இருப்பார்? எல்லா மாணவர்களும் கடனை, உடனை வாங்கி அழுது கொண்டே கட்டி முடிக்கும் வரை இப்படியே சமாளிக்கலாம் என்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகா? இது கடைந்தெடுத்த பித்தலாட்டமல்லவா? ”படித்தவன் சூதும், வாதும் செய்தால், போவான்,போவான் ஐயோவெனப் போவான்” என பாரதி சொல்லியது பலிக்கட்டும்.

இச்செய்தி பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்தது. பத்திரிகையாளர்களிடம் பழைய கட்டணம் தான் வாங்குகிறோம் என அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள். ஆனால், இன்று வரை புதிய கட்டணத்தைத் தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது துணைவேந்தரும் ஒய்வு பெற்று விட்டார். இன்னும் பல மாதங்களுக்கு புதிய துணைவேந்தர் நியமனம் நடக்காது. இந்த சூழ்நிலையில் யாரிடம் போய் இப் பிரச்சினையை முறையிடுவது?

இந்தக் கட்டண உயர்வு அரசின் உயர் கல்வித் துறையின் அனுமதியோடு தான் நடந்ததா? உயர்கல்வி அமைச்சருக்கு இந்த பிரச்சினை தெரியுமா? வசதியில்லாதவர்களை, முதல் தலைமுறை பட்டதாரிகளை, தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து முனைவர் பட்ட கனவோடு வரும் மாணவர்களை இனிமேல் முனைவர் பட்டம் வாங்க வராதே என்று விரட்டியடிக்கும் இந்தக் கட்டண உயர்வை அரசு உடனே தலையிட்டு தீர்க்க வேண்டும். குறைந்த பட்சம் நியாயமான அளவில் கட்டண உயர்வை அறிவிக்க வேண்டும்.

ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. மாணவர்கள் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதன் பின்பும் இந்தக் கட்டணக் கொள்ளை கமுக்கமாக நடக்கிறது என்றால், உயர் கல்வித் துறையை திரை மறைவில் இருந்து ஆட்டுவிப்பது யார்? ஆளுநர் ஆர்.என்.ரவியா?  மத்திய பாஜக ஆட்சியாளர்களா..?

அஜித கேச கம்பளன்

அறம் இணைய இதழ்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு