வினவு கட்டுரைக்கு மறுப்பு

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

வினவு கட்டுரைக்கு மறுப்பு

அண்மையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பாசிச பாஜகவை தேர்தலில் வீழ்த்துவது எப்படி?? எனும் தலைப்பில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த பிரசுரத்தை பல இயக்கங்கள் ஆதரித்ததாக குறிப்பிட்டு எமது அமைப்பின் பெயரையும் சேர்த்து வினவு தளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

வினவு கட்டுரையை படிக்க - இங்கே சொடுக்கவும்

அந்த பிரசுரத்தை அதுவரை வாசிக்காத எமது அமைப்பு எந்த கருத்தையும் சொல்லாத நிலையில் நாங்கள் வாசித்துவிட்டு ஆதரவு தெரிவித்ததாக பொய்யான தகவலை கூறியுள்ளனர். ஆகவே அந்த தகவலை மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அதிகாரபூர்வமாக மறுக்கிறது. 

இதன் பிறகு பிரசுரத்தை வாசித்த எமது அமைப்பு பின்வரும் விமர்சனங்களை அரசியல் ரீதியாக முன்வைக்கிறது. 

மக்கள் அதிகாரம் அமைப்பின் இந்த பிரசுரம் பாசிசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டத்தை முற்றாக கைவிட்டு அடையாள அரசியலை முன்வைத்துள்ளது. பிரசுரம் முழுக்கவே மார்க்சியத்திற்கு எதிரானதாக உள்ளது. 

பாசிசம் என்பது நிதிமூலதனத்தின் அப்பட்டமான சர்வாதிகாரம் எனும் மார்க்சிய அடிப்படை அதில் சுத்தமாக இல்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் தோற்றத்தில் இருந்து பாசிசத்தை வரையறுக்கிறது. வர்க்க கண்ணோட்டமற்று பார்ப்பனிய பாசிசம், மனுதர்மம், சனாதனம் எனும்  மேற்கட்டுமான அடையாளங்களை  பாசிசத்துடன் இணைத்து  வரையறையாக  முன்வைத்துள்ளது. 

அதாவது வினவு  வர்க்க அடிப்படையில் பாசிசத்தை  வரையறுக்கவில்லை.    ஆகவேதான் இந்தியா கூட்டணியை பாஜகவில் இருந்து வேறுபடுத்தி பார்க்கிறது. இரண்டு கட்சிக்கும் ஒரே வர்க்க அடித்தளம்தான்  என்பதை காண மறுக்கிறது. அம்பானி, அதானி பற்றி ஓர் இடத்திலும் பாசிசம் பற்றி வேறோர் இடத்திலும் தனித்தனியாக விளக்குகிறது. இந்தியா மீதான அமெரிக்காவின் புதிய காலனிய நிதி மூலதன ஆதிக்கம், இந்திய தரகு மூலதன ஆதிக்கம் இவற்றின் ஏகபோக உருவாக்கமே பாசிசத்தின் பொருளியல் அடிப்படை; இந்த பொருளியல் அடிப்படையில் இருந்து ஆய்வு செய்தால்  காங்கிரசு, பாஜக கட்சிகள் ஒரே வர்க்க அடிப்படையைத்தான் கொண்டுள்ளன என எளிதில் புலப்படும். ஆனால் வினவு பெரியாரின் கருத்துகளைக் கொண்டு ஆய்வு செய்து பார்ப்பனிய பாசிசம் என்பதை முன்வைக்கிறது. ( மார்க்சியத்தையும் பெரியாரையும் கலக்கும் இந்த ஆய்வு முறையே  சித்தாந்த கலைப்புவாதம் ஆகும். இதை கலைப்புவாதம் என  அறியாமல் கட்சி கலைந்து போவதை கலைப்புவாதம் என்று  கலைப்புவாதம் குறித்த தமது  கட்டுரையில் கூறுகிறது.) 

தேர்தல்  பிரசுரத்தில்  மக்கள் அதிகாரம்  "இந்த தேர்தல் யார் வர வேண்டும் என்பதற்கானதல்ல. யார் வரக்கூடாது என்பதற்கானது"  என்று மு .க.ஸ்டாலின்   கூறியதை எடுத்துக்காட்டுகிறது. இதில் இருந்துதான் தமது நிலைப்பாட்டை பின்வருமாறு  முன்வைத்துள்ளது. 

"ஆகையால் எதிர்க்கட்சிகள் கார்ப்பரேட் கட்சிகளாக இருக்கலாம். ஊழல் கட்சிகளாக இருக்கலாம். பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் கட்சிகளாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்திலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட மக்கள் விரோத தன்மையை இயல்பாகக் கொண்ட பாசிச அமைப்பு எனில் அது ஆர்.எஸ்.எஸ் பாஜக சங்பரிவார கும்பல்தான். ஆகவேதான் ஆர்.எஸ்.எஸ் பாஜகவை இந்தியாவின் முதல் எதிரி என்கிறோம் " என்கிறது. 

அதாவது கார்ப்பரேட் நலன்களில் இருந்து பாசிசத்தை பார்க்க கூடாது ;  ஆர்.எஸ்.எஸ்  பார்ப்பனியம்தான் பிரதான எதிரி   என்பதன் மூலம் மார்க்சியத்தை மறுக்கிறது. அதாவது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரமால தடுக்க வேண்டும். அதற்கு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்   என்பதைத்தான் நேராக சொல்லாமல்  மறைமுகமாக முன்வைக்கிறது. காங்கிரசு கட்சி பார்ப்பனியத்தையும், இந்துத்துவத்தையும் கொள்கையாக  ஏற்றுக்  கொண்ட கட்சிதான்  என்பதை வசதியாக மறந்துவிடுகிறது. 

ஆகவேதான் காங்கிரசு கட்சியை  பாசிச கட்சி என வரையறுக்கவில்லை. மேலும் அதன் முந்தைய ஆட்சிகால பாசிச நடவடிக்கைகளுக்கு பாவமன்னிப்பு வழங்கிவிட்டது. பார்ப்பனியம், சனாதனம் என திருமாவளவனும் உதயநிதியும் மு.க.ஸ்டாலினும் மேடைகளில் பாஜக குறித்து என்ன பேசுகிறார்களோ அதையேதான் வினவும் முன்வைத்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி குறித்தும் அதன் வர்க்க அடித்தளம் குறித்தும் இதில் ஒரு விமர்சனமும் இல்லை. 

இந்த தேர்தல் முறையின் மூலம் ஆட்சி மாறினால்  பாசிசத்திற்கு குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்த இயலும் என்று கூறி தேர்தல் முறை மீது இவ்வாறு நம்பிக்கை ஊட்டுகிறது. 

"அவ்வாறு இக்கும்பல் (பாஜக) வீழ்த்தப்படுவதானது பாசிசத்திற்கு குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தும். பாசிசம் ஏறித் தாக்கிவரும் நிகழ்வில் ஒரு தடையை ஏற்படுத்தும் " என்கிறது வினவு.

வலது சந்தர்ப்பவாதமாக இவ்வாறு விளக்கிவிட்டு உடனே அடுத்த வரியில், "எனினும் தேர்தல் கட்டமைப்பிற்குள் மோடியையும் பாஜகவையும் வீழ்த்திவிட முடியுமா என்பதே நம்முன்பு உள்ள கேள்வி?” என்று இடது வேடம் போடுகிறது.

மேலும் "ஆளும் கட்சி தோல்வி முகம் அடைந்திருப்பது, அத்துடன் எதிர்க்கட்சிகள் தங்களை எந்தளவுக்கு மாற்றாக முன் நிறுத்துவது ஆகிய இரண்டும் எந்தளவுக்கு பொருத்தமாக அமைகிறதோ, அந்தளவுக்கு ஆளும் கட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்படுவதும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதும் சாத்தியமாகும் " என்கிறது.

தன்னை வலிமையான மாற்றாக முன் நிறுத்தினால் வெற்றி பெறலாம் என எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவதற்கு ஆலோசனை வழங்குகிறது. 

பாஜக ஆட்சியை வீழ்த்துவதே பாசிசத்திற்கு இழப்பை ஏற்படுத்த முடியுமாம் ! அதாவது  பாசிசத்தை வெறும் ஆட்சி வடிவத்தோடு மட்டும்  தொடர்புபடுத்தி பார்க்கிறது. கார்ப்பரேட் ஏகபோகம், அதை பாதுகாக்கும்  அரசு எந்திரம் ,  இவற்றை நிர்வகிக்கும் ஆட்சி முறை என்ற சங்கிலியில் வெறும் ஆட்சி மாற்றம் பாசிசத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் என்பது மார்க்சியம் அல்ல. அரசியல்  கட்சிகளை வர்க்க பின்புலத்தில் இருந்து பிரித்து பார்ப்பது அடிப்படை மார்க்சியத்திற்கு எதிரானது. 

தீர்வாக புரட்சியின் மூலம் அமையும் மக்கள் ஜனநாயக குடியரசை முன்வைக்கவில்லை. மாறாக உழைக்கும் மக்கள் இந்த நாடாளுமன்றத்தில் அதிகாரம் பெறும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசுதான் தீர்வு என்று கூறி வலது சந்தர்ப்பவாத பாராளுமன்றவாதத்தைத்தான் முன்வைத்துள்ளது. அந்த குடியரசிற்கான பாதை என்ன?? எந்த விளக்கமும் இல்லை. கட்சிகளுக்கான வாக்குரிமை சதவிகிதம் அடிப்படையில் தேர்தல் முறை மாற்றப்படவேண்டும் என ஓர் இடத்தில் கூறுகிறது. அது குறித்தும் விளக்கமில்லை. 

உண்மையில் இந்த பிரசுரத்திற்கு இந்தியா கூட்டணியை வெற்றிபெற வைப்பது எப்படி?? என்றுதான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். 

ஆமாம். மேலே சொன்னது போக, அக்கூட்டணி மக்கள் மத்தியில் ஏன் செல்வாக்கு பெறவில்லை? என்ன மாதிரியான போராட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும்?? ஏன் நடத்தவில்லை?? என ஆலோசனை கூறுவதன் மூலம் அக்கூட்டணி அவற்றை செய்ய வாய்ப்புள்ளதாக ஒரு மாயாவாதத்தையும் அது வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது வினவு.

சமரச சக்தியான நாம் தமிழர் கட்சியை அரைப் பாசிச கட்சி என வரையறுக்கும் வினவு ஆளும் வர்க்க கட்சியான காங்கிரசை கால் பாசிச கட்சி என்று கூட வரையறுக்கவில்லை. நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசன் போன்ற சமரச சக்திகளை இலக்கு சக்தியாக தாக்குகிறது. இலக்கு சக்தியான காங்கிரசை பாஜகவுக்கு மாற்றா?? இல்லையா?? என நேராக சொல்லாமல் கள்ள மௌனம் காப்பதன் மூலம் இந்தியா கூட்டணியை மாற்றாக கள்ளத்தனமாக முன்வைக்கிறது வினவு. 

மருதையன் அணி நேராக இந்தியா கூட்டணிதான் மாற்று என்கிறது. வினவு அணியோ மறைமுகமாக மாற்று என்கிறது. மருதையன் அணி புரட்சிகர முகமூடியை கழற்றிவிட்டது. வினவு இன்னமும் முகமூடியை கழற்றவில்லை. அவ்வளவுதாம் வேறுபாடு. மக்கள் அதிகாரம் எனும் பெயரில் வெவ்வேறாக பிரிந்து செயல்பட்டாலும் , மக்கள் அதிகாரம் எனும்  தன்னியல்பு செயல்தந்திரத்தை இரு அமைப்புகளும் இன்னமும்  பின்பற்றுவதே இந்த ஒற்றுமைக்கு காரணம். ஐக்கிய முன்னணியில் நாம்தாம் ( கம்யூனிஸ்ட் கட்சி ) தலைமை வகிக்க வேண்டும் என்று கோருவது குறுங்குழுவாதம்( அதாவது திமுக போன்ற காலி பெருங்காய டப்பா உட்பட பார்ப்பன எதிர்ப்பு பேசும் யாரும் தலைமை தாங்கலாம்) ;   பார்ப்பனிய பாசிசம் அல்லது கார்ப்பரேட் காவி பாசிசம் எனும் தரகு முதலாளித்துவ கோட்பாடு  போன்ற  வலது சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை முன்வைக்கும் மக்கள் அதிகாரம் எனும் செயல்தந்திரத்தை இவ்வமைப்புகள்  பின்பற்றுவதே இந்த ஒற்றுமைக்கு காரணம். 

ஆகவே இந்த பிரசுரம் மார்க்சியத்திற்கு எதிரானது என மஜஇக தனது நிலைபாடாக அறிவிக்கிறது.

- மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்