ரஷ்யாவுக்கு செக்.. இந்திய நிறுவனங்கள் எடுத்த முடிவால் புது சிக்கல்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ்

ரஷ்யாவுக்கு செக்.. இந்திய நிறுவனங்கள் எடுத்த முடிவால் புது சிக்கல்..!

tamil.goodreturns.in /news/russia-s-economy-is-in-crisis-as-indian-refiners-stopped-buying-crude-042893.html

ரஷ்யா: மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் ரஷ்யாவிற்கு பெரும் வருவாயை ஈட்டி தந்த கச்சா எண்ணெய் விற்பனை தற்போது அடி வாங்க தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்துவதற்கு ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இதன் காரணமாக ரஷ்யா ரஷ்யாவின் பொருளாதாரம் சரிவடையும் என்றும் அந்த அழுத்தத்தில் ரஷ்யா போரை கைவிடும் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நம்பின.

ஆனால் ரஷ்யாவோ தங்களது கச்சா எண்ணெய் விற்பனையை இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த நிறுவனங்களுக்கு தள்ளுபடி விலையில் விற்கத் தொடங்கி அதன் மூலம் பெரிய அளவில் வருவாய் ஈட்டியது.

கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் ரஷ்யாவின் பொருளாதாரத்தை சரியாமல் பார்த்துக் கொண்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ரஷ்யாவானது சீனா மற்றும் இந்தியாவிற்கு அதிக கச்சா எண்ணெயை விற்பனை செய்தது. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் வழியாக மறைமுகமாக மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஆனது சுத்திகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

2022 - 23 ஆம் நிதி ஆண்டில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கிட்டத்தட்ட 13 மடங்கு அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. அதாவது 2021-22ல் 2.5 மில்லியன் டாலராக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி, 2022-23இல் 31 பில்லியன் டாலர் என அதிகரித்தது. இதன் மூலம் ரஷ்யாவில் இருந்து என்ன இறக்குமதி செய்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்தது. இது ரஷ்யாவிற்கும் பெரிய வருவாயை ஈட்டி தந்தது.

இந்த நிலையில் அமெரிக்கா அண்மையில் ரஷ்ய நிறுவனங்கள் குறிப்பாக ரஷ்யா அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் டேங்கர்கள் மீது மிகக் கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. சோ காம்ப்ளோட் என்ற அரசுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் ஏற்றி செல்லக்கூடிய டேங்கர்கள் மீது பொருளாதார தடைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் முதல் அமெரிக்கா இத்தகைய தடைகளை வலுப்படுத்தி இருப்பதால் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்களை போக்குவரத்து செய்வது தடைபட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெயின் அளவு குறைந்து இருப்பதாகவும் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் தற்போது தான் வேலையை காட்ட தொடங்கியுள்ளன என்றும் எனர்ஜி ஆஸ்பெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஜியோபாலிடிக்ஸ் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் அமெரிக்காவானது 40 ரஷ்ய டேங்கர்கள் மீது பொருளாதார தடைகளை விதித்தது. இந்த கப்பல்கள் தற்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை நிரப்பி மற்ற நாடுகளுக்கு சப்ளை செய்வதை நிறுத்திவிட்டன என்பது ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சோ காம்ப்ளோட் டேங்கர்களில் இருந்து எண்ணெய் வாங்க போவதில்லை என அறிவித்துள்ளன. அதே வேளையில் உக்ரைன் ராணுவமானது ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக ரஷ்யாவின் வருவாய் ஆதாரமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது என யுரேசியா குழுமத்தின் தலைவர் கிரேக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ரஷ்ய அரசுக்கு சொந்தமான சோ காம்ப்ளோட் கப்பல்கள் தான் பெரும்பாலான கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு சப்ளை செய்தன. தற்போது இந்திய நிறுவனங்கள் இவற்றை வாங்குவதை நிறுத்தியதால் சுமார் ஏழு கப்பல்கள் கருங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் செய்தியில் தெரிய உள்ளது.

ஆனால் ரஷ்யா பழைய கப்பல்கள் மூலம் எண்ணெய் விநியோகத்தை தொடங்கி இருப்பதாகவும் கிட்டத்தட்ட 600 பழைய கப்பல்கள் தற்போது மீண்டும் பணிக்கு கொண்டுவரப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவுக்கு சொந்தமான டீசல்களை எங்கும் கொண்டு செல்ல முடியாமல் கடல்களிலேயே வீசப்படுவதாகவும் 6.2 மில்லியன் பேரல் டீசல்கள் இவ்வாறு கடலில் மிதந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story written by: Devika

தமிழ் குட்ரிட்டன்ஸ்

https://tamil.goodreturns.in/news/russia-s-economy-is-in-crisis-as-indian-refiners-stopped-buying-crude-042893.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு