ம.ஜ.இ.க.-வின் பாசிச எதிர்ப்பு மாநில மாநாட்டிற்கு தடை விதித்துள்ள தி.மு.க அரசின் பாசிச ஒடுக்குமுறையைக் கண்டிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

ம.ஜ.இ.க.-வின் பாசிச எதிர்ப்பு மாநில மாநாட்டிற்கு தடை விதித்துள்ள தி.மு.க அரசின் பாசிச ஒடுக்குமுறையைக் கண்டிப்போம்!

உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்! பாசிச எதிர்ப்பு திட்டமில்லாத "இந்தியா" கூட்டணி மாற்று அல்ல! மக்கள் ஜனநாயக குடியரசே மாற்று! எனும் நிலைப்பாட்டின் அடிப்படையில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் பகத்சிங் நினைவு தினமான மார்ச் 23 அன்று பாசிச எதிர்ப்பு மாநில மாநாடு நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை ஒரு மாதத்திற்கு முன்பாகவே வெளியிட்டது. பிப் 7 அன்று விழுப்புரம் காவல் நிலையத்தில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தோம். 

அதன் பிறகு, பாராளுமன்ற தேர்தல் அறிவித்துவிட்ட நிலையில் மாநாடு நடத்துவதற்கான அனுமதி கோரி ஆன்லைனில் தேர்தல் அலுவலருக்கு மார்ச் 19 அன்று விண்ணப்பித்திருந்தோம். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலை - மாநாட்டிற்கான இடத்தை - தேர்வு செய்திருந்தோம். அந்த இடமும் ஆன்லைனில் தேர்வு வரிசையில் இடம் பெற்றிருந்தது. எனவே மாவட்ட தேர்தல் ஆணைய அலுவலர் எமது விண்ணப்பத்தை ஏற்று 21.3.2024 அன்று அனுமதி தந்தார். 

ஆனால் நிகழ்ச்சிக்கு முந்தைய தினம் திமுக அரசின் காவல்துறையானது மாநாட்டிற்கு அனுமதி தரக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதை மேற்கோள் காட்டி தேர்தல் அலுவலர் அனுமதியை இரத்து செய்துவிட்டார். 

தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட்டு பேச்சுரிமை, எழுத்துரிமையை மறுக்கும் திமுக அரசின் இந்த பாசிசப் போக்கு கடும் கண்டனத்துக்குரியதாகும். சுயேச்சையான ஆணையம் என்று வாய்ச்சவடால் அடிக்கும் தேர்தல் ஆணையம் என்பது உண்மையில் மத்திய மாநில அரசுகளின் ஏவல் ஆணையம் என்பது இதன் மூலம் அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறது. 

இராணுவம், நீதித்துறை, சிறைத்துறை மற்றும் காவல்துறை மட்டுமல்ல, தேர்தல் ஆணையமும் கூட அரசின் ஒடுக்குமுறைக் கருவியே என்பதைத்தான் மேற்கூறிய நிகழ்வுகள் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. 

தி.மு.க அரசின் காவல்துறை தேர்தல் அலுவலருக்கு அனுப்பிய  கடிதத்தில் அனுமதி மறுப்பதற்கான காரணத்தை பின்வருமாறு கூறுகிறது: "ஜனநாயக முறைப்படி வாக்களிக்கும் பொதுமக்களுடைய வாக்குரிமையை பாதிக்கும் வகையிலும், ஜனநாயகத்திற்கு எதிராக முரண்பட்ட கருத்துகளை தொடர்ந்து பேசிவருவதாலும், போக்குவரத்து இடைஞ்சலால் சட்ட ஒழுங்கு பாதிக்கும் என்பதாலும் அனுமதி தரக்கூடாது" என கூறுகிறது தி.மு.க அரசு. 

இந்த கடிதத்தை எடுத்துக்காட்டியுள்ள தேர்தல் ஆணையம் சட்ட ஒழுங்கு பிரச்சினையை மட்டுமே காரணமாக காட்டி அனுமதி மறுத்துள்ளது. தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை கூறவில்லை. இதில் இரு ஏவல்துறைகளுக்கும் ஒத்தக்கருத்தில்லை. ஏன்?? வோட்டு போடுவதற்கு மட்டுமல்ல,  யாருக்கும் வோட்டு போடாதே என பேசுவதற்கான உரிமையை அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. ஆகவேதான் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதற்கான நோட்டா பட்டனை தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரத்தில் வைத்துள்ளது. இதனாலேயே அதை ஒரு காரணமாக தேர்தல் அலுவலர் சொல்லவில்லை. அவர்கள் இணையதளத்திலுள்ள இடத்தைக் கேட்டதற்கும் கூட அங்கு சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் எனும் சொத்தை வாதத்தை முன்வைத்துள்ளது. ஆனால் திமுக, பாஜக போன்ற கட்சிகள் நடத்தும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கு விரைப்பாக நின்று பாதுகாப்பு கொடுக்கின்றன. 

தேர்தல் ஆணையம் ஒன்றும் சுதந்திரமான சுயேச்சையான ஆணையம் அல்ல. ஏற்கனவே அரசு எந்திரத்திலுள்ள அதிகார வர்க்கம், அரசு ஊழியர்களைக் கொண்டு அமைக்கப்படும் ஆணையமாகும். ஆனால் தேர்தல் அறிவித்த பிறகு தேர்தல் ஆணையம் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அடிப்படை உரிமைகளை மறுக்கிறது. ஆளும் வர்க்க கட்சிகள் கேட்கும் சின்னம் ஒதுக்குதல், எதிர்க்கட்சிகளின் சின்னங்களை முடக்குதல் என ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கருவியாகவே தேர்தல் ஆணையம் இயங்குகிறது. நாதகவிற்கு விவசாயி சின்னத்தையும், விசிகவிற்கு பானை சின்னத்தையும் முடக்கியது இதன் எடுப்பான உதாரணமாகும். 

இந்தியாவில் மக்களின் வாக்குப்பதிவு சராசரியானது தேர்தல் தோறும் குறைந்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் சராசரி வாக்கு சதவிகிதம் 67.11% ( தேசிய சராசரி ) ஆகும். தமிழகத்தில் அதன் விகிதம் 72% ஆகும். அதாவது சுமார் 33% சத மக்கள்  வாக்களிக்கவில்லை. இதற்கு எமது அமைப்புதான் காரணமா?? இல்லை. இந்த கேடுகெட்ட ஆட்சிமுறையில்  நம்பிக்கை இல்லாமல் 33% மக்கள் எழவெடுத்த இந்திய ஜனநாயகத்தின் மீது காரி உமிழ்ந்திருக்கிறார்கள் என்பதுதானே உண்மை! 

நிகழ்சிக்கு அனுமதி மறுத்துவிட்டதால் தோழர் ஒருவரின் வீட்டில் பகத்சிங் நினைவு தினத்தை போற்றும் விதமாக அவரது நூல் ஒன்றை வெளியிட திட்டமிட்டோம். ஆனால் அங்கும் காவல்துறை வந்து நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தொல்லை செய்தது. மேலும் அனுமதி மறுத்த திமுக அரசின் காவல்துறை, தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய தோழர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு ஒடுக்கிவருகிறது. 

எமக்கு இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லையாம்! இது ஜனநாயக நாடாம்! பிறகேன் மு.க.ஸ்டாலின் பாசிச ஆட்சியை எதிர்ப்போம் என வாய்ச்சவடால் அடிக்கிறார்?? அவ்வாறு கூவிக்கொண்டே பாஜக பாசிச ஆட்சியை வீழ்த்துவோம் என்று முழங்கும் எமது மாநாட்டை நடத்த அனுமதி மறுக்கிறது. திமுக ஆட்சியின் பாஜக எதிர்ப்பு கபட நாடகத்தை நம்ப நாம் என்ன ஏமாளிகளா??  

ஆம். உங்களின் The so called ஜனநாயகத்தில் எமக்கு நம்பிக்கை இல்லைதான். காரணம் இந்த நாடு முதலாளிகளுக்கான ஜனநாயக நாடாகவும், உழைக்கும் மக்களுக்கான பாசிச நாடாகவும் உள்ளது. மக்கள் வறுமையில் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா பாகிஸ்தானைவிட பின் தங்கியுள்ளது. ஆனால் இந்த நாட்டில் ஜனநாயகப் பூச்சாண்டிகளுக்கும் வாய்ச்சவடால்களுக்கும் பஞ்சமில்லை. 

உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடத்தலாம் என அங்கு சென்றால் தேர்தல் ஆணையம் சொல்லாதவற்றையெல்லாம் நீதிமன்றம் வாயளந்து 49-ஒ பிரிவை காலில் போட்டு மிதிக்கிறது. நீதிபதி ஜெயச்சந்திரன் Reasonable Restrictions எனும் பிரிவை எடுத்துக்காட்டி வியாக்கியானம் செய்து பாஜக ஆட்சியின் செக்யூரிட்டியாக செயல்படுகிறார். 

தேர்தல் முறை என்பது மாபெரும் ஜனநாயகம் என கூறிக்கொண்டே, தேர்தல் அறிவிப்பை எமெர்ஜென்சி அறிவிப்பை போல பாவிக்க வேண்டும் என்பதே இந்த நீதியற்ற நீதிமன்றங்கள் நமக்கு சொல்லும் "நீதியாகும்".

 

ஆகவே, இந்த போலி ஜனநாயகத்தையும், மாநாட்டிற்கு அனுமதி மறுக்கும் திமுக அரசின் பாசிச ஒடுக்குமுறையையும், பாசிசத்தின் ஏவல் நிறுவனமாக செயல்படும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் பாசிசப்போக்கையும் எதிர்த்து பகத்சிங்கின் மாணவர்களாகிய நாங்கள் எம்மை தூக்கில் தொங்கவிட்டாலும் தொடர்ந்து விண்ணதிர முழங்குவோம்! 

பாஜக ஆட்சியை வீழ்த்தவும் மக்கள் ஜனநாயக குடியரசு அமைக்கவும் தொடர்ந்து களம் காண்போம்!

- மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்