திமுக ஆட்சியின் முருகன் மாநாடு - இந்துத்துவ அஜெண்டா
விகடன் இணைய இதழ்
முத்தமிழ் முருகன் மாநாடு: கோலாகலமாகக் கொண்டாடிய திமுக அரசு - கொந்தளித்த கூட்டணிக் கட்சிகள்!
``பழனியில் நடக்கின்ற இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆன்மீக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப் பெறும்” - மு.க. ஸ்டாலின்
அறநிலையத்துறை சார்பில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், அமைச்சர்கள், நீதியரசர்கள், சன்னிதானங்கள், சமய சொற்பொழிவாளர்கள், தமிழ் இலக்கிய அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள், வெளிநாட்டு பக்தர்கள் என்று பல்துறை அறிஞர்களும் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் முதல் நாளான ஆகஸ்ட் 24-ம் தேதி காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், ``ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. அதுமட்டுமல்ல, அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாகவும் செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்ற கருத்தியலை அடிப்படையாக கொண்டது. அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறையையும் மிகச் சிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறோம். தி.மு.க-வின் தாய் அமைப்பான நீதிக்கட்சி காலத்தில்தான் பழுத்த ஆத்திகரான அன்றைய முதலமைச்சர் பனகல் அரசரால் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்பாட்டுச் சின்னங்களான கோயில்கள் முறையாக பாதுகாக்கப்படவேண்டும், முறையாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று சீரோடும், சிறப்போடும் கோயில்கள் இயங்க அடித்தளம் அமைத்தது அந்தச் சட்டம்தான்.
கடந்த மூன்றாண்டு காலத்தில் 1,355 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள், 3,776 கோடி ரூபாயில் 8,436 திருக்கோயில்களில் திருப்பணிகள். 50 கோடி ரூபாயில் கிராமப்புற ஆதிராவிடர் கோயில்களில் திருப்பணிகள் நடத்தி இருக்கிறோம். இப்போது நான் சொன்னதெல்லாம் மிகவும் குறைவு. நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளை, இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஒரு புத்தகமாகவே போடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து சிலவற்றைத்தான் நான் இப்போது சொல்லியிருக்கேன். பழனியில் நடக்கின்ற இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆன்மீக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப் பெறும்!" எனத் தெரிவித்தார்.
அதேபோல மாநாட்டின் இரண்டாம் நாளான ஆகஸ்ட் 25-ம் தேதி, காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ``திராவிடம் யாரையும் ஒதுக்காது. எல்லோரையும் இணைக்கும் என்பதற்கு உதாரணம்தான் அனைத்து சாதியினரையும், மகளிரையும் அர்ச்சகராக்கியது. முத்தமிழ் முருகன் மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமல்லாமல், தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!'' என்று புகழாரம் சூட்டினார். அதைத்தொடர்ந்து மாநாட்டின் நிறைவாக சுமார் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், தி.மு.க அரசு நடத்திய முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்களே கருத்து தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
`மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும்!'
குறிப்பாக, சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ``மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் - பாஜக பரிவாரம் துடிக்கிறது. கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே அவர்களின் நோக்கம். இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது. மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.
`கல்வியைக் காவி மயமாக்கும் தீர்மானங்கள்!'
அதேபோல வி.சி.க பொதுச்செயலாளரும் எம்.பியுமான ரவிக்குமார், ``கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள்,
5 ஆவது தீர்மானமாக : “ முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும்;
8 ஆவது தீர்மானமாக : “ விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும்;
12 ஆவது தீர்மானமாக : “ முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல. இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது!" எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ``முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும். முத்தமிழ் முருகன் மாநாடு சமயச் சார்பற்ற தமிழ் அடையாளத்தைப் புகுத்தும் நல்ல நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டிருந்தாலும் அது வகுப்புவாதத்தைத்தான் வலுப்படுத்தும். ஏனென்றால் தமிழ்க் கடவுள் எனப்படும் முருகன் இந்து அடையாளத்துக்குள் நீண்ட கலத்துக்கு முன்பே உள்வாங்கப்பட்டுவிட்டார். முருகக் கடவுளுக்கு ஆடு அறுத்துப் படையிலிடப்பட்டது என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. அப்படி பக்தர்கள் இப்போது படையிலிட முடியாது. முருகனும் மற்ற தமிழ்க் கடவுள்களும் இந்து அடையாளத்துக்குள் எப்போதோ உள்வாங்கப்பட்டுவிட்டனர்!" எனத் தெரிவித்திருக்கிறார்.
- விகடன் இணைய இதழ்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு