முழுக்கட்டுரை: திமுக ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமைகளுக்கான அடிப்படைகளும் நமது செயல்தந்திரமும்

சமரன்

முழுக்கட்டுரை: திமுக ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமைகளுக்கான அடிப்படைகளும் நமது செயல்தந்திரமும்

"திராவிட மாடல்" திமுக ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமைகள்

பகுதி 1

இந்தியா தொடர்ச்சியாக காலனிய மற்றும் புதிய காலனிய சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறைக்கு முடிவு கட்டப்படாமல் இன்றும் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை நீடித்து வருகிறது. நிலவும் மக்கள் விரோத தேச விரோத மத்திய, மாநில அரசுகள் அந்நிய ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் நாட்டை அகலத் திறந்து விட்டுள்ளனர். தனியார்மய தாராளமய, உலகமயக் கொள்கைகளை அமல்படுத்தி தேசிய முதலாளித்துவ வளர்ச்சியை நசுக்கி வருகின்றனர். நிதிமூலதன ஆதிக்க கும்பலுக்கு சேவை செய்யும் தரகுமுதலாளித்துவ கும்பல் தலைமையில் ஒரு பாசிச காட்டாட்சியை நடத்தி வருகின்றனர். அக்கும்பல் அரை நிலப்பிரபுத்துவத்தை பாதுகாக்கின்றது. 

இதன் காரணமாக உற்பத்தி ஒன்றுகுவிப்பு ஒருபக்கம் நடைபெறுகிறது. மறுபுறம் கிராமங்களில் விவசாயம் அழிந்து வேலையின்மை அதிகரித்து வறுமை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கெல்லாம் காரணமான இன்றைய ஆட்சியாளர்களின் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் பாட்டாளி வர்க்கத் தலைமையில் புரட்சிக்கு அணித் திரளாமல் தடுக்கும் பொருட்டு ஏகாதிபத்தியங்களும், இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும் சாதிவாதிகளின் மூலம் சாதி அமைப்புகளைக் கட்டியமைத்து சாதி வெறியைத் தூண்ட எல்லா உதவிகளையும் செய்து வருகின்றன. 

நாடாளுமன்றவாத ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் ஒவ்வொரு சாதியிலும் உள்ள ஆதிக்கவாதிகளுடனும் சாதிவாதக் கட்சி தலைவர்களுடன் பேரம் பேசி சாதி ஓட்டுகளைப் பெற்று ஆட்சியில் அமரத் துடிக்கின்றன. அதற்காக இச்சாதிவாத அமைப்புகளும் தங்களின் தலைமையில் சாதிரீதியாக உழைக்கும் மக்களைத் திரட்டுகின்றனர்; அவர்களுக்கு சாதிவெறியை தூண்டி விடுகின்றனர்; இவர்களின் பதவிவெறிக்காக அனைத்து சாதியிலுமுள்ள உழைக்கும் மக்களை பலிகடாவாக்குகின்றனர். 

கிராமங்களில் வேலையின்மையால் வேலைத் தேடி மக்கள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள மிகச் சொற்பமான சிலர் தங்களின் வாழ்வாதாரத்தை முன்னிலும் சிறிய அளவில் மேம்படுத்திக் கொண்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் மக்களின் வறுமை மற்றும் அவல நிலைக்கு, தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் மக்கள் தங்களுக்கு அடிபணிந்து வேலைசெய்யாததே காரணமாகும் என அவர்களை கொம்பு சீவி விடுகின்றனர் இந்த சாதிவெறியர்கள். மறுபுறம் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது உரிமைகளுக்காக குரல் எழுப்புகிறார்கள். அவர்களின் குரல்வளையை நசுக்க சாதிக் கலவரங்களை திட்டமிட்டு கட்டியமைக்கிறது இந்த ஆதிக்க சாதிவெறி கும்பல். 

இன்றைய பாசிச ஆட்சியில் சாதிய வன்கொடுமை என்பது நாடு முழுவதும் பொதுப்போக்காவே மாறியுள்ளது. இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பலும், பாமக உள்ளிட்ட சாதிவெறி கும்பலும் திட்டமிட்டே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சாதிவெறியர்களை தங்களது அணியில் திரட்டி வருகின்றனர். இந்த மக்கள்விரோத சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் வன்கொடுமைகளை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றனர். சாதிய வன்கொடுமைகளை அரங்கேற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே 7வது இடத்தில் நீடித்து வருகிறது.  சமூக நீதி என மார்த்தட்டிக் கொள்ளும் திமுக-அதிமுக-இவ்விரு திராவிட ஆட்சிகளின் காலங்கள் முழுவதிலும் இந்த வன்கொடுமைகள் தொடர்ச்சியாக நடைபெற்றே வருகின்றன. தற்போதைய திமுக ஆட்சியில் இது பன்மடங்கு அதிகரித்துள்ளது. அவை குறித்து தொகுப்பாக இக்கட்டுரையில் பார்ப்போம்.

தீவட்டிப்பட்டியில் சாதிக் கலவரம்

மதவாத-சாதிவாத சக்திகள் கைக்கோர்த்துக் கொண்டு மக்களிடையில் நிலவுகின்ற நிலப்பிரபுத்துவ சாதி உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் சாதி வெறியாக மாற்றி அவர்களிடையே சாதிக் கலவரத்தை தூண்டி வருகின்றன. இதற்காக வருடந்தோறும் தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் நடைபெறும் சித்திரை திருவிழாக்களை சாதிக் கலவரத்தை தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. அக்கும்பலின் இந்த திட்டத்தின் பகுதியாகவே இம்மாதம் தீவட்டிப்பட்டியை கலவர பூமியாக மாற்றியுள்ளது இக்கும்பல். அதற்கு திமுக அரசும் தனது பாசிச கரங்களை நீட்டி துணை சென்றுள்ளது.  

சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுக்காவிலுள்ள தீவட்டிப்பட்டியில் அமைந்துள்ளது பெரியமாரியம்மன் கோவில். இக்கோவில் 1972ம் ஆண்டிலிருந்து இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவில் தீவட்டிப்பட்டி, நாச்சினம்பட்டி உள்ளிட்ட அருகாமையில் அமைந்துள்ள அனைத்து கிராம மக்களின் வழிபாட்டுக்கும் பல தசாப்தங்களாக பொதுவானதாய் இருந்து வருகிறது. இந்த ஆண்டு மேமாதம் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் அக்கோவிலுக்குள் தீவட்டிப்பட்டி-நாச்சினம்பட்டியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை நுழையவிடாமல் தடுத்து கலவரத்தை மூட்டியுள்ளனர் பாமக சாதி வெறியர்கள். 

மஜஇக மாநில அமைப்பாளர் தோழர் மாயகண்ணன் தலைமையிலான உண்மை அறியும் குழு சாதிக்கலவரம் நடந்த ஓரிரு நாட்களில் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அதில் தோழர் மாயகண்ணன் நம்மிடம் பின்வரும் தகவல்களை தொகுத்தளித்தார். தீவட்டிப்பட்டியில் வன்னியர், சோழிய வெள்ளாளர் உள்ளிட்ட 5 வகையான பிற்படுத்த சாதியைச் சார்ந்தவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 500 குடும்பங்களும் நாச்சினம்பட்டியில் பறையர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் சுமார் 200 குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்களுக்குள் இது போன்ற சாதி மோதல்கள் ஏதுமில்லாமல் மரபு வழியில் (சாதிய முறையில்) முதல் நாள் திருவிழாவை பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களும், 2 வது நாள் திருவிழாவை (தாய் சீதனம் செலுத்துதல் என்பதை வழக்கமாக கொண்டு) செய்து வந்துள்ளனர். ஆனால் இந்தாண்டு மே1ம் தேதி வன்னிய சாதிவெறி பாமக கட்சியினரின் தலையீட்டால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கோவிலுக்குள் சென்று வழிபட மறுக்கப்பட்டுள்ளது. தீவட்டிப்பட்டியிலுள்ள அனைத்து பிற்படுத்த சாதியை சேர்ந்த சாதிவெறியர்களும் பாமகவின் சாதிவெறித் தூண்டலுக்கு துணைசென்று தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை பறித்துள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து காவல் ஆய்வாளரும் தாசில்தாரும் கோவிலுக்கு வந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களிடம் சமாதானம் பேச அதிமுகவை சார்ந்த விஜயன் என்பவருக்கு தகவல் தெரிவித்து அழைத்துள்ளது காவல்துறை. நேரில் வந்த அவர் அதற்கு இணங்காமல் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமைக்காக தானும் குரல் கொடுத்துள்ளார். இதனால் மறுநாள் அமைதியை ஏற்படுத்தும் குழு (Peace commitee) ஒன்றை உருவாக்கி பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து சென்றுள்ளனர். அக்குழுவை ஜனநாயக பூர்வமாக முறையாக அமைக்காமல் ஆதிக்க சாதியினர் பக்கம் நின்று கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டது அரசு. அதுவே கலவரம் ஏற்படுவதற்கு வழி அமைத்தது. 

மே2ம் தேதி, பேச்சுவார்த்தை நடப்பில் இருக்கும்போதே பாமக சாதிவெறியர்கள் திட்டமிட்டபடி கலவரத்தை உண்டாக்கினர். இவ்விரு கிராமங்களில் மட்டுமில்லாமல் சுற்றுவட்டாரத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் சாதிவெறியர்களை ஒன்று திரட்டி கலவரத்திற்கு தயாரித்தது அக்கும்பல். சாக்குமூட்டைகளில் கருங்கற்களை நெடுஞ்சாலையின் பாலம் மீதும் கட்டிடங்கள் மீதும் ஏற்கெனவே தயாராக குவித்து வைத்திருந்தனர். பேச்சுவார்த்தைக்கு வந்த தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு சிலரை அடித்து தாக்குதல் தொடுக்கவும். இதை எதிர்த்து தங்களது உரிமைக்காக நீதி வேண்டி அவர்கள் அப்பகுதியின் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கருங்கல்லால் அடித்து தாக்குதல் தொடுத்தனர். உயரமான இடங்களில் இருந்து கருங்கற்களை வீசியெறிந்தனர். காய்கறி, பழக்கடையை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அதுவரை போலீஸ் வேடிக்கைப் பார்த்தது; பாமக சாதிவெறியினருக்கு உறுதுணையாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பதில் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். கலவரத்தை அடக்குவது என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதில் திமுக அரசின் காவல்துறையும் சேர்ந்து கொண்டது; அவர்களை தேடித் தேடி வேட்டையாடியது; அவர்கள் மீது இரத்தவெறிக் கொண்டு தாக்குதல் தொடுத்தது. இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலரின் மண்டைகள் உடைக்கப்பட்டன; கை, கால்கள் ஒடிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்; பூக்கடை, தேநீர்கடை, தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர் நடத்தி வரும் சலூன்கடை உள்ளிட்ட சில கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 

காவல்துறை இதோடு தங்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. தீவட்டிப்பட்டி-நாச்சினம்பட்டி தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து வீடு வீடாக புகுந்து வேட்டையாடியது. தூங்கி கொண்டிருந்தவர்கள், குளித்துக் கொண்டிருந்த பெண்கள், வேலைக்கு சென்று திரும்பியவர்கள் என அனைவரையும் தாக்குதலுக்குள்ளாக்கியது. கல்லூரி படித்து வரும் மாணவர்களையும் தாக்கியுள்ளது; பெண்களின் சேலையை உருவி தகாத வார்த்தைகள் பேசி மானபங்கம் செய்துள்ளது; 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களையும் கூட அடித்து துன்புறுத்தியுள்ளது. இதில் 14 தாழ்த்தப்பட்ட இளைஞர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. அவர்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைப்பதை தடுக்கும் சட்டம் உள்ளிட்ட குற்றங்களின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காக அதிமுகவைச் சேர்ந்த விஜயன் மீதும் வழக்கு பதிந்துள்ளது. காவல்துறை தகவல் அளித்து-அதன்பின்பே சம்பவ இடத்திற்கு வந்த ஒருவரை முக்கிய குற்றவாளியாக மாற்றியுள்ளது இந்த திராவிடமாடல் அரசு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் சேர்க்காமல் பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கியே கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக பேசி வருகிறார் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன்.  

கலவரத்திற்கான துவக்கப்புள்ளி எது?          

கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவிலேயே இப்பிரச்சினை சிறிய அளவில் தொடங்கியுள்ளது. அப்போது வன்னிய சாதிப் பெருமை பேசும் சினிமா பாடலை ஒலிக்க விட்டுள்ளனர். அப்போதே இரு தரப்புக்கும் இடையே சில சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இந்தாண்டு, 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பிரச்சாரங்கள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 19ல் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாமக அதிமுக இடையே கூட்டணிக்கான பேச்சுவார்த்தை பலதரப்பில் நடைபெற்று இறுதியில் தோல்வியடைந்தது. பாமக, பாஜகவின் தலைமையிலான மதவாத-சாதிவாத கூட்டணியில் இணைந்துக் கொண்டது. இதனால் அதிமுக பாமக கட்சியினர் இடையே பிரச்சாரங்களில் போட்டியும் வார்த்தை சண்டைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். பாமகவினர் எடப்பாடியை கேவலமாக பேசுவது, அதிமுகவினர் அன்புமணியையும் அவரது மனைவி மகள்களையும் கேவலமாக பேசுவதாகவும் சச்சரவுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த அருண்குமார் எனும் இளைஞர் அதிமுகவில் செயல்பட்டு வருகிறார். அவர் எடப்பாடிக்கு ஆதரவாக பாமக வேட்பாளர்களுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதில் பதிவு போட்டுள்ளார். சாதிவெறி தலைக்கேறிய பாமகவினர் அருண்குமார் மீது புகாரளித்து கைது செய்ய வைத்துள்ளனர். அவர் காவல் நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். பின்பு விசிகவின் தலையீட்டால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சங்கத்தமிழன் கூறுகிறார். இதனால் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட பாமகவின் சேலம் மேற்கு மாவட்ட எம்.எல்.ஏ. அருள் ராமதாஸ், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் அண்ணாமலை என்பவர் தலைமையில் சாதிக் கலவரத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை பயன்படுத்திக் கொண்டனர். இதுவே இந்த கலவரத்திற்கான துவக்கப்புள்ளியாக அமைந்துள்ளது. ஆனால் அதிமுகவின் தொண்டர்கள் பாதிக்கப்பட்ட போதும் கூட அதிமுகவின் தலைமை இதில் தலையிடாமல் மௌனம் காத்து வருகிறது. இவர்களின் பதவி வெறிகளுக்கு சாதாரண தொண்டர்களை பலிகடா ஆக்கி வருகிறார்கள். இந்த சாதிவெறியர்கள் கட்சி ரீதியாக பிளவுபட்டிருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதில் கைக்கோர்த்து கொள்கிறார்கள்.

அமைதிக் குழு எனும் பெயரில் கலவரத்திற்கு துணைசென்ற திமுக அரசு          

தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது அவர்களுக்கு உரிய நீதியை வழங்காமல், அமைதியை ஏற்படுத்தும் குழு எனும்பெயரில் திமுக அரசு-காவல்துறை-பாமக சாதிவெறியர்கள் ஒன்று சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கூட்டு பாசிசத்தை ஏவியுள்ளனர். இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு இருக்கும் சட்டரீதியான அரைகுறை ஜனநாயக உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 17: "தீண்டாமை ஒழிக்கப்பட்டது மற்றும் எந்த வடிவத்திலும் அதை நடைமுறைப்படுத்துவது தடைசெய்யப் பட்டுள்ளது. தீண்டாமையின் விளைவாக உருவாகி நடைமுறைப் படுத்தப்படும் எந்தத் தகுதி இழப்பும் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்" என்கிறது. மேலும் 1995ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச்சட்டம்-1989, சாதி ரீதியாக தாழ்த்தபட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பட்டியலிட்டு அவற்றுக்கு காரணமானவர்களை இச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்துகிறது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக இவ்விரு சட்டங்களும் ஏட்டளவில்தான் உள்ளன. எந்த அரசுகளும் இவற்றை நடைமுறைப்படுத்துவதே இல்லை. ஆதிக்க சாதிகளின் வாக்குவங்கிக்காக இச்சட்டத்தை பயன்படுத்த மறுக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கின்றன. 

தீவட்டிப்பட்டியில் அதுதான் நடந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை பாமக சாதி வெறியர்கள் மறுக்கும்போது திமுக அரசு என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக அந்த சாதிவெறியர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் அமைதியை ஏற்படுத்தும் குழுவை அமைப்பது எனும் பெயரில் கட்டப் பஞ்சாயத்து நடத்தியுள்ளது; தாழ்த்தப்பட்ட மக்களை அடிபணிந்துபோக கூறி சமரசம் பேசியுள்ளது; ஆதிக்க சாதியினரின் அனுமதிக்காக காத்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கு மாறாக கோவிலை சீலிட்டு இழுத்து மூடியுள்ளது. இதுதான் திராவிட மாடல் மு.க.ஸ்டாலின் அரசின் 'சமூகநீதி'யா? இது சமூக அநீதி!

காவல்துறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறைகளின் முக்கிய பதவிகளிலும் சாதிவெறியர்களும், ஆர்.எஸ்.எஸ்.ன் சங்பரிவார குண்டர்களும் நிரம்பி வழிகின்றனர். இவர்கள் இசுலாமியர்களுக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களை ஒடுக்குவதில் கட்சி பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அவர்கள் பாஜக வில் இருந்தாலும் சரி, காங்கிரசில் இருந்தாலும் சரி, அதிமுகவில் இருந்தாலும் சரி, திமுகவில் இருந்தாலும் சரி, புதிய தமிழகத்தில் இருந்தாலும் சரி, விசிகவில் இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த ஜனநாயக அமைப்புகளில் இருந்தாலும் சரி அவர்களை இரும்புக் கரம் கொண்டே ஒடுக்குகின்றனர். பிற்படுத்தப்பட்ட சாதியினரை அடித்தளமாக கொண்டுள்ள எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் தனது சொந்த கட்சியினரை கூட அவர் தாழ்த்தப்பட்டவராய் இருந்தால் ஒடுக்கவே செய்கின்றனர். இப்படிப்பட்ட சாதி வெறியர்களை வைத்துக் கொண்டுதான் திமுக அரசாங்கம் நடத்துகிறது. இவர்களை களையெடுக்க வக்கில்லாமல்தான் சமூகநீதி வேடம் போடுகிறது. 

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சாதிவெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யாமல் அவர்களை பாதுகாக்கிறது. அமைதிக் குழு எனும் பெயரில் சாதிவெறியர்களுடன் சேர்ந்து கலவரத்தை அரங்கேற்றியுள்ளது திமுக அரசு.

"திராவிட மாடல்" திமுக ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமைகள்         

தீவட்டிப்பட்டி கலவரம் ஏதோ ஒரு தனித்த சம்பவம் அல்ல. சாதி தீண்டாமை கொடுமைகள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாடு முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுதான் வருகின்றன. தற்போதைய திமுக ஆட்சியில் இந்த சாதிய வன்கொடுமைகள் தினந்தோறும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்று வரும் சாதிய வன்கொடுமைகள் குறித்தும்; அவை அதிகரிப்பதற்கான காரணங்கள்; சாதி இன்றும் நிலவுவதற்கான அடிப்படைகள்; சாதி ஒழிப்பிற்கான நிரந்தர தீர்வு குறித்தும்; உடனடியாக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அனைத்து சாதி உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கான நமது செயல்தந்திரங்கள் குறித்தும் அடுத்தடுத்த இதழ்களில் தொடர்ச்சியாக பார்ப்போம்.

பகுதி 2 ல் தொடரும்...

சமரன் 
(ஜூன் 2024 மாத இதழில்)

=========================================================================

பகுதி 2

இத்தொடர் கட்டுரையின் முதல் பகுதியில் (ஜூன் 2024 மாத இதழ்) தீவட்டிப்பட்டியில் நடந்த சாதி கலவரம் பற்றி பார்த்தோம். அது தனித்த சம்பவம் அல்ல. திமுக ஆட்சியில் சாதிய வன்கொடுமைகள் தொடர் நிகழ்வு போக்காகி விட்டது என்பதனை குறிப்பிட்டிருந்தோம். 

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை பறிப்பு - அதற்காக நிகழ்த்தப்படும் கொடூரமான ஆணவப் படுகொலைகள், அவர்களின் மத உரிமையான வழிபாட்டு உரிமை மறுப்பு, கல்வி உரிமை மறுப்பு, வாழ்வாதாரத்திற்காக தொழில் நடத்தும் உரிமை மறுப்பு, பாதை மறுப்பு, வாழ்விடம் பறிப்பு என அவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகள் சொல்லி மாளாது. இந்த கட்டுரையின் அடுத்த பகுதி எழுதுவதற்குள் மிகக் கொடூரமான சாதிய படுகொலைகள் திமுக ஆட்சியில் கடந்த தினங்களில் அரங்கேறிவருவதை நாம் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். அவற்றை பற்றி இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

சாதிய வன்கொடுமைகள்

சுதந்திர திருமண உரிமையை பறிக்கும் சாதி ஆணவ படுகொலைகள்

1. விருதுநகர் கோவிலாங்குளம் - அழகேந்திரன் படுகொலை

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியின் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த அழகேந்திரன் என்பவர் பள்ளர் சாதியை சேர்ந்த ருத்ர பிரியாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு கிளம்பியுள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கட்டாயமாக பிரித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். 23.06.2024 அன்று திருமணம் குறித்து பேசலாம் என அழகேந்திரனை நயவஞ்சமாக பேசி அழைத்துள்ளனர். அதை நம்பி சென்ற அழகேந்திரன் வீடு திரும்பவில்லை. மதுரையில் உறவினர் வீட்டிற்குச் சென்றவன் இன்னும் வரவில்லையே என பதறி அவரின் பெற்றோர் தேடியுள்ளனர். காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் 4 தினங்களுக்கு பிறகு 27.06.2024 அன்று அவரின் உடல் பேரையூர், வேலாம்பூர் கண்மாய்க்கு அருகில் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

"அழகேந்திரனின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு முண்டமாக கிடந்த அந்த உடலில் புழுக்கள் நெளிந்து கொண்டு இருந்தன. இது போன்ற ஒரு கொடூரமான ஆணவ கொலையை என் 30 வருட கள பணியில் பார்த்தது இல்லை... ...அழகேந்திரன் என்கிற அருந்ததியர் இளைஞர் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். எப்படி எல்லாம் சித்ரவதை செய்யப்பட்டு இருப்பார்? அசுரன் படத்தில் தனுஷின் மூத்த மகன் தலை தனியாக முடம் தனியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பார். அதைவிட கொடுமையானது இந்த படுகொலை" என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

இந்த கொலையை பெண்ணின் மாமன் பிரபாகரன், பெண்ணின் தந்தை உள்ளிட்டவர்கள் கூட்டாக சேர்ந்து நயவஞ்சகமாக திட்டமிட்டு செய்துள்ளனர். ஒரு பள்ளர் சாதிப்பெண்ணை ஒரு சக்கிலிப்பையன் காதலிக்கலாமா?? என்பதுதான் இவர்கள் முன்வைக்கும் பிராதான கேள்வி. எனவே இது அப்பட்டமான தலித்திய சாதி வெறியால் நடத்தப்பட்ட சாதிய ஆணவப் படுகொலையாகும். 

இந்த வகையான தலித்திய சாதிவெறி படுகொலையும் புதிதல்ல. இவையும் தொடர்ச்சியாக சமீப காலங்களில் நடைபெற்றே வருகின்றன. இருப்பினும் இது மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பல்வேறு தரப்பினரால் விவாதிக்கப்படாமலேயே கடந்து போகிறது.  இவற்றுக்கான அடிப்படைகளையும் காரணங்களையும் நாம் இக்கட்டுரையின் இறுதியாக பார்ப்போம். அதற்கு முன்பாக கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற இதையொத்த சாதிய வன்கொடுமை சம்பவங்களை முதலில் பார்த்து விடுவோம். 

இந்த தகவல்கள் வாய்ப்புள்ள பகுதிகளில் மஜஇக சார்பில் கள ஆய்வு செய்து பெறப்பட்டவை. அது தவிர பெரும்பாலான தகவல்கள் பிபிசி தமிழ், நக்கீரன், இந்து தமிழ், விகடன், வினவு, கீற்று, தீக்கதிர், செந்தளம் உள்ளிட்ட ஊடகத் தளங்களில் இருந்தும் சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த தோழர் ரமணி தொகுத்து வெளியிட்ட 'யாருமே தடுக்கல' என்ற ஆவணத்தில் இருந்தும் எடுத்துக் கையாளப்பட்டுள்ளன.    

2. சிவகங்கை திருப்புவனம் - திவ்யா எரித்து கொலை

2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மேலவெள்ளூரில் அகமுடையர் சாதியை சேர்ந்த திவ்யா எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். பள்ளர் சாதியைச் சார்ந்த இளைஞரை காதலித்து வந்த காரணத்திற்காகவே இக்கொடூர கொலையை பென்ணின் பெற்றோர்களே செய்திருக்கிறார்கள். இக்கொலையை செய்வதற்கு முன்பாகவே அந்த இளைஞனை கஞ்சா கடத்தியதாக பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவல்துறை. இப்படுகொலை பெண்ணின் பெற்றோர், சாதிவெறியர்கள் மற்றும் காவல்துறையின் கூட்டால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த செய்தியே வெளியில் வரவில்லை. இது குறித்த செய்தியை பிரச்சாரம் செய்ய முயன்ற தமிழ்நாடு பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் மிரட்டியுள்ளது திமுக அரசின் காவல்துறை.  

3. கும்மிடிப்பூண்டி காரணி - கௌதமன் படுகொலை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆவூர் பகுதியில் வசித்துவரும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த அமுல் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்துள்ளார். கும்மிடிப்பூண்டி, காரணி பகுதியின் வன்னிய சாதியைச் சேர்ந்தவர் இளைஞர் கௌதமன். இவரின் குடும்பம் நிலவுடைமை கொண்ட வசதியான குடும்பம். இருப்பினும் இவர் சென்னையில் செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவ்விருவரும் கௌதமன் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறியும் 7 வருடமாக காதலித்து 2019 ல் பதிவு திருமணம் செய்து சென்னையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். கௌதமன் குடும்பத்தினர் தொடர்ச்சியாக அமுலை விட்டு பிரிந்து வந்துவிடும்படியும் வேறு திருமணம் ஏற்பாடு செய்வதாகவும் நெருக்கடி கொடுத்துள்ளனர். 

2021, செப்டம்பர் 17ம் தேதி அவரின் தாத்தா இறந்து விட்டதாக உடனே ஊருக்கு கிளம்பி வரும்படி போன் செய்திருக்கிறார்கள். அவரும் புறப்பட்டுச் சென்றுள்ளார். அன்று இரவு அமுலிடம், குடும்பத்தினர் அனைவருடன் முக்கியமான விசயம் பேசுவதாகவும் மீண்டும் அழைப்பதாகவும் பதற்றமாக போனில் கௌதமன் கூறியிருக்கிறார். அதன் பின்னர் அவர் போன் இணைப்பு கிடைக்கவில்லை. கவுதமன் வந்துவிடுவார் என நம்பியிருந்த அமல் 2 நாட்களாகியும் வராததால் தனது சகோதரனை கௌதமன் ஊருக்கு அனுப்பிருக்கிறார். அங்கு சென்றால் பஸ் நிலையத்திலேயே கௌதமனின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி கண்ணில்பட அவர் அதை அமுலுவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். செய்தியறிந்த அமுலு தனது பச்சிளம்குழந்தையுடன் அழுது துடித்திருக்கிறார். காவல்துறையில் புகார் அளித்தபின், சாதிவெறியால் தன் மகனையே ஆணவப் படுகொலை செய்த அவரது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் தலைமறைவாகி விட்டனர்.

4. கும்பகோணம் பந்தநல்லூர் - பிரபாகரன் படுகொலை

கும்பகோணத்தை அடுத்துள்ள பந்தநல்லூர் - வேட்டமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். பறையர் சாதியைச் சார்ந்த இவர் ஆட்டோ ஓட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். பந்தநல்லூர் - காமாட்சிபுரம் ஆசாரி சாதியைச் சேர்ந்த `வெல்டர்' மணிகண்டனின் மகள் பரணிகாவை காதலித்து வந்துள்ளார். பரணிகா பிரபாகரனின் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தினருடனும் நன்றாக பழகியுள்ளார். அவர்கள் 18 வயது நிரம்பிய பின் பார்த்துக் கொள்ளலாம் அதுவரை படிப்பில் கவனம் செலுத்து என்று வலியுறுத்தியும் பேசியுள்ளனர். அதை காதலித்த இருவருமே ஏற்றுள்ளனர். இந்த நிலையில் 2021 அக்டோபர் 9 ம் தேதி மாலை பிரபாகரனின் நண்பர் கார்த்தி மூலம் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். பிரபாகரன் தம்பி விக்னேஷ் நேரமாகியும் காணவில்லையே என அவரை தேடிச் சென்றுள்ளார். அந்த இருளில் விக்னேஷ் வருவதை அறிந்த மணிகண்டனும் கார்த்தியும் சேர்ந்து பிரபாகரனை அவசர அவசரமாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். தன் தம்பியின் கண் முன்னே துடி துடித்து இறந்துள்ளார் பிரபாகரன். 

சாதியால் வேறுபட்டிருந்தாலும் இவர்கள் இருவரும் ஒரே வர்க்க வாழ்நிலையில் வாழ்பவராகவே இருந்துள்ளனர். பிரபாகரனின் வருமானத்தை நம்பிதான் 3 உடன்பிறந்தவர்களை கொண்ட அவரது குடும்பம் பிழைத்து வந்தது. வன்னியர் சாதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சீதாபதியின் சாதிவெறி தூண்டுதலுக்கு பலியாகி மணிகண்டனும் கார்த்தியும் சேர்ந்து பிரபாகரனை சாதி ஆணவ படுகொலை செய்தனர். இக்கொலைக்கு சில தினங்களுக்கு முன்புதான் சீதாபதி பந்தநல்லூர் பகுதியில் சாதி வெறியை ஊட்டும் வகையில் ஊர் மக்கள் மத்தியில் பேசியுள்ளார். ஆனால் காவல்துறை இவ்விருவரை மட்டுமே கைது செய்தது. படுகொலைக்கு முக்கிய காரணமான திமுக கவுன்சிலரை விசாரிக்க கூட இல்லை.     

இதை கண்டித்து மஜஇக சார்பில் திமுக சீதாபதியை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வந்தனர். திருப்பனந்தாள் காவல்துறை அதற்கு அனுமதி மறுத்ததோடு, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ரணதீபனையும் திருப்பனந்தாள் பகுதிக்குள் நுழைந்தால் கைது செய்வோம் என மிரட்டியுள்ளது. அம்மிரட்டலுக்கு அடிபணியாத தோழர்கள் தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.  

5. கன்னியாகுமரி தோவாளை - சுரேஷ்குமார் படுகொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தோவாளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த இவர் பெயின்டிங் காண்டிராக்ட் வேலை செய்து வந்துள்ளார். இவரும் காட்டுப்புதூர் பகுதி பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணும் கல்லூரியில் பயின்ற போதிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த விசயம் பெண் வீட்டாருக்கு தெரிந்து அவர்கள் சுரேஷ்குமாரை கண்டித்தும் சாதி ரீதியாக இழிவுப்படுத்தியும் உள்ளனர். அதை மீறியும் அவர் 8 வருடமாக தனது காதலில் உறுதியுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் குடும்பமே சேர்ந்து பெண்ணை மிரட்டி அவருக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இத்திருமணத்திற்கு சுரேஷ்குமார் தடையாக இருப்பார் என கருதி அவரை கொல்ல திட்டமிட்டுள்ளனர் அந்த சாதிவெறியர்கள். 2021 நவம்பர் 8ம் தேதி, பூதப்பாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜோசப் ராஜ் மூலம் சுரேஷ் குமாரை  காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அதன் பிறகு அவரை கொடூரமாக தாக்கி விசம் கொடுத்து கொன்றுள்ளனர். உடலை அருகில் இருந்த காட்டுப் பகுதியில் வீசிவிட்டு அதனை தற்கொலை போல ஜோடித்துள்ளனர். இந்த சாதி ஆணவ படுகொலையில் சாதிவெறியர்களையும் அதற்கு துணைபோன காவல் ஆய்வாளரையும் பாதுகாத்துள்ளது திமுக அரசு.       

6. கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் - ஹரி-நிவேதா எரித்துக் கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் ஹரிகிருஷ்ணன் என்ற பறையர் சாதியைச் சேர்ந்த மாணவனும் அதே கிராமம் வன்னியர் சாதியைச் சேர்ந்த ராஜன் மகள் நிவேதா (16) என்ற மாணவியும் 12ஆம் வகுப்பு படித்துவந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதனை அறிந்த நிவேதாவின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் 2021ம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி அவர்களை பிடித்து கட்டிப்போட்டுள்ளனர். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலை முதல் கால் வரை உடல் முழுவதுமாக பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அதன் பிறகு ஹரிகிருஷ்ணன் உடலை தூக்கில் தொங்கவிட்டும், நிவேதா உடலை ஆற்றில் வீசியும் சென்றுள்ளனர் சாதிவெறியேறிய அந்த மாபாதகர்கள். இந்த மிகக் கொடூரமான சாதிய ஆணவக்கொலை வெளியில் செய்தியாக கூட வரவில்லை. ஹரிகிருஷ்ணன் குடும்பத்தினர் ஒரு வாரமாக உடலை வாங்க மறுத்து போராடியும் அவர்களுக்கு திமுக அரசிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை; அவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. 

7. கும்பகோணம் சோழபுரம் - சரண்யா-மோகன் தம்பதி படுகொலை

கும்பகோணம் சோழபுரம் அருகில் உள்ள துளுக்கவேலி நகர் வாழ் பறையர் சாதியைச்சேர்ந்த சேகரின் மகள் சரண்யா. சரண்யா சென்னையில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் வேலை பார்த்து வந்துள்ளார். கூடவே மனநிலை பாதிக்கப்பட்ட அம்மா தேன்மொழியையும் மருத்துவ ரீதியாக பராமரித்து வந்துள்ளார். 

திருவண்ணாமலை வந்தவாசி பகுதி பொன்னூர் கிராமம் செங்குந்த முதலியார் சாதியைச் சேர்ந்தவர் மோகன். பிஎஸ்சி படிப்பை முடித்துவிட்டு, ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். 

இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சந்தித்து பழக்கமாகி காதலிக்க தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே சரண்யாவின் அண்ணன் சக்திவேலின் மைத்துனன் 

ரஞ்சித்திற்கு சரண்யாவை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் பேசி வைத்துள்ளனர். 

ரஞ்சித் கஞ்சா, குடி போதைக்கு அடிமையாகி சீரழிந்த நபர். எனவே ரஞ்சித்தை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சரண்யா மறுத்துள்ளார். அதையும் மீறி ரஞ்சித்துடன் திருமணம் செய்து வைக்க வேகவேகமாக ஏற்பாடுகள் செய்துள்ளனர். தடையை தாண்டி சரண்யா மோகனை 2022 ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களை கொல்ல சக்திவேலும் 

ரஞ்சித்தும் திட்டம் தீட்டியுள்ளனர்.  திருமணம் முடிந்த அடுத்த வாரம் வீட்டிற்கு விருந்துக்கு அழைப்பது போல அழைத்துக் கொன்றுள்ளனர். வீட்டிற்குள்ளே வைத்து மோகனை கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர். தப்பிக்க முயன்ற சரண்யாவை துரத்திப் பிடித்து தெருமுனையில் வைத்தே பட்டபகலில் கொன்றுள்ளனர். இதை தடுப்பதற்கு யாருமே துணியாமல் அனைவரும் வேடிக்கைப் பார்த்துள்ளனர்.  

இத்தனைக்கும் சரண்யாவின் தம்பி சதீஷ் ஏற்கெனவே வன்னியர் சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வாழ்ந்து வருபவர். சரண்யா-மோகன் இரு குடும்பத்திற்கும் வர்க்க ரீதியான வாழ்நிலையிலும் பெரிய மாறுபாடு இல்லையாயினும் தந்தையில்லாத மோகன் குடும்பம் மிகுந்த ஏழ்மைநிலையிலே வாழ்ந்து வருகிறது. இந்த கொலைக்குப்பின்னர். அவரது தாய் நிராகதியாக்கப்பட்டுள்ளார். சுயசாதி வெறியும், தங்களை மீறி பெண் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற ஆணாதிக்க வெறியும் சேர்ந்து இந்த படுகொலையை நிகழ்த்தியுள்ளது. 

8. கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி - ஜெகன் படுகொலை

கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெகனும் அவதானப்பட்டி கிராமத்தை சேர்ந்த சரண்யாவும் காதலித்து வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள். சரண்யா வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜெகன் கூலித் தொழிலாளி குடும்பம். அவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்துவந்துள்ளார். இவர்களின் காதல் திருமணத்தை ஏற்காத சரண்யாவின் தந்தை சங்கரும் உறவினரும் சேர்ந்து 2023 மார்ச் 21 அன்று டேம் ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜெகனை நடுரோட்டில் மறித்து கொடூரமாக துடிதுடிக்க வெட்டிக் கொன்றனர். அந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பாக பேசப்பட்டது.

இருவரும் ஒரே சாதியை - வன்னிய சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த சாதிக்குள்ளேயே தோன்றியுள்ள வர்க்க படிநிலை இந்த ஆணவ கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வன்னிய பெண்களை காதலித்தால், அது "நாடக காதல்" என பேசும் வன்னிய சாதிவெறி பாமக கும்பல் இந்த ஆணவ படுகொலை குறித்து வாய் திறக்காமல் மௌனம் காத்தது. இந்த கொலையின் பின்னணியில் ஜெகனின் டூவீலரில் ஒட்டப்பட்டிருந்த வன்னிய சாதிய அடையாளமான தீச்சட்டி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அது ஏழை வன்னியர்களை பார்த்து எக்காளமிட்டுக் கொண்டிருந்தது.         

9. கிருஷ்ணகிரி ஊத்தங்கரை - சுபாஷ் படுகொலை

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே அருணபதி கிராமம் சாணார் (நாடார்) சாதியைச் சேர்ந்த சுபாசும் ஜெயங்கொண்டம் பகுதி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அனுசியாவும் திருப்பூரில் ஒன்றாக பணிசெய்து வந்தபோது பழக்கமாகி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அக்கம்பக்கதில் இருந்த சாதிவெறியர்கள் சுபாசின் தந்தை தண்டபாணியை ஏளனமாக பேசி அவமானப்படுத்தி வந்துள்ளனர். இதனை தாங்கிக்கொள்ள முடியாத அவர் தம்பதிகளை கொல்ல திட்டமிட்டுள்ளார். நைச்சியமாக பேசி இருவரையும் ஊத்தங்கரையில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். கறி விருந்து அளித்துள்ளார். அங்கேயே அன்று இரவு தங்கியுள்ளனர். அவர்கள் அயர்ந்து உறங்கும்போது 2023 ஏப்ரல் 15 அன்று அதிகாலையில் நுங்கு சீவுவது போல் மகன் சுபாசை அரிவாளால் வெறித்தனமாக வெட்டிக்கொன்றுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த தன்னுடைய தாய் கண்ணம்மாவையும் கழுத்தில் சரமாரியாக வெட்டியிருக்கிறார். மரண ஓலம் கேட்டதும், தூக்கத்திலிருந்து எழுந்த சுபாஷின் மனைவி, தண்டபாணியின் செயலைப் பார்த்து அதிர்ந்து, அங்கிருந்த தப்ப முயன்று வீட்டைவிட்டு வெளியே ஓடியிருக்கிறார். அப்போது, அவரையும் துரத்திச்சென்று கழுத்து, முகத்தில் வெட்டியதும், அந்தப் பெண் நிலை தடுமாறி விழுந்திருக்கிறார். மூவரும் இறந்துவிட்டனர் எனக் கருதி  தண்டபாணி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மயங்கிய நிலையில் இருந்த அனுசியா அவ்வழியாக சென்ற மக்கள் மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க செய்துள்ளனர்.  

10. நெல்லை திசையன்விளை -முத்தையா படுகொலை

நெல்லை மாவட்டம் திசையன் விளை அருகே உள்ள அப்புவிளை கிராமம் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த முத்தையாவும் விட்டமொழி கிராமம் நாடார் சாதியை சேர்ந்த சுதாவும் காதலித்து வந்துள்ளனர். இந்த விசயம் சுதாவின் வீட்டினருக்கு தெரிய வந்து அவர்கள் முத்தையாவையும் அவரின் குடும்பத்தையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் 2023 ஜூலை 23 அன்று இரவு முத்தையாவை திட்டமிட்டு கொலை செய்துள்ளது சுதா குடும்பம். முத்தையாவின் நண்பர்களான பறையர் சாதியை சேர்ந்த மூவரை கைதுசெய்துள்ளது காவல்துறை. அப்பகுயில் பெரும்பான்மையினர் நாடார் சாதியினர், அருந்ததியர் 5 குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். சாதிய ஆணவ படுகொலையை மறைத்து விட்டு பாதிக்கப்பட்ட சாதியினரையும் அவரது நண்பர்களையுமே குற்றவாளியாக்கியுள்ளது திமுகவின் காவல்துறை. கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை தாக்கி - கை கால்களை உடைத்து குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கடுமையாக  துன்புறுத்தி இருக்கிறது. சமூக நீதி நாடகமாடிக் கொண்டே சாதி ஆணவக்கொலைக்கு திமுக காவல்துறை துணை நிற்கிறது. உண்மைக் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. அவர்களை கைதுசெய்ய கோரி முத்தையா உடலை வாங்க மறுத்து முத்தையா குடும்பத்தினரும் இயக்கங்களும் ஒரு வாரத்திற்கும் மேல் போராடினர். அப்போதும் நீதி கிட்டவில்லை.

11. தேனி பெரியகுளம் - மாரிமுத்து-மகாலட்சுமி படுகொலை

பெரியகுளம் காந்தி நகர் பறையர் சாதியைச் சார்ந்த மாரிமுத்துவும், கள்ளர் சாதியைச் சார்ந்த மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில் மைனர் பெண்ணான மகாலட்சுமியை தன் சொந்த் சாதிக்குள்ளே திருமணம் செய்து கொடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் மைனர் பெண்ணை கடத்த முயல்வதாக பொய் புகார் கூறி மாரிமுத்துவை கைது செய்ய வைத்துள்ளனர். இருப்பினும் 18 வயது நிறைவடைந்தவுடன் மாரிமுத்துவைத்தான் மணம் புரிவேன் என்று மகாலட்சுமி உறுதியாக இருந்துள்ளார். அதை காவல் துறையிடமும் நீதித் துறையிடமும் கூட வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகலட்சுமியின் உறவினரும் சாதிவெறியர்களும் பெரியகுளம் காவல் துறையும் சேர்ந்துக் கொண்டு காதலர் இருவரையும் மாரிமுத்துவின் குடும்பத்தையும் தொடர்ச்சியாக மிரட்டியும் தாக்கியும் வந்துள்ளனர். 

இருவரையுமே கழுத்தறுத்துப் போட்டு விடுவோம் என்று மகாலட்சுமியின் தந்தை சம்பத்தும், அக்காள் கணவர் பாண்டியும் வெளிப்படையாக மிரட்டியுள்ளதையடுத்து 18 வயது பூர்த்தியடையும் வரை தன்னைக் காப்பகத்தில் சேர்த்துவிடுமாறும் பெரியகுளம் காவல் துறையிடம் கெஞ்சிக் கேட்டும் அவர்கள் அதற்கு இடமளிக்காமல் சாதிவெறியுடன் செயல்பட்டனர். ஆனால் ஒரு சில தினங்களிலேயே - 2023 ஆகஸ்டு 5 அன்று கும்பக்கரை செல்லும் வழியில் உள்ள காட்டுப்பகுதியில் மாரிமுத்துவும் மகாலட்சுமியும் சடலமாகத் தொங்கினர். திட்டமிட்டு சாதி ஆணவ கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளனர். மரம் ஏறி தற்கொலை செய்துகொள்ள எவ்வித தோதும் இல்லாத - காட்டுப் பகுதியில் உயரமான மாமரக் கிளையிலிருந்து இருவரின் சடலங்களும் தரைதட்டியபடி தொங்கிக்கொண்டு இருந்தன. அப்பகுதி மக்கள் எவரும் இதைத் தற்கொலை என்று நம்பதயாரில்லை. இக்கொலைக்கு துணைபோன பெரியகுளம் காவல்துறை தற்கொலைதான் என்று செய்திபரப்பி மக்களையும் அவ்வாறே ஏற்கச் செய்யும் செயலில் ஈடுபட்டது. மக்கள் கைப்பேசியில் படம் பிடித்து விடாமல் தடுத்தது; மக்களை இழிசொற்களால் வசைபாடி மிரட்டி வலுக்கட்டாயமாக சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளது காவல்துறை.

மகாலட்சுமியின் உடலை கூடப் பெறுவதற்கு அவர் குடும்பத்தின் சாதிவெறியர்கள் முன்வரவில்லை. காவல் துறையே முன்நின்று அப்பெண்ணின் சடலத்தை பிணக்கூராய்வு முடிந்தபின் அவசர அவசரமாக எரித்துள்ளது. அந்த அளவுக்கு சாதிவெறி ஊறிப்போனவர்களின் இந்த செயல்பாடுகள் - சந்தேகத்திற்கு இடமின்றி இது திட்டமிட்ட சாதி ஆணவப்படுகொலையே என்பதை உறுதி செய்துள்ளது. 

12. தஞ்சை பட்டுக்கோட்டை - ஐஸ்வர்யா படுகொலை

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாளுர் கிராமம் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பாஸ்கரின் மகன் நவீன், பக்கத்து கிராமமான நெய்வவிடுதி பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா இருவரும் பள்ளிகால வயதில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்; சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு பல்லடத்தில் தனியாக வசித்து வந்தனர். இதில் ஐஸ்வர்யா படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் தந்தை கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து, 2024 ஜனவரி 3ம் தேதி பல்லடம் காவல்துறை உதவியுடன் ஐஸ்வர்யாவை நவீனிடமிருந்து பிரித்துக் கொண்டு வந்த அப்பெண்ணின் பெற்றோர் பெருமாள்-ரோஜாவும் உறவினர்களும் சேர்ந்து வீட்டிற்குள் கூட நுழையாமல் அருகிலிருந்த புளியமரத்திற்கு இழுத்துச்சென்றுள்ளனர். "அப்பாவை மன்னிச்சுருமா. எனக்கு வேற வழி தெரியல. நீயே மாட்டிக்கோமா" என அவர் தந்தை மிரட்டியுள்ளார். அந்தப் பெண் கழுத்தில் மாட்டிக்கொள்ள, கயிற்றின் மறுமுனையைப் பிடித்து, இழுத்து மரத்தில் கட்டி தூக்கில் தொங்கவிட்டுள்ளார். பின், ஐஸ்வர்யாவின் பெரியம்மா அந்தக்கயிறை அரிவாளால் வெட்டியுள்ளார். ஐஸ்வர்யா கீழே விழுந்துள்ளார். விழுந்த பெண்ணிற்கு உயிர் இருப்பதை தெரிந்துகொண்டு கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளனர். தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு ஊருக்குள் யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரித்துள்ளனர். இந்த கொலைக்கு சாதிவெறி பிடித்த பல்லடம் காவல்துறையும் துணைசென்றுள்ளது. 

13. மதுரை திருமங்கலம் - மகாலட்சுமி -சதீஷ்குமார் படுகொலை

மதுரை திருமங்கலம் அருகே கொம்பாடி கிராமத்தைச் சார்ந்த மகாலட்சுமி அதே பகுதியைச் சார்ந்த சதீஷ் குமாரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள். சதீஷ் குமார் கட்டிட கம்பி வேலை செய்து வந்துள்ளார். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும் காதலைவிட மறுத்ததால் மகாலட்சுமியின் அவரது தம்பி பிரவீன்குமார் அக்காவையும் அவரது காதலரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார், 2024 ஜனவரி 30ஆம் தேதி இரவு 11:00 மணியளவில் பிரவீன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஊரின் மந்தை அருகே சதீஷ் தனியாகச் சென்று கொண்டிருந்தபோது அரிவாளால் அவரது கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டி, தலையைத் தனியாக எடுத்து ஊர் மந்தையில் நாடகம் நடைபெறும் மேடையின் மீது வைத்துள்ளார். பிறகு அங்கிருந்து வீட்டிற்கு சென்று அவரது அக்கா மகாலட்சுமியை அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அதைத் தடுக்க வந்த அவரது தாய் சின்ன பிடாரியின் கையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் அவரது கை துண்டானது. இதையடுத்து அங்கிருந்து பிரவீன்குமார் தப்பிச் சென்றுள்ளார். 

14. சென்னை சீனிவாசா நகர்  - இளைஞர் படுகொலை

சென்னை சீனிவாசா நகரில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இருவர் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் சகோதரர்கள், 2024 ஜனவரி 31ஆம் தேதி காதலனை வெட்டிக் கொலை செய்துள்ளனர். காதலித்த இருவருமே தாழ்த்தப்பட்ட சாதியாக இருந்தாலும் காதலித்ததற்காக ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  

15. சென்னை பள்ளிக்கரணை - பிரவீன்-ஷர்மிளா படுகொலை

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பிரவீனும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஷர்மிளாவும் காதலித்து கடந்த ஆண்டு அக்டோபரில் சாதிமறுப்பு திருமணம் செய்து செய்து கொண்டுள்ளனர். பிரவீன் மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். 2024 பிப்ரவரி 24 அன்று பிரவீன், ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களால் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த சாதிவெறி கும்பல் ஷர்மிளாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் கொடுத்து வந்துள்ளது. இந்நிலையில் தான் மனமுடைந்து போன ஷர்மிளா ஏப்ரல் மாதத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 22 அன்று இறந்துவிட்டார். உண்மையில் இது தற்கொலை அல்ல இதுவும் ஒரு சாதி ஆணவ படுகொலைதான். நகரமயமாக்கல் உச்சத்தில் உள்ள தலைநகர் சென்னையில் கூட இப்படிப்பட்ட மிகவும் கொடூரமான சாதி ஆணவ படுகொலைகள் இந்த திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்துள்ளது கொடுமையானது.  

16. ஈரோடு சத்தியமங்கலம் - ஹாசினி படுகொலை

இம்முறை சாதி ஆணவ படுகொலை முயற்சியில் சம்பந்தமில்லாமல் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு சத்தியமங்கலம் அருகேயுள்ள எரங்காட்டூர் கிராமம் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஜெயபிரகாசின் மகன் சுபாஷ், காந்தி நகரில் வசிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சந்திரன் மகள் மஞ்சு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில், 2024 மார்ச் 6ஆம் தேதி காலை சுபாஷ், 10ஆம் வகுப்பு பயின்று வந்த தனது தங்கை ஹாசினியை (15) பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். எரங்காட்டூர் - சத்தியமங்கலம் ரோட்டில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, சந்திரன் இருவரையும் டெம்போ வேனில் இடித்துக் கொள்ள முயன்றுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹாசினி மார்ச் 6ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக மரணித்தார். சுபாசுக்கு இடுப்பெலும்பு முறிந்து நடக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

சுபாஷோ ஆம்புலன்ஸ் தொழிலாளி. ஆனால் சந்திரனோ விவசாயம், ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் எனப் பல தொழில்களைச் செய்து வருகிறவர். அதனுடன் அவரது உறவினர் பலரும் சந்திரனை சாதிவெறி ஊட்டி அசிங்கப்படுத்தியுள்ளனர்.  இந்நிலையில் சாதிவெறியும் வர்க்க ஏற்றத்தாழ்வும் ஒன்றிணைந்து கொண்டு இந்த ஆணவ படுகொலையை நிகழ்த்தியுள்ளது.

17. மதுரை அவனியாபுரம் - கார்த்திக் படுகொலை

மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கார்த்திக்கும் அதே தெருவில் வசிக்கும் மணிகண்டனின் மகளை காதலித்து வந்துள்ளார். மணிகண்டன் அந்த பகுதியின் கோவிலுக்கு தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார். கார்த்திக் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.  இவ்விருவரும் உறவினர்கள் என்ற போதிலும் பொருளாதார ரீதியாக வேறுப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது மகன் தினேஷ் காந்தியுடன் சேர்ந்து 2024 ஏப்ரல் 11 அன்று கார்த்திக்கை தங்கள் வீட்டின் அருகே வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர்.

18. நெல்லை - காதலர்களுக்கு தஞ்சமளித்த சிபிஎம் அலுவலகம் சூறையாடல்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நம்பிக்கை நகர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மதன் குமாரும், பெருமாள்புரம் பிள்ளை சாதியைச் சேர்ந்த உதய தாட்சாயினியும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்துள்ளனர். 2024 ஜூன் 13 அன்று திருமணம் செய்து கொண்டனர். மறுநாள் திருமணத்தை பதிவு செய்ய முயற்சிக்கையில் பெண் உறவினர் தடுத்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பு கேட்டு சிபிஎம் கட்சியை அணுகியுள்ளனர். கட்சி காவல்துறை அனுமதியோடு திருமணத்தை பதிவு செய்ய முயற்சி மேற்கொண்டு வந்துள்ளது. இனந்நிலையில் பந்தல் ராஜா மற்றும் ஜெயக் குமார் உள்ளிட்ட 25 பேர் கொண்ட சாதிவெறி கும்பல் திருநெல்வேலி, வினோபா நகரில் உள்ள சிபிஎம் கட்சியின் அலுவலகத்திற்குள் நுழைந்து மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். தாக்குதலைத் தடுக்க முயன்ற கட்சியின் உறுப்பினர்கள் கு. பழனி, அருள்ராஜ், முருகன் ஆகியோரையும் தாக்கியுள்ளனர். இது சாதி ஆணவப் படுகொலைகளின் தொடர்ச்சியாகும். ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சிக்கே இந்த நிலைதான் எனில் இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம். அது சங்பரிவாரங்களுடனும் சாதிவெறியர்களுடனும் சமரசம் செய்து கொண்டதன் வெளிப்பாடு இச்சம்பவம். இந்த அநீதி ஆட்சிக்குதான் சிபிஎம் சிபிஐ கட்சிகள் பல்லக்கு தூக்கி கொண்டுள்ளன.  

இந்த தொடர் சாதி ஆணவ கொலைகள் மற்றும் தாக்குதல்கள் தற்போது விருதுநகர் அழகேந்திரன் வரை நீண்டுள்ளது. இந்த பட்டியல் இன்னும் நீளும்...

தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை மறுப்பு

1. நெல்லை நாங்குநேரி - மாணவன் சின்னதுரை தாக்குதல்

நெல்லை மாவட்டம், நாங்குநேரி, பெருந்தெருவைச்சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவன் சின்னதுரை  அவருடன் படித்து வந்த மறவர் சாதிவெறி மாணவர்களால் தொடர்ச்சியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் கலக்கமடைந்த சின்னதுரை பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை உணர்ந்த அவரின் தாய், பள்ளி ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். பள்ளி ஆசிரியர் சம்பந்தப்பட்ட ஆதிக்க சாதிவெறி மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2023 ஆகஸ்ட் 9ம் தேதி இரவு சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்து  சின்னதுரையையும் அவரது தங்கையையும் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளனர். இச்சம்பவத்தை கண்ட சின்னதுரையின் தாத்தா அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார். சின்னத்துரையும் அவரது தங்கையும் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தனர். 

இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சின்னதுரை 469 மதிப்பெண்கள் பெற்றார். மேலும் அவர் பேசுகையில், "என்னை தாக்கியவர்களும் நன்றாக படிக்க வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும்" என்றார். சாதிவெறியின் முகத்தில் காரி உமிழ்ந்துள்ளார்.

2. கரூர் உப்பிடமங்கலம் - மாணவன் தாக்குதல்

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அல்லியாகவுண்டனூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த மாணவன், தனது பாட்டியுடன் வசித்து வந்தார். 2023 ஆகஸ்ட் 24ம் தேதி பேருந்தில் பள்ளிக்குச் சென்று வரும்போது, புலியூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தாழ்த்தப்பட்ட சாதி மாணவரை சாதி பெயரைச் சொல்லி இழிவாக திட்டியுள்ளார். இதை அந்த மாணவர் தனது பாட்டியிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, மாணவரின் பாட்டி 12-ம் வகுப்பு மாணவரை, பேருந்து நிறுத்தத்தில் வைத்து நியாயம் கேட்டிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ஆதிக்க சாதிவெறி மாணவர், தனது ஊரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, தாழ்த்தப்பட்ட மாணவரையும் அவரது பாட்டியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

3. புதுக்கோட்டை கொப்பம்பட்டி - மாணவன் விஷ்ணுகுமார் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் கொப்பம்பட்டி கிராமம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த வீரமுத்துவின் மகன் விஷ்ணுகுமார் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ச்சியாக சாதிய  வன்மத்துடன் இழிவாக பேசியும் மிரட்டியும் தொந்தரவு கொடுத்தும் வந்துள்ளனர். 2023 நவம்பர் 3ம் தேதி காலை கீரனூரில் மாணவன் விஷ்ணுகுமாரை சில மாணவர்கள் சாதியைச் சொல்லி திட்டியதோடு, அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். இதில் மனமுடைந்து போன அந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு உயிர் நீத்துள்ளான். இதுவும் தற்கொலையல்ல; தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களின் கல்வியை பறிக்க ஆதிக்க சாதிவெறியர்கள் நிகத்திய படுகொலையே. 

இதோடு, மதுரை திருமங்கலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த மாணவர்கள் அன்பு தாஸ், சக்திவேல் மீது ஆதிக்க சாதிவெறியர் தாக்குதல், மதுரை சேரன்மகாதேவி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முருகானந்தம், பிரதீப் மீதான சாதிவெறி தாக்குதல், கழுகுமலை லட்சுமிபுரம் மாணவன் ஹரிபிரசாத் மீது சக மாணவர்கள் ஊருக்குள் புகுந்து சாதிய தாக்குதல் என தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களின் கல்வியை அனைத்து வழிகளிலும் பறிப்பதற்கான சாதிய வன்கொடுமைகளின் பட்டியல் நீள்கிறது.

தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வழிபாட்டு உரிமை மறுப்பு

1. இந்த கட்டுரையின் முதல்பகுதியில் வழிபாட்டு உரிமையை பறித்து சேலம் தீவட்டிப்பட்டியில் சாதிகலவரம் திட்டமிட்டு கட்டியமைக்கப்பட்டது குறித்து பார்த்தோம். அதே போன்று இன்றைய திமுக ஆட்சியில் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்ட மேலும் சில சம்பவங்கள்:

2. சேலம் விருதாசம்பட்டி - வழிபாட்டு உரிமை மறுப்பு

2022ம் ஆண்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள விருதாச்சம்பட்டியில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய தடை விதித்து ஆதிக்க சாதியினர் தடை விதித்தனர். இதை கண்டித்து, அவர்களின் வழிபாட்டு உரிமையை அனுமதிக்காத திமுக அரசும் அறநிலையத்துறையும் கூட்டுச் சேர்ந்து கோவிலுக்கு சீல் வைத்து மூடின. அதே தருணத்தில் வேங்கவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சினையை நீர்த்து போக செய்ய அங்கு கோவில் நுழைவு நாடகமாடியது இந்த கேடுகெட்ட அரசு. 

3. சேலம் திருமலைகிரி - கோவில் நுழைவை மறுத்து சாதிரீதியாக மிரட்டல்

சேலம் மாவட்டம் திருமலைகிரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த ஆண்டு (2023) திருவிழாவும் கும்பாபிஷேகமும் நடைபெற்று வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் கோவிலுக்குள் வழிபடச் சென்றிருக்கிறார். அந்த சாதி பயலெல்லாம் கோவிலுக்குள் வந்து விட்டான்; கோவில் தீட்டாகிவிட்டது இனி நாங்கள் கோவிலுக்குள் வரமாட்டோம் என அங்குள்ள ஆதிக்க சாதியினர் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட திருமலைகிரி திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், 2023 ஜனவரி 27ஆம் தேதி அந்தப் பிரவீனை ஊர் மக்கள் கிராமத்து மக்கள் அனைவரையும் கூட்டி வைத்து ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாய்க்கு வந்தபடி ஆபாச சொற்களை பேசியதோடு, பிரவீன் கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்களை "கிராமத்தை விட்டே விரட்டி விடுவேன், கொலை செய்து விடுவேன்" என்று நேரடியாகவும் மிரட்டியுள்ளார் அந்த சாதிவெறிபிடித்த திமுக கவுன்சிலர். அந்த இளைஞரையும் அவரது உறவினர்களையும் மிக மோசமான கெட்ட வார்த்தைகளாலும் திட்டும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பிரவீனை கூப்பிட்டு சமாதானப்படுத்தும் நாடகத்தில் இறங்கியது. மாணிக்கத்தை கைது செய்யவில்லை; எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த வெட்கங்கெட்ட சாதிவெறிபிடித்த காவல்துறை. பல்வேறு எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகே அரசு அவர்மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டது.

4. கடலூர் புவனகிரி - கோவில் தகராறு - தாக்குதல்

கடலூர் மாவட்டம் புவனகிரி சாத்தப்பாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் 2023ம் ஆண்டு மாசிமகத்தையொட்டி திருவிழா கொண்டாடினர். இதில், சாமியை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு பிச்சாவரம் வரை சென்று திரும்புவது வழக்கம். இந்த ஊர்வலத்தின்போது, பாடல்களை ஒலிபரப்பியவாறு சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது மேலமணக்குடி என்ற பகுதியிலிருந்த ஆதிக்க சாதி வெறியினர் பாடலை ஒலிபரப்பக் கூடாது என மிரட்டியுள்ளனர். இதனால், ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறியது. இதில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பலமாக தாக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முயன்றபோதும், ஆம்புலன்சை வழிமறித்து அதன் உள்ளே புகுந்து மீண்டும் கொலைவெறி தாக்குதல் தொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் தாக்கப்பட்டார்.

5. சேலம் அக்ரஹாரம் - வடம்பிடிக்கும் உரிமை மறுப்பு தாக்குதல்

2023 மே மாதத்தில் சேலத்தில் உள்ள அக்ரஹாரம் -ஏரிபுதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தேரின் வடம் பிடிக்க முன்வந்துள்ளனர். அவர்களை அதற்கு அனுமதிக்க மறுத்து அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது ஆதிக்க சாதிவெறி கும்பல். கலவரத்தை உருவாக்க முயற்சித்ததாக கூறி தாழ்த்தப்பட்ட மக்களையே பலிகடாவாக்கியது; அவர்கள் மீதே வழக்குபோட்டு கைது செய்தது இந்த சமூக அநீதி அரசு.

6. விழுப்புரம் மேல்பாதி - திரௌபதி கோவில் பூட்டு

தீவட்டிபட்டி சம்பவம் போலவே ஓராண்டிற்குமுன்பு கடந்த சித்திரை மாத திருவிழா சமயத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அடுத்த தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் 1978 முதல் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்தக் கோயிலுக்கான வரி தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட அனைத்து சாதியினரிடம் இருந்தும் வசூலிக்கப்படுகிறது; ஆனால் நிர்வாகம் மட்டும் வன்னிய சாதியினர் உள்ளிட்ட ஆதிக்க  சாதியினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இக்கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக உள்ளே சென்று வழிபட்டுதான் வந்துள்ளனர். 2023 ஏப்ரல் 7ம் தேதி திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவின்போது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இருவர் கோயிலுக்குள் சென்று விட்டனர். இதில் கதிரவன் என்பவரை வன்னிய சாதி வெறியர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் இதை தட்டிக் கேட்க வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். புவனகிரி போல இங்கும் ஆம்புலன்சையும் விடாமல் வழிமறித்து உள்ளே இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

இப்பிரச்சினையில் திமுக அரசு தாழ்த்தப்பட்ட மக்களின் ஜனநாயக கோரிக்கையான வழிபாட்டு உரிமையை மறுத்து தாக்கியவர் பாதிக்கப்பட்டவர் என இரு தரப்பினரையும் கைது செய்தது. பேச்சுவார்த்தை எனும் பெயரில் நாடகமாடி இறுதியாக 2023 ஜூன் 6ம் தேதி கோவிலை இழுத்துப் பூட்டி சீல் வைத்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை அரசே முன்னின்று பறித்தது.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் வாழ்விட உரிமை மறுப்பு

1. புதுக்கோட்டை வேங்கவயல் - குடிநீர்தொட்டியில் மலம் கலந்தது

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அடுத்துள்ள வேங்கவயல் கிராமத்தில் சுமார் 30 குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 2022 டிசம்பர் 26ம் தேதி அன்று அவர்களின் குடிநீர்த் தொட்டியில் ஆதிக்க சாதியினர் மலத்தைக் கலந்த கொடூரம் தெரிய வந்தது - அதுவும் அக்குடிநீரை குடித்து பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோதுதான் தெரிய வந்தது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச கொடூரம் நேற்று வேங்கவயலிலும் நடந்தது. இறையூரில் முத்தரையர் சாதியைச் சேர்ந்தவர்தான் பஞ்சாயத்து தலைவராகவும் திமுக பொறுப்பிலும் உள்ளார். இப்பகுதியில் கள்ளர், அகமுடையர், முத்தரையர் ஆகிய மூன்று ஆதிக்க சாதிப் பிரிவினரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். மேலும், இப்பகுதியில் அகமுடையர் சாதியைச் சேர்ந்தவர் நடத்தும் தேநீர்க் கடையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் குவளை முறை பின்பற்றப்படுகிறது; முத்தரையர் சாதியினரின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப் படவில்லை. இவை தவிர பல்வேறு சொல்லொணா வன்கொடுமைகள் அன்றாடம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வருகிறது, அதன் உச்சம்தான் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பிலிருந்து இக்கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு அலை கிளம்பினாலும் திமுகவின் சாதிவெறி பாசமும்-இந்துத்துவ அடிமைத்தனமும் எதையும் அசைக்கவில்லை. ஒன்றரை ஆண்டுகளை கடந்தபின்னும் இன்னும் ஆய்வு நடத்திக் கொண்டேதான் இருப்பதாக நாடகமாடுகிறது இந்த அரசு. சாதிவெறி குற்றவாளிகளை கைது செய்வதற்கு மாறாக பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக மாற்றும் முயற்சியில் அவர்களையும் துன்புறுத்தி வருகிறது இந்த கேடுகெட்ட அரசு.

2. கள்ளக்குறிச்சி சங்கராபுரம் - சாதிவெறி தாக்குதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது, மூங்கில்துறைப்பட்டு மற்றும் சுற்றியுள்ள ஏழு கிராமங்களை சேர்ந்த ஆதிக்க சாதியினர் 2023 ஜனவரி 19 அன்று இரவு ஒன்று திரண்டு சாதிவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி, 18-01-2023 அன்று, ஆதிக்க சாதியினர் நிறைந்த தொண்டமனூர் கிராமத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை காண அம்பேத்கர் நகரை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் சென்றனர். அப்போது, அவர்களை நோக்கி 'நீங்கள் எப்படி எங்கள் பகுதிக்குள் நுழையலாம்' என்று கேள்வி கேட்டு அப்பகுதியை சேர்ந்த ஒரு சில சாதிவெறியர்கள் அவர்களை தாக்கியுள்ளனர். மறுநாள் அம்பேத்கர் நகருக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் இருதரப்பினருக்கும் மோதல் முற்றியுள்ளது.

இந்நிலையில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களை அம்பேத்கர் நகர் மக்களை தாக்குவதற்கு சாதிவெறியர்கள் திரட்டியுள்ளனர். மதுபோதையில் கத்தி, கம்புகளுடன் நுழைந்து, சாதி பெயர் சொல்லி இழிவாக திட்டியும், பெண்களையும் குழந்தைகளையும் அசிங்கம் அசிங்கமாக பேசி அச்சுறுத்தியும் உள்ளனர்; குடிநீர் குழாய்களை உடைத்துள்ளனர்; இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்; வீட்டு கதவுகள், பாத்திரங்கள், என கண்ணில் தென்பட்ட அனைத்து பொருட்களையும் சூறையாடியுள்ளனர். இந்த சாதிவெறி தாக்குதலால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆதிக்க சாதியினரின் பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பயிலும் தாழ்த்தப்பட்ட சாதி மாணவ/மாணவிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே அந்த அரசுப்பள்ளியில் சாதிய மோதல்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

3. தூத்துக்குடி நடுவக்குறிச்சி - பொது பாதை மறுப்பு

2023 பிப்ரவரி 11 அன்று, தூத்துக்குடி மாவட்டம், நடுவக்குறிச்சி கிராமத்தில் உயிரிழந்த 72 வயதுடைய பள்ளர் சாதியைச் சார்ந்த மூக்கனின் உடலை பொது பாதையில் எடுத்து செல்ல அப்பகுதியின் நாடார் சாதியினர் அனுமதி மறுத்தனர். அதனால் வேறு வழியின்றி, அவர்கள் இறந்தவரை தகனம் செய்வதற்காக ஒரு கிமீ தூரத்திற்கும் மேல் சேறு நிறைந்த நெல் வயல்களில் தூக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தாழ்த்தப்பட்ட கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட சுடுகாடு சுமார் 3கி.மீ தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. மழைகாலங்களில் கால்வாய்க்குள் நீந்தியும் வயல்வரப்புகளில் புரண்டும் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லவேண்டிய அவல நிலை நீடிக்கிறது. எங்களுக்கு வாழும் போதும் நிம்மதி இல்லை. இறந்த பிறகு அவர்களுக்கு கண்ணியமாக அடக்கம் செய்வதற்கு கூட இந்த சமூக அமைப்பில் எங்களுக்கு வழி இல்லை என்று கலங்குகின்றனர். இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் விவசாய நிலங்கள் வழியாக தனி சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக நீதி பேசும் இந்த திமுக அரசு இது வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சாதி ரீதியான இத்தகைய வன்கொடுமைகளை கண்டும் காணாமல் உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு தமிழகம் முழுவதும் எவ்வித அடிப்படை வசதிகளையும் டிஜிட்டல் இந்தியா என வாய்கிழிய பேசும் இந்த அரசுகள் செய்து கொடுக்க மறுக்கின்றன. 

4. சங்ககிரி தேவண்ண கவுண்டனூர் - கமலகாசன் உணவு தட்டில் மலம் வீசியது

சேலம் மாவட்டம் சங்ககிரி தேவண்ண கவுண்டனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மட்டம்பட்டி பொடாரங்காடு கிராமத்தில் 57 ஆண்டுகளாக பறையர் சாதியை சேர்ந்த ராதிகா என்பவரின் தாத்தா வசித்து வந்தார். ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கமலகாசன் தன் மனைவி, மகன்களுடன் அதே வீட்டில் வசித்து வருகிறார். வீட்டிற்கு மின் இணைப்புக்காக வீட்டு வரி கட்டுவதற்கு கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளார். வன்னியர் சாதியை சேர்ந்த அந்த கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்தபின் தருவதாக கூறி அனுப்பிய பின் வன்னியர் சாதியை சேர்ந்த குப்புசாமி-ராஜரத்தினம்-ஆனந்தராஜ் குடும்பத்தாரிடம் இது உங்களுக்கு சொந்தமான இடம் என பொய்யான தகவலை கூறி சாதிவெறியூட்டி அவர்களை தூண்டிவிட்டுள்ளார். அவர்கள் உடனே வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டியுள்ளனர். அதை தொடர்ந்து 2023 மார்ச் 15 முதல் ஏப்ரல் 28 வரை பல்வேறு இன்னல்களை கமலகாசன் குடும்பத்திற்கு கொடுத்துள்ளனர். வீட்டின் முன்பு இருந்த புளியமரத்தை ஜேசிபி மூலம் வெட்டி சாய்த்தது; வீட்டின் வாழை மரங்களையும் வெட்டி சாய்த்தது; வீட்டின் முன்பு குப்பைகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டியது; ராதிகாவின் கழுத்தில் கத்தி வைத்து சாதிபெயரை சொல்லி கீழ்த்தரமாக பேசி மிரட்டியது;  அதன் உச்சமாக. கமலகாசன் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அவரின் பிள்ளைகளின் உணவு தட்டில் மலத்தை அள்ளி வீசி மிக கொடூரமான சாதிய வன்கொடுமையை இந்த சாதிவெறி கும்பல் அரங்கேற்றியது. சங்ககிரி காவல் நிலையத்திலும் ஆட்சியரிடமும் புகாரளித்தும் எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சாதிவெறியர்களும் திமுக அரசும் கூட்டாக சேர்ந்து சங்ககிரியில் இன்னொரு வேங்கவயலை அரங்கேற்றினர். 

5. கிருஷ்ணகிரி சோக்காடி - வீடுகளுக்கு தீவைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் 150 தாழ்த்தப்பட்ட சாதி குடும்பங்களும், நாயுடு, கொங்கு வேளாளர் உள்ளிட்ட ஆதிக்க சாதி குடும்பங்கள் 500ம் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோர் இப்பகுதியில் ஆதிக்கசாதியினரால் சாதி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். பொது கோவில்களுக்குள்ளும் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அப்பகுதியில் கிரானைட் கற்கள் கொண்டு வரப்பட்டு பாலீஷ் போடும் பணிகள் நடந்து வருகிறது. 

கிரானைட் கற்கள் பாலீஷ் போடும்போது அதிலிருந்து வெளிவரும் தூசித் துகள்கள் அருகில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளில் படிந்திருக்கிறது. மேலும், கற்களின் தூசி அவர்கள் உண்ணும் உணவிலும் படிந்துள்ளது. இதன் காரணமாக அம்மக்கள் ஏதாவது தடுப்பை ஏற்படுத்தி இந்தப் பணிகளை மேற்கொள்ளலாமே எனக் கோரியுள்ளனர். ஆனால், அதனைச் சற்றும் ஏற்காத ஆதிக்க சாதியினர் பணிகளை அப்படியே தொடர்ந்துள்ளனர். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2023 அக்டோபர் 29 அன்று அந்தப் பகுதிக்கு வந்த அதிமுக நிர்வாகி ராஜன் சாதிவெறியை மேலும் தூண்டும் விதமாகவும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை சாதிரீதியாக இழிவுபடுத்தியும் பேசியுள்ளார். இதனால் மோதல் முத்தி கற்கள் வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ராஜன் அவரது தம்பி சதாசிவம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியில் இருக்கும் மூர்த்தி தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதியினரை தாக்குதல் நடத்துவதற்கு அணிதிரட்டியுள்ளனர். அன்று இரவு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த அவர்கள் அங்கு வசிக்கும் மக்கள் மீது உருட்டுக்கட்டை மற்றும் தடிகளைக் கொண்டு கொடூரத் தாக்குதல் நடத்தினர்; அவர்களின் கடைகளை சேதப்படுத்தியுள்ளனர்; வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். பள்ளிக்கு செல்லும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊர் வழியை தாண்டிதான் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது; அவர்களை மிரட்டி அச்சம் கொள்ளவும் வைத்துள்ளனர்.  இந்த சம்பவத்திலும் கூட தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதில் ஆளும் கட்சியின் கூட்டணியினரும் எதிர்கட்சியினரும் எந்த பாகுபடும் இல்லாமல் சாதி ரீதியாக அணி சேர்ந்துள்ளனர்.

6. புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை - குடிநீர்தொட்டியில் சாணம் கலப்பு

வேங்கவயல் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே சங்கம்விடுதி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்ட வன்கொடுமை அரங்கேறியது. குழந்தைகள் உள்ளிட்ட அப்பகுதி வாழ் மக்கள் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகினர். வேங்கைவயலில் அரசு காட்டிய மெத்தனப் போக்கே கந்தர்வகோட்டை வரை இந்த மாதிரியான கொடூர வன்கொடுமைகள் தொடர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. 

இவ்வாறு பல்வேறு வழிகளில் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது வன்கொடுமை தாக்குதல் தொடுத்து அவர்கள் அந்த அந்த பகுதிகளில் வாழ்வதற்கான அவர்களது உரிமைகளையும் பறித்து வருகின்றனர். 

சாதி ரீதியான இன்னபிற படுகொலைகளும் தாக்குதல்களும்

1. திருப்பூர் அவிநாசி - பரிமளா கொலை

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ராயம்பாளையம் பகுதியில் வசித்து வரும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த சந்திரனின் மனைவி பரிமளா. இவர் அவினாசி பேரூராட்சியில் கொசுப் புழு ஒழிப்புப் பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் சந்திரன் பனியன் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். தமது குடும்ப வறுமை காரணமாக அதே பகுதியில் வசித்து வரும் தனசேகரிடம் வாரத்திற்கு 10 % சதவிகித அநியாய வட்டிக்கு பரிமளா ரூ.27 ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார். இதில் ரூ.10 ஆயிரம் வரை கடன் செலுத்தி இருக்கிறார். இந்நிலையில், 2022 மே 23 அன்று தனசேகர் பரிமளாவை அவரது மகள் மற்றும் ஊரார் முன்னிலையில் சாதி பெயரைக் கூறி இழிவாக திட்டி கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளார். இதைத்தாங்கிக் கொள்ள முடியாத பரிமளா, மகளை வெளியில் அனுப்பி விட்டு, வீட்டுக்குள் சென்று, சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதியத் தீண்டாமையும் கந்துவட்டிக் கொடுமையும் ஒன்று சேர்ந்து பரிமளாவை தூக்கிலேற்றிக் கொன்றுள்ளது.

2. தூத்துக்குடி தலைவன் வடலி - சண்முகராஜ் படுகொலை

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகிலுள்ள தலைவன் வடலியைச் சேர்ந்தவர் சண்முகராஜ். தாழ்த்தப்பட்ட பகுதியைச் சார்ந்த இவர் அப்பகுதியிலுள்ள உப்பளத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்துவருகிறார். 2022 மே 29ம் தேதி இரவு உப்பளத்திலிருந்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஆவரையூர் அருகில் சென்றுகொண்டிருந்தபோது ஆதிக்க சாதியைச் சார்ந்த 3 பேர் அவரை வழிமறித்து சரமாரியாகத் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர். இரு சாதியினருக்கும் அப்பகுதியில் சாதிரீதியான தொடர் மோதல்கள் இருந்து வந்துள்ளன. இந்த நிலையில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

3.  திருச்செந்தூர் உடன்குடி - சுடலைமாடன் கொலை

திருச்செந்தூர் உடன்குடி புதுக்காலனி அருந்ததியர் சாதியைச் சேர்ந்தவர் சுடலைமாடன். உடன்குடி பேரூராட்சியில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக தூய்மைப் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். ஆகவே, பணி மூப்பு அடிப்படையில் தனக்கு நிரந்தர மேற்பார்வையாளர் பணி வழங்கும்படி, உடன்குடி பேரூராட்சித் தலைவி ஹிமைரா ரமீஸின் பாத்திமாவுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதற்கு, பேரூராட்சி தலைவியின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவியுமான ஆயிஷா கல்லாசி, பணி நிரந்தரம் செய்ய சுடலைமாடனிடம் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். சுடலைமாடனோ, லஞ்சம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆயிஷா, ஜாதியை சொல்லி சுடலைமாடனை இழிவாக திட்டியதோடு, சுடலைமாடனை சாக்கடையை சுத்தப்படுத்த நிர்பந்தித்துள்ளார். இதனால் மனமுடைந்த சுடலைமாடன், 2023 மார்ச் 17- அன்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இசுலாமியர்கள் மத்தியிலும் ஆதிக்க சாதிவெறி புரையோடி போயிருப்பதை காட்டுகிறது.  

4. நெல்லை கீழநத்தம் - ராஜாமணி படுகொலை

நெல்லை பாளையங்கோட்டை அருகிலுள்ள கீழநத்தம் கிராமம் பள்ளர் சாதியைச் சார்ந்தவர் ராஜாமணி. அவர் ஆடு மேய்த்து வருபவர். அப்பகுதியில் ஆதிக்க சாதியை சேர்ந்த கீழநத்தம் இசக்கி பாண்டி, மேலூர் மாயாண்டி மற்றும் அவர்களின் நண்பர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை உடைத்து இடத்தை நாசமாக்கி வந்துள்ளனர். அதை ராஜாமணி தட்டிக் கேட்டுள்ளார். சாதி ரீதியாக கோபமடைந்த அவர்கள் 2023 ஆகஸ்ட் 14 அன்று ஆடு மேய்க்க சென்று இருந்த ராஜாமணியை மறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

5. தூத்துக்குடி வல்லநாடு - மணி படுகொலை

2023 நவம்பர் மாதம் 13-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரை கீழுரைச் சேர்ந்த 60 வயதுடைய கூலித்தொழிலாளி மணி. இவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர். அங்குள்ள மாடசாமி கோயில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, வேப்பமரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரை 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது. இது சாதிரீதியான படுகொலை என்று கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 

6. நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் - மனோஜ்-மாரியப்பன் தாக்குதல்

திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் வசித்து வரும் மனோஜ்குமார், மாரியப்பன் ஆகிய தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தனியார் இணையதளத்திற்கான கேபிள் இழுக்கும் ஒப்பந்த பணிகளில் வேலை செய்பவர்கள். வேலை முடிந்து 2023 அக்டோபர் 30-ஆம் தேதி இரவு அருகிலிருக்கும் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்த இருவரையும், அங்கு கஞ்சா மற்றும் சாராயம் குடித்துக் கொண்டிருந்த தேவர் சாதியைச் சார்ந்த 6 பேர் கொண்ட கும்பல் கையில் வைத்திருந்த அரிவாளைக் காட்டி வழிமறித்து அவர்களிடமிருந்து பைக், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு பணம் கேட்டும் மிரட்டியுள்ளது. அதன் பின் அவர்களிடம் எந்த ஊர், என்ன சாதி என்று அந்த கும்பல் விசாரித்தது. ஊரையும் சாதியையும் சொல்லியபின், அசிங்கமாக திட்டி கையிலிருந்த அரிவாளால் தாக்கியிருக்கிறது அந்த கும்பல். இதில் மனோஜ்குமாரின் கண்கள் பாதிக்கப்பட்டு நிலைகுலைந்து போயுள்ளார். மேலும் சாதிவெறி அடங்காமல் அவர்களை நிர்வாணப்படுத்தி உடம்பு முழுவதும் காயங்கள் ஏற்படுமாறு சித்திரவதை செய்து அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளது அந்த வெறிநாய் கூட்டம். 

7. ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் - கிருபா-நவீன் தாக்குதல்

2023 நவம்பர் 11, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள பொலவக்காளி பாளையம் பகுதி அருந்ததிய சாதியைச் சார்ந்த கிருபாகரன் மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரும் கடுக்காம்பாளையம் அருகில் தனிமையான இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த கவுண்டர் சாதியைச் சேர்ந்த 4 பேர் அந்த இளைஞர்களை தாக்கி, அவர்களது இருசக்கர வாகனத்தை பறித்து சென்றுள்ளனர். வாகனம் இன்றி வீட்டுக்கு செல்ல முடியாமல் அங்கேயே இரவு முழுவதும் இருவரும் இருந்துள்ளனர். காலையில், முதல் நாள் இரவு தங்களை தாக்கிய நபர்களில் ஒருவரை கண்டதும், அவரிடம் இருசக்கர வாகனத்தைக் கேட்டுள்ளனர். இதையடுத்து ஊருக்குள் சென்று மேலும் சிலரை அழைத்து வந்த அந்த நபர்கள், கிருபாகரனையும் நவீனையும் வெறிகொண்டு தாக்கியுள்ளனர். சாதி பெயரைச் சொல்லி அசிங்கமாக திட்டி அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர்; இரும்பு கம்பியில் பிவிசி பைப் சொருகி அடித்துள்ளனர். சன் டிவியின் ரிப்போர்ட்டரான ரமேஷ் -சாதிவெறி பிடித்தவர் - சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அவர் கிருபாவையும் நவீனையும் ஆடு-கோழி திருட வந்ததாகவும் திருடர்கள் என நினைத்து தெரியாமல் இவர்கள் தாக்கிவிட்டதாகவும் ஒத்துக்கொள்ள கூறி மிரட்டியுள்ளார். அதை வீடியோவாகவும் பதிய முயற்சித்துள்ளார். அந்தபகுதி காவல்துறையும் அவர்கள் மீது இதே போன்று சாதிவெறியோடு அணுகி அவர்கள் மீது வழக்கு போட முயற்சித்துள்ளது. மேலும் உண்மை வெளியே வந்தபின் சாதிவெறியர்கள் மீது வழக்கு போடபட்டது. கவுண்டர் சாதியினர் மீது கொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ்பெற வலியுறுத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை, கை,கால்களை உடைத்துவிடுவதாகவும் கேட்க நாதியில்லை என்றும் கூறி போலீஸ் மிரட்டியுள்ளது.  

8. புதுக்கோட்டை ஆயக்குடி - பாடகர் பிரகாஷ் தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, ஆய்க்குடி பகுதியில் உள்ள அண்ணாநகர் பகுதி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பட்டதாரியான இவர் பெயிண்டிங் வேலை செய்து வருவதோடு இவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பாடி வந்தார். இவர் தமுஎகச வில் உறுப்பினராகவும் உள்ளார். 2023 நவம்பர் 12 தீபாவளியன்று பட்டாசு, காய்கறி வாங்கிக்கொண்டு அவரும் அவரது நண்பரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மேலுடையாண்பட்டி அருகே கள்ளர் சாதியைச் சார்ந்த சாரதி, பிரசாத், தேவா நவீன் ஆகியோர் அவரை வழிமறித்த தகராறு செய்துள்ளனர். இதிலிருந்து விலகிச் செல்ல முயன்ற பிரகாசை பாட்டிலால் மண்டையில் உடைத்து தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பிரகாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். ஏற்கெனவே பிரகாஷ் அப்பாவும் சிபிஐ கட்சி உறுப்பினருமான சதாசிவமும் கூட ஆதிக்க சாதிவெறியர்களால் வண்டி ஏற்றி கொல்லப்பட்டுள்ளார். அச்சம்பவம் வழக்கு தண்டனை எதுவும் இன்றி பஞ்சாயத்து பேசி முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரகாஷ் தெரிவிக்கையில், "அவங்க என்ன நினைக்கிறார்கள் என்றால் பழைய மாதிரி அடிமை வேலை செய்யணும் குனிந்து இருக்கணும் என்று எதிர்பார்க்கிறார்கள். எங்க தலைமுறை நல்லா படித்து முன்னேற நினைக்கிறோம். கஞ்சா, மது போதையோடு சாதி போதையும் தலைக்கேறி தங்களது வாழ்க்கையயே இழந்து நிற்கிறார்கள் அந்த இளைஞர்கள்" என்கிறார்.

9. மதுரை பெருங்குடி - 6 வயது சிறுவன் உட்பட 5 பேர் மீது கொலைவெறி தாக்குதல்

மதுரை அவனியாபுரம் - விமான நிலைய சாலையில் உள்ள பெருங்குடியில் 2023 நவம்பர் 27 இரவு அப்பகுதியை சேர்ந்த கணபதி, விஜய் குட்டி, அஜித் உட்பட அப்பகுதி இளைஞர்கள் ஊருக்குள் உள்ள நாடக மேடை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இருவர், அஜித் என்பவரிடம் கண்ணா எங்கிருக்கிறான் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் தெரியாது என்று கூறவே திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை வெட்டத் தொடங்கியுள்ளனர், இதனால் பதட்டமடைந்த ஒரு சிலர் தப்பியோடவே அஜித், விஜய் குட்டி, கணபதி என மூன்று பேரை வெட்டியதில் அவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி தனது பேரன் 6 வயது சார்வினை  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அந்த வழியாக வந்து கொண்டிருந்த போது சத்தம் கேட்டு நாடக மேடை அருகே சென்று பார்க்க முற்பட்டபோது அவர்களையும் வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வர தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தாக்கியவர்கள் சாதியை சொல்லித் திட்டிக்கொண்டே பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். வெட்டுபட்டவர்களில் ஒரு நபர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணிடம் பேசியதால், அந்த பெண்ணின் உறவினர்கள் கண்ணா என்ற நபரை விசாரிப்பது போல் வந்து இளைஞர்களிடம் வம்படியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியுள்ளனர் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.

இவை தவிர பின்வரும் சாதிய வன்கொடுமைகளும் அரங்கேறின

  • செங்கல்பட்டு படூர் பாலு எனும் தலித்திய சாதிவெறியன் தன்னிடம் வேலைபார்த்துவரும் இருளர்களின் மனைவிகளையும் - இருளர் பெண்களையும் - சிறுமிகளையும் கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதோடு அவர்களை மிரட்டியும் தொடர்ந்து சுரண்டியும் வந்துள்ளான். அவனுக்கு காவல்துறையும் ஆட்சியாளர்களும் துணையாக இருந்துள்ளனர். 
  • நெல்லை ஆலங்குளம், வேலூர் குடியாத்தம், புதுக்கோட்டை கறம்பக்குடி. திண்டுக்கல் வேடசந்தூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 
  • தூத்துக்குடி அந்தோனியாபுரம் பறையர் சாதியைச் சார்ந்த மாரிமுத்து 2022 நவம்பர் 13ல் ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்டார்.
  • தென்காசி செங்கோட்டை தேவேந்திர குல வெள்ளாளர் சாதியைச் சார்ந்த ராஜேஷ் 2023 ஜூன் 14 அன்று மந்திரமூர்த்தி, மாரி என்ற ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்டார்.
  • நெல்லை தேவேந்திர குல வெள்ளாளர் சாதியைச் சார்ந்த ராஜாமணி 2023 ஆகஸ்ட் 13 அன்று ஆடு மேய்க்க சென்ற போது ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்டார்.
  • நெல்லை தேவேந்திர குல வெள்ளாளர் சாதியைச் சார்ந்த சந்தியா என்ற இளம்பெண் 2023 அக்டோபர் 2 ல் ராஜேஷ் கண்ணன் என்ற ஆதிக்க சாதிவெறியரால் கொல்லப்பட்டார்.
  • தூத்துகுடி திருவைகுண்டம் தேவேந்திர குல வெள்ளாளர் சாதியைச் சார்ந்த மணி 2023 நவம்பர் 13 அன்று ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்டார்.
  • இளம் மாணவர்கள் மத்தியில் விசமாக்கப்பட்டுள்ள சாதிவெறி - தூத்துக்குடி மாவட்டம் சின்னமலைக்குன்று, உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த முனியசெல்வி என்ற பெண் சமைத்ததால் காலைஉணவை சாப்பிட மறுத்த மாணவர்கள்.
  • திண்டுக்கல் சின்னாளம்பட்டியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சாதி மாணவிகளை செட்டியார் சாதி ஆசிரியை கழிவறையை சுத்தம் செய்யக் கோரி நிர்பந்தித்துள்ளார். அந்த அவமானத்தில் அந்த மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்துள்ளனர்.
  • கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தாழ்த்தப்பட்ட சாதி பெண் தமிழ்செல்வி கணவரின் சார்ந்த ஆதிக்க சாதிவெறியர்களால் கட்டையால் அடித்து தாக்கப்பட்டார். தீக்குளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.  
  • கிருஷ்ணகிரியில் தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டு கருவை கலைக்க சொல்லி மிரட்டி தாக்கியுள்ளது ஆதிக்க சாதிவெறி கும்பல்.
  • தென்காசியில் பாஞ்சாலகுளம், தாழ்த்தப்பட்ட சாதி குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் விற்க மறுத்து இடைநிலை சாதியச் சார்ந்தவர் தனது சாதிவெறியை கொட்டியுள்ளார். அதை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியும் சாதி பெருமை பேசியுள்ளார் அந்த கயவர்.
  • விழுப்புரம் சூரப்பட்டில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவன் வன்னிய சாதியினர் அச்சுறுத்தலால் தற்கொலை செய்துள்ளான்.
  • கும்பகோணம் செருகுடியில் தாழ்த்தப்பட்ட பெண்ணின் இறுதி ஊர்வலத்தை மறித்து வன்னிய சாதியினர் தாக்குதல் தொடுத்துள்ளனர்.
  • மதுரை ஒத்தக்கடை அருகே காயம்பட்டியில் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதாக கூறி அவரையும் அவரது மனைவியின் ஆடைகளையும் அவிழ்த்து மானபங்க படுத்தியுள்ளனர். 
  • திருவண்ணாமலை தொண்டமனூரில் பொங்கல் விழாவுக்கு சென்றிருந்த கள்ளக்குறிச்சி மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞரை வன்னிய சாதியினர் தாங்கள் அணிந்திருந்த மஞ்சள் சட்டையை வணங்க வற்புறுத்தி தாக்கியுள்ளனர். 
  • விருதாச்சலம் சாத்துக்கூடல் பகுதியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வந்த இளைஞர்களை வழிமறித்து 7 பேர் கொண்ட ஆதிக்க சாதிவெறி கும்பல் தாக்கியுள்ளது.
  • இராமநாதபுரம் திருவாடனையில் ஜீவா, பால்ராஜ், தினேஷ் ஆகிய தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஹரி தலைமையிலான ஆதிக்க சாதிவெறி கும்பல் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கி அவர்கள் மீது சிறுநீர் கழித்து தனது சாதிவெறியை காட்டியுள்ளது.
  • மதுரை கின்னிமங்கலத்தில் இறந்தவரின் உடலை கொண்டு செல்லும்போது பூ சிந்தியதற்காகவும் வெடி வெடித்ததற்காகவு தாழ்த்தப்பட்ட மக்களை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் சாதி வெறியர்கள்.
  • சேலம் எடப்பாடியில் தன் கடையில் வேலைப்பார்க்கும் தாழ்த்தப்பட்ட பெண்ணை மாதையன் என்ற ஆதிக்க சாதிவெறியன் ஆபாசமாக பேசி, ஆடையை கிழித்து செருப்பால் அடித்து சித்திரவதை செய்துள்ளார்.
  • திருவண்ணாமலை பாப்பம்பட்டு அருந்ததியர் பகுதியில் சாதிவெறியர்கள் அடியாட்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
  • பழனி பெத்த நாயக்கன் பட்டி துப்புரவுத் தொழிலாளி அன்னம்மாள் கொல்லப்பட்டுள்ளார்.
  • திண்டுக்கல் சிலுவார்பட்டி தப்பாட்டக் கலைஞர் கணேசன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
  • திருச்சி ஆயக்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பிளக்ஸ் வைத்ததற்காக தாக்கப்பட்டுள்ளனர்.  
  • புதுக்கோட்டை கீரமங்கலம் பட்டவைய்யனார் கோவில் திருவிழாவில் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பால்குடம் எடுக்க அன்னதானம் வழங்க அனுமதி மறுத்துள்ளனர்.
  • பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் மாரியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டு கோவில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
  • தமிழகம் முழுவதும் நகரங்களில் மலக்குழி கொலைகள்.
  • தலித்திய அமைப்புகளின் தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங், தீபக் பாண்டியன் ஆகியோர் படுகொலை. 
  • குடியரசு - சுதந்திர தினங்களில் தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு கொடியேற்ற அனுமதி மறுத்துள்ளனர் ஆதிக்க சாதிவெறியினர். பல தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு (கணக்கெடுக்கப்பட்ட 386ல் 22 பஞ்சாயத்துகளில்) அவர்கள் அமருவதற்கு ஒரு நாற்காலி கூட இல்லை. ஆதிக்க சாதியினர் முன்பு அவர்கள் நாற்காலியில் உட்கார கூட அனுமதிக்கப்படுவதில்லை என்ற அவல நிலை தொடர்கிறது.
  • திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, ராஜ கண்ணப்பன், ஆர்.எஸ்.பாரதி போன்றோர் தாழ்த்தப்பட்ட சாதி மக்களையும் அவர்கள் கட்சியிலே உள்ள மேயர்களையும் இன்ன பிற பிரமுகர்களையும் சாதிரீதியாக இழிவுப்படுத்தி பேசி வருகின்றனர். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சோபாவில் ஒய்யாரமாக அமர்ந்துக்கொண்டு, தனது மாவட்டத்திற்கு உட்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியனை நாற்காலியில் அமர வைக்காமல் இழிவுபடுத்தி நீண்ட நேரம் நிற்க வைத்து பேசியுள்ளார்.   

இந்த பட்டியலை படிப்பதற்கே மலைப்பாக இருக்கலாம். ஆனால் மேலே கொடுக்கப்பட்டவை மிக சொற்பமே. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் நித்தம் நித்தம் சாதிய வன்கொடுமைகளால் செத்து மடிகின்றனர். ஏதோ ஒரு மூலையில் ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ஆதிக்க சாதிவெறி ஓநாய்களால் கடித்து குதறப்படுகிறாள்.  சாதி ரீதியான எத்தனை எத்தனை அவமானங்கள்? எத்தனை கொடுமைகள்? தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2000க்கும் மேற்பட்ட சாதிய வன்கொடுமைகள் தொடர்பான குற்றங்கள் பதிவாகியுள்ளன. பதிவாகியுள்ள குற்றங்களின் எண்ணிக்கை மட்டுமே 2000க்கும் மேல் எனில் வழக்காக பதிவாகாத வன்கொடுமைகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும். கடந்த அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட 2021க்கு பிறகு திமுக ஆட்சியில் சாதிய வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் 40% சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியாவிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகத்தை முதல் இடத்திற்கு கொண்டு சென்ற சிறுமை "திராவிட மாடல்" என பீத்திக் கொள்ளும் இந்த கேடுகெட்ட ஸ்டாலின் ஆட்சியையே சாரும். 

இந்த போக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளது. சாதிய வன்கொடுமையில் தமிழ்நாடு 7வது இடத்தில் உள்ளது. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் வன்கொடுமைகள் 40% அதிகரித்திருக்கிறது எனில், வட இந்திய மாநிலங்களின் நிலை இன்னும் மிக மோசமாகியுள்ளது என்பதை எளிதாக புரிந்துக் கொள்ள முடியும். உத்திரபிரதேஷ், ராஜஸ்தான், மத்தியபிரேதேஷ்,  பீகார், மஹாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் சாதிய வன்கொடுமையில் முன்னிலை வகிக்கின்றன. இந்தியாவின் நடைபெறும் மொத்த வன்கொடுமைகளில் 75% க்கும் மேல் இந்த மாநிலங்களில் மட்டும் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்துத்துவ பாசிசம் என்பது இசுலாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; அது இந்துக்களிலேயே உள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே என்பதை இந்த புள்ளி விவரங்கள் பறைசாற்றுகின்றன. 

இப்போது நடப்பிலிருக்கும் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட தீண்டாமை தடுப்புச் சட்டங்கள் சாதிய ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கு போதுமானவையாக இல்லை. தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே அரங்கேறும் ஆணவப்படுகொலைகளையும் சாதி தீண்டாமை கொடுமைகளையும் இச்சட்டம் வன்கொடுமையாக கருதவில்லை. ஆனால் இன்று அவ்வகையான ஆணவப்படுகொலைகளும் அதிகரித்துள்ளதையே விருதுநகர் அழகேந்திரன் கொலை உட்பட பல்வேறு தகவல்கள் சாட்சியம் கூறுகின்றன. இந்த நிலையில்தான் ஆணவப்படுகொலைக்கு தனிச் சட்டம் தேவையில்லை; வன்கொடுமை சட்டமே போதும் என்று சட்டமன்றத்தில் வாதிடுகிறார் மு.க.ஸ்டாலின். இருக்கும் வன்கொடுமை சட்டத்தை கூட முறையாக நடைமுறைப் படுத்தாமல் ஆதிக்க சாதிவெறி சக்திகளுடனும் - இந்துத்துவ சக்திகளுடனும் சமரசத்தை மேற்கொள்கிறது; சாதிய வன்கொடுமைகளுக்கு துணைபோகிறது இந்த சமூக அநீதி அரசு. 

இந்துத்துவ மாடலாக இருந்தாலும் சரி -திராவிட மாடலாக இருந்தாலும் சரி - கதர் மாடலாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களை சாதிய வன்கொடுமைக்கு பலியிடுவதில் வேறுபட்டவை அல்ல. வடிவத்தில் வேண்டுமானால் சிற்சில மாற்றங்கள் இருக்கலாம் பண்பளவில் இவை அனைத்தும் நிதியாதிக்க சேவை மாடலே; பாசிச மாடலே. இந்த மத்திய, மாநில பாசிச ஆட்சியாளர்களுக்கு முடிவு கட்டாமல் நமது இன்னல்களை தீர்க்க முடியாது. ஆளும் வர்க்க கும்பலான ஏகாதிபத்தியம்-தரகுமுதலாளித்துவம்-நிலபிரபுத்துவம் இந்த முக்கூட்டிற்கு முடிவு கட்டாமல் நாட்டில் ஒரு ஜனநாயக மாற்றை உருவாக்க முடியாது; சாதிய வன்கொடுமைகளும் ஒழியாது.      

சாதிய வன்கொடுமைகள் இன்றும் நீடிப்பதற்கான அடிப்படைகளையும், சாதி பற்றிய மார்க்சிய விரோத கண்ணோட்டங்களையும், சாதி ஒழிப்பில் பாட்டாளி வர்க்க நிலைபாட்டையும் அடுத்த இதழில் விவாதிப்போம்.

பகுதி 3 ல் தொடரும்...        

சமரன் 
(ஜூலை - ஆகஸ்ட் 2024 மாத இதழில்)

===========================================

பகுதி 3

அடிப்படைகள் மற்றும் பாட்டாளி வர்க்க நிலைபாடு பற்றிய சுருக்கமான பார்வை

ஆளும் வர்க்கம் சாதிவாதிகளின் மூலம் சாதி அமைப்புகளைக் கட்டி, சாதி வெறியைத் தூண்டுகின்றன. இந்த சாதிவாத கட்சி தலைவர்கள் ஏதாவதொரு ஆளும் வர்க்க கட்சியுடன் கூட்டுச் சேரத் துடிக்கின்றன. ஆளும்-எதிர்க்கட்சிகளும் ஒவ்வொரு சாதியிலும் உள்ள ஆதிக்கவாதிகளுடனும் சாதிவாதக் கட்சி தலைவர்களுடனும் பேரம் பேசி சாதி ஓட்டுகளைப் பெற்று ஆட்சியில் அமரத் துடிக்கின்றன. இதற்காகத்தான் இந்த சாதிவாத கட்சிகள் தங்களின் தலைமையில் உழைக்கும் மக்களை சாதிரீதியாக திரட்டுகின்றன; அவர்களுக்கு சாதிவெறியை தூண்டி விடு•கின்றன; இவர்களின் பதவிவெறிக்காக அனைத்து சாதியிலுமுள்ள உழைக்கும் மக்களை பலிகடாவாக்குகின்றனர் என்று இந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்தோம். 

சாதிக்கான அடிப்படை பற்றி ஏஎம்கே

சாதிக்கான பொருளியல் அடிப்படை குறித்து ஏஎம்கே பின்வருமாறு கூறுகிறார்:

...பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் சாதிமுறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. ஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, உயர்வுதாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும்... 

(மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறையும் அரசியல் செயல்தந்திரங்களும் -
ஏஎம்கே - தேர்வு நூல்கள் - தொகுதி 5 - பக்கம் 46)
 

மத்திய கால இந்தியாவில் துவங்கிய நிலமானிய முறை இந்தியா முழுமைக்கும் விரிவடைந்தது. இந்த நிலமானிய முறையே சாதிய படிநிலைமுறை உருவாவதற்கான பொருளியல் அடிப்படையாகும். நிலமானியமுறை நிகழாத வடகிழக்கு மாகாணங்களில் இன்னும்கூட சாதிய படிநிலைமுறை உருவாகததை நாம் பார்க்க முடிகிறது. எனவே, நிலபிரபுத்துவ உற்பத்திமுறை உள்ளிட்ட முதலாளித்துவத்திற்கு முந்தைய அனைத்து உற்பத்தி முறைகளும் தகர்க்கப்படும்போதுதான் சாதிக்கான பொருளியல் அடித்தளம் தகரும்.

சுதேசிய முதலாளித்துவ வளர்ச்சியை சிதைத்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சி

பெரும்பகுதியான இந்தியாவில், முகலாயர் ஆட்சி காலத்திலேயே முதலாளித்துவ பொருளாதாரக் கூறுகள் தொடங்கிவிட்டன. அந்த கூறுகள் சுதந்திரமாக வளர்ச்சி பெற்றிருந்தால் நிலபிரபுத்துவ உற்பத்தி உறவுகள் மாற்றியமைக்கப்பட்டு முதலாளித்துவ உற்பத்தி முறை தோன்றியிருக்கும். சாதி இருப்புக்கான அடித்தளமும் நொறுக்கப்பட்டிருக்கும். இந்தியாவை ஆக்கிரமித்த பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் முதலாளித்துவ கூறுகள் சிதைக்கப்பட்டு சுதேசிய வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. காலனியாதிக்கத்திற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி இந்தியாவை கொள்ளையடித்து இங்கிருந்த வளங்களையும் உழைப்பையும் உறிஞ்சி ஏற்றுமதி செய்துகொண்டது. காலனியாதிக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மத ரீதியாகவும் - இன ரீதியாகவும் - சாதிவெறியை கூர்மைபடுத்தியும் மக்களை பிளவுபடுத்தியது. சுதேசிய முதலாளித்துவ வளர்ச்சி காலனியாதிக்கத்திற்கு தடையாக மாறும் என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இங்கிருந்த நிலபிரபுத்துவ கும்பலுடன் சமரசம் செய்து கொண்டது. சமரசத்திற்கு உடன்பட மறுத்து பிரிட்டிசை எதிர்த்து போராடிய திப்புசுல்தான், கட்டபொம்மன் போன்றோரை வேட்டையாடியது. காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் வகையிலான தரகு முதலாளித்துவ கும்பலை வளர்த்துவிட்டது. இந்த தரகுமுதலாளித்துவ கும்பல் நிலபிரபுத்துவத்தின் அழிவில் இருந்து தோன்றிய வர்க்கம் அல்ல; மாறாக அது ஏகாதிபத்திய சேவையையும் நிலபிரபுத்துவ சேவையையும் கடமையாக கொண்ட ஒரு ஒட்டுண்ணி வர்க்கமாக உருவெடுத்தது.

உலகில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்தபின் அது வரலாற்றில் தனது முற்போக்கு பாத்திரத்தை இழந்துவிட்டது. அது நிலபிரபுத்துவத்தை ஒழிப்பதற்கு மாறாக அதனுடன் சமரசம் செய்துகொண்டு உயிர்பிழைத்து வருகிறது. முதல் இரண்டு உலகப்போருக்கு பின்பு தோன்றிய சோசலிச நாடுகளும், காலனிய நாடுகளில் தோன்றிய புரட்சிகர எழுச்சிகளும் அதற்கு படிப்பினையைக் கற்று கொடுத்துள்ளன. அது பழைய காலனிய முறையில் இனியும் ஆதிக்கம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து இரண்டாம் உலகப்போருக்கு பின்பு புதிய காலனிய முறையிலான உலக மறுபங்கீட்டில் ஈடுபட்டது. இந்த மறுபங்கீட்டு போட்டி இன்றும் தொடர்கிறது; ஏகாதிபத்தியம் உள்ள வரை தொடரும். இவை புதிய வடிவில் காலனிய நாடுகளில் உள்ள தரகு/சார்பு முதலாளித்துவ கும்பல் - நிலபிரபுத்துவ கும்பல் மூலமாக மக்களையும் தேசங்களையும் சுரண்டி கொழுக்கின்றன. அதனால்தான் இந்தியாவில் இன்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகள் அனைத்தும் நீடித்து வருகின்றன. இதுவே அழுகி நாற்றமெடுக்கும் இந்த சாதி இன்றும் புழுவாக நெளிந்து கொண்டிருப்பதற்கான அடிப்படையாகும்.

1947 அதிகார மாற்றத்திற்கு பின்பும் - இன்று வரையும் இந்தியாவில் சாதி அழியாமல் நீடிப்பதற்கான காரணங்கள் என்ன?

1947 அதிகார மாற்றத்திற்கு பிறகு சோசலிச ரஷ்யாவின் நெருப்பு இங்கும் பற்றிவிடக் கூடாது என்ற பயத்திலிருந்து இந்தியாவில் கீன்சிய கொள்கை எனும் ஏகாதிபத்திய சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தெலுங்கானா எழுச்சியை ஒட்டி, நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்திலும் கோவில்கள், மடங்கள் உள்ளிட்ட நிலக்குவியல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் மொத்த நில குவியல்களில் வெறும் 2% சதவிகிதம்தான் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அது பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மேல்தட்டு பிரிவினருக்கே வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வழங்கப்பட்ட நிலங்கள் அதில் மிக சொற்பமானவை. அதன்பிறகு 1960களில் கொண்டுவரப்பட்ட பசுமைப் புரட்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த திட்டங்கள் மூலம் கிராமபுறங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியின் மத்தியில் புதிய நிலப்பிரபுத்துவ - பணக்கார விவசாய வர்க்கம் உருவாகியது. இந்த வர்க்கம் சொந்த சாதியிலுள்ள உழைக்கும் மக்களையும் தாழ்த்தப்பட்ட சாதியினரையும் சுரண்டிக் கொழுத்தது. தரகுமுதலாளித்துவ கும்பலை அண்டி பிழைத்தது. அதேபோல், மறுபக்கம் அமெரிக்கா - ரஷ்ய சமூக ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் வகையில் டாட்டா பிர்லா போன்ற தரகுமுதலாளித்துவ கும்பலின் தலைமையில் பொதுத்துறை நிறுவனங்களும், உற்பத்தி தொழிற்சாலைகளும் இங்கு கட்டியமைக்கப்பட்டன. நிறுவப்பட்ட தொழிற்சாலைகளினால் குறிப்பிட்ட அளவில் சிறுகுறு தொழிற்துறை உற்பத்தியாளர்களையும் அது உருவாக்கியது. அந்த சிறுகுறு உற்பத்தியாளர்களும் சுயேச்சை தன்மையில்லாமல் பெரும் நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையே நீடித்தது. சாராம்சத்தில் இந்திய தொழிற்துறை என்பது ஏகாதிபத்திய நிதிமூலதனத்தை சார்ந்திருக்க வேண்டிய நிலையே இருந்தது. ஏகாதிபத்திய நிதிமூலதனம் என்பது புல்லுருவித்தனமானது; அழுகல் தன்மை கொண்டது; சுதேசிய தொழில் வளர்ச்சியை முற்றாக அழித்து சில தரகர்களை உருவாக்கி தான் வாழ்வதே நிதிமூலதனத்தின் பண்பாகும். நிதிமூலதனம் சுதந்திரத்தை விரும்புவதில்லை; அடிமைத்தனத்தையே விரும்பும். எனவே இந்திய தொழிற்துறை சுதேசிய தன்மை இழந்து ஏகாதிபத்திய நெருக்கடிக்கு ஏற்ப ஏற்றத்தாழ்வான வளர்ச்சி தன்மையையே கொண்டிருந்தது. இந்தியா முழுமைக்கும் சீரான சமூக வளர்ச்சியின்றி சில மாநிலங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறியும் வட கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும் உள்ளன. மாநிலங்களுக்குள்ளும் கூட ஏற்றத்தாழ்வான நிலை உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சி அரசியல்- பண்பாட்டு துறையிலும் வெளிப்பட்டது. 

இந்த ஏற்றத்தாழ்வான வளர்ச்சியின் இடைவெளியானது, 1990களில் உலகமயமாக்கலுக்கு பிறகு இன்னும் ஆழமானது. அது மீளவே முடியாத நெருக்கடியில் இன்று உலகை நிறுத்தியுள்ளது. ஒவ்வொரு நெருக்கடியின் சுமைகளும் இந்திய உழைக்கும் மக்களின் தலையில் கட்டப்பட்டன. உலகமய-தாராளமயமாக்கலுக்கு பிறகு குறிப்பிட்ட அளவில் நகரமயமாக்கல் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான். இந்த நகரமயமாக்கலும் கார்ப்பரேட் மயமாக்கலும் நாட்டில் முதலாளித்துவம் வளர்ந்துவிட்டதை போல ஒரு மாயத் தோற்றத்தை கொடுக்கின்றன. ஏனெனில் தொலைத்தொடர்பு சாதனங்களும், நகரங்களையும் துறைமுகங்களையும் இணைக்கும் பிரம்மாண்ட உள்கட்டமைப்புகளும், இந்திய சந்தையில் கொட்டிக் குவிக்கப்படும் நுகர்வு பொருட்களும், அம்பானி-அதானி போன்ற பெரும் கார்ப்பரேட் கும்பலின் உலகளாவிய வளர்ச்சியும், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, தூய்மை இந்தியா போன்ற வாய்ஜாலங்களும் சேர்ந்து அந்த பிம்பத்தை உருவாக்கியுள்ளன. ஆனால் உண்மையில் இந்தியா இன்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறையிலேயே கட்டுண்டுள்ளது. இந்திய கிராமங்களில் உள்ள மக்கள் நிலம் சார்ந்த உற்பத்தி உறவுகளுடனேயே பிணைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இன்று நிலவும் புதிய காலனிய உற்பத்தி முறையால் ஓட்டாண்டியாக்கப்பட்டுள்ளனர்.

நிலச் சீர்திருத்தம் செய்வதற்கு பதிலாக, நிலங்கள் கார்ப்பரேட்களின் ஆதிக்கத்தின் கீழ் ஒன்று குவிக்கப்பட்டு வருகின்றன. விவசாயம் சிறுகுறு நிலவுடைமையாளர்களுக்கும் குத்தகை விவசாயிகளுக்கும் சுமையாக மாறியது. கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினரில் பெரும்பான்மையான மக்கள் துண்டு நிலம் கூட இல்லாதவர்களாகவும் விவசாயக் கூலிகளாகவுமே உள்ளனர். விவசாயத்தில் நவீன இயந்திரங்களின் வருகை இவர்களின் பொருளாதார வாழ்நிலையை சுபிச்சமடைய செய்வதற்கு மாறாக முன்பைவிட மோசமாக்கியது. இதனால் கிராமங்களில் இருந்து நகர்புறங்களுக்கு தற்காலிகமாக புலம்பெயர்ந்தனர். நகரங்களில் பொதுத்துறை உற்பத்தி நிறுவனங்கள், சிறுகுறு தொழில்கள் போன்றவை அழிக்கப்பட்டு வருவதாலும், அங்கும் அவர்களுக்கு நிரந்தர வேலைகள் கிடையாது. கட்டிட வேலை, டெக்ஸ்டைல்ஸ் வேலை போன்ற வேலைகளில் முறைசாரா தொழிலாளிகளாகவும், ஒப்பந்த தொழிலாளிகளாகவுமே மாற்றப்பட்டனர். படித்த இளைஞர்கள் கூட கிக் (gig) தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் நிலையில்லாத வாழ்க்கை முறையால் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் பிழைப்புக்காக அல்லாடி வருகின்றனர். அதில் சொற்பமான சிலரின் வாழ்நிலை மட்டுமே முன்பு அடிமைப்பட்டு கிடந்ததைவிட சற்றே முன்னேற்றியுள்ளது - அது அவர்களை கடனாளியாகவும் மாற்றியுள்ளது என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும். அவர்களின் வாழ்க்கை ஒரு அடிமைத்தனத்திலிருந்து மற்றொரு அடிமைத்தனத்திற்கு சென்றுள்ளது என்பதே உண்மை. 

இதே, நிரந்தரமற்ற நாடோடி வாழ்க்கைமுறைதான் பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள நிலமற்றவர்களுக்கும் - குத்தகை விவசாயிகளுக்கும் - சிறுகுறு நிலவுடமையாளர்களுக்கும் வாய்த்தது. கடன் சுமையால் அவர்களிடமிருந்த துண்டு துக்காணி நிலங்களும் கூட ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்களால் கைப்பற்றப்பட்டது. இவர்களின் பொருளாதார வாழ்வும் மோசமடைந்தது. மறுபக்கம் புதிய நிலப்பிரபுத்துவ வர்க்கம் குத்தகை, வட்டி, ரியல் எஸ்டேட் தொழில்கள் மூலம் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாக உருவெடுத்தன. இந்த மாற்றம் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள்ளும் படிநிலை ஏற்றத்தாழ்வையும் வர்க்க முரண்பாடுகளையும் உருவாக்கியது. அதாவது சாதிக்குள் வர்க்க முரண்பாடுகள் உருவாகின. இதை மூடிமறைத்து பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் மக்களின் இந்த அவலநிலைக்கு, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு கீழ்படிந்து நடக்காததும் அவர்கள் சாதிய கடமையை ஆற்றாததுமே காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்து நவீன தீண்டாமையையும் - சாதிவெறியையும் கட்டியமைத்து வருகின்றன. அதன் மூலம் சாதிய வாக்குவங்கிகளை உருவாக்குகின்றன; அரசு அதிகார அமைப்புகளில் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த முயல்கின்றன. இதற்காக சாதிக் கலவரங்களையும் சாதிய வன்கொடுமைகளையும், ஆணவப்படுகொலைகளையும் திட்டமிட்டு நடத்துகின்றன. 

சாதிய அணிதிரட்டலுக்காக பல்வேறு சாதிய அமைப்புகளை இந்த ஆளும் வர்க்க கும்பல் உருவாக்கி வருகிறது. ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்கள் மூலம் கோவில்கள்-மடங்கள் போன்ற நிலப்பிரபுத்துவ ஆதிக்க நிறுவனங்கள் உதவியுடனும் புதிய புதிய சாதிய அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. மடங்களும், கோவில்களும், டிரஸ்ட்களும் மதத்தின் பெயரால் கருப்பு பணங்களை கையாளும் சந்தையாக மாற்றப்பட்டுள்ளன. இந்த கருப்பு பணம் கல்வி நிலையங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் உழைக்கும் மக்களை தன்பங்கிற்கு சுரண்டி வருகிறது. இந்த சந்தை இந்துத்துவ சக்திகளுக்கும் நிலப்பிரபுத்துவ சாதிவெறி சக்திகளுக்கும் ஊக்கமளித்து வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சாதிச் சங்கங்கள் சாதித் திரட்டல்கள் மற்றும் அதற்கு எதிரான இயக்கங்கள் குறித்து, ஏஎம்கே-வின் சாதி பற்றியக் குறிப்புகள் கட்டுரையில் (ஏஎம்கே தேர்வு நூல்கள் - தொகுதி 5 - பக்கம் 20-35) உள்ள அம்சங்களின் தொகுப்பை அடுத்த இரு தலைப்புகளில் சுருக்கமாக பார்ப்போம்.

இந்தியாவில் சாதிவாத அமைப்புகளின் வரலாறு - அவை இன்று பாசிசத்தின் தொங்குசதைகளாக விளங்குவது குறித்து

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சாதி சங்கங்களை கட்டுவதற்கான கூறுகள் தொடங்கின. 1905க்கும் 1930க்கும் இடையில் நாடு முழுவதும் பார்ப்பனர் அல்லாத சாதியினர் சாதி அமைப்புகளை கட்ட தொடங்கினர். அவை பெரும்பாலும் நிலவுடமை ஆதிக்க சாதிகளின் சங்கங்களாக இருந்தன. இதை "சாதி சங்க காலம்" என்று பகடியாக குறிப்பிடுகிறார் ஏஎம்கே. மேலும் அவர், மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் இத்தகைய சாதி அமைப்புகள் அரசியல் சக்தியாக தலையெடுக்க வழியமைத்தது. காலனிய ஆட்சியின் கீழ் அரசை அண்டிபிழைத்து இடஒதுக்கீட்டையும் சில சலுகைகளையும் பெறுவதுவே இவர்களின் நோக்கமாக இருந்தது. நாட்டை விடுதலை பாதையில் கொண்டு செல்வது - சாதியை ஒழிப்பது இவர்கள் நோக்கமாக இல்லை; அதனால் இவர்களிடம் யாதொரு போர்குணமும் இருக்கவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர் சாதிக் கட்டுபாடுகளை மீறுவதை அடக்குவதில்தான் அந்த சாதி அமைப்புகளின் போர்குணம் இருந்தது என்கிறார். 

இந்த சலுகைகளை பெறுவதை நோக்கமாக கொண்டு சென்னை மாகாணத்தில் திராவிட இனவாத கட்சியாக நீதிக்கட்சி 1916ல் உருவாக்கப்பட்டது. அது பார்ப்பனரல்லாத மேல்சாதி ஆளும் வர்க்கத்தினருக்கான கட்சியாகவே இருந்தது. தாழ்த்தப்பட்ட சாதியினரை தங்களது ஆதிக்கத்தின் கீழ் அடங்கியிருப்பதை நோக்கமாக கொண்டே செயல்பட்டது. தாழ்த்தப்பட்ட சாதியினர் பாதிக்கப்படும் போது அக்கட்சி, தாழ்த்தப்பட்ட சாதியினர் பக்கம் எப்போதும் உறுதியாக நின்றதே இல்லை. பெரியாரின் வழி என்பதும் அவ்வழியாகவே இருந்தது. அதுவே இன்றைய திராவிட கட்சிகளின் ஆதிக்க சாதி ஆதரவு நிலைபாட்டிற்கு கொள்கையளவிலும் அடிப்படையாக உள்ளது. இவர்களின் சமூக நீதி என்பது பார்ப்பனர் - தாழ்த்தப்பட்டோர் அல்லாத ஆதிக்க சாதிவெறியர்களுக்கான நீதியாகவும்; தாழ்த்தப்பட்டோருக்கு அநீதியாகவும் உள்ளது. அதனால்தான் இன்று திமுக அமைச்சர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் பெறும் சலுகைகள் அனைத்தும் திராவிட கட்சிகள் போட்ட பிச்சை என்று சாதித் திமிரோடு பேசி வருகின்றனர். 

அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான ஜனநாயக கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிட்டிஷ் ஆட்சியதிகாரத்திற்குள்ளாகவே தலித்களுக்கு அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தவாத போராட்டங்களை முன்னெடுத்தார். அவரின் வழியில் 1956ல் மகாராஷ்டிராவில் மஹர் சாதியினரை முதன்மைப்படுத்தி "புதிய பௌத்தம்" எனும் பெயரில் அமைப்பை தோற்றுவித்தார். இதுவே இன்றைய தலித்திய அமைப்புகள் தோன்றுவதற்கு மாதிரியாக அமைந்தது. 1970 களில் தலித் சிறுத்தைகள் என்ற ஓர் இயக்கம் தோன்றி இருந்தது. 90களில் உலகமயமாக்கலுக்கு பிறகுதான் தலித்திய அமைப்புகள் இந்தியா முழுவதும் ஆங்காங்கே தொடங்கப்பட்டன. சாதி ஒழிப்பை இந்த அமைப்புகளும் நோக்கமாக கொண்டு செயல்படவில்லை. இந்த அமைப்புகள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட சாதியினரில் உள்ள மேட்டுகுடிகளின் நலன்களுக்காகவே உருவாக்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ள அனைத்து உழைக்கும் மக்களின் கோரிக்கையை கூட இவை முதன்மைப்படுத்தவில்லை. 

1980களில் தமிழ்நாட்டில் எழுச்சியுற்றிருந்த நக்சல்பாரி இயக்கங்களையும் மக்களிடம் அவை பெற்ற ஆதரவையும் கண்டு அஞ்சிய ஆளும் வர்க்கங்களும் ஏகாதிபத்திய தொண்டு நிறுவன கும்பலும் சேர்ந்து 90களில் தமிழ்நாட்டில் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியையும், திருமாவளவன், ரவிக்குமார் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் உருவாக்கின. இவற்றை தொடர்ந்து பல்வேறு சாதியவாத கட்சிகள் புற்றீசல் போல முளைத்து கிளம்பின. 

உலகமயமாக்கலுக்கு பின் பொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வு அதிகரித்திருப்பதை நாம் பார்த்தோம். இந்த ஏற்றத்தாழ்வு மென்மேலும் ஒவ்வொரு சாதிகளுக்குள்ளும் உள் வர்க்கங்களை தோற்றுவித்தன. அவற்றுக்கிடையே முரண்பாடுகள் அதிகரித்தது போலவே பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட சாதிகளில் உள்ள உட்பிரிவுகளுக்குள்ளும் முரண்பாடுகளை இந்த ஏற்றத்தாழவான சமூக வளர்ச்சி தோற்றுவித்தது. ஒவ்வொரு சாதியும் புதிய வர்ணாசிரம தீண்டாமையை கடைபிடித்தன. ஒவ்வொன்றும் தங்களை மேலான சாதியாக கருதிகொண்டு ஆண்டபரம்பரை என சாதியபெருமை பேச ஆரம்பித்தன. தாழ்த்தப்பட்ட சாதிகளில் கூட பள்ளர் சாதியினர் தாங்கள் தேவேந்திர குல வெள்ளாளர் எனும் நிலவுடமை வர்க்க சாதியைச் சார்ந்த - ஆண்ட பரம்பரையினர் - பாண்டிய அரச வம்சத்தினர் என சாதி பெருமை பேசி பறையர்களையும் - சக்கிலியர் (அருந்ததியர்)களையும் தங்களுக்கு கீழாக பார்த்தன. அவர்களிடம் தீண்டாமையை கடைபிடித்து வருகின்றன. பறையர்களும் கூட பல்வேறு உட்பிரிவுகளை கொண்டுள்ளன; அவர்கள் அந்த பிரிவுகளிடமும் அருந்ததியினரிடமும் தீண்டாமையை கடைபிடிக்கும் அவலம் அதிகரித்துள்ளது. இதுவே ஒவ்வொரு சாதிக்கும் - ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ஒரு சாதிய கட்சியை உருவாக்கியுள்ளது. 

தலித்திய அரசியல் என்பது தாழ்த்தப்பட்ட சாதிகளில் உள்ள மேட்டுக்குடிகளுக்கான அடையாள அரசியலாகும்; அது தாழ்த்தப்பட்ட மக்களின் அனைவருக்குமான இயக்கம் அல்ல. அவை சேரி என்றாலே சிறுத்தைகள் என்றும், சேரி என்றாலே நீலம் என்றும் பேசி அனைத்து சாதி உழைக்கும் மக்களையும் உள்ளடக்கிய ஜனநாயக போராட்டத்தை மறுத்து வருகின்றன. ஒருபக்கம் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளை கூட சேரிகளில் ஏற்றுவதற்கு அனுமதி மறுத்துவிட்டு, மறுபக்கம் கம்யூனிஸ்ட்கள் சாதி ஒழிப்பிற்கு பங்காற்றுவதில்லை என கதையளக்கின்றனர். இடதுசாரிகளை அப்பகுதிகளில் இயக்கம் கட்டுவதற்கே இவர்கள் அனுமதிப்பதில்லை. சேரி என்றால் சிறுத்தைகள் - சேரி என்றால் நீலம் என்கின்ற முழக்கம் எப்போது ஒழியுமோ அப்போதுதான் சாதி ஒழிப்பிற்கான அனைத்து சாதி உழைக்கும் மக்களின் ஐக்கியமும் பிறக்கும்; இடதுசாரிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் இணைந்து போராடவும் முடியும். சாதி தீண்டாமை தடுப்புச் சட்டங்கள், இட ஒதுக்கீடுகள் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் மூலமாகவே சாதியை முற்றாக ஒழித்துவிட முடியும் என்று தவறாக மதிப்பிடுகின்றன. வர்க்கப் போராட்டம் என்பதை பொருளாதார போராட்டமாக மட்டும் சுருக்கி பார்த்து கம்யூனிஸ்ட்களிடம் சாதி ஒழிப்பிற்கான திட்டம் இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்கின்றன.

மறுபுறம், சமூக நீதியே எங்கள் கட்சியின் கொள்கை என பேசி ஆரம்பிக்கப்பட்டது பாமக. 2000ம் ஆண்டுகளுக்கு பிறகு ராமதாஸ் கும்பல் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிராக அனைத்து சாதியினர் ஒற்றுமை கூட்டமைப்பு உருவாக்கியது. சட்டமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை இலக்காக வைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பல்வேறு சாதியப் படுகொலைகளையும் - கலவரங்களையும் தலைமையேற்று நடத்தியது. வட தமிழகத்தில் வன்னியர் - பறையர் மோதல்களையும், தென் தமிழகத்தில் தேவர் - பள்ளர் சாதிகளுக்கு இடையிலான மோதல்களையும், மேற்கு மாவட்டங்களில் வெள்ளாள கவுண்டர் - அருந்ததியர் சாதிகளுக்கு இடையிலான மோதல்களாகவும் கட்டியமைக்கப்பட்டன. இவற்றுக்கு இந்த ஆதிக்க சாதி வெறியர்களின் கூட்டமைப்பு தலைமை தாங்கியது. 

2008ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொது நெருக்கடி பாசிசப் போக்குகளை தீவிரப்படுத்தியது. 2014ல் இந்துத்துவ பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்தபின் இந்த சாதிவாத இயக்கங்களுக்கு புத்துணர்ச்சி அளித்தன. ஆர்.எஸ்.எஸ். - வி.எச்.பி உள்ளிட்ட சங்பரிவார கும்பலும் இவற்றுடன் கைகோர்த்து தங்களின் நிகழ்ச்சிநிரலை அரங்கேற்றி வருகின்றன. இதனால் சாதிவாத - தீண்டாமை போக்குகள் அதிகரித்துள்ளன. இந்த போக்கின் நீட்சியே கடந்த அதிமுக ஆட்சியிலும் சரி இன்றைய திமுக ஆட்சியிலும் சரி, ஏன் நாடு முழுவதிலும் கூட சாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கான காரணமாகவும் அடிப்படையாகவும் உள்ளது. இன்னும் கொடுமை என்னவென்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடையிலும் கூட தலித்திய சாதிவெறி ஆணவப் படுகொலைகள் நிகழ்த்தும் அவல நிலைக்கு தள்ளியுள்ளது. அதன் உச்சம்தான் தற்போது விருதுநகரில் அரங்கேறியுள்ளது. அழகேந்திரனை பலிவாங்கியுள்ளது. 

பெரும் தரகு முதலாளித்துவ - பெரும் நிலப்பிரபுத்துவ கும்பல்களின் கட்சிகளான காங்கிரசும் - பாஜகவும் அடிப்படையில் சாதி ஒழிப்பை நோக்கமாகவோ கொள்கையாகவோ கொண்டவை அல்ல. இரண்டுமே சாதிவெறியை தூண்டி ஏகாதிபத்திய நலன்களுக்கும் - சனாதனத்திற்கும் சேவை செய்யும் கட்சிகளே; இவை சாதிவெறியையும் படிநிலை ஆதிக்கத்தையும் வளர்த்தெடுக்கும் கட்சிகளே ஆகும். இவை பாசிசத்தின் இருமுகங்களே என்கிறார் ஏஎம்கே. நாம் மேலே பார்த்தவாறு தலித்திய அமைப்புகள் உட்பட அனைத்து சாதியவாத அமைப்புகளும் ஏதாவதொரு ஆளும் வர்க்க கட்சியில் (பகுஜன் சமாஜ், லோக் ஜனசக்தி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பலுடனும், விடுதலை சிறுத்தைகள், ஆதித் தமிழர் பேரவை போன்ற கட்சிகள் காங்கிரஸ்-திமுக கும்பலுடனும்) கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளன. அவை, தங்களது சொந்த சாதியைச் சார்ந்த உழைக்கும் மக்களையே இந்த ஆளும் வர்க்க கும்பல்களின் - பாசிச ஆட்சியாளர்களின் நலன்களுக்கு பலிகொடுத்து வருகின்றன. ஆதிக்க சாதி வெறிக்கு மாற்று தலித்தியம் அல்ல என்பதையும் இந்த கட்சிகளும் சாதிய வன்கொடுமைகளும் நிரூபித்து வருகின்றன. இவை அனைத்தும் அந்த அந்த சாதியில் உள்ள மேட்டுகுடிகளுக்கானவை மட்டுமே என்பதையும் இவை பாசிசத்தின் தொங்குசதைகளே என்பதையும் அனைத்து உழைக்கும் மக்களும் உணர வேண்டும். சாதி கடந்து அனைத்து சாதி உழைக்கும் மக்கள் ஒன்றிணைவதே இந்த கொடுஞ்செயல்களுக்கு முடிவு கட்ட வழிவகுக்கும் என்பதே நிதர்சனமானது. 

சாதி ஒழிப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாத்திரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சாதி ஒழிப்பை தன் திட்டத்தில் ஒன்றாக வைத்து செயல்பட்டன. அவை நிலப்பிரபுத்துவ எதிர்ப்பில் சாதி ஒழிப்பை இணைத்து சரியாகவே பார்த்தன. தெலுங்கானா நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஆயுத போராட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து சாதி உழைக்கும் மக்களையும் விவசாயிகளையும் அணிதிரட்டி சரியாக போராடின. ஆனால் ஏகாதிபத்திய எதிர்ப்போடு நிலப்பிரபுத்துவ எதிர்ப்பையும் இணைக்கும் பார்வை அவற்றிடம் இல்லாமல் போனது. இந்திய தரகுமுதலாளித்துவத்தை சுதந்திர முதலாளித்துவமாக நம்பி ஏமாந்தது. தெலுங்கானா ஆயுத போராட்டத்தை தரகுமுதலாளித்துவ நேரு கும்பலின் சமரசத்திற்கு விட்டுகொடுத்தது. அதன் பின்னரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வெண்மனியில் நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கும் - சாதி ஆதிக்கத்திற்கு எதிராக வலுவான இயக்கத்தை கட்டியமைத்தன. சாணிப்பால், சவுக்கடி போன்ற நிலப்பிரபுத்துவ-சாதிய அடக்குமுறைகளை ஒழிப்பதற்கான போராட்டத்தையும் முன்னெடுத்தன. ஏகாதிபத்திய -நிலப்பிரபுத்துவ அரசியல்-பொருளாதார ஆதிக்க எதிர்ப்பை கைவிட்டு திருத்தல்வாத நிலைக்கு வீழ்ந்து அவை மெல்ல மெல்ல பொருளாதாரவாத நிலைக்கு தாழ்ந்துவிட்டன. இன்று மக்களிடமிருந்து தனிமைப்பட்டு காங்கிரசு - திராவிட கட்சிகளுக்கு பல்லக்கு தூக்கும் இழிநிலைக்கு சென்றுவிட்டன.

உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் உழுபவனுக்கே அதிகாரம் என்ற முழக்கத்தோடு தோன்றிய மா.லெ. இயக்கம், சாதி ஒழிப்பிற்கான சரியான மா-லெ வழிகாட்டுதலை முன் வைத்தது. இருப்பினும், ஆளும் வர்க்க அரசியல்-பொருளாதார-சமூக ஆதிக்கத்தை எதிர்த்து பரந்துபட்ட மக்களடங்கிய ஜனநாயக இயக்கத்தை கட்டியமைக்க தவறின; வர்க்க எதிரிகளை- நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதையே ஒரே வழியாக கொண்டு செயல்பட்டன. 

அத்தகைய தன்னியல்பு போர்த்தந்திரப் பாதையை கைவிட்டு மக்கள்யுத்தம் தமிழ்மாநிலக் குழு ஏஎம்கே தலைமையில் சரியான நிலைபாட்டை - அதாவது, ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ அரசியல்-பொருளாதார-சமூக ஆதிக்கத்தையும், பெரும் தரகுமுதலாளித்துவ சர்வாதிகாரத்தையும் எதிர்த்து சாதி ஒழிப்புக்கான, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான புதிய ஜனநாயகப் புரட்சிக்கான மக்கள் திரள் வழியை - முன்வைத்து செயல்படத் துவங்கியது. அக்கட்சியின் வழிகாட்டுதலில் பாலன் உள்ளிட்ட பல்வேறு தோழர்களின் தலைமையில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தருமபுரி மற்றும் தஞ்சை பகுதிகளில் கட்டியமைக்கப்பட்டன. தருமபுரியில் கந்துவட்டி கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள், சவுக்கடி - சாணிப்பால் கொடுமைகளுக்கு எதிர்த்தாக்குதல் தொடுத்தது, இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, சாதி மறுப்பு காதல் திருமணங்களை முன்னின்று நடத்துவது, நிலபிரபுத்துவ ஆதினங்களுக்கும் மடங்களுக்கும் எதிரான போராட்டங்கள் என சாதி கடந்து அனைத்து சாதி உழைக்கும் மக்களையும் ஓரணியில் திரட்டி மக்கள் திரள் இயக்கங்களை கட்டியமைத்தது. உழைக்கும் மக்கள், வன்னியர் - பறையர் சாதி வேற்றுமைகளை கடந்து வர்க்கமாக ஒன்றுபட்டதை கண்டு ஆளும் வர்க்கம் பீதியடைந்தது. 

மார்க்ஸ் - பெரியார் வழி என பேசி நாடகமாடிய பாமகவும் - பாலன் வழி என பேசி நாடகமாடிய விசிகவும் வன்னியர்-பறையர் சாதி உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்தன. கட்சிக்குள் ஊடுருவிய அ.மார்க்ஸ், ரவிக்குமார் உள்ளிட்ட தொண்டு நிறுவன ஏஜெண்டுகளும் கலைப்புவாத கருத்துக்களை பரப்பி கட்சியை உடைத்தன. பெரியாரியம் அம்பேத்கரியத்தை மார்க்சிய-லெனினியத்துடன் கலக்கும் கலைப்புவாதத்தில் ஈடுபட்டன; இவர்கள் ஒருபக்கம் விசிக-வையும், மறுபக்கம் வன்னியர் சங்கத்தையும் உருவாக்கி உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சிதைத்தனர்; கட்சிக்குள் இருந்த இரு சாதியைச் சேர்ந்த தோழர்களையும் உடைத்து இவ்விரு சாதிய அமைப்புகளில் சேர்த்து விட்டனர். உலகளவில் தோன்றிய கலைப்புவாதப் போக்குகளுக்கு மக்கள்யுத்தம்-போல்ஷ்விக் கட்சியிலிருந்த குட்டிமுதலாளித்துவ சிந்தனையாளர்களும் பலியாகினர். இந்தியாவில் பல்வேறு மா.லெ. குழுக்களும் கலைப்புவாதப் போக்குகளுக்கு பலியாகி வருகின்றன. இந்த கலைப்புவாதப் போக்குகளை முறியடித்து ஒவ்வொரு முறையும் ஃபீனிக்ஸ் பறவை போல புத்துயிர் பெற்று ஏஎம்கே வழியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. சாதி ஒழிப்பு உள்ளிட்ட ஜனநாயக போராட்டங்களில் சரியான நிலைபாட்டை வைத்து முன்னணியில் நிற்கிறது போல்ஷ்விக் கட்சி. 

சாதி பற்றிய காந்தி, பெரியார், அம்பேத்கர் கண்ணோட்டங்கள்

பாஜக - ஆர்.எஸ்.எஸ்., தோற்றத்திலேயே இந்துமத வெறி - சாதி வெறியை கொள்கை கோட்பாடாகவே கொண்ட விஷம கும்பல் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் சாதி பற்றிய கண்ணோட்டங்களை மட்டும் சுருக்கமாக பார்ப்போம். 

காந்தியார் - விக்கிரக வழிபாட்டில் நம்பிக்கை இல்லை என்று கூறினாலும் ராம பக்தராகவும்; பசு வழிபாடு; வர்ணாசிரம தர்மத்தில் நம்பிக்கை கொண்ட சனாதனவாதியாகவே இருந்தார். நிலபிரபுக்களுக்கு எதிரான விவசாயிகளின் எழுச்சியை சீர்குலைக்க, அவர் தலைமையிலான காங்கிரசு காரியக்கமிட்டி, ஜமீன்தார்களுக்கு குத்தகை, வரிகளை செலுத்துவதை விவசாயிகளுக்கு கட்டாயமாக்கி 1922ல் தீர்மானம் நிறைவேற்றியது. நிலபிரபுத்துவ கும்பலுடன் சமரசம் செய்துகொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடகமாடியது.

பெரியார் - காங்கிரசில் இருந்தபொழுது தேசியவாதியாக இருந்தார். அக்கட்சியில் இருந்த பிற்போக்குத்தனம் மற்றும் பார்ப்பனிய ஆதிக்கத்தால் வெளியேறி சுயமரியாதை இயக்கம் துவங்கினார். வர்ணாசிரம எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை போன்ற அவரது நடவடிக்கைகள் சரியான ஒன்றே ஆகும். பிறகு, சிங்காரவேலர் மற்றும் ஜீவாவின் நட்பால் சோஷலிச சமதர்ம கருத்துகள் பேசத் துவங்கினார். பிரிட்டிஷின் அடக்குமுறைக்கு பிறகு அந்த நிலைபாடுகளை கைவிட்டார். மேலை நாடுகள் போல வர்க்கப் போராட்டம் இங்கு சாத்தியமில்லை என்று பேசியதோடு சாதி முறைக்கு பார்ப்பனியமே வேர் என்று கருத தொடங்கினார். பார்ப்பனியத்துக்கு எதிரான தனது போரை துவங்கிய பெரியார், பிரிட்டிஷ் காலனிய ஆதிக்க கும்பல் முன்வைத்த ஆரிய-திராவிட இனவியல் கோட்பாட்டை வரிந்துக் கொண்டார். ஆரியர்களே பார்ப்பனர்கள் என்றும் அவர்களுக்கு எதிராக பிற சாதியினர் (திராவிடர்களும்) ஒன்று திரண்டு போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். இதனால் பார்ப்பன மத ஒழிப்பு - கடவுள் ஒழிப்பு போராட்டங்களை கருத்துமுதல்வாத நிலையிலிருந்தே முன்னெடுத்தார். சாதி இருப்பிற்கான பொருளியல் அடிப்படையை பார்க்க மறுத்தார் என்று கூறுவதை விட பார்ப்பனரல்லாத ஜமீன்தார்களின் நலன்களிலிருந்து அதை திட்டமிட்டு மறைத்தார் என்பதே சரியாக இருக்கும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பார்ப்பனியத்தை ஒழிக்கும் என்று அவர்களின் காலடியில் மண்டியிட்டார். சமூக நீதி எனும் பெயரில் ஏகாதிபத்தியத்தை அண்டிப்பிழைத்து சில்லறைச் சீர்திருத்தங்களை பெறுவதை நோக்கமாக கொண்டே செயல்பட்டார். அவ்வழியிலேயேதான் இன்றும் சமூக நீதி பேசும் கட்சிகள் செயல்படுகின்றன. கீழ்வெண்மணி சாதியப் படுகொலை சம்பவத்தில் கொலைகாரன் கோபாலகிருஷ்ண நாயுடுவை திமுக ஆட்சி பாதுகாத்தது. பெரியாரும் அச்சம்பவத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பக்கம் நிற்காமல் பண்ணையாருக்கு ஆதரவாக பேசினார். தன்னுடைய சந்தர்ப்பவாத அரசியல் வழியை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.

அம்பேத்கர் - பெரியாரை போல சாதியை இன வகையாக பார்க்காமல் சமூக வகையாக சரியாகவே பார்த்தார். அதேபோல், ஏகாதிபத்திய நண்பர்களான ஆலை அதிபர்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகியோருக்கு எதிராக போராடாமல் ஏகாதிபத்திய எதிர்ப்பு சாத்தியமில்லை என்று, சரியாகவே கூறினார். ஆனால் அவர் சாதியை நிலப்பிரபுத்துவத்தின் மேற்கட்டுமானமாக பார்க்காமல் சாதியை இந்துமதமே தோற்றுவித்தது என்று கருதினார். இதனால் மத சீர்திருத்தத்தையும், பௌத்த மத மாற்றத்தையும் தீர்வாக (கருத்துமுதல்வாதத்தை) முன்வைத்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள் ஆதலால் சாதியை ஒழிக்கப் பங்காற்றுவார்கள் என தவறாக மதிப்பிட்டார். சாதிய அடிப்படையாக விளங்கிய ஏகாதிபத்திய - நிலபிரபுத்துவ ஆதிக்கத்தின் கூட்டணியை பார்க்க மறுத்தார். அவர் அரசின் வர்க்கத் தன்மையை பார்க்க மறுத்து சட்டங்கள் மூலமும் சீர்திருத்தங்கள் மூலமே சாதியை ஒழித்து விட முடியும் என்ற நிலைபாட்டை கொண்டிருந்தார். புரட்சியின் மூலம் இந்த கூட்டு வீழ்த்தப்படுவதை அவர் விரும்பவில்லை. நாம் ஏற்கெனவே கூறிய படி இந்தப் போக்கு அனைத்து தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த உழைக்கும் மக்களுக்கான போராட்டமாக கூட இல்லாமல் அவர்களிலுள்ள குட்டிமுதலாளித்துவ சக்திகளுக்கான பாதையாகவே இருந்தது. அம்பேத்கரின் இவ்வழியில் அந்த சக்திகளே பயன்பெற்றன. அவை தலித்திய அரசியலை முன்வைத்து இன்று தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் மக்களின் போராட்டங்களை காயடித்து வருகின்றன. அம்பேத்கரியவாதியான கெய்க்வாட்டின் நிலப்பகிர்வுக் கோரிக்கைக்கான போராட்டத்தை கூட அது கம்யூனிஸ்ட் வழிபட்டது என தலித்திய அமைப்புகள் ஏற்க மறுத்தது. அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஓரணியில் திரள்வதற்கு சாதிவெறி அமைப்புகள் மட்டுமல்ல, இத்தகைய தலித்திய அமைப்புகளும் தடையாகவே உள்ளன. 

பெரியாரிய - அம்பேத்கரிய கருத்துமுதல்வாத கருத்துகளை திருத்தல்வாத கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமல்லாமல் பெரும்பாலான மா.லெ. குழுக்களும் கூட இன்று வரிந்துக்கொண்டுள்ளன. பார்ப்பனியமும் இந்து மதமுமே சாதிக்கு அடிப்படை என்றும் சாதி உலகில் எங்கும் இல்லாத இந்தியாவில் மட்டும் உள்ள தனித்துவமான கட்டமைப்பு என்றும் சாதி அடித்தளத்திலும் உள்ளது மேற்கட்டுமானமாகவும் உள்ளது என்றுக் கூறி நிலபிரபுத்துவ எதிர்ப்பை பின்னுக்குத் தள்ளி பார்ப்பனிய எதிர்ப்பை முதன்மைப்படுத்தி புதிய இடதுகளின் கருத்துகளை பேசுகின்றனர். இத்தகைய திருத்தல்வாத - கலைப்புவாதப் போக்குகளை முறியடிக்காமல் நாம் சாதி ஒழிப்பில் ஒரு படி கூட முன்னேற முடியாது.

சாதி ஒழிப்பில் பாட்டாளி வர்க்க நிலைபாடும் செயல்தந்திரங்களும்

சாதி ஒழிப்பிற்கு மார்க்சியம் மட்டுமே சரியான வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்தியாவில் மார்க்சிய-லெனினியத்தை பாதுகாத்து வளர்த்தெடுத்த ஏஎம்கே வழியே சாதி ஒழிப்பிற்கான சரியான தீர்வாகும். அதுவே பாட்டாளி வர்க்க நிலைபாடாகும். அதை பின்வருமாறு சுருக்கமாக முன்வைக்கலாம்: 

நிலவுடைமை உற்பத்தி உற்பத்தி முறையின் மேற்கட்டுமானமே சாதி. இந்து மதம் சாதி மற்றும் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அது சாதி முறைக்கும், தீண்டாமைக்கும் புனிதத்தன்மையை வழங்குகிறது. எனினும் இந்துமதம் ஒரு மதம் என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான சமூகவேர்களும், சாதி மற்றும் தீண்டாமை நிலைத்திருப்பதற்கான சமூக வேர்களும் வெவ்வேறானவையாகும். மதம் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறைக்குள் மட்டுமே அடங்கியிருக்கவில்லை. நிலப்பிரபுத்துவத்தைப் பாதுகாத்து வரும் ஒரு மதம் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட பிறகும், முதலாளித்துவ ஒழுங்கு முறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக் கொன்டு, புதிய சுரண்டல்காரர்களும் ஒடுக்குமுறையாளர்களான முதலாளிகளுக்குச் சேவை செய்யக்கூடிய ஒரு ஆன்மீக ஒடுக்குமுறை கருவியாக மாறிவிடமுடியும். இந்துமதம் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை ஒழிக்கப்பட்ட பிறகும் தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டு தொடர்ந்து உயிர்வாழ்வது சாத்தியமானதேயாகும். அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் ஏற்படும் முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டு தரகுமுதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கிறது. ஆகையால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், பண்பாடும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டால் சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் தகர்ந்துவிடும். அதற்கு அடுத்த சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் சாதிமுறை தொடர முடியாது. 

இந்தியாவில் மட்டுமல்ல, முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறாத பல்வேறு காலனிய நாடுகளில் ஆசிய - ஆப்பிரிக்க - மத்திய கிழக்கு நாடுகளில் சாதியோ அல்லது சாதியை ஒத்த படிநிலை அமைப்பு முறை இன்றும் நிலவுவதை காணலாம்.எனவே, சாதியின் அடித்தளமான நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது. 

ஏகாதிபத்திய நிதிமூலதன காலனியாதிக்கம் நாட்டின் சுதேசிய முதலாளித்துவ வளர்ச்சியை சிதைத்து தரகு முதலாளித்துவத்தை வளர்த்து விட்டதோடு, நிலப்பிரபுத்துவத்தை பாதுகாத்து அதனுடன் சமரசம் செய்து கொண்டது. புதிய காலனிய உற்பத்தி முறையால் நாட்டில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி என்பது முன்னிலும் அதிக இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது. இதுவே சாதி இன்றும் நீடிப்பதற்கான பொருளியல் அடிப்படையாகும். தரகு முதலாளித்துவம் நாட்டில் இந்த 70 ஆண்டுகளில் குறிப்பிட்டுள்ள மாற்றத்தைக் கண்டுள்ளது என்பது உண்மைதான் ஆனால் அது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை உள்ளிட்ட முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறை அனைத்துக்கும் முற்றுபுள்ளி வைக்கவில்லை; அது வைக்கவும் செய்யாது. ஏனெனில் முதலாளித்துவம் வரலாற்றில் தனது முற்போக்கு பாத்திரத்தை இழந்துவிட்டது. இது பாட்டாளி வர்க்க சகாப்தம். எனவே இந்த ஏகாதிபத்தியம் - தரகுமுதலாளித்துவம் - நிலபிரபுத்துவம் என்ற அடிமைத் தளைகளையும் பாட்டாளி வர்க்க தலைமையில் விவசாயப் புரட்சியின் (புதிய ஜனநாயகப் புரட்சியின்) மூலம் வீழ்த்தும்போதே நிலபிரபுத்துவ உற்பத்தி முறைக்கு முடிவுகட்ட முடியும். சுதேசிய பொருளாதாரத்தை கட்டியமைக்க முடியும். இதன் மூலம் சாதி இருப்புக்கான அடித்தளத்தை நொறுக்க முடியும். புரட்சி முடிந்தவுடனேயே சாதி ஒழிந்து விடாது. அதை பண்பாட்டு தளத்திலும் வீழ்த்த தொடர் போராட்டங்களையும் அகமணமுறை ஒழிப்பு உள்ளிட்ட கலாச்சார சீர்திருத்த போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். 

வர்க்கப் போராட்டம் என்பது வெறும் தொழிற்சங்க போராட்டமோ அல்லது பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டமோ மட்டுமல்ல (அவை கருநிலையிலான வர்க்கப் போராட்டம் மட்டுமே). இந்தியாவில் இன்றைய சூழலில் வர்க்கப் போராட்டம் என்பது அது புதிய ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டமே - அது தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையையும், சாதி ஒழிப்பையும் உள்ளடக்கிய அரசியல்-பொருளாதார ஆதிக்கத்திற்கான போராட்டமே ஆகும். 

ஜனநாயகப் புரட்சியும் அதைத் தொடர்ந்த கலாச்சார புரட்சியுமே சாதியை ஒழிக்கும் என்பதாலே நாம் இப்போது சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க தேவையில்லை என பொருள் கொள்ளலாகாது. புரட்சி எழுச்சியடையும் வரை, அனைத்து சாதிய ஒடுக்குமுறைகளுக்கும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் சரியான செயல்தந்திர முழக்கங்களை முன்வைத்து நாம் இயக்கங்களை கட்டியமைக்க வேண்டும்.

சாதி ஒழிப்பிற்கான ஜனநாயகப் போராட்டத்தில் ஒரு பாட்டாளி வர்க்க இயக்கம் மேற்கொள்ள வேண்டிய (ஏஎம்கே முன்வைத்த / வழியிலான) செயல்தந்திரங்களை இவ்வாறு தொகுக்கலாம்: 

  • அனைத்து விதமான சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் வலுவான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் ஒடுக்குபவர்களுக்கு எதிராகவும் சாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் அணிதிரள வேண்டும்.
  • ஆதிக்க சாதி வெறி தாக்குதல்களுக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் தற்காப்பு அல்லது எதிர்த்தாக்குதல் போராட்டங்களை ஆதரிக்க வேண்டும். அதே போல் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உள்ள உட்பிரிவுகளுக்கிடையே நடைபெறும் சாதிய வன்கொடுமைகளில் பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும். 
  • ஆதிக்க சாதிவெறியையும் தாழ்த்தப்பட்டவர்களின் எதிர்த்தாக்குதலையும் சமப்படுத்தி தவறிழைக்கக் கூடாது. அதே வேளையில் ஆதிக்க சாதி வெறிக்கு மாற்று தலித்தியம் அல்ல என்பதில் கோட்பாட்டளவில் சரியாக இருக்க வேண்டும். தலித்தியம் உட்பட எல்லா சாதியியமும் ஏகாதிபத்திய தொண்டு நிறுவனம் மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் தொங்கு சதையே - வர்க்க ஒற்றுமையை சிதைக்கும் கோடாரிக்காம்பே என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
  • நிலச் சீர்திருத்தத்திற்கானச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி போராட வேண்டும்; கோவில்கள், மடங்கள். டிரஸ்ட்கள், கார்ப்பரேட்களிடம் குவிந்திருக்கும் நிலங்களை கைப்பற்றி அனைத்து சாதியில் உள்ள உழைக்கும் மக்களுக்கும் பகிர்ந்தளிக்க போராட வேண்டும்.
  • விவசாயத்தில் பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஒழிக்கவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும். பயிர் -விதை - உர மானியம், குறைந்தபட்ச ஆதார விலைக்காகவும் போராட வேண்டும்.
  • காட் - டங்கல் உள்ளிட்ட அடிமை ஒப்பந்தங்களை கிழித்தெறிய வேண்டும். 
  • உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட புதிய காலனிய நிறுவனங்களிலிருந்து வெளியேற குரல் கொடுக்க வேண்டும்.
  • மத்திய - மாநில பாசிச அரசுகளின் கார்ப்பரேட்களுடனான அடிமை ஒப்பந்தகளுக்கு எதிராகவும் மக்களை வதைக்கும் பாசிச சட்டத் திட்டங்களுக்கு எதிராகவும் போராட வேண்டும். 
  • விவசாயத்தில் கார்ப்பரேட் - குத்தகை முறையை ஒழித்து கூட்டுறவு - பண்ணை விவசாய முறைகளை முன்னெடுக்க போராட வேண்டும்.
  • கந்துவட்டி, மைக்ரோ பைனான்ஸ், லேவாதேவி கடன் முறைகளை ஒழித்து கூட்டுறவு மானியங்களுக்காக போராட வேண்டும்.
  • சிறுகுறு தொழில்களுக்கு மானியங்களையும் கூட்டுறவு உற்பத்தி முறையையும் உறுதிபடுத்த வேண்டும். 
  • பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் தனியார்மயத்தை ஒழித்து அரசுடமையாக்க போராட வேண்டும்.
  • இட ஒதுக்கீடு என்பது சமூக அடிப்படையிலானது - பொருளாதார அடிப்படையிலானது அல்ல என்பதை உறுதிபடுத்த வேண்டும். உயர் சாதியில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தோருக்கு எனும் ஏமாற்று பெயரில் (ஆண்டுக்கு 8 லட்சம் ஊதியம் உள்ள மேட்டுக்குடியினருக்கு (creamy layer)) வழங்கப்படும் 10% சதவிகிதம் இட ஒதுக்கீட்டை கைவிட வேண்டும். பொருளாதார அளவுகோலும் வர்க்க அளவுகோலும் ஒன்றல்ல. இட ஒதுக்கீட்டால் பயனடைந்த ஆதிக்க சாதி வெறியர்களுக்கும், சாதி சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு உரிவர்களுக்கே போய் சேர வேண்டும். அதாவது, தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ள அனைத்து உழைக்கும் மக்களுக்கும் இடஒதுக்கீட்டை உத்திரவாதம் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள ஆதிக்க வர்க்கங்களுக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்து சாதிய சுமையால் திணறிக் கொண்டிருக்கும் முடிதிருத்துவோர், துணி வெளுப்போர், குயவர் உள்ளிட்ட சேவை பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இதை அதிகார அமைப்புகள் மூலமாக செய்யக் கூடாது. அனைத்து சாதி உழைக்கும் மக்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுக்கள் மூலமாக உறுதி செய்ய வேண்டும். சுருங்கச் சொன்னால், 69% சதவிகித இட ஒதுக்கீட்டை ஆதிக்க வர்க்கங்களுக்கு அல்ல; உழைக்கும் வர்க்கத்திற்கே உரிமையாக்குவோம்.
  • வேலைவாய்ப்பில் தனியார் மயத்தையும், கார்ப்பரேட் நிறுவனங்களில் நீடிக்கும் சாதிய பாகுபாட்டையும் ஒழிக்க போராட வேண்டும்.
  • அனைத்து உழைக்கும் மக்களுக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக உத்திரவாதம் செய்ய வேண்டும்.
  • சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கும் கட்டமைப்புகளுக்கும் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். 
  • அகமணமுறையை ஒழிக்கும் சுதந்திர காதல் திருமணங்களையும் அதற்கு ஆதரவான பிரச்சாரங்களையும் முன்னெடுக்க வேண்டும். 
  • சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க வேண்டும். 
  • நடப்பில் இருக்கும் வன்கொடுமை சட்டம் போதாது. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிசட்டம் இயற்ற வேண்டும்.
  • சாதி - மத மறுப்பு சுதந்திர காதல் திருமணங்களை பாதுகாப்பதற்கான தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
  • சாதிய வன்கொடுமைகளை தடுக்க கிராமந்தோறும் அனைத்து சாதி உழைக்கும் மக்களையும் உள்ளடக்கிய தற்காப்புக் குழுக்களை கட்டியமைக்க வேண்டும்.
  • பெரியாரியம் - தலித்தியத்தை கோட்பாட்டளவில் கறாராக எதிர்த்தாலும், செயல்தந்திர ரீதியில் சாதிய வன்கொடுமைகளுக்கான எதிரான போராட்டங்களில் ஒன்றுபட்ட முழக்கத்தின் அடிப்படையில் அவற்றுடன் இணைந்து செயல்படுவதற்கும் தயங்க கூடாது. அவற்றின் பின்னால் திரண்டுள்ள சக்திகளை வென்றெடுக்க போராட வேண்டும். 
  • தீண்டாமை படிநிலையை பாதுகாக்கும் இந்துத்துவ - சங்பரிவார கும்பலின் பாசிச செயல்தந்திரங்களை முறியடிக்க போராட வேண்டும். 
  • சுயசாதி பெருமையைக் கட்டியமைக்கும் அனைத்து சாதியவாத கட்சிகளையும் - ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளையும் தடைசெய்ய போராட வேண்டும்.
  • பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட போராட வேண்டும். 
  • கார்ப்பரேட் நலன்களுக்காக இந்துமதவாத சக்திகளுடன் சமரசம் செய்துகொள்ளும் திமுக - காங்கிரசு கும்பல் இதற்கு மாற்று இல்லை என்பதை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்யும் அதே வேளையில் அவை அமல்படுத்தும் பாசிச -சாதிவாத நடைமுறைகளுக்கு எதிராக உறுதியாக போராட வேண்டும். 

இவையே சாதி ஒழிப்பிற்கான ஜனநாயகப் போராட்டத்தில் நாம் பின்பற்ற வேண்டிய செயல்தந்திரங்களாகும். சாதியை முழுமையாக அழித்தொழிக்க நாம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அனைத்து சாதியிலுமுள்ள உழைக்கும் மக்களை இந்த ஜனநாயக செயல்தந்திரங்கள் மூலமாக அணிதிரட்ட வேண்டும். 

முற்றும்

- சமரன் 

(அக்டோபர் இதழில்)