ஐவிஎல்பி – அமெரிக்க வெளியுறவுத்துறையின் கண்காணிப்பு வளையம்
மாற்று இணையதளம்
கடந்த சில வாரங்களாக, அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் ஏதோ பயிற்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து சிலர் சென்றிருப்பதாக வரும் செய்திகளைப் பார்த்து வருகிறோம். அப்படியாகச் சென்றவர்களே அவர்களது சமூக ஊடகத் தளங்களில் அச்செய்தியினை உறுதிப்படுத்தவும் செய்திருக்கிறார்கள். எங்கேயோ தமிழ்நாட்டின் ஒரு மூலையில் பிறந்து வளர்ந்து ஏதோவொரு துறையில் மின்னத் தொடங்கியிருக்கும் அவர்களுக்கு, உலகின் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றான அமெரிக்க அரசின் அயல்துறையே அழைப்பு விடுத்திருப்பது ஒரு மிகப்பெரிய தனிப்பட்ட சாதனையாகும். அது மறுப்பதற்கு இல்லை. தனிநபர்களாக அவர்கள் பெற்றிருக்கும் இந்த அங்கீகாரத்தைப் பார்க்கும்போது நமக்கும் மகிழ்ச்சியே.
நிற்க!
இருப்பினும், அமெரிக்க அரசு எதற்காக எவ்விதத் தொடர்புமில்லாத சிலரை தமிழ்நாட்டில் இருந்து அழைக்க வேண்டும்?
அதுவும் எச்சிக் கையிலேயே காக்கா ஓட்டாத அமெரிக்க வெளியுறவுத்துறை, இவ்வளவு செலவு செய்து இந்த தனிநபர்களை அழைப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
அமெரிக்க அரசுக்கு இவர்களிடம் இருந்து என்ன வேண்டும்?
இவர்களால் அமெரிக்காவிற்கு ஆகப்போவது என்ன?
போன்ற பல கேள்விகள் நம்மில் பலருக்கும் எழாமல் இல்லை. ஆயினும், கேள்வி எழுப்புவதற்கு ஏதோவொன்று தடையாக இருப்பதால், நம்மில் பெரும்பாலானோர் அமைதியாக இருந்துவருகிறோம்.
ஆனால், கேள்விகள் எழுப்பப்பட வேண்டும், சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நம்பிக்கையும் நேர்மையும் செழித்தோங்கும். நானே கேள்வி கேட்பதையும், இதுகுறித்த உரையாடலையும் தொடங்கி வைக்கலாம் என்றிருக்கிறேன். அதுதான் இக்கட்டுரையின் முழுமுதற் நோக்கமாகும். அதனைத் தாண்டி, தனிநபர்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டையும் வைக்கும் நோக்கத்தில் இக்கட்டுரை எழுதப்படவில்லை என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டு இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.
IVLP என்றால் என்ன?
இப்போது அமெரிக்கா சென்றிருப்பவர்கள் IVLP என்கிற நிகழ்ச்சி நிரலுக்காகச் சென்றுள்ளனர். ‘இன்டர்நேசனல் விசிட்டர் லீடர்ஷிப் புரோகிராம்’ (International Visitor Leadership Program) என்பதன் சுருக்கம்தான் IVLP. அதன்படி, அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் அங்கே சுமார் மூன்று வாரங்கள் தங்க வைக்கப்படுவார்கள். அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு தலைமைப் பண்பை வளர்ப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். அத்துடன், அழைத்துச் செல்லப்பட்டவர்களின் துறை சார்ந்த அமெரிக்க வல்லுநர்களுடன் உரையாடல் நடத்துவதற்கான வாய்ப்புகளும் அமெரிக்க அரசால் ஏற்படுத்தித் தரப்படுகின்றன. அமெரிக்காவின் 2 அல்லது 3 முக்கிய மாகாணங்களைச் சுற்றிப் பார்க்கவும், அமெரிக்காவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களைக் காணவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சில அமெரிக்க அரசு சாரா நிறுவனங்களுடனும் தொடர்பு ஏற்படுத்தித் தரப்படும். உள்ளூர் அமெரிக்கர்களின் வீடுகளுக்குச் சென்று விருப்பப்பட்டால் அவர்களுடன் ஓரிரு நாட்கள் தங்கி இரு நாட்டினரின் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படும். இவற்றில் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு குழு செல்லும்போதும் கொஞ்சம் முன்பின் மாறுபாடு இருக்கலாம். ஆனால் மையப்புள்ளி ஒன்றுதான். இவை அனைத்துமே அமெரிக்க அரசின் செலவில்தான் நடத்தப்படுகின்றன.
இந்தியா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இருந்து ஆண்டுக்கு சுமார் 5000 பேர் வரையிலும் இந்த ஐவிஎல்பி பயிற்சி நிகழ்வுக்காக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இருந்து சுமார் 1000 கோடி ரூபாய் வரையிலும் அமெரிக்க அரசு இந்த ஐவிஎல்பி நிகழ்வுக்காக செலவிடுகிறது. அதாவது அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படும் ஒவ்வொருவருக்காகவும் சராசரியாக சுமார் 18 இலட்ச ரூபாய் செலவிடப்படுவதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் வளர்ந்து வருபவர்களை அழைத்துக் கொண்டுபோய் அமெரிக்காவில் பாராட்டி, மேலதிகப் பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு என்ன வந்தது என்கிற கேள்வி நமக்கு இயல்பாகவே வரும். வந்தே ஆக வேண்டும். ஏனெனில், அமெரிக்காவில் அகதிகளாகவோ பல தலைமுறைகளாக அமெரிக்கக் குடிமக்களாகவோ வாழும் கருப்பின, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்களையே ஒடுக்கி, கொடூரமாக நடத்திவரும் அமெரிக்க அரசுக்கு, எங்கோ தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் யாரோ ஒருசிலரை அழைத்துப்போய் பயிற்சி கொடுக்கும் நல்லிதயம் கொண்ட அரசாக இருக்கும் தகுதி நிச்சயமாக இல்லை என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
அப்படியென்றால், இதன் பின்னணி என்ன? எதற்காக, இப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள்?
அதற்கான விடையைத் தெரிந்துகொள்ள நாம் கொஞ்சமேனும் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். வாருங்கள், பார்ப்போம்.
ஐவிஎல்பி ஏன், எதற்காக, யாருக்காக தொடங்கப்பட்டது?
15 ஆம் நூற்றாண்டு முதலே, தென் அமெரிக்க நாடுகளை ஸ்பெயின் என்கிற ஐரோப்பிய நாடுதான் சுரண்டி, ஆண்டு, அனுபவித்து கொழுத்து வாழ்ந்து வந்தது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அது மாறத் தொடங்கிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பெயினிடம் இருந்து தப்பித்தாலும், லத்தீன் அமெரிக்க நாடுகளெல்லாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமெரிக்காவிடம் சிக்கிக் கொண்டன. தென் அமெரிக்க நாடுகளில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வளங்களையும், அவற்றை எடுத்துக்கொடுக்கும் மக்களையும் ஸ்பெயினைப் போல நேரடியாக காலனியாட்சி முறையில் ஆளாமல், முதலாளித்துவ வியாபார முறைகளின் மூலமாக முழுக்கட்டுப்பாட்டிலும் வைக்கத் தொடங்கியிருந்தது அமெரிக்கா.
தென் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய அளவிற்கு முதலீடு செய்து, பல தொழிற்சாலைகளையும் நிறுவனங்களையும் அமெரிக்க நிறுவனங்கள் தொடங்கின. தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதும், அமெரிக்காவில் உற்பத்தி செய்த பொருட்களை தென் அமெரிக்காவில் விற்பதுமே அந்த அமெரிக்க நிறுவனங்களின் முழுமுதற் நோக்கமாகும்.
வெனிசுவேலா, கரீபியன் தீவுகள், மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து எண்ணெயையும் பெட்ரோலையும் அமெரிக்காவைச் சார்ந்த டெக்சாகோ நிறுவனமும், ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனமும், கல்ஃப் ஆயில் நிறுவனமும் கொள்ளையடித்தன.
குவாத்தமாலா, ஹோண்டுரஸ், கோஸ்டா ரிகா, கியூபா, கொலம்பியா ஆகிய தென் அமெரிக்க நாடுகளில் இருந்து வாழைப்பழத்தை ஓசியில் இறக்குமதி செய்யும் பணியை அமெரிக்காவின் யுனைடெட் ஃப்ரூட் கம்பெனி நிறுவனம் செய்தது. வாழைப்பழம் தவிர வேறொன்றையும் விளைவிக்க முடியாத நிலைக்கு பல தென் அமெரிக்க நாடுகளை அமெரிக்க நாடுகள் மாற்றின. அதனால்தான் அந்த தென் அமெரிக்க நாடுகளுக்கு ‘வாழைப்பழ தேசங்கள்’ என்கிற பெயரே வந்தது.
பிரேசில், அர்ஜென்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகளில் விவசாய உற்பத்திக் கருவிகளை விற்பதில் இன்டர்நேசனல் ஹார்வெஸ்டர் என்கிற அமெரிக்க நிறுவனம் முன்னணியில் இருந்தது. பிரேசில், அர்ஜென்டினா, சிலி மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் ஃபோர்ட் மோட்டார் நிறுவனமும் ஜெனரல் மோட்டார் நிறுவனமும், தன்னுடைய உற்பத்திகளை அதிகமாக விற்று இலாபம் பார்த்து வந்தன.
பிரேசில், அர்ஜென்டினா, கியூபா மற்றும் சிலி உள்ளிட்ட நாடுகளில் தொலைத்தொடர்பு சாதனங்களை விற்கும் ஒரே முக்கிய நிறுவனமாக அப்போது அமெரிக்காவின் ஐடிடி நிறுவனம் இருந்தது.
சிலி, பெரு மற்றும் மெக்சிகோ ஆகிய தென் அமெரிக்க நாடுகளின் சுரங்கங்களில் இருந்து செம்பு எடுத்து அமெரிக்காவிற்கு கொண்டு போகும் உரிமையை அமெரிக்காவின் அனகோண்டா காப்பர் மைனிங் நிறுவனமும், கென்னகோட் காப்பர் கார்ப்பரேசன் நிறுவனமும் பெற்றிருந்தன.
இந்நிறுவனங்களெல்லாம் தென் அமெரிக்க நாடுகளைச் சுரண்டுவதன் மூலம் ஒவ்வொரு நிறுவனமுமே அன்றைய மதிப்பின்படியே சராசரியாக ஆண்டுக்கு 50 மில்லியன் டாலர் வரை இலாபம் பார்த்து வந்திருக்கின்றன. அதிலும், ராக்ஃபெல்லர் பரம்பரைக்குச் சொந்தமான ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனமோ ஆண்டுக்கு 100 மில்லியன் டாலருக்கும் மேலாக தென் அமெரிக்காவின் மூலமாக மட்டுமே இலாபம் ஈட்டி வந்திருக்கிறது.
இப்படியாக தென்னமெரிக்காவை தனது சொந்த இலாபத்திற்காக அமெரிக்கா சுரண்டிக்கொண்டிருந்தபோது, ஜெர்மனியின் நாஜி அரசும் தென்னமெரிக்காவில் தன்னுடைய காலடியை எடுத்து வைக்கத் தொடங்கியது. தென்னமெரிக்க நாடுகளில் வானொலி அலைவரிசைகளை உருவாக்குவது, ஜெர்மன் மற்றும் ஸ்பேனிஷ் மொழிகளில் பத்திரிக்கைகளை நடத்துவது, தென்னமெரிக்காவில் வாழும் ஜெர்மன் வழிவந்த மக்களைப் பயன்படுத்திக்கொள்வது போன்ற பலவற்றை செய்து தென்னமெரிக்காவிற்குள் அதிகாரத்தை செலுத்த ஜெர்மன் நாஜி அரசு முயற்சியெடுத்தது. அதன் பலனாக தென்னமெரிக்காவில் ஜெர்மனியால் அதிகளவுக்கு வியாபாரத்தைப் பெருக்கமுடிந்தது. காபி, மாட்டுக்கறி, ஜெர்மனியில் தயாரிக்கப்படும் இயந்திரங்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை தென்னமெரிக்காவில் இருந்து குறைவான விலைக்கு இறக்குமதி செய்யத் தொடங்கியது ஜெர்மனி. 1930 களின் இறுதியில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தென்னமெரிக்காவுடன் அதிகப்படியான வியாபாரம்செய்யும் இரண்டாவது நாடாக ஜெர்மனி உருவெடுத்துவிட்டது.
ராக்ஃபெல்லர் குடும்பத்து வருகை:
இப்படியாக தென் அமெரிக்காவில் ஜெர்மனியின் ஆதிக்கம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கும், அமெரிக்க பெருநிறுவனங்களின் தென் அமெரிக்க வியாபார சுரண்டலைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்க அரசு புதிய முயற்சிகளைச் செய்வதற்குத் தயாரானது. அப்போது தென் அமெரிக்காவில் அதிகமான முதலீட்டை செய்திருந்த ராக்ஃபெல்லர் குடும்பத்தின் ஒரு வாரிசான நெல்சன் ராக்ஃபெல்லரை அமெரிக்க அதிபராக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அழைத்தார். ‘அமெரிக்க நாடுகளின் வியாபாரம் மற்றும் பண்பாட்டு விவகாரங்களைக் கண்காணிக்க ஒரு அமைப்பு’ உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக நெல்சன் ராக்ஃபெல்லர் நியமிக்கப்பட்டார். அமெரிக்க அரசு பல்வேறு அமைப்புகளையும் குழுக்களையும் உருவாக்கியிருந்தாலும், பண்பாடு மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றில் தென் அமெரிக்காவின் மீது அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் பொறுப்பு இந்த அமைப்பிற்குக் கொடுக்கப்பட்டது.
புதிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகப் பதவியேற்றதும், பல்வேறு தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த சுமார் 130 ஊடகவியலாளர்களை அமெரிக்க அரசின் சொந்த செலவிலேயே அமெரிக்காவிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார் நெல்சன் ராக்ஃபெல்லர். அவர்களுக்கு அமெரிக்காவின் முக்கிய நகரங்களையும், யாருமே பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்காத பல பெரிய அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்திக்கூடங்களையும் சுற்றிக் காட்டியது ராக்ஃபெல்லர் குழு. அமெரிக்காவைப் பற்றிய ஒரு பிரமிப்பை உருவாக்கி, அமெரிக்கா மீது ஒரு மென்மையான பார்வையை உருவாக்குவதே ராக்ஃபெல்லர் குழுவின் நோக்கமாக இருந்தது.
அமெரிக்காவின் சிஐஏவும், எஃப்.பி.ஐ.யும் வெவ்வேறு விதமாக உலக நாடுகளைத் தன் வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருந்த அதே வேளையில், தென் அமெரிக்க நாடுகளின் ஊடகவியலாளர்களை அழைத்துக்கொண்டு வந்து இலவசமாக ஊர் சுற்றிக்காட்டி, அவர்களை அமெரிக்காவிற்கு ஆதரவானவர்களாக மாற்ற முடியாவிட்டாலும், அமெரிக்காவை அதிரடியாக விமர்சிக்காதவர்களாக மாற்றும் ராக்ஃபெல்லரின் இத்திட்டம் பெரியளவுக்கு வெற்றிகரமாக இருந்தது என்றே கூற வேண்டும். அதனால், இதனை ஒரேயொரு முறை மட்டுமேயான நிகழ்வாக இல்லாமல், தொடர்ச்சியாக நடத்துவதற்கு அமெரிக்க அரசும் ஒப்புக்கொண்டது. அதற்கான நிதியை ஒதுக்கவும் செய்தது.
ராக்ஃபெல்லர் தலைமையில் இப்பணிகளை செய்வதற்கென்றே ‘அமெரிக்க நாடுகளின் விவகாரத்துறை’ என்கிற பெயரில் ஒரு புதிய அமைப்பே உருவாக்கப்பட்டது. 1940களில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது, இந்தப் பயிற்சி நிகழ்வினை ஊடகவியலாளர்களுக்கு மட்டுமேயல்லாமல், பல்வேறு துறையைச் சார்ந்தவர்களையும் அழைக்கும் திட்டமாக விரிவு செய்யப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்து, மறைமுகமாக அவர்களது மனதிற்குள்ளும் மூளைக்குள்ளும் அமெரிக்கா பற்றிய ஒரு பாசிட்டிவ் பிம்பத்தை ஆழமாகச் செலுத்திவிட்டு திரும்ப அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் திட்டமாக இது மாறியது. இது ஒரு வகையான ‘தகவல் போர்’ என்றே சொல்லலாம். எதிரியை நேருக்கு நேராகச் சண்டையிட்டுத் தோற்கடிப்பதற்குப் பதிலாக, எதிரியின் அருகில் இருக்கும் பலருக்கும் ஒரு சொகுசான சுற்றுலா வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்து, எதிரிக்கு அருகிலேயே தனக்கான நட்பு வட்டத்தை உருவாக்கும் திட்டம் இது.
அமெரிக்காவிற்குப் பயணம் சென்று வந்தவர்கள், அதன் பின்னர் ‘அமெரிக்காவை வன்மையாகக் கண்டித்தோ எதிர்த்தோ எதுவும் செய்ய மாட்டார்கள்’ என்று நினைத்து, அமெரிக்கா போட்ட திட்டம் பலிக்கத்தான் செய்தது.
பனிப்போர் காலத் திருப்புமுனை
ட்ரூமன் டாக்ரின் மற்றும் சித்தாந்தப் போர்
அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்தைப் பாதுகாப்பதற்காக ஹிட்லரின் நாஜிக்களை தென் அமெரிக்காவில் வரவிடாமல் தடுப்பதற்கு ராக்ஃபெல்லர் தலைமையில் உருவாக்கப்பட்ட அமைப்பை, 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் நியாயப்படி பார்த்தால் கலைத்திருக்க வேண்டும். ஆனால், அமெரிக்கா அதனைச் செய்யவில்லை. அதற்கு பதிலாக, தன்னுடைய இலாப வெறிக்குத் தடையாக இருக்கப் போகும் அடுத்த எதிரியாகக் கருதிய சோவியத்தை எதிர்க்கத் தயாராகிவிட்டது அமெரிக்கா. அதிலும் இம்முறை சோவியத் என்கிற ஒரு நாட்டை எதிர்ப்பது மட்டும் போதாது என்றும், அங்கிருந்து உலக நாடுகளுக்குப் பரவிவரும் கம்யூனிசம் என்கிற தத்துவத்தையும் எதிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா முடிவு செய்தது.
இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற தருவாயில் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ஹேரி ட்ரூமன். யார் அந்த ட்ரூமன்?
நாம் அதிகமாகக் கேள்விப்பட்டிருக்காத ஒரு அதிபராக இருந்தாலும், அமெரிக்க வரலாற்றில் சர்வதேச மக்களுக்குக் கொடூரமான பலவற்றைச் செய்த ஒரு மனிதர்தான் ட்ரூமன். அவர் இருந்த காலம் மட்டுமல்லாமல், இன்றுவரையிலுமே அவரால் நாம் பாதிப்படைந்து கொண்டுதான் இருக்கிறோம்.
சர்வதேச நாடுகளுக்குள் நுழைந்து குழப்பங்கள் விளைவிப்பதில் முக்கியமானவர் அவர். ட்ரூமன் கையெழுத்துப் போட்டுத்தான், ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்டன. ஏறக்குறைய இரண்டாம் உலகப் போரே முடிவுற்ற நிலையில், அதுவும் ஜப்பான் ஒன்றுமில்லாமல் போனபோதும், ‘உலகை ஆளும் ராஜா நான்தான்’ என்று அனைவரையும் மிரட்டுவதற்காக ஜப்பானில் அவ்விரண்டு குண்டுகளையும் போடுவதற்கு ட்ரூமன் கையெழுத்திட்டார்.
அதேபோல, 1947 ஆம் ஆண்டு, இனிவரும் காலங்களில் அமெரிக்க நலனைக் கருத்தில்கொண்டு, உலகின் எந்த நாட்டிலும் அரசியல், இராணுவ, பொருளாதாரத் தலையீட்டினை அமெரிக்க அரசு செய்வதற்கு ஏற்றமாதிரியாக ‘ட்ரூமன் டாக்ட்ரின்’ என்கிற ஒரு சட்டத்தை இயற்றினார். ஏராளமான நாடுகளில் நுழைந்து குழப்பம் விளைவிக்க அந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் பரவிக்கொண்டிருந்த கம்யூனிசத் தத்துவத்தைத் தடுப்பதற்காக ‘மார்ஷல் திட்டம்’ என்கிற ஒரு திட்டத்தை உருவாக்கி, அன்றைய தேதியில் சுமார் 13 பில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கினார்.
பாலஸ்தீனர்களையே கேட்காமல், பாலஸ்தீனர்களின் நிலத்தைப் பறித்து, இஸ்ரேல் என்கிற ஒரு நாடு உருவாக்கப்பட்ட 11வது நிமிடத்தில், ட்ரூமன்தான் முதன்முதலாக ஆதரித்து வாழ்த்துத் தெரிவித்து, இஸ்ரேலை அங்கீகரித்தார். அதற்காக, அவருடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு அமெரிக்காவில் இருந்த யூதர்கள் மில்லியன் கணக்கில் தேர்தல் நிதி கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1950இல் கொரிய நிலைத்திற்குப் படைகளை அனுப்பி, குழப்பங்களையும் போரையும் விளைவித்து, அதன் பாதிப்புகள் இன்றுவரை தொடர்வது நாம் அனைவரும் அறிந்ததே.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த 75 ஆண்டுகளாக உலகில் ஏராளமான போர்களுக்கும், குழப்பங்களுக்கும் காரணமாக இருந்துவரும் நேட்டோ படையினை உருவாக்கியதும் ட்ரூமனின் முயற்சியால்தான்.
அயல்நாட்டுத் தலைவர்கள் திட்டம் (Foreign Leaders Program)
அப்படிப்பட்ட ட்ரூமன், ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு மற்ற நாடுகளுடன் சண்டைக்குப் போனதுடன் நிறுத்திக்கொள்ளாமல், கருத்தியல் தளத்திலும் போர்களை நடத்துவதற்காக பல முயற்சிகளை எடுத்தார். 1948 ஆம் ஆண்டில், அலெக்சாண்டர் ஸ்மித் மற்றும் காரல் முந்த் ஆகிய இரண்டு அமெரிக்க காங்கிரஸ்காரர்கள் இணைந்து ‘அமெரிக்க தகவல் மற்றும் கல்வி பரிமாற்றச் சட்டம்’ என்கிற ஒரு புதிய சட்டத்தை வடிவமைத்து ஹேரி ட்ரூமனின் உதவியுடன் அமல்படுத்தினர். அந்த ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டு காரல் முந்த் பலவித வேலைகளைச் செய்தார். ஒன்று, அமெரிக்கத்தன்மையில் இருந்து மாறுபட்ட செயல்பாடுகளைக் கண்காணிக்க ‘ஹவுஸ் கமிட்டி ஆன் அன்-அமெரிக்கன் ஆக்டிவிட்டீஸ்’ என்கிற ஒரு அமைப்பை காரல் முந்த் உருவாக்கினார். அந்த அமைப்பின் பணியே, அமெரிக்காவில் வாழும் சொந்தக் குடிமக்களையே ஆழமாகக் கண்காணித்து, கம்யூனிசக் கொள்கையில் ஈர்க்கப்படுகிறார்களா இல்லையா என்று பார்த்து, நடவடிக்கை எடுக்கத்தான். இது உள்ளூர் மக்களை முன்வைத்து உருவாக்கப்பட்ட சட்டம். அதேபோல, மற்ற நாடுகளில் வாழும் மற்ற நாட்டுக் குடிமக்களை சோவியத்தின் செயல்பாடுகளில் இருந்தும் கம்யூனிசத் தத்துவத்தில் இருந்தும் ஈர்க்கப்படாமல் தடுக்க உருவாக்கப்பட்டதுதான் ‘அயல்நாட்டுத் தலைவர்கள் திட்டம்’ (Foreign Leaders Program). மற்ற நாடுகளில் இருந்து தலைவர்களாக வரப்போகிறவர்களாகக் கருதியவர்களை அழைத்து வந்து, அமெரிக்கா குறித்து விளக்கி அமெரிக்க ஆதரவு மனிதர்களாக மாற்றுவதே அதன் நோக்கமாகும். அதுதான் 1952இல் ‘இன்டர்நேசனல் விசிட்டர் புரோகிராம்’ (IVP) என்று பெயர் மாற்றம் பெற்றது. சோவியத்தின் கொள்கையால் அதிவேகமாக ஈர்க்கப்படும் நாடுகளில், அந்தந்த உள்ளூர் அரசுகளை விமர்சிப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து அமெரிக்கா குறித்த நல்லெண்ணத்தை உருவாக்கி, திரும்ப அவர்களது சொந்த நாடுகளுக்கே அனுப்புவதுதான் ஐவிபியின் திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக மட்டுமே எந்தவொரு நாட்டிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ஆட்சி மாற்றம் நடக்கும்போது, அங்கே பதவிகளைப் பிடிப்போர் இவர்களாகவும், பிடித்த பின்னர் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடுகளை எடுப்பவர்களாகவும் இவர்கள் இருந்தார்கள்.
IVP-ன் செயல்பாடுகள் மற்றும் உதாரணங்கள்
1965 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் இனப்படுகொலை நிகழ்ந்தது. ஆனால், அதற்கு முன்னரே, இந்தோனேசிய குடிமக்களில் பலரையும் அமெரிக்காவிற்கு அழைத்துப் போய் பயிற்சி கொடுத்திருக்கிறது அமெரிக்கா.
அதேபோல, மேற்குலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வலுவாகக் குரல் கொடுத்த எகிப்து அதிபரான நாசரின் காலம் வரையிலும் அமெரிக்காவால் எகிப்திற்குள் நுழைய முடியவில்லை. 1970 ஆம் ஆண்டில் நாசர் திடீரென்று இறந்தபோது எகிப்து மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர். அவருடைய மரண இறுதி ஊர்வலத்தில் 50 இலட்சம் பேர் வரை கலந்துகொண்டிருக்கின்றனர். அந்தளவுக்கு எகிப்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த தலைவராக அவர் இருந்தார். நாசர் இறந்தவுடன், அப்பாவியாகத் தெரிந்த அன்வர் சாதத் என்பவர் புதிய அதிபரானார். இந்த அன்வர் சாதத்திற்குத்தான் ஐவிபி இன் சார்பாக நாசர் இறப்பதற்கு முன்னரே, அமெரிக்காவிற்கு அழைத்து பயிற்சி கொடுத்து, அமெரிக்க ஆதரவு மனநிலையை உருவாக்கியிருந்தது அமெரிக்க அரசு. பதவிக்கு வந்ததும், முன்னர் நாசர் காலத்தில் நாசருக்கு இணக்கமாக இருந்தவர்களை எல்லாம் கைது செய்வது, அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது என அன்வர் சாதத் பல வேலைகளை அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செய்தார்.
1967 ஆம் ஆண்டில், பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஒரு வளர்ந்துவரும் தலைவராக இருந்தார் மார்கரட் தாச்சர். அவர் பின்னாளில் பெரிதாக வளர்வார் என்பதைக் கணித்து, அவரை அமெரிக்காவிற்கு அழைத்துப்போய் அதேபோன்ற பயிற்சி கொடுத்து, வாஷிங்டன் டி.சி., நியூயார்க், பாஸ்டன் உள்ளிட்ட நகரங்களைச் சுற்றிக்காட்டி, அமெரிக்காவின் அமைப்புகள் எப்படி இயங்குகின்றன என்பதையும் தெளிவுபடுத்தினர். அதன்பிறகு, 1979இல் பிரிட்டனின் பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக வெற்றிபெற்று அதிகாரத்தில் அமர்ந்தார். மார்கரட் தாச்சர் காலத்தில்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் வரலாற்றிலேயே மிகவும் நெருக்கமாக இருந்தன. அமெரிக்காவின் சந்தைப் பொருளாதாரத்தைப் பார்த்து மார்கரட் தாச்சர் வியந்துபோய், பிரிட்டனிலும் அமல்படுத்தினார். அது பனிப்போர் காலமென்பதால், அமெரிக்காவுடன் கைகோர்த்து பலமாக சோவியத்தை எதிர்த்தது பிரிட்டன்.
சோவியத்திற்கு வெளியே மட்டுமல்லாமல், சோவியத்துக்கு உள்ளேயே இதனைச் செய்திருக்கிறது அமெரிக்கா. சுமார் 50000 ரஷ்யர்கள் வரையிலும் இத்திட்டத்தில் அமெரிக்காவிற்கு வரவைக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அப்போதே அமெரிக்காவில் இருந்த சோவியத் தூதரகமே எச்சரிக்கைக் குறிப்பெல்லாம் சோவியத் அரசுக்கு அனுப்பியிருக்கிறது. ஓலக் கலுகின் என்கிற சோவியத் தூதரக அதிகாரி, “அமெரிக்காவில் பயிற்சி கொடுக்கப்பட்ட இத்தனை ஆயிரம் பேர் சோவியத்திற்கு நுழைகிறபோது, அது ஒட்டுமொத்த சோவியத் அமைப்புமுறையையும் இயங்குமுறையையுமே அழித்துவிடும்” என்றிருக்கிறார்.
1952 இல் இந்த திட்டத்திற்கு ‘இன்டர்நேசனல் விசிட்டர் புரோகிராம்’ (ஐவிபி) என்று ஒரு முறையான பெயர் சூட்டப்பட்ட பின்னர், அதற்கென்று ஒரு கட்டமைப்பும் நீண்ட நெடுங்கால திட்டமும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. 1950களைப் பொறுத்தவரையிலும் கம்யூனிசம் பரவாமல் தடுப்பதும், சோவியத் ஆதரவு நாடுகளில் சோவியத்துக்கு எதிரான ஆட்களை வளர்த்துவிடுவதும், அந்த நாடுகளில் குழப்பம் விளைவித்து புதிய அமெரிக்க ஆதரவு நபர்களைக் கண்டறிந்து ஆட்சியமைக்கிற இடத்திற்கு நகர்த்திச் செல்வதுமே ஐவிபி இன் திட்டமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் இளம் அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும், தொழிற்சங்கத் தலைவர்களும், கல்வியாளர்களும் ஐவிபிக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டனர்.
1960களைப் பொறுத்தவரையில் சோவியத்துடன் பனிப்போர் உச்சத்தில் இருந்த நாடுகளில் இருந்த பலரை ஐவிபி திட்டத்திற்காக அமெரிக்க தேர்ந்தெடுத்தது. அதேபோல, 1965-66 இல் இந்தோனேசியாவில் அமெரிக்க ஆதரவு ஜெனரல் சுகர்தோ அதிபரானதும், இலட்சக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகளும் தொழிற்சங்கவாதிகளும், அவர்களது ஆதரவு அமைப்புகளில் இருந்தவர்களும் கொலை செய்யப்பட்டனர். அதன்பின்னர், சுகர்தோ தலைமையிலான அரசுதான் அடுத்த முப்பது ஆண்டுகள் இந்தோனேசியாவை ஆண்டது. அப்போது பணியாற்றிய பலரும் ஐவிபியில் பங்குபெற்றதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவிற்கு அழைத்துவரப்படும் சர்வதேச தலைவர்களை அமெரிக்காவின் உள்ளூர் அமைப்புகளுடன் இணைத்து பயிற்சி கொடுக்கவும், இனிவரும் காலங்களில் இணைந்து பணியாற்றவும் ‘குளோபல் டைஸ் நெட்வொர்க்’ என்கிற ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அவர்கள் 80 உள்ளூர் அமைப்புகளை அமெரிக்காவிற்கு வரும் விருந்தினர்களை இணைத்துவிடும் பணியை செய்தது குளோபல் டைஸ் நெட்வொர்க் செய்யத் தொடங்கி, இன்று வரையிலும் செய்துவருகிறது.
1970களைப் பொறுத்தவரையிலும் ஆப்பிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் இத்திட்டத்திற்காக ஆள் பிடிப்பதில் கவனம் செலுத்தியது அமெரிக்கா. 1970களில் ஐவிபி திட்டத்திற்கு அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்ட ஏராளமானோர் பிற்காலத்தில், அவரவர் நாடுகளில் உயரிய பதவிக்கு வந்திருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வலதுசாரிகளாகவும், பதவியேற்ற பின்னர் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1980 களைப் பொறுத்தவரையிலும் சோவியத்திற்கு எதிரான ஆட்களை அந்தந்த நாடுகளில் பலமிக்கவர்களாக மாற்றும் நோக்கில், அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டு ஐவிபி திட்டத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டனர். அதிலும் மிக முக்கியமாக சோவியத்தை வீழ்த்துவதும், கம்யூனிசத்தை கொள்கையாகவே எதிர்ப்பது ஆகியவைதான் முக்கியத் திட்டமாக இருந்திருக்கிறது. நேட்டோ படைகளை பலமிக்கதாக்குவது, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பலரையும் இத்திட்டத்தில் இணைப்பதுதான் மைய நோக்கமாக இருந்திருக்கிறது.
1990 களைப் பொறுத்தவரையிலும் அமெரிக்காவுக்கு முதன்முதலாக போட்டியோ நேரடி எதிரிகளோ இல்லாத காலகட்டமாகும். இருப்பினும் ஐவிபி திட்டத்தை அமெரிக்கா கைவிடவில்லை. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகான அந்தக் காலகட்டத்தில், நிரந்தரமான அமெரிக்க ஆதரவு அரசுகளை கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட பல உலக நாடுகளில் உருவாக்குவதே அமெரிக்காவின் திட்டமாகும். அதனால் அதற்கேற்ற நபர்களைத் தேர்ந்தெடுத்து ஐவிபியில் அமெரிக்கா பயிற்சிகொடுத்தது. பிற்காலத்தில் அமெரிக்காவுடன் கைகோர்த்து நின்ற பிரபல பிரிட்டன் பிரதமரான டோனி பிளேர் போன்றவர்கள் ஐவிபி இல் கலந்துகொண்டவர்கள்தான்.
2000 களில் பாலஸ்தீனர்களில் பல்வேறு துறைகளில் முக்கியமானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த திட்டத்தில் இணைத்து அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களை வைத்துத்தான், 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற காஸா போரின்போது, களத்தில் என்ன நடக்கிறதென்கிற தகவல்களை அமெரிக்கா சேகரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஐவிபி திட்டத்தில் இணைவதன் மூலம், ஏதோவொரு நம்பிக்கையை தனிநபர்களாக அவர்கள் பெற்றிருந்தபோதும், அவர்களுக்கே தெரியாமல் அவர்களது அதிகாரத்தை அமெரிக்காவிடம் இழந்துதான் போகிறார்கள். இன்றுவரையிலும், பாலஸ்தீன நிலத்திற்கும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள அமெரிக்காவிற்கு இத்தகைய ஒரு வலைப்பின்னல் அவர்களுக்கு உதவத்தான் செய்கிறது என்பது துயரமான உண்மை. அதேபோல, ஆப்கானிஸ்தானில் போருக்குச் சென்ற அமெரிக்கா, அங்கே பலவித குழப்பங்களைச் செய்துவிட்டு இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் இறப்புக்குக் காரணமாக இருந்துவிட்டு, அங்கே தனக்குச் சாதகமான ஒரு இடைக்கால அரசை உருவாக்கியது. அதன் மூலம் அதிபரானவர்தான் ஹமீது கர்சாய். அவரும் இதே ஐவிஎல்பி திட்டத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டவர்தான்.
85 ஆண்டுகால ஐவிஎல்பி…
2004 ஆம் ஆண்டில்தான் இத்திட்டத்திற்கு இப்போது இருக்கிற ‘இன்டர்நேசனல் விசிட்டர் லீடர்ஷிப் புரோகிராம்’ (ஐவிஎல்பி) என்கிற பெயர் சூட்டப்பட்டது. கடந்த 85 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிற இத்திட்டத்தின் மூலமாக, சுமார் 2,30,000 பேர் வரையிலும் உலகெங்கிலும் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டு அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். அவர்களில் சுமார் 500 பேர் வரையிலும், அந்தந்த நாடுகளின் பிரதமர், அதிபர், மாநில முதலமைச்சர் உள்ளிட்ட தலைமைப் பதவிகளுக்கு வந்திருக்கின்றனர். 1600 பேருக்கும் மேலாக கேபினட் அமைச்சர்களாகி இருக்கின்றனர். 1000 த்திற்கும் மேற்பட்டோர் அந்தந்த நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றனர். இன்னும் ஏராளமானோர் அவரவர் அங்கம்வகிக்கும் துறைகளில் உயரிய பதவிகளை அலங்கரித்திருக்கின்றனர். இதை நான் சொல்லவில்லை. ஐவிஎல்பி அமைப்பின் இணையதளத்திலேயே பெருமைபொங்க வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள்தான் இவை. இவர்கள் அனைவரையும் அமெரிக்காதான் அந்தப் பதவிகளை அடைவதற்கு உதவியது என்று சொல்லிவிட முடியாது. அதற்கு பதிலாக, உலகின் பல்வேறு நாடுகளில் யார் யாரெல்லாம் அடுத்தடுத்து பெரியளவுக்கு அதிகாரமிக்க பதவிகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைக் கணித்து, அவர்களைத் தேர்ந்தெடுத்து ஐவிஎல்பி திட்டத்திற்கு அழைக்கிறது அமெரிக்கா. இதன்மூலமாக, பிற்காலத்தில் அதிகாரமிக்க உயரிய பதவிகளுக்கு அவர்கள் வரும்போது, அமெரிக்காவுடன் ஒரு இணக்கமான உறவைப் பேணுவார்கள் என்றும், அமெரிக்கா எடுக்கிற சர்வதேச முடிவுகளுக்கு ஆதரவாக நிற்பார்கள் என்றும் அமெரிக்கா ஒரு கணக்குப் போட்டு ஐவிஎல்பி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தக் கணக்கில் ஏறத்தாழ பெரும்பாலான நேரங்களில் சரியாகவே நடக்கிறது. அது அமெரிக்காவுக்குச் சாதகமாகவே இருக்கிறது.
தேர்வு முறை மற்றும் பின்விளைவுகள்
‘இத்தனை இலட்சம் பேரை அழைத்து பயிற்சி கொடுக்கிறார்களே, அவர்களை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை எப்படித் தேர்ந்தெடுக்கிறது’ என்கிற கேள்வியும் நமக்கு வருகிறதல்லவா? அங்குதான் பெரிய இரகசியமே ஒளிந்திருக்கிறது. உலகமெங்கிலும் இருக்கிற அமெரிக்க தூதரகங்கள், அந்தந்த நாடுகளில் பல துறைகளில் சிறந்து விளங்கியும், உள்ளூரில் ஏதோவொரு வகையில் உரக்கப் பேசுகிறவர்களாகவோ, அமெரிக்காவை நேரடியாக எதிர்க்காதவர்களாகவோ, அமெரிக்காவிற்கு எந்த வகையிலாவது உதவுவார்கள் என்கிற எண்ணத்தைக் கொடுப்பவர்களாகவோ இருந்தால், அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து இத்திட்டத்திற்கு உள்ளூரில் இருக்கும் அமெரிக்கத் தூதரகங்களே தேர்ந்தெடுக்கும். அப்படியாக அமெரிக்கத் தூதரகம் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள்தான் இந்த ஐவிஎல்பி திட்டத்திற்காக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதுவே கூட நமக்கு பெரிய அச்சத்தைக் கொடுக்கிறது. அப்படியென்றால், நம்முடைய நாடுகளில் இருக்கிற அமெரிக்க தூதரகங்களெல்லாம் எந்தளவுக்கு நம்மை நோட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ளமுடியும்.
ஐவிஎல்பி திட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கும் அமெரிக்காவுக்குமான உறவென்பது, அவர்கள் அமெரிக்கா செல்லும் அந்த இரண்டு-மூன்று வாரத்துடன் முடிவதல்ல. அவர்கள் வாழும் நாட்டில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் நெருங்கிய வட்டத்திற்குள் அவர்கள் வந்துவிடுவார்கள். அதன்பின்னர், அமெரிக்கத் தூதரக நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்கும், அமெரிக்காவின் சர்வதேச கொள்கை முடிவுகளில் கருத்து சொல்வதற்குமான உரிமைகளும் அவர்களுக்கு ஏதோவொரு வகையில் வந்து சேர்கின்றன. இது மட்டுமல்லாமல், அவர்கள் வசிக்கும் நாடுகளில் ஏதாவதொரு திட்டத்தை செயல்படுத்துவதற்கு 35000 அமெரிக்க டாலர் வரையிலுமான நிதியினை அமெரிக்காவிடம் இருந்து பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
ஆக, ஐவிஎல்பி திட்டத்தின் வழியாக அமெரிக்கா செல்வோர் அனைவரும் அமெரிக்க அடிமைகளாகவும் அமெரிக்காவின் உளவாளிகளாகவும் மாறுவார்கள் என்கிற முடிவுக்கு நாம் வரவேண்டியதில்லை. ஆனால், அத்திட்டத்தில் கலந்துகொள்வோரில் அமெரிக்காவுக்கு விருப்பத்துடன் ஆதரவளிக்கிறவர்கள் இருந்தால், அவர்களுக்கான கதவுகளை அமெரிக்கா திறந்துவிடுவதுடன், எதிர்காலத்தில் அமெரிக்காவின் தேவைக்கேற்ப செயல்படவும் வாய்ப்புகளைக் கொடுக்கிறது. ஐவிஎல்பி திட்டத்திற்கு செல்லும் அனைவரும் இப்படி இருக்க மாட்டார்கள். அப்படியாக அமெரிக்காவுக்கு முழுமையாக ஆதரவளிக்காமல் இருக்கிறவர்களையும் எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அமெரிக்காவிற்குத் தெரியும். அந்த மாதிரியானவர்களைத் தன்னுடைய தொடர்பு வட்டத்திலேயே வைத்திருப்பதன் மூலம், ஏதோவொரு வகையில் அவர்களின் வழியாக உள்ளூர் நிலவரங்களையும் அரசியல் மாற்றங்களையும் நன்றாக அமெரிக்க அரசால் கணித்துவிட முடியும். ஏதோவொரு கலவர அல்லது குழப்பமான சூழல்களில் அவர்கள் நன்றாக அமெரிக்காவிற்குப் பயன்படுவார்கள். அமெரிக்காவின் நலனுக்காக நாம் பயன்படுகிறோம் என்பதுகூட தெரியாமல், அவர்கள் அமெரிக்காவின் திட்டத்திற்கு உதவி புரிந்துவிடுவார்கள்.
இப்போது தமிழ்நாட்டில் இருந்து இதே ஐவிஎல்பி திட்டத்திற்குச் சென்ற எவரையும் நாம் தனிப்பட்ட முறையில் சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களில் பலரின் மீது தனிப்பட்ட முறையில் நமக்கு அன்பும் நட்பும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இந்த திட்டத்தின் வரலாற்றையும், செயல்பட்டு வந்திருக்கிற நிகழ்வுகளையும் நிதானமாக யோசித்துப் பார்த்தால், ஐவிஎல்பி-இல் சென்றவர்களிடம் பேசுவதற்கும் இயல்பாகவே நமக்கு அச்சம் வருவதைத் தடுக்கவே முடியாது. இவர்கள் வழியாக அமெரிக்கா நம்மைக் கண்காணிக்குமோ என்கிற அச்சம் அதிகரிக்கத்தான் செய்யும். ‘அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் நேரடியாகவே பலனை அனுபவித்தவர்களை எப்படி நம்புவது’ என்கிற பயம் நமக்கு வராது என்று சொல்லிவிடவே முடியாது. காஸாவில் இலட்சக் கணக்கானோரை இஸ்ரேல் கொன்றுபோடுவதற்கு துணையாக இராணுவ உதவிகளையும், கோடிக்கணக்கில் பணத்தையும், ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்காவிற்கு இருக்கும் வீட்டோ அதிகாரத்தையும் பயன்படுத்தி இஸ்ரேலுக்கு உதவிவரும் கொடூரமனம் படைத்த உண்மையான நிகழ்கால பாசிச அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறையின் அழைப்பென்பது நல்லெண்ண அடிப்படையிலான அழைப்பெல்லாம் இல்லை. அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் தனிநபர் தேர்வுதான். அதைக் குறை சொல்லவோ கருத்து சொல்லவோ நமக்கு உரிமை இல்லையென்றாலும், உலகின் மிகக்கொடூரமான ஒரு பயங்கரவாத அமைப்பின் அழைப்பை ஏற்றுச்செல்வது குறித்து கொஞ்சம் யோசித்திருக்கலாமே என்கிற கேள்வியைக் எழுப்பாமல் விடமுடியவில்லை.
உலகில் கோடிக்கணக்கான மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதற்கு முழுமுதற் காரணமாக இருப்பது அமெரிக்க வெளியுறவுத் துறைதான். வியட்நாம், ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாலஸ்தீனம், ஏமன், சூடான் மற்றும் இன்னும் ஏராளமான நாடுகளில் நீண்டநெடிய கொடூரப் போர்களின் மூலமாக கடந்த 70 ஆண்டுகளில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட எண்ணிலடங்கா மக்களின் இரத்த வரலாற்றில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறைக்குப் பெரும்பங்கிருக்கிறது. இப்படியான ஒரு கொடூரக் கொலைகார அமைப்பின் விருந்தினர்களாகக் கலந்துகொண்டவர்களுக்கு, இனி எந்தக் காலத்திலும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் பேசுவது நெருடலாகவும் முரண்பாடாகவும் இருக்கத்தான் போகிறது. அமெரிக்க அயல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஐவிஎல்பி குறித்து பேசாமல் விட்டுவிட்டால் வரலாற்றுப் பிழை செய்தவர்களாகிவிடுவோம். அதனால்தான் என்னால் முடிந்தவற்றை எழுதியிருக்கிறேன். அதுதான் இக்கட்டுரையின் நோக்கமும் கூட.
வாசிக்க வேண்டிய நூல்கள்:
INVENTING PUBLIC DIPLOMACY The Story of the U.S. Information Agency – Wilson P. Dizard Jr.
Arndt, Richard T. – The First Resort of Kings: American Cultural Diplomacy in the Twentieth Century
The Cold War and the United States Information Agency American Propaganda and Public Diplomacy, 1945–1989
Culture Communicates: US Diplomacy that Works – Cynthia P. Schneider
The diplomacy of ideas U.S. foreign policy and cultural relations, 1938-1950 – Ninkovich, Frank
IVLP – இணையசுட்டி: https://exchanges.state.gov/non-us/program/international-visitor-leadership-program-ivlp
Global Ties US – இணையசுட்டி: https://www.globaltiesus.org/
- மாற்று
https://maattru.in/2025/09/ivlp/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு