கர்ண கொடூர கனிமவளக் கொள்ளை! சூறையாடப்படும் இயற்கை வளம்!

அறம் இணைய இதழ்

கர்ண கொடூர கனிமவளக் கொள்ளை! சூறையாடப்படும் இயற்கை வளம்!

திருடுவதையே தியானமாகவும், கொள்ளை அடிப்பதையே கொள்கையாகவும் கொண்ட லட்சியவாதிகளால் மட்டுமே இத்தகைய அசுரத்தனமான இயற்கை வளச் சுரண்டல் சாதனைகளை நிகழ்த்த முடியும்! இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தாலும், தமிழகம் இழந்த இயற்கை வளப் பாதிப்புகளை சரி செய்ய முடியாது;

250 வருட பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் கூட இவ்வளவு கொடூர சுரண்டல் நடந்ததில்லை. ”அதெல்லாம் ஒன்றுமேயில்லை” என்பது போல,  திராவிட  மாடல் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டனர்.

பொறுமைக்கு பேர் இன்னும் பூமா தேவி எவ்வளவு  பொறுப்பாளோ, தெரியவில்லை! ஆனால், அவள் பொங்கி எழும் நாள் நாம் அனைவருமே புதையுண்டு போவோம்…!

தமிழகத்திலே ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் சட்டவிரோத மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட என இரு வகைகளில் குவாரிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு, வரைமுறையற்ற இயற்கை வளச் சுரண்டல்கள் நாளும், பொழுதும் அரங்கேறி வருகின்றன. இதை தட்டிக் கேட்டு தடுக்கும் அறச் சீற்றத்தை மற்ற அரசியல் கட்சிகளும் தொலைத்து விட்டன என்பது தான் கொடுமை.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற வகையில் 1,845 கருங்கல் குவாரிகள் இயங்கிக் கொண்டுள்ளன. அரசு அங்கீகாரமின்றி ஆட்சியாளர் அனுசரணையுடன் சுமார் 2,000 கருங்கல் குவாரிகள் இயங்கிக் கொண்டுள்ளன.

இவற்றை தடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் சட்ட விரோத கல்குவரிகள் இருப்பதை திமுக அரசு ஏற்றுக் கொண்டு, ”நாங்கள் ஒன்றும் சும்மா இல்லையாக்கும். இதோ பாருங்க அவங்க மேல் 135 வழக்குகள் பதிந்துள்ளோம்…” என டிசம்பர் 2025 ஆம் ஆண்டு கூறியது! அதென்ன வழக்குகள், அபராதங்கள்? என விசாரித்த நீதிபதி அதிர்ந்து தான் போனார்! ”இதென்னங்க 5 கோடி அளவுக்கு கனிம வளத்தை அள்ளியவர்களுக்கு ஐந்து லட்சம் அபராதம் விதித்து முறைகேடுகள் தொடர அனுமதித்துள்ளீர்களே..!” என்றார்.

உண்மை! அந்த வழிமுறையிலேயே கடந்த ஐந்தாண்டு ஆட்சி நடந்துள்ளது. ஆண்டு தோறும் சுமார் 80,000 கோடிகள் மதிப்பீட்டில் கனிம வளக் கொள்ளை கனஜோராக நடந்து வருகிறது.

இதோ தற்போது ஆட்சி முடிவுறும் தருவாயிலும் ஒரு அதிரடி அரசாணையால் பல ஆயிரம் கோடிகளை தன் சொந்த கஜானாவிற்கு  திசைமாற்றிக் கொண்டது, திராவிட மாடல் அரசு.

ஆட்சி முடிய சுமார் ஒன்றரை மாதங்களே உள்ளன. தேர்தல் அறிவிப்பு ஒரு சில நாட்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் கூட படு அவசரமாக ஆறு மாவட்டங்களில் 50 இடங்களை புதிதாக அடையாளம் கண்டு, குவாரிகளை குத்தகைக்குவிட ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது திமுக அரசு. ஏற்கனவே இருக்கின்ற குவாரிகளால் விவசாய நிலங்கள் பாழ்பட்டு, நீராதாரங்கள் சேதாரமுற்று, வைக்கப்படும் வெடிகளால் வீடுகள் விரிசல்விட்டு…என பொதுமக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வரும் வேளையில், ஆட்சியில் இருந்து இறங்கும் போதும் கூட ஒரு அக்கிரமத்தை அரங்கேற்றித் தான் இறங்க வேண்டுமா?

இதுமட்டுமில்லை, ஒன் டைம் ரெகுலேஷன் ஸ்கீம் என ஒரு அரசாணை! இது என்னவென்றால், கனிம வளக் கொள்ளைக்கு பாவமன்னிப்பு வழங்கலாம். அதாவது, திருடப்பட்ட ஒவ்வொரு டன் கருங்கல்லுக்கும் வெறும் 75 ரூபாய் அபராதம் செலுத்தினால் போதுமானதாம். இதுவே அங்கீகாரமற்ற குவாரி என்றால் 150 ரூபாய் போதுமானதாம். இதனால் அரசுக்கு 20,000 கோடிகள் இழப்பு என்கிறது அறப்போர் இயக்கம்.

இந்த அரசாணை எதற்கு? ஒவ்வொரு குவாரிகளிலும் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் பல மடங்கு அள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் ஆழமாகவும், அகலமாகவும்  இயற்கை வளச் சுரண்டல்கள் நடந்ததை குறிப்பிட்டு சமூக ஆர்வலர்கள் போராடி வந்ததையடுத்து, சரி, சரி அப்படியா? அதை முறைப்படுத்திவிடுகிறோம் என்ற பெயரில்  பல ஆயிரம் கோடி அபராதம் விட்டுக் கொடுக்கப்பட்டு இத்தூனுண்டு அபராதம் விதித்து, இமாலய முறைகேட்டை செய்து சொந்த கஜானாவை நிரப்பிக் கொண்டனர் ஆட்சியாளர்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் கனிம வளக் கொள்ளையில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். நெல்லை மாவட்டம் என்றால், அமைச்சர் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், சபா நாயக அப்பாவு ஆகியோர் ஆனவரை அள்ளிச் சுருட்டுகின்றனர். இவர்களுக்கெல்லாம் உள்ளூர் மக்கள் மத்தியில் கடுகளவும் மரியாதை இல்லை.

பள்ளத்தாக்கான நெல்லை நிலப் பகுதி குவாரி

சமீபத்தில் சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரத்தில் சுமார் 25 குவாரிகள் இரவுபகலாக நடத்தும் கனிவளக் கொள்ளையால் பல குவாரிகளில் 50 லட்சம் கன மீட்டருக்கும் அதிகமாக தோண்டப்பட்டுள்ளதையும், அதற்கு அப்பாவு மாவட்ட ஆட்சியரை நிர்பந்தித்து தடையற்ற கொள்ளைக்கு துணை போவதையும் அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தி இருந்தது.

அதே போல் மதுரை மாவட்டம் என்றால், அமைச்சர் மூர்த்தி அளவிடற்கரிய கனிம வளக் கொள்ளைகளை கர்ம சிரத்தையாக அரங்கேற்றி வருகிறார். குறிப்பாக மதுரை திருமங்கலம் பகுதியில் ஆறு கிராமங்களில் கல்குவாரிகளால் கர்ண கொடூரமான சித்திரவதைகளை மக்கள் அனுபவித்து வருவதை நியூஸ் தமிழ் தொலைகாட்சி அம்பலப்படுத்தியது. தமிழகத்தின் கனிம வளக் கொள்ளைகளை விரிவாக களம் கண்டு உயிரை பணயம் வைத்து நிறைய காட்சிப் பதிவுகளை வெளியிட்ட தொலைகாட்சியாக நியூஸ் தமிழ் 24 X 7 உள்ளது.

அதுவும் பொன்னம்பலம் கிராமத்தில் உள்ள மக்கள் அதிபயங்கர வெடிச் சத்தத்தால் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. நடந்து கொண்டிருப்பவர்கள் அதிரும் சத்தத்தில் தடுமாறி கீழே விழுந்து காயப்பட்டு எழுவதும், மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு,மாடுகள் சாய்ந்து விழுண்டு மாய்வதும் தொடர்கதையாகி வருகிறது. வீட்டு ஓடுகள் சிதறி விழுகின்றன. சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது…அதிகரிகளிடம் புகார்கள் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கிராமத்தை காலி செய்து வெளியேறும் நிலையில் உள்ளோம் எனக் கூறியதும் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கூடலூர் நகர் மலைதள  பகுதியில் கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிம வளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. ஆனால், அந்தத் தடையை குவாரி கொள்ளையர்களோ,அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய அரசோ பொருட்படுத்துவதே இல்லை.

கூடலூர் நகராட்சியின் கட்டாஞ்சி மலை அடிவாரப் பகுதியான செல்வபுரத்தில்  2024 ம் ஆண்டு ஜனவரி 26-அதிகாலை வேளையில் இரு ஜேசிபி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு  பல லாரிகளில் கேரளத்துக்கு கொண்டு செல்வதை தடுக்க, அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வள லாரிகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போதும் ஒரு பலனும் இல்லை. இது தான் இன்றைய தமிழகத்தின் நிலயாக உள்ளது.

குதறப்பட்டுக் கிடக்கும் கோவை மாவட்ட நிலவளம்…!

கோவை மாவட்டத்தில் குவாரி கொள்ளைகள் எல்லை மீறிப் போவதை எதிர்த்த பொதுமக்கள் போராட்டங்களையடுத்து மாவட்ட ஆட்சியர் கனிமவளக்கொள்ளைக்கு  தடை போட்டார். ஆனாலும், ஆளும் கட்சியினர் ஆசியுடன் எந்தத் தடையுமின்றி கனிமக் கொள்ளை தொடர்கிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் சக்கைபோடு போடுகின்றன. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் தினமும் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், லாரி,லாரியாகக் கடத்தப்படுகின்றன.

கனிமவளக் கொள்ளையை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவதும் இங்கு தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. தேர்தல் நேரத்தில் கூட தமிழக கனிம வளக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என வாக்குறுதி தரும் அரசியல் கட்சியை பார்க்க முடியவில்லை.

அறம் இணைய இதழ்

https://aramonline.in/24025/mineral-theft-in-dmk-govt/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு