எண்ணூரை போபாலாக மாற்றும் திமுக அரசு
சமரன்
புதிய காலனியாதிக்கத்தின் கீழ் நாட்டை ஏகாதிபத்திய சுரண்டலுக்கு திறந்துவிட்ட மத்திய மாநில அரசுகள், ‘மக்கள் நலன்’ ‘வளர்ச்சி’ என்ற மோசடி வாசகங்கள் மூலம் பன்னாட்டு உள்நாட்டு பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த மண்ணையும் மக்களையும் அழித்து நாசமாக்கும் அத்துனை உரிமைகளையும் தாரை வார்த்துள்ளன. 40ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் பல்லாயிரம் மக்களை கொன்று குவித்தது ராஜீவ்காந்தி அரசு. இன்று சென்னை எண்ணுரில் அதே போன்றதொரு பேரபாயத்தை உருவாக்கியுள்ளது மு.க.ஸ்டாலின் அரசு.
சிபிசிஎல்-ன் எண்ணெய் கழிவு கால்வாயாக மாறிய கொசஸ்தலை ஆறு
கடந்த டிசம்பர் 4 ம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னையே வெள்ளக் காடாக மாறியது. வெள்ளத்தில் வாழ்வாதரங்களை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த மக்களுக்கு அதற்கு முக்கிய காரணமான எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் பொறுப்பெடுத்துக் கொண்டு உதவிக்கரம் நீட்டவில்லை. மாறாக கழிவுகளை வெளியேற்றும் வாய்ப்பாக அப்பேரிடரை பயன்படுத்திக் கொண்டன. மணலி பகுதியில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) எண்ணெய் கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் வெள்ளத்தோடு வெள்ளமாக திறந்துவிட்டது. அது, ஆறும் பாயும் கரைகளில் உள்ள பகுதிகளையும், எண்ணூர் கழிமுகத்தை சுற்றியுள்ள காட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், நெட்டுக்குப்பம் தாழங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களையும் கறுப்பு நிற எண்ணெய் கழிவு சாக்கடையால் மூழ்கடித்தது. குடியிருப்புகளுக்குள்ளும் கழிவு புகுந்தது. கடல் உள்ளிட்ட 20கி.மீ தொலைவிலான சுற்று வட்டாரப் பகுதிகள் எண்ணெய் கழிவுகள் போர்த்தப்பட்ட கரும்படலமாக மாறியது. பென்சீன், டொலுயீன் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் அனுமதிக்கப்படும் அளவைவிட 40 மடங்கு அதிகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்ணெரிச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை இவை உடனடி பாதிப்புகளாக ஏற்படுத்தியுள்ளன.
இந்நிறுவனம் ஏற்கனவே, தரம் குறைவான - கந்தகம் அதிகமுள்ள கச்சா எண்ணெய் (high sulphur crude oil) சுத்திகரிப்பில் ஈடுபடுவதால் அது ஹைட்ரஜன் சல்பைடு வாயுவை (Hydrogen Sulphide gas) தொடர்ச்சியாக அப்பகுதியில் வெளியேற்றி வருகிறது. அந்த விச வாயு குழந்தைகளின் மூளையை செயலிழக்கச் செய்யும் அபாயம் கொண்டது. இந்நிலையில் அபாயகரமான ரசாயனங்களை கொண்ட கழிவுகளை பேரிடர் காலங்களில் வெளியேற்றி மக்களை மெல்ல சாகடிக்கிறது. இதுதான் (Corporate’s Social responsibility) கார்ப்பரேட்களின் சமூக பொறுப்பு(!?).
டிசம்பர் 7 தேதி வரை கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் ஏதும் தொடங்கப்படவே இல்லை. சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய பின்னரே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கழிவுகளை அகற்றவும் டிசம்பர் 18ம் தேதிக்குள் அது குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மேட்டுக்குடிகளுக்குச் சேவை செய்வதில் மும்மரம் காட்டிய திமுக அரசு மீனவ – உழைக்கும் மக்களை பென்சீன் நச்சுக் கடலில் மூழ்கடித்தது. சிபிசிஎல் நிறுவனம் எவ்வித பொறுப்பும் எடுத்துக் கொள்ளவில்லை. அதை பாதுகாத்ததோடு பாதிக்கப்பட்ட மக்களையே கழிவுகளை அகற்றும் பணிகளுக்கு ஈடுபடுத்தியது திமுக அரசு. 2017ம் ஆண்டு கடலுக்குள் கப்பல் மோதி எண்ணெய் கழிவுகள் கரையொதுங்கிய போது, அதை வாளிகளில் அள்ளி சுத்தம் செய்ய வழிகாட்டியது ஓ.பி.எஸ் அரசு. அன்று அதை பகடி செய்த திமுக இன்று அதைவிட மோசமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமை சேவகம் செய்கிறது.
எண்ணுரை மூச்சுத் திணறச் செய்த கோரமண்டல் உர நிறுவனம்
எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றப்படாத சூழலில் அப்பகுதிவாழ் மக்களை அடுத்த அபாயம் தாக்கியது. சுனாமி பேரழிவின் நினைவுநாளான டிசம்பர் 26 அன்று இரவில் காற்றில் அம்மோனியா விச வாயு பரவியது. விசவாயு காற்றின் திசையில் 15.கி.மீ. தொலைவிற்கு பரவியது. 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளானது. இரவில் வீட்டை விட்டு வெளியில் வந்தவர்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர். விசவாயு பரவுவதை உணர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை எச்சரிக்கை செய்துவிட்டு தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். குழந்தைகளையும் முதியவர்களையும் சுமந்துகொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நாலாப்பக்கமும் சிதறி ஓடினர். சுவாசிக்க முடியாமல் மயங்கி விழுந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். தோல் அரிப்புகள், கண் எரிச்சல்கள், சுவாசக் கோளாறு உள்ளிட்ட நுரையீரல் பாதிப்புகள், இதயக் கோளாறுகளை ஏற்படுத்தியுள்ளது இந்த விச வாயு.
1984ம் ஆண்டு மத்தியப்பிரதேசம் போபாலில் இயங்கி வந்த அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய மெதில் ஐசோ சயனைடு எனும் விச வாயு தாக்கியதில் இன்று வரை 20000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதன் பாதிப்புகள் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. இந்திய வரலாற்றில் மிக ஒரு தொழிற்சாலை ஏற்படுத்திய மிக மோசமான பேரழிவாக அது இடம்பெற்றுள்ளது. அதற்கு இணையான அலட்சியப் போக்கால் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. இம்முறை கோரமண்டல் இண்டெர்நேஷனல் லிமிடெட் எனும் பன்னாட்டு நிறுவனம். அது முருகப்பா குழுமத்தின் கூட்டிணைவுடன் சென்னை எண்ணூரில் உர உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வருகிறது. உர உற்பத்திக்கு முக்கியமான கச்சாப் பொருளான அம்மோனியாவை திரவ அம்மோனியாவாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறது. அது, கப்பலில் எண்ணூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சுமார் 2.கிமீ தொலைவிற்கு கடலுக்கடியில் குழாய் மூலம் தொழிற்சாலைக்குள் கொண்டு செல்லப்படுகிறது. கடல் அரிப்புக்கு ஆட்படும் குழாய் முறையாக பராமரிக்கப்படவில்லை. விரைவாக இறக்கிவிட வேண்டிய நோக்கோடு அதிக அழுத்தத்தோடு சேதமடைந்த குழாய்கள் மூலம் அம்மோனியாவை செலுத்தியதே அம்மோனியா வெளியேற காரணமாக அமைந்தது. அம்மோனியா திரவ நிலையில் இருந்ததாலும் அது கடலுக்கு அடியில் நீரில் வெளியேறியதாலும் மிகப்பெரிய அளவில் அப்பகுதி மக்களுக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தவில்லை. நீருக்கு மேலே வெளியேறியிருந்தாலோ அல்லது மக்கள் விழிப்புணர்வோடு குடியிருப்புகளை விட்டு வெளியேறாமல் இருந்திருந்தாலோ பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி மீண்டுமொரு போபாலாக எண்ணூர் மாறியிருக்கும் என்கிறார்கள் தப்பித்து உயிர்பிழைத்த அப்பகுதிவாழ் மக்கள்.
ஆனால், எண்ணெய் கழிவும் அம்மோனியாவும் சேர்ந்து அப்பகுதி கடல்வாழ் உயிரிகளை கொத்துக் கொத்தாக கொன்று குவித்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே எண்ணூர் மீன் என்றால் சந்தையில் வாங்குவதற்கு ஆளில்லை. இப்போது இந்த கொடுமை வேறு என்று புலம்புகின்றனர் மீனவர்கள். இந்த நச்சுக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மீன்களை உண்ணும் அப்பகுதியினர் உள்ளிட்ட மக்கள் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வட சென்னையில் குறிப்பாக எண்ணூர், மணலி மற்றும் கொசஸ்தலை ஆற்று பகுதியை சுற்றியும் அதிக சுற்றுசூழல் சீர்கேட்டை உருவாக்கும் நிறுவனங்கள் (Industries under Red category Pollution Index) நிரம்பி வழிகின்றன. அவை நிரந்தர நுரையீரல்சார் நோய்களோடு வாழும் நிலையை அம்மக்களை ஆழ்த்தியுள்ளன. மலட்டுத்தன்மையை அதிகரிக்கின்றன. பிறக்கும் குழந்தைகளை பிறவியிலேயே ஊணமாக்கியும் வருகின்றன. குடிநீரையும் காற்றையும் விசமாக்கியுள்ளன. கடலையும் கடல்வளங்களையும் நாசமாக்கியுள்ளன.
கார்ப்பரேட் சேவையில் திமுக அரசு
வாயு கசிவு ஏற்பட்ட உடன் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவோ அல்லது உரிய துறையினரிடம் தெரிவிக்கவோ இல்லை. விசத்தை பரப்பிவிட்டு விசயத்தை மூடிமறைக்கப் பார்த்துள்ளது அந்த நாசகர நிறுவனம். இப்பேர்ப்பட்ட நிறுவனத்தை பாதுகாக்கிறது முக.ஸ்டாலின் அரசு. அதுதான் திராவிடமாடல்.
நிறுவனத்தை இழுத்துமூட வலியுறுத்தி மக்கள் தற்போதும் தொடர்ந்துப் போராடி வருகின்றனர். அந்நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவதாக கூறிய அரசு அதை செய்யவில்லை. நிறுவனத்தை தொடர்ந்து இயக்க அனுமதித்துள்ளது. மாறாக போராடும் அப்பகுதி மக்களை சிறையில் அடைத்து வருகிறது. ஐ.ஐ.டி. நிபுணர் குழு தந்த அறிக்கையின் பெயரால் நிறுவனத்தை இயங்க அனுமதித்ததாக தெரிவிக்கிறது அரசு. ஐ.ஐ.டி. கடல்சார் கட்டுமான ஆராய்ச்சி துறையே சாகர்மாலா திட்டங்களை செயல்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதிப்பங்களிப்புடன்தான் இயங்கிவருகிறது. இவர்களின் அறிக்கை யாருக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறவா வேண்டும். இப்படி மத்திய மாநில அரசுகளும் அதன் நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் சேவையில் ஈடுபடுகின்றன. சொந்த நாட்டு உழைக்கும் மக்களையும் மீனவர்களையும் கொன்று புதைக்கின்றன.
இந்த நிகழ்வுகள் ஏதோ தனித்தனி நிறுவனங்களின் அஜாக்கிரதையால் அல்லது அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்துகளாக அரசாங்கமும் ஊடகங்களும் சித்தரிக்க முயற்சிக்கின்றன. உண்மையில் இது அரசு பின்பற்றும் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைபொருளே. அந்நிய நிதியாதிக்க கும்பல்களுக்கு நாட்டின் அனைத்து துறைகளையும் தடையின்றி திறந்துவிட்டதன் விளைவே. சிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை பங்குச்சந்தை சூதாடிகள் கட்டுப்படுத்துவதன் வினையே இது. நாட்டின் சுதேசிய தொழில் வளர்ச்சியை ஒழித்துக் கட்டி பன்னாட்டு உள்நாட்டு ஏகபோக கும்பல் கொள்ளையடிக்க இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் தாரைவார்க்க பாதை அமைத்துக் கொடுத்த பான் அமெரிக்கானா – காட் - டங்கல் அடிமை சாசன ஒப்பந்தங்களின் விளைவே இது. மாறி மாறி அடிமை சேவகம் செய்த காங்கிரஸ் – பாஜகவும் அதன் தொங்குச் சதைகளான திமுக – அதிமுக உள்ளிட்ட அனைத்து ஆளும் வர்க்க கட்சிகளும் அதன் அரசுகளுமே இந்த நாசகர பேரழிவுக்கு உடந்தையானவர்களே.
இப்படி தமிழ்நாடு பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களால் சூறையாடப்பட்டு வரும் இச்சூழலில்தான் மு.க.ஸ்டாலின் அரசு, அமெரிக்க-ஐரோப்பிய நிதியாதிக்க கும்பல்கள் மற்றும் அதானி-அம்பானி-டாட்டாக்களுடன் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் மதிப்பில் 630க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. தமிழ்நாட்டை அக்கும்பலுக்கு காவு கொடுக்கிறது.
பாஜக மட்டுமே பாசிச கட்சி; திமுக பாசிச எதிர்ப்பின் அரண்; அதை நாம் வாயிற்காவலர்களாக நின்று பாதுகாக்க வேண்டும்; நமக்கும் மூச்சுவிட அவகாசம் வேண்டும் என வாதிட்டார்கள், இப்போதும் வாதிடுகிறார்கள் சாயம் வெளுத்துப்போன அந்த சிவப்புச் சட்டைக்காரர்கள். இன்று நம் குரல்வளையை நெறித்து மூச்சடைக்க செய்கிறது; வெளிப்படையான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடாமலே பாசிசத்தை சட்டங்கள் மூலமும் ஒப்பந்தங்கள் மூலமும் பாஜக போல் தானும் அரங்கேற்றி வருகிறது திமுக அரசு. அவர்களின் சட்டையை உலுக்கிக் கேட்க வேண்டும், “இதெல்லாம் பாசிசத்தில் வராத நியாயமாரே!” என்று.
அந்நிய நிதியாதிக்க கும்பலையும், பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளையும், மத்திய-மாநில அரசுகளையும் வீழ்த்தாமல் பாசிசத்தையும் வீழ்த்த முடியாது; நம் வளங்களையும் பாதுகாக்க முடியாது; நாமும் சுவாச பெருமூச்சு விடவும் முடியாது.
- சமரன்
பிப் - மார்ச் 2024 இதழில்