நம்ம ஸ்கூல் திட்டம் : கல்வியைப் பறிமுதல் செய்யும் 'கார்ப்பரேட் நீதி'

புதிய காலனிய கல்வி கொள்கைக்கு அரசு பள்ளிகளையும், ஏழை எளிய மாணவர்களின் கல்வியையும் காவுக் கொடுக்கும் திட்டத்தின் திராவிட மாடல் வடிவமே 'நம்ம ஸ்கூல்' திட்டம்.

நம்ம ஸ்கூல் திட்டம் : கல்வியைப் பறிமுதல் செய்யும் 'கார்ப்பரேட் நீதி'

கடந்த டிசம்பர் 19ம் தேதியன்று திமுக அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கங்களாக கூறப்படுபவை:

"நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் என இரு தரப்பின் பங்கேற்பையும் பங்களிப்பையும் பெற்று அவற்றை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி தரமான கல்வியை வழங்குவதற்கான ஒரு தளத்தை உருவாக்குவது.

கல்வியின் தரம் என்பது பள்ளியின் உள்கட்டமைப்பு முதல் ஆரோக்கியம், சுகாதாரம், ஊட்டச்சத்து, கற்பித்தல், விளையாட்டு மற்றும் பண்பாடு, பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள் என்பது வரை விரிந்துள்ளதாகும். நாளுக்கு நாள் நவீனமாகிக் கொண்டே செல்கின்ற, மாறிக்கொண்டே இருக்கின்ற உலகின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற கல்வி கற்பவர்கள் கூடுதல் திறன்களை வளர்த்துக்  கொள்ள வேண்டியதும் அவசியம். இவை அடங்கிய கனவுப் பள்ளிகளை உருவாக்குவதேயாகும்."

இதனை படிக்கையில் இனி அரசு பள்ளிகளும் இந்தியாவிலுள்ள அமெரிக்கன் மாடல் பள்ளிகள் போல பிரம்மாண்ட மாற்றமடைந்து விடும்; நமது குழந்தைகளும் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்பர் என்ற மாயை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால் இது நம்மிடமிருந்து கல்வியை முற்றாக பறிக்கும் கொடிய திட்டமாகும்; கார்ப்பரேட் கருப்பு பண முதலைகளுக்கான கொள்ளை திட்டமாகும்.

இது ஏதோ 'திராவிட மாடல்' திமுக அரசின் சிந்தையில் உதித்த வளர்ச்சி திட்டமல்ல. மாறாக, பல்வேறு நாடுகளிலும், குறிப்பாக காலனிய நாடுகளில் கல்வியை பறித்து சீரழிவை ஏற்படுத்தி வரும் உலகமய-தாராளமய-தனியார்மய கொள்கைகளின் விரிவுபடுத்துதலேயாகும்; மோடி அரசின் தேசிய கல்வி கொள்கையின் அங்கமேயாகும்.

இத்திட்டத்தினால் மக்கள் இனி இது 'நம்ம ஸ்கூல்' என உரிமைக் கொண்டாட முடியாது; டிவிஎஸ் வேணு சீனிவாசன் உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட்கள் மட்டுமே இது 'எங்கள் ஸ்கூல்' என உரிமை கொண்டாட போகிறார்கள். கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொண்டு கார்ப்பரேட்கள் வசம் கல்வியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி போக்கே இது, அரசு பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தும் திட்டத்திற்கு பெயர்தான் 'நம்ம ஸ்கூல் திட்டம்'. நகை முரணாக பெயர் சூட்டி மக்களை ஏமாற்றுவதில் கைத்தேர்ந்தவர்கள் இந்த ஆட்சியாளர்கள். மக்களுக்கு கல்வியை வழங்க தயாராக இல்லாத அரசாங்கம் கல்வியை மிகத் தீவிரமாக வழங்குவதாக நாடகமாடும். அப்படித்தான் அனைவருக்கும் கல்வி என்ற பொருள் தரும் 'சர்வ சிக்‌ஷா அபியான்' என்ற திட்டத்தைக் கொண்டு வந்து கல்வியை தனியார்மயமாக்கியது வாஜ்பாய் அரசு. இன்று 'நம்ம ஸ்கூல்' திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளை நம்மிடமிருந்து பறித்து கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கும் வேலையை தொடங்கிவிட்டது திமுக அரசு.

கல்வி தனியார்மயமாக்கலின் பாதை

இந்தியாவில் நிலவிய உற்பத்திமுறைக்கு ஏற்றவாறே கல்வி திட்டங்கள் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சி காலத்தில் குமாஸ்தாக்களை உருவாக்குவதற்கான கல்வி குறிப்பிட்ட பிரிவினருக்கும் தன் சேவகர்களுக்கும் மட்டும் வழங்கப்பட்டது. 1950களில் கீன்சிய பொருளாதார கொள்கைகளின் தேவைகளிலிருந்து 14 வயது வரை அனைவருக்கும் கட்டாய கல்வி என்பதை சட்டமாக்கியது. 1965ம் ஆண்டு அதை கட்டாய இலவச கல்வி என்றும் அதற்காக மொத்த ஜிடிபியில் 6% சதவிகிதம் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோத்தாரி கமிஷன் பரிந்துரைத்தது. அன்றைய உற்பத்தி முறையின் தேவையிலிருந்து இவை உருவாக்கப்பட்டிருந்தாலும், இவை நிறைவேற்றப்படவேயில்லை. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து குறைத்தே வந்துள்ளன. பிரேசில், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் முறையே 6.3%, 5.9% மற்றும் 5.4%மும் உலக சராசரி 4.2% சதவிகிதமும் கல்விக்காக ஒதுக்கி வரும் சூழலில் இந்திய அரசு 2.5% சதவிகிதம் கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே இலவச கல்வி திட்டம் பலரை சென்றடையவில்லை.   1986ல் ராஜீவ் காந்தி அரசால் உருவாக்கப்பட்ட புதிய கல்வி கொள்கையால் கட்டாய இலவச கல்வி திட்டம் கைவிடப்பட்டு தனியார் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகுவதற்கு வழிவகை செய்தது. அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட 'காட்ஸ்' ஒப்பந்தங்களும் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளும் கல்வித் துறையில் அந்நிய மூலதனம் தங்குதடையின்றி பாய  அனைத்து கதவுகளையும் திறந்துவிட்டது. அன்று முதல் கல்வி ஏழை எளிய மக்களுக்கு பெரும் சுமையாக மாறியது. அவர்கள் தங்கள் சம்பாத்தியத்திலும் உழைப்பின் பயனிலும் பெரும் பகுதியை தங்கள் குழந்தைகளின் கல்விக்காக செலவிடும் அவல நிலை ஏற்பட்டது. 2015ம் ஆண்டு நைரோபி மாநாட்டில் 'கல்வி வர்த்தக பொருள்' என்பது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. குடிமக்களுக்கு அடிப்படையான கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு வருகிறது.

உலக வங்கியின் வழிகாட்டலில் மாவட்டத் தொடக்க கல்வி திட்டம்

90களில் தாய்லாந்தின் ஜோமைட்டில் 130நாடுகள் பங்கேற்புடன் உலக வங்கி நடத்திய மாநாட்டில் 'கல்வியானது அரசு கைகளில் இருந்து விலகி, தனியார் கைகளுக்கு செல்வதாக இருக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில்தான் அரசு-தனியார் பங்கேற்பு (Public Private partnership – PPP) எனப்படும் 3பி திட்டங்கள் மெல்ல நடைமுறைப்படுத்த துவங்கப்பட்டன. இதை நடைமுறைப்படுத்ததான் மாவட்ட தொடக்க கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் பள்ளிக் கல்வித் துறை கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்கப்பட்டு வந்தன.

முன்னதாக, தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் அவை பெரும்பாலும் அரசு உதவி பெறும் நிறுவனங்களாகவே 90கள் வரை இருந்து வந்தது. அதனால் அவ்வகையிலான தனியார் பள்ளிகளில் படிப்பதும் அரசு பள்ளிகளில் படிப்பது போன்றே பெரும் சுமையாக 90கள் வரை இருந்ததில்லை. 90களுக்கு பின் உருவான அரசு சாரா தனியார் பள்ளிகளின் பெருக்கமே கல்வியை பெரும் சுமையாக்கியது. ஒருபுறம்  தனியார் பள்ளிகள் மாடமாளிகைகளாகவும் மால்களையும் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கி மாணவர்களை ஈர்த்தன; தனியார் பள்ளிகளில் படிப்பதே தரமானது - அறிவை வளர்க்கக் கூடியது என்ற மாயை விசச் செடியாக வேரூன்றி பரவியது. காசு கொடுத்தாலும் தனியாரே சிறப்பானது என்ற போக்குகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. மறுபுறம், இந்த அரசு தனியார் கூட்டு வாய்ஜாலங்கள் அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. அரசு பள்ளிகளின் கட்டமைப்புகள் கேட்பாரன்றி சிதிலமடையத் தொடங்கின; மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்தது. போதிய ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. பல பள்ளிகள் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளாக மாறின. சுமார் 6000 பள்ளிகள் தமிழ்நாட்டில் இழுத்து மூடப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய - தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் வர்க்கங்களின் பிள்ளைகள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிக்கும் நிலை நீடிக்கிறது. தற்போது அதற்கும் உலைவைக்கும் நோக்கிலேயே 'நம்ம ஸ்கூல்' திட்டம் மூலம் அரசுப்பள்ளிகளை முற்றாக இழுத்து மூடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது இந்த திராவிட மாடல்  அரசு. அரசு பள்ளிகளின் இந்த அவலநிலைக்கு காரணம் தனியார்மயமாக்கலே என்பதை மூடி மறைத்து முற்றிலும் தனியார்மயமாக்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 37000 அரசு பள்ளிகளில் முதற்கட்டமாக 100 பள்ளிகள் மட்டுமே 'நம்ம ஸ்கூல்' திட்டம் மூலம் செயற்படுத்தப்படவுள்ளன. அவர்கள் தேர்வு செய்துள்ள இந்த 100 பள்ளிகளும் ஏற்கனவே ஓரளவுக்கு அடிப்படையான உள்கட்டமைப்பு வசதிகளையும் மாணவர் தேர்ச்சி விகிதங்களையும் கொண்டுள்ளன. அவற்றை மேலும் மேம்படுத்துவதாக கூறி தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. கிராமப் புறங்களிலும் ஊராட்சி மன்றங்களிலும் உள்ள பெரும்பாலான பள்ளிகள் அரசின் நிதி ஒதுக்கீடு இன்றி கைவிடப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்படவுள்ளன. ஆனால் அரசு பள்ளிகளை காக்க வந்த ரட்சகர்கள் போல இந்த கார்ப்பரேட் கறுப்புப்பண ஆசாமிகளை முன்னிறுத்துகின்றது. 'சமூக நீதி' என்று ஓயாமல் பேசும் திமுக அரசு இந்த தனியார்மய மாடலைத்தான் திராவிட மாடல் எனப் பெயரிட்டு அவற்றுக்கு தொண்டூழியம் புரிகிறது.

டிவிஎஸ் குழுமத்தால் உருவாக்கப்பட்ட 'நம்ம ஸ்கூல்' திட்டம்

திருமாவளவன் உள்ளிட்ட சிலர் இந்த திட்டம் வரவேற்க வேண்டிய திட்டமே, ஆனால் அதற்கு தலைவராக கார்ப்பரேட் முதலாளியான வேணு சீனிவாசனை நியமித்ததுதான் தவறு என வாதிடுகின்றனர். உண்மையில் இந்த திட்டம் திமுக அரசால் உருவாக்கப்பட்டுள்ளதல்ல அது வேணு சீனிவாசனின் டிவிஎஸ் குழுமத்தால் உருவாக்கப்பட்டதே. அதற்கு கதவை திறந்துவிடுவது மட்டுமே திமுக அரசின் சேவை. ஏனெனில் கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொண்டு விட்டது. 

தொழிலாளர்களின் சங்க உரிமைகளை பறித்து - கொத்தடிமைகளாக நடத்தி சுரண்டிக் கொழுத்த டிவிஎஸ் குழுமம் இன்று தமிழகத்தின் பெரும் தரகு முதலாளித்துவ கும்பலாக வளர்ந்துள்ளது. தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி வளர்ந்த இந்த கும்பல் வரி ஏய்ப்புக்காக கடந்த 25ஆண்டுகளாக சீனிவாசன் சேவை அறக்கட்டளை (Srinivasan Services Trust) எனும் பெயரில் நடத்தி வருகிறது. இந்த அறக்கட்டளையின் தற்போதைய செயல்திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த 'நம்ம ஸ்கூல்' திட்டம். இத்தனை ஆண்டுகாலம் கல்வியிலும் சுகாதாரத்திலும் அமைதியான புரட்சியை ஏற்படுத்தியதாக பீற்றிக் கொள்ளும் இந்த அறக்கட்டளையின் மூலம் மக்கள் அடைந்த பயன்கள் என்னவென்று வினவினால் அது கேள்விக் குறிதான்.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அறக்கட்டளைகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு கறுப்புப் பணத்தை கடத்துகின்றன. அதன் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி-சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறித்து வருவதோடு தங்களை கொடை வள்ளலாக காட்டி கொள்ள முயல்கின்றன - எலும்புத் துண்டுகளை வீசுவது போல இதுபோன்ற ஏமாற்று திட்டங்கள் மூலம் கல்வித் தந்த கடவுள் போல தங்களைப் பிம்பப்படுத்தி கொள்கின்றன.

ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழக கோவில்களை புனரமைப்பதாக சொல்லி பொறுப்பேற்று முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொண்ட இந்த வேணு சீனிவாசன் கோவில்களை புனரமைப்பதற்கு மாறாக சிலை திருட்டில் ஈடுபட்டார். இப்படிப்பட்ட குற்றப் பின்னணி கொண்ட ஊழல் பெருச்சாளிகள் இன்று பள்ளிகளை தத்தெடுக்கும் பெயரில் திட்டத்தை உருவாக்கி அதை தங்கள் சொத்தாக மாற்ற முயன்று வருகின்றன. அதற்கு இந்த திமுக அரசு சேவை செய்கிறது. ஆனால் திருமாவளவன்களோ இத்திட்டத்தை வரவேற்பதாக பேசுவது கேலிக்கூத்து. இன்னும் சிலர் வேணு சீனிவாசன் அய்யங்கார், ஆதலால் ஒரு பார்ப்பனரிடம் இந்த திட்டத்தை ஒப்படைப்பதுதான் தவறு மற்றபடி இது வரவேற்க வேண்டிய திட்டம் என திமுக அரசுக்கு முட்டு கொடுக்கின்றனர். திராவிட கட்சிகளின் பார்ப்பன எதிர்ப்பு என்பதெல்லாம் பெரியார் காலத்திலிருந்தே வெறும் பூசாரி பார்ப்பன எதிர்ப்பு மட்டும்தான்; பார்ப்பன நிலவுடமை வர்க்கத்திடம் நட்பு பாராட்டியே வந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் மக்களை சுரண்டி கொழுக்க தங்களுக்கும் பங்கு வேண்டும் என்ற போட்டியே நீதிக்கட்சிக்கும் பார்ப்பன ஆதிக்க கூட்டத்திற்கும் உள்ள முரண்பாடு. எனவே இவர்களின் பார்ப்பன எதிர்ப்பு நாடகமெல்லாம் இடைநிலை சாதி ஆதிக்க கும்பல்களின் நலன்களிலிருந்து மட்டுமேதான். இவர்கள் எப்போதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் மக்கள் பக்கம் நின்றதேயில்லை. ஆகையால் இவர்கள் வேணு சீனிவாசன் அய்யங்காரை பூஜிப்பதில் ஆச்சர்யமில்லை.

இந்த திட்டத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் யார் கல்வியியல் வல்லுநரா? நிச்சயமாக இல்லை. இந்திய உயர்கல்வித் துறையில் பகாசுர நிறுவனமாக விளங்கும் நிட் (NIIT), இன்ஸ்டா ஃபோரெக்ஸ் (Insta forex) எனும் பங்குச் சந்தை நிறுவனமுமே இந்த ஆனந்திற்கு ஸ்பான்சர் செய்கின்றன. பள்ளிக் கல்வித் துறையிலும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தவே ஆனந்தை இத்திட்டத்திற்குள் நுழைத்துள்ளனர்.

இத்திட்டத்தில் ஏற்கனவே அசோக் லேலேண்ட், கெமின், டைட்டன், எல்.அன்.டி, செயின்ட் கோபைன், கோன் போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்தியன் ஆயில், சிபிசிஎல், என்.எல்.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் பங்கெடுத்து வருகின்றன. இவையன்றி பல்வேறு கல்வி கார்ப்பரேட்களும் ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

எனவே இத்திட்டம் டிவிஎஸ் குழுமத்தால் உருவாக்கப்பட்டிருந்தாலும், இதனை வெறும் தனிப்பட்ட பார்ப்பன முதலாளி நலன்களுக்காக மட்டும் ஏற்படுத்தப்பட்டது என சுருக்கிப் பார்ப்பது தவறானதாகும். இத்திட்டத்தின் பின்னணியில் உலகளாவிய கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்கள் மற்றும் புதிய காலனிய அமைப்புகளின் வலைபின்னலும் உள்ளது. இதே மாதிரி திட்டங்கள் பஞ்சாப், குஜராத், மஹாராஷ்ரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிலும் அமல்படுத்தப்பட்டு வந்துள்ளன.

வரி ஏய்ப்பின் முகமூடியே கார்ப்பரேட்டுகளின் சமூக பொறுப்பு (Corporate Social Responsibility - CSR)

நாட்டில் பல ஆண்டுகளாக நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துவோரிடம் கல்விக்காக 2% சதவிகித வரி வசூலிக்கப்பட்டு வந்தது. 2008ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடிகளுக்குப் பிறகு அந்த வரி 3% சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இந்த வரிவிதிப்பு மூலம் பெற்ற வருவாய் முறையாக கல்வி மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படவில்லை. இந்த வரிவிதிப்பு அந்நிய நிதிமூலதனத்திற்கு தடையாக இருந்ததோடு அதிலிருந்து விலக்களிக்க நிர்பந்திக்கப்பட்டதால் அரசு அதற்கு அடிபணிந்தது. அதற்கு மாற்றாக முன் வைத்ததே கார்ப்பரேட்டுகளின் சமூக பொறுப்பு (Corporate Social Responsibility - CSR) எனும் திட்டம். இது குளோபல் சிஎஸ்ஆர்  பவுண்டேசன் அமைப்பின் (Global CSR Foundation) இந்திய பதிப்பே ஆகும். இந்த குளோபல் சிஎஸ்ஆர்  பவுண்டேசன் ராக்ஃபெல்லர் பவுண்டேசனுடன் இணைந்தது. இவை உலகம் முழுவதும் புதியகாலனியாதிக்கதை நிறுவ ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பது நாம் அறிந்ததே.

இந்தியாவில் கம்பெனிகள் சட்டம் 2013ம் ஆண்டு மன்மோகன் ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி, ரூ500 கோடி நிகரமதிப்பு கொண்ட நிறுவனங்கள் அல்லது ஆண்டுக்கு ரூ1000 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் -ரூ.5 கோடி நிகர லாபமாக ஈட்டிவரும் நிறுவனங்களுக்கு கல்விக்கான வரி விலக்கு அளிக்கப்பட்டது. அவர்கள் சிஎஸ்ஆர் (CSR) மூலம் சமூக பங்களிப்பை தாங்களே செலவு செய்யலாம் அல்லது அறக்கட்டளைகளை நிறுவி செய்யலாம் எனவும் தங்களது லாபத்தில் 2% சதவிகிதத்தை செலவிட வேண்டும் என்பதாகும். இதை கண்காணிக்கும் பொறுப்பு நிறுவனங்கள் விவகாரத்துறை (Corporate affairs) அமைச்சகத்தைச் சார்ந்தது. இந்தியாவின் கீழ்மட்ட 50%  சதவிகித மக்களின் மொத்த சொத்துமதிப்பானது நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 3% சதவிகிதம்தான் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த 3% கல்வி வரிகள் அல்லது சிஎஸ்ஆர் நிதி முறையாக பயன்படுத்தபட்டிருந்தால் மக்களின் கல்வி உள்ளிட்ட பொருளாதார நிலை ஓரளவிற்கு மேம்பட்டிருக்கும். அதிலும் சுரண்டப்படுவதால்தான் அவர்கள் வறிய நிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது இவை முறையாக பயன்படுத்தப்படாமல் பதுக்கப்படுகின்றன என்பதையே அப்பட்டமாக்குகிறது. இது கறுப்புபணம் குவிவதற்கு வழிவகுக்கிறது. சிஎஸ்ஆர் நிதி பெரும்பகுதி அறக்கட்டளைகள் மூலம் பன்னாட்டு கல்வி நிறுவனங்களை உருவாக்கி அதன் மீதே முதலீடு செய்யப்படுகிறதே ஒழிய ஏழை எளிய மாணவர்கள் பயிலும் கல்விக்கு பயன்படுத்தப்படுவதில்லை. இந்த சிஎஸ்ஆர் நிதி பகாசுர கல்வி நிறுவனங்கள் மூலம் பங்குச் சந்தையில் மீண்டும் வட்டமடிக்கின்றன. இவை உண்மையில் சமூக வளர்ச்சிக்கு எவ்வித பங்களிப்பும் செய்வதில்லை.

இந்தியாவில் சிஎஸ்ஆர் திட்டத்தின் மிக முக்கிய பங்காளிகளாக விளங்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்:

  1. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
  2. என்டிபிசி
  3. விப்ரோ
  4. இன்ஃபோசிஸ்
  5. மகாநதி கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட்
  6. டாட்டா ஸ்டீல்
  7. ஹிந்துஸ்தான் ஷிங்க் (வேதாந்தா)
  8. ஹெச்டிஎஃப்சி பேங்க்
  9. ஹவுசிங் டெவெலோப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேசன் லிமிடெட்
  10. மகிந்த்ரா அன்ட் மகிந்த்ரா
  11. அல்ட்ராடெக் சிமெண்ட்
  12. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்
  13. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
  14. பார்தி ஏர்டெல்
  15. ஐடிசி குரூப்
  16. நார்த்தென் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட்
  17. எல்.என்.டி
  18. காடிலா ஹெல்த்கேர்
  19. ஹீரோ மோட்டர்கார்ப்
  20. க்ரேசிம் இண்டஸ்ட்ரீஸ் 

சிஎஸ்ஆர் திட்டம் மூலம் இந்நிறுவனங்கள் வரிஏய்ப்பில் ஈடுபடுவதோடு, கல்வி பங்குச் சந்தை சூதாடிகள் மூலம் தங்கள் சொத்து மதிப்பை உயர்த்தி வருகின்றன. ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் யாசத் சுமேதா, பேட்டி பச்சோ பேட்டி பதாஹோ, நந்த் கர், சிக்‌ஷா சம்பல், நவச்சர் புஸ்திகா, சர்வ சிக்‌ஷ அபியான், நாஹ்னி கலி, கஸ்தூர்பா காந்தி பலிக்க வித்யாலயா, ஏஎல்பி, ஸ்டெம், அகஸ்தியா, சத்ய பார்தி, சப் சக்சார், சிக்‌ஷா, அக்‌ஷயா பாத்ரா போன்ற திட்டங்களை ஏற்படுத்தின. இந்த வலைபின்னலின் ஒருபகுதிதான் 'நம்ம ஸ்கூல்' திட்டம். இந்த திட்டத்தின் தொடக்க விழா கூட அரசு பள்ளிகளிலோ அல்லது அரசு அரங்கத்திலோ நடைபெறாமல் ஐடிசி கார்ப்பரேட்டின் சோழா ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

இதன் மூலம் சைக்கிள், லேப்டாப் வழங்குதல் போன்ற சில சொற்ப செலவினங்கள் செய்ததையே பெரிய சாதனை போல் பேசுகின்றன. கல்வியியல் வளர்ச்சிக்கு இவர்கள் எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை. அதை பறிக்கும் வேலையையே செய்துள்ளனர். கொரோனா காலத்தில் பிஎம் கேர் (PM care) எனும் பெயரில் திரட்டப்பட்ட நிதியும் இந்த சிஎஸ்ஆர் திட்டத்தின் அடிப்படையிலேயேதான் திரட்டப்பட்டது. அந்த நிதியில் பாஜக அரசு முறையாக கொரோனா கால சிகிச்சைகளுக்கு திருப்பிவிடாமல் தனது கட்சியின் சொத்தாக மாற்றிவிட்டது என்பதும் அனைவரும் அறிந்ததே. இதுப்போலதான் மக்களின் வரிப்பணத்தை ஏய்த்தும், உழைப்பையும் வளங்களையும் சுரண்டி திரட்டப்பட்ட இந்த நிதிகள் மக்களின் அடிப்பட்டைத் தேவைகளுக்கு பயன்படாமல் கட்சிகளின் நலன்களுக்கும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கும் பயன்படுகின்றன. இவர்கள் எலும்புத்துண்டை கூட வீசுவதில்லை. எலும்புத்துண்டை காண்பித்தே ஏமாற்றுகின்ற கொள்ளையர்கள். நமக்கு மிஞ்சுவதெல்லாம் கவர்ச்சித் திட்டங்களின் பெயர்கள் மட்டுமே.

கார்ப்பரேட் கொத்தடிமைகளையும் இந்துத்துவ சேவகர்களையும் உருவாக்கும் தனியார்மய கல்வி 

தற்போதைய கல்வியை முழுமையாக தனியார்மயமாக்கும் போக்கு கல்வியின் நோக்கத்தை முற்றிலும் சீர்குலைப்பதாக அமையப்போகிறது. இனி கார்ப்பரேட்களால் உருவாக்கப்படும் பாடத்திட்டத்தையே படிக்க வேண்டிய நிலை ஏற்படும். அவர்களின் சுரண்டலுக்கு ஏதுவான கல்வியே பயிற்றுவிக்கப்படும். தங்கள் உற்பத்தி முறைக்குத் தேவையான நவீன கொத்தடிமைகளையும் - சமூக சிந்தனையற்ற பதர்களையும் உருவாக்கும். மாணவர்களின் ஆராய்ச்சி திறன், கற்பனை திறன், சுய வளர்ச்சி கூறுகள் என அனைத்தையும் நாசமாக்கும். இந்த அடிமை முறைக்கு ஏற்ற இந்துத்துவம் உள்ளிட்ட பிற்போக்கு கருத்தியல்களும் அவர்களுக்கு போதிக்கப்படும்.

தாய்மொழி கல்வி ஒழிக்கப்பட்டு ஆங்கில-இந்தி ஆதிக்கம் மேலோங்கும். (திராவிட பாரம்பரிய வழியில் இந்த திட்டத்தின் பெயர் கூட 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன்' என வைக்கப்பட்டுள்ளது. இந்த 3 வார்த்தையில் இரண்டு வார்த்தை ஆங்கிலம், ஒரு வார்த்தை தமிழ். இதுதான் இவர்கள் தமிழ் வளர்க்கும் லட்சணம்)  அரசியலுக்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமான விஞ்ஞானபூர்வ ஜனநாயக கல்விமுறை என்பது கற்பனையாக மாறி விடும். இன்னும் சிலருக்கு கல்வி என்பதே எட்டாக்கனியாக மாறி குலத்தொழிலுக்கு மீண்டும் தள்ளப்படும் அவலநிலையை ஏற்படுத்தும்.

கார்ப்பரேட்களின் பங்களிப்புடன் உருவாக்கப்படும் கல்வி - பாடத்திட்டங்களிலும்  நிர்வாகங்களிலும் அரசு இனி தலையிட முடியாது. அவர்கள் கொடுப்பதே கல்வி. தற்போது ஸிஜிணி மூலம் தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டுக்கு பரிந்துரைப்பது போல, (பெயரளவில் அரசு என்பதை தாங்கியிருக்கும்) பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீட்டை பரிந்துரைக்க முடியும். அந்த அளவில் மட்டும்தான் அவர்கள் சமூக நீதி பேச முடியும்.

இவற்றை சாரமாக கொண்டதே தேசிய கல்வி கொள்கை. அதன் திராவிட மாடல் வடிவமே 'நம்ம ஸ்கூல் திட்டம்'. ஏற்கனவே இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் இயக்கம் போன்ற முறைசாரா கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தி முறையான கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து திமுக அரசு விலகி வருகிறது. தற்போது கார்ப்பரேட்களின் கொள்ளைக்கு 'நம்ம ஸ்கூல்' திட்டம் மூலம் அரசு பள்ளிகளை காவு கொடுத்து வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கிறது.

படேலுக்கு சிலை அமைத்த பாசிச மோடி கும்பலைப் போலவே, தமிழின துரோகி கருணாநிதிக்கு கடலில் சிலை வைக்கப் போகிறதாம் மு.க.ஸ்டாலின் கும்பல். கல்வி பறிக்கப்படுவதன் அடையாளம்தான் இந்த பேனா சிலையோ!. கல்விக்காக நிதி ஒதுக்க வக்கற்ற இந்த 'திராவிட மாடல்' ஆட்சியின் பாசிச போக்கை கண்டிக்கும் அனைவரையும் பாஜக ஆதரவாளர்கள் என முத்திரைக் குத்தி திமுக அரசை பாதுகாக்கிறது அறிவாலயத்து அனுமார் படை. இவர்கள் திமுக அரசிற்கு முட்டுகொடுப்பதன் மூலம் பாஜக அரசையும் டிவிஎஸ் வேணு சீனிவாசன், அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்களையும் பாதுகாக்கின்றனர். இனவாத மாயையில் சிக்கி பாசிசத்திற்கு துணை போகின்றனர்.  

மார்க்சிய கல்விமுறையை கற்பதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் கூட பழைய கல்வி முறையில் உள்ள முற்போக்கான அம்சங்களும் ஆய்வுகளும் பயன்படுகின்றன. அது ஏட்டறிவாகவும் குருட்டுப் பாடப் பயிற்சியாகவும் இருந்தாலும் அதை முற்றாக நிராகரித்து விட்டு சுழியத்திலிருந்து ஆரம்பிக்க முடியாது என்பார் லெனின். எனவே கல்வித் திட்டங்களில் ஏற்படுத்தும் பிற்போக்கு அம்சங்களை எதிர்த்துப் போராடுவதோடு அடிப்படை கல்வி உரிமைக்காகவும் போராட வேண்டும். எனவே 'நம்ம ஸ்கூல்' திட்டம் எனும் கார்ப்பரேட் கல்வி கொள்ளைக்கு எதிராக குரல் கொடுப்பதோடு புதியகாலனிய ஆட்சிக்கெதிராகவும் அணிதிரள வேண்டும்.

சமரன்

(பிப்ரவரி 2023 இதழில்)