அதானி விவகாரம்: ஒப்பந்தங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும்

இந்து தமிழ்

அதானி விவகாரம்: ஒப்பந்தங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும்

மின் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், 2,100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியிருப்பது, இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின் விநியோக ஒப்பந்தத்தில் தொடர்புள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்போம் என்று அதானி தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் களத்திலும் ஆளுங்கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.

குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “அதானி நிறுவனத்துடன் தமிழக மின்வாரியம் நேரடியாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் (எஸ்.இசிஐ) உடன் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் 1,500 மெகாவாட் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.2.61-க்கு மட்டுமே வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் யூனிட்டுக்கு ரூ.2.72 மற்றும் ரூ.2.73 என்ற அளவில் மட்டுமே மின்சாரத்தை கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில்தான் ரூ.7-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவதும், அதற்கு ஆளுங்கட்சி தரப்பில் பதிலளிப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்தாலும் மின்சாரத்தை பொறுத்தமட்டில், ஏழை, நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. தென் மாநிலங்களில் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மின்சார கொள்முதல் விலை உயர்ந்தால், அதன் எதிரொலியாக மின்கட்டணமும் உயரும். இதன்மூலம், ஒரு கோடியே 85 லட்சம் மின் நுகர்வோர் நேரடியாக பாதிக்கப்படும் நிலை உள்ளதால், இந்த விஷயத்தில் அரசை கேள்வி கேட்கும் உரிமை மின்நுகர்வோர் என்ற அடிப்படையில் தமிழக மக்களுக்கு உண்டு.

இன்றைய தொழில்நுட்ப நவீன யுகத்தில் பொதுமக்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கக்கூடிய எந்த ஆவணத்தையும் தமிழக அரசு ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மின் கொள்முதல், விநியோகம் தொடர்பாக யார் யாருடன், என்னென்ன ஒப்பந்தங்களை தமிழக மின்துறையும், அதன்கீழ் வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) உள்ளிட்ட அமைப்புகளும் செய்து கொண்டுள்ளனவோ, அவை அனைத்தையும் பொது ஆவணமாக தமிழக மின்வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடுவதில் தவறில்லை. மின் கொள்முதல் ஒப்பந்தத்துக்கு ஆட்சியாளர்கள் லஞ்சம் பெற்றிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இது போன்ற ஒப்பந்தங்களை பகிரங்கமாக வெளியிடுவது பொருத்தமான பதிலாகவும் அமையும்.

அதேசமயம், பொதுமக்களும் தங்களுக்கு கிடைக்கும் மின்சாரம் என்ன கட்டணத்தில்,யார் யாரிடம் இருந்து வாங்கப்படுகிறது. எந்த அளவு மானியம் வழங்கப்படுகிறது. என்ன கட்டணம் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது போன்ற விவரங்களை தெரிந்து கொள்வார்கள். இதுபோன்ற வெளிப்படைத்தன்மை, அரசாங்கம் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலாகவும் அமையும். காலத்தின் மாற்றத்துக்கு பொருத்தமாகவும் இருக்கும்.

- இந்து தமிழ்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு