தேசத்தை உலுக்கிய பெண் மருத்துவர் வன்கொடுமை, கொலை... விசாரணையின் நிலை என்ன?!
விகடன் இணைய இதழ்
முக்கியக் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் சஞ்சய் ராய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு எதிரான விசாரணை நிறைவடைந்திருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவிலுள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட (ஆக. 9) கொடூரச் சம்பவம் தேசத்தையே உலுக்கியிருக்கிறது. இதில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் காவல்துறையுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி.
இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்றுவந்த பெண் மருத்துவர் (வயது 28) ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். மருத்துவமனையில் அமைந்திருக்கும் கருத்தரங்கக் கூடத்தில் அதிகாலை 3 மணியளவில் அவர் உறங்கச் சென்றார். மறுநாள் காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவரின் பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதடு ஆகிய இடங்களில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்திருக்கிறது. இந்தக் கொடூரத்தைக் கண்டு ஆவேசமடைந்த சக மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும், செவிலியர்களும் போராட்டத்தில் இறங்கினர். ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கிய போராட்டம், மேற்குவங்கம் முழுவதும் பரவியது. அதனால், மேற்குவங்கத்தில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு இழைக்கப்பட்ட அந்தக் கொடுமைக்கு எதிராக டெல்லி உள்பட பல இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். டெல்லியில் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, ஆர்.எம்.எல் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, வி.எம்.எம்.சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனை, டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி, தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில்தான், கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தை முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். அப்போது, மருத்துவரின் குடும்பம் விரும்பினால், இந்த கொலை வழக்கின் விசாரணையை மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும், ‘ஆகஸ்ட்18-ம் தேதிக்குள் மாநில போலீஸார் இந்த வழக்கு விசாரணையை முடிக்கத் தவறினால், சி.பி.ஐ-யிடம் வழக்கு ஒப்படைக்கப்படும்’ என்றும் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக ஜூனியர் மருத்துவர்கள் நான்கு பேர் போலீஸ் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அந்த நால்வரும்,
கொலை சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு கொலை செய்யப்பட்ட அந்த பெண் மருத்துவருடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டவர்கள். நான்கு மருத்துவர்களும் அங்கிருந்து சென்ற பிறகு, அந்த பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் தூங்கியிருக்கிறார். அப்போது, அதிகாலை நான்கு மணியளவில் முக்கியக் குற்றவாளி என்று தற்போது சந்தேகிக்கப்படும் சஞ்சய் ராய், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.
மேலும், ‘பெண் மருத்துவரின் கழுத்து நெரித்து, அந்த நபர் கொலை செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏழு மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். 60 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது’ என்றும் போலீஸார் கூறுகிறார்கள். மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு உடனடியாக மத்திய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக, ஜி.ஆர்.கர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில், ‘பெண் மருத்துவர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை சந்தீப் கோஷ் அழித்துவிட்டார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று போராடிவரும் மருத்துவர்கள் வலியுறுத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- விகடன் இணைய இதழ்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு