போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: அ.சவுந்தரராசன்
தீக்கதிர்
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.9 அன்று போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தின் இரண்டாவது நாளாக புதனன்று ( ஜன.10) மாநிலம் முழுவதும் கூட்டமைப்பு சார்பில் சட்ட விரோதமாக பேருந்து இயக்கப்படுவதை மறிக்கும் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து ஊழியர்களும், ஓய்வூதியர்களும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன், கே.ஆறுமுகநயினார், வி.தயானந்தம் (சிஐடியு), வெங்கடேசன் (எம்எல்எப்), நாகராஜன் (பணியாளர் சம்மேளனம்), கே.கர்சன் ( அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றார் நல அமைப்பு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் நெ.இல.சீதரன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை தொடர்ந்து அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. வேலைநிறுத்தத்தின் காரணமாக அரசுக்கு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அழுத்தம் அதிகரித்துள்ளது. வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தொகையை அரசு 2022ம் ஆண்டு முதலே வழங்கி இருந்தால் கோரிக்கைகளே எழுந்திருக்காது.
நீதிமன்றம் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கதான் கூறியது; ரத்து செய்ய சொல்லவில்லை. போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரியதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஓய்வூதியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாயாவது இடைக்கால நிவாரணமாக வழங்க நீதிமன்றம் கோரியது. அதையும் அரசு ஏற்க மறுத்துவிட்டது.
அப்போது, அரசு மூர்க்கமாக நடந்துகொள்வதாக குறிப்பிட்ட நீதிபதிகள், கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. பொங்கல் வருவதால் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து ஜன.19ந் தேதி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள். அதன் பிறகு முடிவெடுங்கள் என்று தொழிற்சங்கங்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினார். மேலும், போராடிய ஊழியர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனையேற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்.
ஜன.19ந் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம். அதில் கோரிக்கைகளை வலுவாக வலியுறுத்துவோம். 6 கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் போராட்டம் முடிவுக்கு வராது." இவ்வாறு அவர் கூறினார்.
- தீக்கதிர்
theekkathir.in /News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/tamilnadu-bus-strike-temporarily-withdrawn-citu
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு