சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்! தொழிலாளர்களை ஒடுக்கும் புதிய காலனிய தாசர்களின் ஆட்சி வீழட்டும்!!
செந்தளம்
தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது, எட்டு மணி நேர வேலை, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக காஞ்சிபுரம், திருப்பெரும்புதூரில் உள்ள சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் செப்டம்பர் 9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அக்டோபர் 1 அன்று 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறியல் செய்தனர். அக்டோபர் 7ஆம் நாள் வரை 30 நாட்கள் கடந்தும் அவர்களின் எந்த கோரிக்கைக்கும் சாம்சங் நிறுவனமோ, தொழிலாளர் நலத்துறையோ, திமுக திராவிட மாடல் அரசோ, பாசிச பாஜக அரசோ தீர்த்துவைக்கத் தயாரில்லை. மாறாக அரசியலமைப்பு வழங்கியுள்ள சங்கம் வைக்கும் உரிமையை கூட வழங்கமால் ஆட்சியாளர்களின் அதிகாரத்தை வைத்துக்கொண்டு சாம்சங் நிறுவனம் தொடர்ந்து ஒடுக்கி வருகிறது.
07.01.2024 அன்று உச்சபட்ச துரோகமாக பேச்சுவார்த்தை என்ற பேரால் திமுக அமைச்சர்கள் குழு சாம்சங்குடன் சேர்ந்துகொண்டு, அந்த நிறுவனமே சில தொழிலாளிகளை வைத்து உருவாக்கிய ஒர்க்கர்ஸ் கமிட்டியுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறார்கள். எல்லா நிறுவனத்திலும் ஒர்க்கர்ஸ் கமிட்டி என்று ஒன்று நிறுவனத்தாலேயே உருவாக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இங்கும் அப்படி உருவாக்கப்பட்டிருந்த இந்த ஒர்க்கர்ஸ் கமிட்டியுடன்தான் இப்போதும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். 1723 தொழிலாளர்கள் இந்நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். இதில் 1550 தொழிலாளர்கள் பெரும்பான்மை உறுப்பினராக உள்ள போராடுகின்ற சிஐடியு-சாம்சங் தொழிலாளர்கள் சங்கத்தை புறக்கணித்து விட்டு சாம்சங்குடன் சேர்ந்துகொண்டு இந்த கூட்டுச் சதியில் ‘சமூக நீதி’ திராவிட மாடல் அரசு ஈடுபட்டிருக்கிறது. மீடியாவின் பலத்தை வைத்து இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்தாக தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்கவும், ஒடுக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் இதை எதிர்த்து தொழிலாளர்கள் அனைவரும் கொதித்தெழுந்து முன்னிலும் வீரியமாக போராட தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த சாம்சங் நிறுவனம் இந்தியாவில் எலக்டிரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்ய சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் 1995ல் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் தொடங்கியது. பிறகு 2007ல் தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூரில் தொடங்கியது. இந்நிறுவனம் 15 வருடமாக வேலை செய்யும் தொழிலாளிக்கு கூட வெறும் ரூ. 20,000லிருந்து 30,000க்குள்தான் மாத சம்பளம் தருகிறது. அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ.3,000 மட்டுமே உயர்த்துகிறது. பெரும்பாலனவர்களுக்கு குறைந்த ஊதிய உயர்வு, பல பேருக்கு உயர்த்தாமல் சமமற்ற ஊதிய கொள்கையை கடைபிடிக்கிறது. மிகக் குறந்த நேர உணவு இடைவேளை தவிர எந்தவித ஓய்வு நேரத்தையும் கொடுக்காமல் தொடர்ச்சியாக 10 மணி நேரம் வேலை செய்யவேண்டும். 8 மணி நேரம் வேலை என்பது காகிதத்தில் மட்டுமே கிறுக்கப்பட்டிருக்கிறது. கட்டாய ஓவர் டைம் செய்தாக வேண்டும். அதற்கும் மாதம் 2,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும். வேலை முடித்து வீட்டிற்கு வந்து போகும் நேரத்தைக் கணக்கில் கொண்டால் 4-5 மணி நேரம் கூட தூங்குவதற்கான வாய்ப்பும் இல்லாத கொடுமையான பணிச்சுமை. உடல் சோர்ந்தாலும் விடுமுறை கொடுப்பதில்லை. பெண்களுக்கு தனியாக கழிப்பிட வசதிகூட முறையாக அமைத்துக் கொடுக்கவில்லை. வேலை செய்பவர்களுக்கு எவ்வித அடிப்படை பணிப் பாதுக்காப்பும் இருப்பதில்லை. எந்த இழப்பீடும் தொழிலாளிக்கு என்ன நேர்ந்தாலும் தருவதில்லை. ரோபோக்கள் இயங்க கொடுக்கப்பட்ட வேக நேரத்தை விட தொழிலாளிகள் வேகமாக உற்பத்தி செய்ய வேண்டும். இல்லை என்றால் மெமோ, சம்பள வெட்டு. முதலாளித்துவ சமூகத்தில் அறிவியலும், தொழில்நுட்பங்களும் மனிதனை விடுதலை செய்யவில்லை, மாறாக தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்கிறதோ அதைவிட அதிகமாக உழைப்புச் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் அதிகமாக்கியிருக்கிறது.
தொழிலாளர்களின் கோரிக்கை
‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்கிற பெயரில் திருப்பெரும்புதூர் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தைத் தொடங்கினார்கள். இச்சங்கம் சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட சங்கமாகும். சாம்சங் பூனைக்கு மணியும் கட்டிவிட்டார்கள். சிஐடியு உடன் இணைந்து மேற்கண்ட கொடுமைகளுக்கு எதிராக தற்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள். சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் முதன்மையான கோரிக்கை தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது, எட்டு மணி நேர வேலை, பாதுகாப்பான பணி சூழல், சம்பள உயர்வு, ஒரே தகுதியும் வேலையும் கொண்ட தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம் ஆகியவை. இதனுடன், ஆண்டு சேவை வெயிட்டேஜ் ரூ.500 வேண்டியும், ஷிப்ட் அலவன்ஸ் ரூ.150ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தித் தர கோரியும், பேறுகால ஆண்களுக்கான விடுப்பை மூன்றிலிருந்து ஏழு நாட்களாக நீட்டிக்க வேண்டியும் தற்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய தொழிலாளர்கள் எப்படி கொத்தடிமை முறையை அனுபவிக்கிறார்களோ அதே பிரச்சினைதான் கொரியாவில் இயங்கும் சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்களின் நிலையும். அங்கும் அதே அடிப்படைக் கோரிக்கைக்காக தற்போது தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
உச்சபட்ச சுரண்டலுக்கு தொழிற்சங்கமே கூடாது…
இதுவரை தொழிற்சங்கமே இல்லாமல் வைத்திருந்த சாம்சங் சாம்ராஜ்ஜியத்தில் கொரியாவிலும், இந்தியாவிலும் நடந்துகொண்டிருக்கும் தொழிலாளர்களின் எழுச்சி உலகம் முழுவதும் உள்ள முன்னணி ஊடகங்களில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. உலகம் முழுவதும் 2,67,000 தொழிலாளர்கள் கொண்ட மிகப் பெரிய நிறுவனம் சாம்சங். பன்மடங்கு லாபத்தை ஈட்டுவதற்கு தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது, பேரம் பேசும் பலத்தை பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே தொழிற்சங்கமே இல்லாமல் நிறுவனத்தை இயக்குவதே அந்நிறுவனத்தின் கொள்கையாக வைத்துள்ளது. அந்நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கும் கூட தொழிற்சங்கம் இருக்கக் கூடாது என்ற கொள்கையையே நிர்ப்பந்திக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல அதன் தாய் நிறுவனமான கொரிய சாம்சங் நிறுவனத்திலேயே பெயரளவுக்குத்தான் ஐந்து தொழிற்சங்கங்கள் இயங்குகிறது. கொரிய தொழிலாளர்கள் தனது 80 ஆண்டுகால வரலாற்றில் 28,000 பேர் கொண்ட ‘தேசிய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் யூனியன்’ என்ற பெரிய தொழிற்சங்த்தை தொடங்கியது. இந்த தொழிற்சங்கம்தான் ஜூன் 7, 2024 அன்று தொடங்கி இரண்டு மாதங்களாக மாபெரும் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறது.
அதே போல்தான் இந்தியாவிலும் கடந்த 29 ஆண்டுகளாக தொழிற்சங்கமே தொடங்க விடாமல் பார்த்துக்கொண்டது. 2023 ஜூலை மாதம் தான் தொழிற்சங்கத்தைத் திருப்பெரும்புதூரில் தொடங்கினார்கள். தைவான், வியட்நாம் என சாம்சங் நிறுவனம் இயங்குகிற எல்லா நாடுகளிலும் ஒரே நிலைமைதான்.
லாபம் கொழிக்கும் சாம்சங் கார்ப்பரேட்
எலக்டிரானிக்ஸ் சிப் மற்றும் வீட்டு உபயோக எலக்டிரானிக்ஸ் தயாரிப்பில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து உலகத்தின் 3வது பெரிய உற்பத்தி செய்யும் நாடாக கொரியா இருக்கிறது. சாம்சங் மற்றும் TSMC நிறுவனம்தான் கொரியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களாகும். சாம்சங் தனது உச்சபட்ச லாபத்தை அடைவதற்கு ஏகபோகத்தை தொடர்ந்து உருவாக்கிக்கொண்டு வருகிறது. 2017ல் மட்டும் சுமார் 64,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களை விழுங்கி செறித்திருக்கிறது. இந்த வருடம் சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களை விழுங்கப் போகிறது. சாம்சங் தனது கிளை நிறுவனங்களை சீனா, வியட்நாம், இந்தியா தாய்லாந்து உட்பட 76 நாடுகளில் நடத்துகிறது. 2005ல் 8 நிறுவனங்கள், சுமார் 80,000 தொழிலாளர்களைக் கொண்டு 55,000 டாலர் வருவாய் ஈட்டியது. 2023ல் 230 உற்பத்தி நிலையங்கள் சுமார் 2,67,000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். 2024ல் ஆறு மாதத்தின் வருவாய் மட்டுமே 90 லட்சம் கோடி ரூபாய். அதில் 12 லட்சம் கோடி ரூபாய் நிகர லாபம் மட்டுமே (1419 trillion KRW கொரிய பணம் இரண்டு காலாண்டு).
இந்தியாவில் 6 கோடி ரூபாய் வருவாய் என தொடங்கிய இந்நிறுவனம் இன்று சுமார் 1,00,000 கோடி ரூபாய் (12 பில்லியன் டாலர்) வருவாய் ஈட்டும் நிறுவனமாக தொழிலாளர்களின் இரத்தத்தை குடித்து வளர்ந்திருக்கிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு திருப்பெரும்புதூரில் இயங்கும் சாம்சங் நிறுவனம் ஈட்டுகிறது. கார்ப்பரேட்டுகள் அரசின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கூட்டமைப்பு, சிண்டிகேட்டுகளை உருவாக்கி செயல்படுகிறது.
இப்படி கொழுத்து ஊதிப் பெருகிய நிறுவனத்தால், 15 வருடம் வேலை செய்த தொழிலாளிக்கு 30,000 ரூபாய்க்கு மேல் மாத சம்பளம் கொடுக்கத் தயாரில்லை. கூடுதலாக ரூ. 5,000 ஒரு தொழிலாளிக்கு ஏற்றினாலும் வருடத்திற்கு 12 கோடி ரூபாய்தான் செலவாகும். தொழிலாளிக்கு எவ்வித சொத்தும் இல்லை. வாழ்க்கைத் தரமோ பாதாளத்தை நோக்கி வீழ்கிறது. ஆனால் தொழிலாளி தன் உயிரையும் உரிமையையும் பாதுகாத்துக்கொள்ளக் கூட எவ்வித தொழிற்சங்கத்திலும் செயல்படக் கூடாது என தடுக்கிறார்கள்.
தொழிலாளர்களை ஒடுக்கும் சாம்சங்
இந்நிலையில்தான் 1,25,000 தொழிலாளர்கள் உள்ள கொரிய சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தின் தலைமையில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால், சாம்சங் நிறுவனமோ 25% தொழிலாளர்கள் மட்டுமே தேசிய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் யூனியன் உறுப்பினர்களாக உள்ளார்கள், பெரும்பான்மை இல்லை என காரணம் காட்டி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவே தயாரில்லை, தனது அடக்குமுறையை தொடர்ந்தது. அங்கேயே அந்த நிலைமை என்றால், தமிழ்நாட்டில் 1723 தொழிலாளர்களில் பெரும்பான்மையாக 1550 தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார்கள். பெரும்பான்மையாக இருந்தும் சங்கத்தை அங்கீகரித்து பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது. கமிட்டி முறை என்று நிறுவனமே தனக்கு தோதான ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அதில் இணைய நிர்ப்பந்திக்கிறது. போராடுபவர்களை மிரட்டுகிறது. வேலைக்கு வர இருப்பவரை தடுத்து நிறுத்தி போராட்டத்திற்கு அழைத்து சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், பணிக்கு ஊழியர்கள் திரும்பாவிட்டால் அடையாள அட்டை முடக்கப்படும், தீபாவளி பரிசு வழங்கப்படாது, போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு போனஸ் தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் இரண்டு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. தொழிலாளர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க அவர்களின் வீடுகளுக்கு நொறுக்குத் தீணிகள் உள்ளிட வீட்டுப் பொருட்களை வீடு தேடி அனுப்புகிறது. அவர்களின் கணவர்களை தொழிற்சங்கத்தை விட்டு வெளியேறி வேலைக்கு போக சொல்லும்படி அவர்களிடம் பேரம் பேசுகிறது.
குரல்வளையை நசுக்கும் திராவிட மாடல் திமுக ஆட்சி
தொழிலாளர்களின் குறைகளை எல்லாம் கோரிக்கையாக வைத்து சரிசெய்ய ஆகஸ்ட் மாதம் நிர்வாகத்திடம் கோரினார்கள். கண்டுக்கொள்ளக்கூட தயாரில்லை. சங்கத்தை தொடங்கி பதிவு செய்ய மனு கொடுக்கப்பட்டும் இதுவரையில் திமுக அரசின் பதிவுத்துறை நிர்வாகம் பதிவு செய்ய மறுத்து வருகிறது. சாம்சங் நிறுவனம் தன் நிறுவனத்தின் பெயரை இணைத்து தொழிற்சங்கத்திற்கு பெயர் வைக்கக் கூடாது என்று உப்புச்சப்பில்லாத காரணத்தை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்நிலையில்தான் செப்டம்பர் 16ம் தேதி போராட்டத்திற்கு அனுமதி கோரி செப்டம்பர் 13ல் காவல்துறைக்கு தொழிற்சங்கம் மனு கொடுத்தது. அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் செப்டம்பர் 15 மதியமே சமூக நீதி திராவிட மாடல் அரசின் காவல்துறை ரத்து செய்தது. மறுநாள் தொழிற்சங்க அலுவலகத்திற்கு வந்த தொழிற்சங்கத் தலைவர் முத்துகுமாரிடமிருந்து செல்போன், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறித்துக்கொண்டு கைது செய்து, இரகசியமாக அடைத்து வைத்தது. சாம்சங் நிறுவனத்திடம் திராவிட மாடல் அரசுக்கு அவ்வளவு விசுவாசம். அப்போதும் குரூரம் அடங்காமல், பேருந்துகள், ஹோட்டல்கள் என பொது இடங்களில் பார்த்த தொழிலாளர்களை எல்லாம் தொடர்ச்சியாக கைது செய்தார்கள். போராட்ட கூடாரத்தை கலைத்து போட்டார்கள். செப்டம்பர் 18 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேசிய மற்றும் மாநில தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கும் அனுமதி மறுத்து, அங்கு கூடியவர்களை எல்லாம் கைது செய்தது.
சிஐடியு பொதுச்செயலாளர் தபன் சென் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், தொழிற்சங்க சட்டம் 1926, தொழில் தகராறு சட்டம் 1947 மற்றும் ILO உடன்படிக்கைகள் எண். 87 மற்றும் 98 ஆகியவற்றின் கீழ் தொழிலாளர்களின் உரிமைகளை சாம்சங் அப்பட்டமாக மீறுகிறது என்று சென் குற்றம் சாட்டியிருந்தார். இந்த ஆட்சியின் செவிகளுக்கு இது செவிடன் காதில் ஊதிய சங்கு போலதான். ஸ்டாலின், 10 நாட்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்து அங்குள்ள கார்ப்பரேட்டுகளிடம் அவர்களே வியக்கும் அளவிற்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கிறேன் என்று மனம் குளிர வாக்குறுதிகள் கொடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைத்தார். இந்த காலனியதாசர்களுக்கு தொழிலாளர்கள் உரிமைகளைக் கேட்டால் எரிச்சல்தான் வரும். எங்கே தனது அந்நிய முதலீட்டு ஈர்ப்பு சுற்றுலாவுக்கு பங்கம் வந்துவிடுமோ, இங்கே உள்ள சாம்சங் நிறுவனம் வருத்தப்படுவார்களோ என்று தன் அதிகாரத்தை எல்லாம் தொழிலாளர்கள் மீது ஏவி அடக்குகிறது. பாசிச மோடி ஆட்சியின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் இந்த பிரச்சினையை தமிழக அரசே பேசி முடிக்க கோருகிறது. ஆனால் சாம்சங் நிறுவனமோ தொழிலாளர்களிடம் பேசுவதற்கே தயாரில்லை. நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு நிர்ப்பந்திக்க முடியும். ஆனால் இந்த ஒடுக்குமுறைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் நழுவிக்கொள்கிறது.
அமெரிக்க ஏகபோகத்திற்கு இந்தியாவை களமாக்கும் மோடி ஆட்சி
உலகளவில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடக்கும் பனிப்போரில் அமெரிக்கா சிப் தயாரிப்பு துறையில் தனது மேலாதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள கொரியா, சவுதி அரேபியா, இந்தியா போன்ற நாடுகளை பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. பைடன் ஆட்சி சாம்சங் நிறுவனம் அமெரிக்க டெக்சாசில் சிப் தயாரிக்க நிறுவனம் அமைக்க 640 கோடி டாலர் முதலீடாக வழங்க முடிவு செய்துள்ளது. அதே போல் இந்தியாவை எலக்டிரானிக்ஸ் தயாரிப்பு குறிப்பாக சிப் தயாரிப்பில் ஆசியாவின் மையமாக (hub) மாற்ற 6000 கோடி ரூபாய் உடனடியாக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. பாசிச மோடி ஆட்சி இஸ்ரேல் எலக்டிரானிக்சுடன் இணைந்து அதானி 1000 கோடி ரூபாய் முதலீடு செய்வது, எல்&டி நிறுவனம் 2400 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டம், ஜப்பானுடன் இணைந்து டாட்டா நிறுவனம் 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டம், அமெரிக்காவின் 2022 ஆம் ஆண்டு சிப்ஸ் சட்டத்தின் (CHIPS Act, 2022) அடிப்படையில் இந்தியாவில் உற்பத்தி ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் போட்டுள்ளது, தைவான் நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்திருப்பது, இப்படி அமெரிக்க ஏகாதிபத்திய அணியில் செயல்படுகின்ற நாட்டின் நிறுவனங்களை எல்லாம் இந்தியாவில் எலக்டிரானிக்ஸ் துறையில் முதலீடு செய்ய மோடி அரசு திறந்துவிட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம் எனும் காலனிய மண்டலங்களை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இவையெல்லாம் ஏகாதிபத்தியங்கள் புதிய காலனியத்தின் சுரண்டலுக்கு உருவாக்கப்பட்ட உலகமயக், தனியார்மய, தாராளமயக் கொள்கையின் தொடர்ச்சியாகவே செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. உலகமயக் கொள்கை அமல்படுத்த தொடங்கிய பிறகு 90களுக்கு முன்பிருந்த தொழிற்சங்க உரிமைகளை எல்லாம் ஒழித்துகட்டியது அன்றைய காங்கிரஸ் ஆட்சி. பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் கொள்ளையிட்டு ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளிடம் வாரிக்கொடுத்தது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த பாசிச மோடி ஆட்சி, 25 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ததை, வெறும் 8 ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக் காடாக இந்தியாவை மாற்றி இருக்கிறது. தொடர்ந்து வெறிகொண்டு சேவை செய்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு அவர்களுக்கு எல்லா வசதிகளையும், சலுகைகளையும் ஏற்படுத்தி தருகிறது. அதில் பெரும்பகுதி முதலீடுகளை ஏகாதிபத்தியங்களிடமே கடன் பெற்று இந்தியா முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்த கார்ப்பரேட்டுகளுக்கு உகந்த முறையில் மாற்றியமைக்கவே தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக 10 மணி நேரமாக மாற்றியமைக்கவும், தொடர்ந்து பல மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திப்பதற்கும் என அனைத்து உரிமைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்க முயற்சிக்கிறது. நிரந்தர வேலையை ஒழித்துக்கட்டி காண்டிராக்ட் முறையை நிரந்தரமாக்கவும் அதற்கு உகந்த முறையில் ஏற்கெனவே உள்ள தொழிலாளர் நலச் சட்டங்களை எல்லாம் நீக்கிவிட்டு அதற்கு மாற்றாக 4 தொழிலாளர் சட்டத்தை உருவாக்கி அதை அமல்படுத்த மோடி ஆட்சி தயார் நிலையில் வைத்திருக்கிறது. கம்பெனி சட்டங்களைத் திருத்துகிறது. அவர்கள் நினைத்த நேரத்தில் நிறுவனங்களை மூடிவிட்டு தொழிலாளர்களுக்கு எவ்வித பணிப்பாதுகாப்பும் இல்லாமல் வெளியேற திவால் சட்டத்தை திருத்துகிறது.
இந்த நிலை ஏதோ சாம்சங் நிறுவனத்தில் மட்டுமல்ல, இன்று இந்தியாவில், ஏன் உலகம் முழுவதுமுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையே இதுதான். சென்ற வருடம் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் போராட்டமாக இருந்தாலும், பிரான்சில் அதே காலத்தில் நடந்த தொழிலாளர்களின் போராட்டமும் ஒரே கோரிக்கைக்கானதே. தற்போது கொரிய சாம்சங் தொழிலாளியின் போராட்ட கோரிக்கையும் அதேதான்.
நெருக்கடி என்ற பேரால் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம்
உலகம் முழுவதும் உள்ள பொது நெருக்கடியை காரணம் காட்டி அதிலிருந்து மீள்வது என்ற பேரால் தொடர்ந்து ஆட்குறைப்பு செய்துகொண்டிருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய மிகப் பெரிய கார்ப்பரேட்டுகள் இன்று அதி நவீன செயற்கை நுண்ணறிவு, ரோபோக்களை பயன்படுத்துவது என்ற முடிவினை எடுத்திருக்கிறது. இதை நெருக்கடிக்கு தீர்வாகவும் ஏகாதிபத்தியவாதிகள் பார்க்கிறார்கள். இது பயன்பாட்டுக்கு வருவதால் உலகம் முழுவதும் எல்லா நிறுவனங்களிலிருந்தும் சுமார் 30% தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்றுவது என்ற முடிவினை எடுத்திருக்கிறது.
இந்நிலையில்தான் சாம்சங் நிறுவனமும் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களில் 30% தொழிலாளர்களை வெளியேற்றுவது என்ற முடிவினை எடுத்துள்ளது. ஏற்கெனவே இந்தியாவின் நொய்டாவில் செயல்பட்டுக்கொண்டிருக்கிற சாம்சங் நிறுவனம் ஏற்கெனவே இருந்த 50,000 தொழிலாளர்களை 10,000 தொழிலாளர்களாக சில வருடங்களுக்கு முன்புதான் குறைத்திருந்தது.
இந்த ஆட்குறைப்பு பொதுபோக்காக மாறப் போகிறது. தொழிற்சங்கத்தின் கூலி உயர்வு போராட்டத்திற்கும் அப்பால் தொழிலாளியாக இருக்க அனுமதிக்கப் போகிறார்களா இல்லை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் துரத்தப் போகிறார்களா என்ற பிரச்சினை முன்னுக்கு வரப்போகிறது. இந்நிலையில் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் இல்லை என்றால் அனாதையாக கைவிடப்படுவார்கள். தொழிலாளர்களுக்கு இருக்கின்ற ஒரு கூட்டுப் பாதுகாப்பு இந்த தொழிற்சங்கம் மட்டுமே. இந்த நெருக்கடியினை நமது தலையில் சுமத்துவதற்கு தோதான பாசிச ஆட்சியை அமைப்பதுதான் எல்லா ஆட்சியின் திட்டமாக மாறிவிட்டது.
நிதிமூலதன அடிமைகளான குஜராத் மாடல், திராவிட மாடல் ஆட்சிகளை எதிர்த்த அரசியல் போராட்டமாக உயர்த்துவோம்
இன்று கொரியாவிலும், இந்தியாவிலும் நடக்கும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் உலகம் முழுவதுமே பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த போராட்டத்தை சாம்சங் கார்ப்பரேட் ஒடுக்குவது ஒரு புறம், மறுபுறம் பாசிச பாஜக குஜராத் மாடல் ஆட்சியும், திராவிட மாடல் திமுக ஆட்சியும் அந்நிய மூலதனக் குவிப்புக்காக தொழிலாளர்களுக்கு எதிரான கொத்தடிமை ஒப்பந்தங்களை ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளிடம் மண்டியிட்டு செய்துகொள்கிறது. அதற்காக தொழிலாளர்களின் உரிமைகளை, நலன்களை காவுகொடுக்கிறது. நேரடியாக தொழிலாளர்களின் போராட்டத்தை திராவிட மாடல் ஆட்சி ஒடுக்குகிறது. போராட்டத்திற்கு தலைமை தாங்குகிற கட்சியும் கூட்டணி தர்மம் என்ற பேரால் ஆட்சியாளர்களை எதிர்த்த போராட்டமாக இல்லாமல் காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான போராட்டமாக குறுக்கிவிடுகிறது. 7ஆம் தேதி அன்று சாம்சங்குடன் திமுக அமைச்சர்களும் இணைந்து தொழிலாளர் விரோத துரோக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அதை எதிர்த்து தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராடினாலும், இந்த திமுக ஆட்சியின் கார்ப்பரேட்டும் சேவை செய்யும் கொள்கை இதுதான் என்பதை போராட்டத்திற்கு தலைமை ஏற்கும் கட்சிகள் அம்பலப்படுத்தத் தயாரில்லை. குஜராத் மாடல் வழியில் இந்த திராவிட மாடல் ஆட்சியும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்ய பாசிச வழிமுறைகளை கையாள்கிறது என்பதை ஏற்க மறுக்கிறார்கள். இது தொழிலாளர்களின் உரிமையினை மீட்க உதவாது.
ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கு எதிராகவும், நிதி மூலதனத்தின் சுரண்டலுக்கும், கொத்தடிமை ஒப்பந்த வேலைமுறைக்கும், அதற்கு சேவை செய்கின்ற இந்த பாசிச மோடி ஆட்சியையும், திராவிட மாடல் திமுக ஆட்சியையும் எதிர்த்த போராட்டத்திற்கு அனைத்து உழைக்கும் மக்களையும் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து நடத்தும் போராட்டத்தின் மூலமே முறியடிக்க முடியும். அதற்கான தொடக்கமாக இந்த சாம்சங் தொழிலாளிகளின் போராட்டத்தை ஆதரிப்போம். அந்த தொழிலாளர்களோடு அனைத்து மக்களும் ஆதரவு கரம் நீட்டி இணைந்து போராடுவோம்.
- செந்தளம்