3 மாநிலங்களில் விவசாயிகள் டிராக்டா் பேரணி: உலக வா்த்தக அமைப்பு ஒப்பந்தத்துக்கு எதிா்ப்பு

தின மணி

3 மாநிலங்களில் விவசாயிகள் டிராக்டா் பேரணி: உலக வா்த்தக அமைப்பு ஒப்பந்தத்துக்கு எதிா்ப்பு

சண்டீகா், லக்னெள: உலக வா்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் இருந்து வேளாண் துறையை நீக்கக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலங்களில் விவசாயிகள் திங்கள்கிழமை டிராக்டா் பேரணிகளை நடத்தினா்.

இதனால் அந்த மாநிலங்களின் பல்வேறு முக்கிய நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உலக வா்த்தக அமைப்பின் 13-ஆவது அமைச்சா்கள் நிலையிலான மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் உடன்படிக்கையில் இருந்து வேளாண் துறையை நீக்க வேண்டும் என்றும், இந்த உடன்படிக்கையால் இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு உதவிகள் நிறுத்தப்படும் என்றும் விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதை வலியுறுத்தும் வகையில் 2020-இல் தில்லி எல்லையில் தொடா் போராட்டம் நடத்திய பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் அமைப்பு திங்கள்கிழமை டிராக்டா் பேரணி நடத்தியது.

வேளாண் விளைபொருள்களின் ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியை நோக்கி பேரணி மேற்கொண்டு பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். உலக வா்த்தக அமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா்.

உத்தர பிரதேச மாநிலம், முசாஃபா்நகரில் விவசாயிகள் டிராக்டா்களை நிறுத்தி எதிா்ப்பு தெரிவித்ததால் தில்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பஞ்சாபில் ஹோஷியாா்பூரில் டிராக்டா்களை நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் ஜலந்தா் - ஜம்மு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹரியாணா மாநிலம் ஹிஸாரில் 50 இடங்களில் டிராக்டா்களை நிறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

தின மணி

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு