2024 மே நாள் வாழ்க!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

2024 மே நாள் வாழ்க!

உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!!

ஹமாஸ் இயக்கத்திற்கு ஈரான் உதவி செய்து வருவதால் அந்த நாட்டிற்கும் நவ-நாஜிச இசுரேலுக்கும் பல ஆண்டுகளாக முரண்பாடுகள் நிலவி வருகின்றன. ஹமாஸ் இயக்கம் 2023 அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று இசுரேல் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின்பு முரண்பாடு மிகவும் தீவிரம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக இசுரேல் - ஈரான் இடையே இராணுவ தாக்குதல் தொடங்கியுள்ளது. 

ஏப்ரல் 1 ஆம் தேதி இசுரேல் டமாஸ்கஸில் (சிரியா) உள்ள ஈரான் தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் மொகமத் ஜஹாதி எனும் இராணுவ தளபதி, துணை தளபதி மொஹம்மத் ஹாதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக, ஈரான் ஏப்ரல் 13 அன்று ஹோர்முஸ் நீர்ச்சந்தியில் இசுரேலின் கப்பலைக் கைப்பற்றியதுடன் 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இசுரேலின் இராணுவ தளங்களை அழித்தது. இது ஈரான் முதன்முதலில் இசுரேல் மீது தனது மண்ணில் இருந்து நடத்தியுள்ள நேரடி தாக்குதலாகும். 

ஏப்ரல் 19 அன்று இசுரேல் ஈரானின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரான இஸ்ஃபஹான் நகர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என சொன்ன ஈரான் வான்வெளி பாதுகாப்பு அமைப்பை முடுக்கிவிட்டு இசுரேலை திருப்பித் தாக்க தயாராகி வருகிறது. 

ஈரான் மட்டுமின்றி ஹமாசுக்கு உதவி செய்து வரும் ஏமனின் ஹவுத்தி படை, லெபனானின் ஹஜிபுல்லா படைகளுக்கும் இசுரேலுக்கும் இடையில் கூட இராணுவ முரண்பாடு நீடித்து வருகின்றன. 

இதனால் கடந்த 7 மாதங்களாக முழு யுத்தம் என அறிவித்து இசுரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு போரானது ஒரு பிராந்தியப் போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இசுரேல் அமெரிக்காவின் மத்திய கிழக்கு மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் யுத்தத்தந்திர கூட்டாளியாகவும், ஈரான் ரசிய-சீன முகாமின் மத்திய கிழக்கு மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் யுத்தத்தந்திர கூட்டாளியாகவும் செயல்படுகின்றன. அதாவது இவ்விரு நாடுகளும் அப்பகுதியில் துணை மேலாதிக்க சக்தியாக விளங்குவதுடன் தமது ஏகாதிபத்திய எஜமானர்களுக்காகவும் தமது நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்காகவும் பதிலிப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முரண்பாட்டின் நீட்சியே அண்மையில் வெடித்த மோதலாகும். 

அமெரிக்கா-இசுரேல் யுத்த வெறி கும்பல் ஹமாசை முற்றாக அழித்து காசாவை பாலஸ்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்க முயன்று வருகின்றது. சில மாதம் முன்பு காசாவிலுள்ள சுரங்கங்களை அழிக்க முயன்று படுதோல்வியை சந்தித்தது இசுரேல். இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. யூத குடியேற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் 35,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

வீட்டோ வல்லரசுகள் என மார்தட்டும் சீனா மற்றும் ரசிய நாடுகள் 7 மாதங்களாக பாலஸ்தீனம் மீதான அமெரிக்க - இசுரேலின் இன அழிப்புப் போரை நிறுத்த வக்கற்று வேடிக்கை பார்க்கின்றன. ஹமாஸ் இயக்கம் அழிய விரும்புகின்றன. ஹமாசை அழித்த பின்பு பாலஸ்தீனத்தை மறுபங்கீடு செய்து கொள்ளும் நோக்கிலும் இஸ்ரேல் ஆதரவிலும் அமெரிக்க- நேட்டோவும் ஷாங்காய் அணியும் (சீன - ரசிய அணி) ஒன்றுதான். ஆனால் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதாக பாலஸ்தீன ஆதரவு வேடம் போடுகின்றன. 

ஆகவே அப்பகுதியில் இருந்தும், 2 ஆண்டுகளாக போர் நடந்துவரும் உக்ரைனில் இருந்தும் இந்த ஏகாதிபத்திய வல்லூறுகளை வெளியேறக் கோருவது இந்த மே நாளில் நமது சர்வதேசிய அறைகூவலாக அமைகிறது. பாசிச அரசுகளை கட்டியமைப்பது உலகு தழுவிய போக்காக மாறிவருவதையும், ஏகாதிபத்தியங்களின் பனிப்போரையும் எதிர்க்கும் நமது சர்வதேசியக் கடமையின் முக்கிய கூறாக இந்த அறைகூவல் அமைகிறது. 

அமெரிக்க - இசுரேலின் யுத்த வெறிக்கும், சீன எதிர்ப்பின் பேரில் அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் மோடி அரசை தூக்கியெறிவதும் குவாட் கூட்டமைப்பில் இருந்து மோடி அரசை வெளியேறக் கோரியும் போராடுவது நமது தேசியக் கடமையாகும். 

இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் வட கிழக்கு மாகாணங்கள் முழுக்க நக்சல் ஒழிப்பு பச்சை வேட்டை எனும் பெயரில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை பலப்படுத்தி வருகிறது மோடி ஆட்சி. அண்மையில் சத்திஸ்கர் பாஜக ஆட்சியானது நக்சல் ஒழிப்பு எனும் பெயரில் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் பொருட்டு 29 பேரை (பழங்குடிகள், மாவோயிச அமைப்பினர்) படுகொலை செய்துள்ளது. இந்த பாசிச பயங்கரவாதத்தை கண்டிப்பது மட்டுமின்றி பாஜக ஆட்சியை தூக்கியெறிவது நமது முக்கியமான தேசியக் கடமையாக அமைகிறது.

பாஜக ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி சீரழிந்து வருகின்றது. உலக வரலாறு காணாத ஊழல், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, அன்னியக் கடன், வறுமை என நாட்டை பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. தேர்தல் பத்திர ஊழலால் மோடி பிம்பம் பெருமளவில் சரிந்துவிட்டது. இதை மூடிமறைக்க தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறியை விசம் போல் கக்கி வருகிறது. மோடி, "இஸ்லாமியர்கள் அதிக பிள்ளைகளை பெறுகிறார்கள். அவர்கள் ஊடுருவல்காரர்கள். காங்கிரசு ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகளை பறித்து இசுலாமியருக்கு தாரை வார்க்கும்" என விஷப்பாம்பு போல விஷத்தை நெருப்பாய் கக்குகிறார். தான் பிரதமர் அல்ல, ஆர்.எஸ்.எஸ்சின் ஏஜெண்ட் என்பதை ஒப்புக்கொண்டு விட்டார். பாஜக தேர்தல் அறிக்கையும் கூட வெறும் மதவாதத்தையே முன்வைத்துள்ளது. வளர்ச்சி முழக்கத்தை கைவிட்டு விட்டது. இந்த காவி கழிசடை ஆட்சியை தூக்கியெறிய வேண்டியது நமது முக்கியமான தேசியக் கடமையாகும்.

எனவே கீழ்கண்ட முழக்கங்கள் பால் அணிதிரளுமாறு பொது மக்களையும், புரட்சிகர ஜனநாயக சக்திகளையும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அறைகூவி அழைக்கிறது.

  • அமெரிக்க-நேட்டோ, ரசிய-சீன ஏகாதிபத்திய வல்லூறுகளே! உக்ரைன் மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறுங்கள்!
  • பாலஸ்தீன விடுதலைப் போரை ஆதரிப்போம்!

மோடி அரசே!

  • அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கு சேவை செய்யாதே! குவாட்டிலிருந்து வெளியேறு!

உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

  • சட்டீஸ்கரில், மாவோயிஸ்ட்கள் - பழங்குடிகளை படுகொலை செய்த பாஜக ஆட்சியின் பாசிச பயங்கரவாதத்தை கண்டிப்போம்!
    • நக்சல் ஒழிப்பு எனும் பெயரில் இயற்கை வளங்களை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்ப்பதை எதிர்ப்போம்!
  • பாசிச மோடி ஆட்சியை தூக்கியெறிவோம்!
  • ஏகாதிபத்தியத்தையும் பாசிசத்தையும் வீழ்த்த உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே!! ஒன்றுபடுங்கள்!!!

- மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்