ஆபரேஷன் சிந்துர்: சீன ஆயுதங்களின் வலிமையைக் காட்சிப்படுத்தியதாக அமெரிக்க நாடாளுமன்றக் குழு அறிவிப்பு

வெண்பா (தமிழில்)

ஆபரேஷன் சிந்துர்:  சீன ஆயுதங்களின் வலிமையைக் காட்சிப்படுத்தியதாக அமெரிக்க நாடாளுமன்றக் குழு அறிவிப்பு

'நான்கு நாள் மோதலில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் இராணுவ வெற்றி, சீன ஆயுதங்களின் வலிமையைக் காட்சிப்படுத்தியது': அமெரிக்க நாடாளுமன்றக் குழு.

அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் புதிய அறிக்கை ஒன்று, 'ஆபரேஷன் சிந்துர்' (Operation Sindoor) மீது புதிய கவனத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுடன் நடந்த நான்கு நாள் இராணுவ மோதலில் பாகிஸ்தானின் வெற்றியானது, பெரும்பாலும், அதிநவீன சீன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாலேயே சாத்தியமானது. அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வுக் குழுவின் (US-China Economic and Security Review Commission) 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில், இந்த மோதலை சீனா தனது அதிநவீன பாதுகாப்பு ஏற்றுமதிகளைச் சோதிக்கவும், பரீட்சித்துப் பார்க்கவும், விளம்பரப்படுத்தவும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டது என்பதை எடுத்துரைத்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நிகழ்ந்த மே 2025 இந்தியா-பாகிஸ்தான் மோதலானது, இவ்விரு அணு ஆயுத வல்லமை பெற்ற அண்டை நாடுகளுக்கிடையே கடந்த தசாப்தங்களில் நடந்த மிகத்தீவிரமான இராணுவ மோதல்களில் ஒன்றாகும்.

"நான்கு நாள் மோதலில் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானின் இராணுவ வெற்றி சீன ஆயுதங்களின் வலிமையைக் காட்சிப்படுத்தியது" என்று ஆய்வறிக்கை கூறுகிறது. சீனா இந்த மோதலைத் தூண்டியிருக்காவிட்டாலும், அது "தன்னுடைய ஆயுதங்களின் நுட்பத்தைச் சோதித்துப் பார்க்கவும், விளம்பரப்படுத்தவும், இந்த மோதலைச் சந்தர்ப்பவாதமாக பயன்படுத்திக் கொண்டது; இது இந்தியாவுடனான அதன் தொடர்ச்சியான எல்லைப் பதட்டங்களின் பின்னணியில் பயனுள்ளதாக அமைந்தது" என்று அந்தக் குழு தெரிவிக்கிறது.

"இந்தியாவால் பயன்படுத்தப்பட்ட பிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்களை வீழ்த்துவதற்குப் பாகிஸ்தான் சீன ஆயுதங்களைப் பயன்படுத்தியது, சீன பாதுகாப்புத்துறை ஏற்றுமதிகளுக்கு குறிப்பிட்ட விற்பனை வாய்ப்பாகவும் மாறியது" என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

"இந்த மோதலுக்குப் பின் வந்த வாரங்களில், சீனத் தூதரகங்கள் இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அதன் ஆயுத தளவாடங்களின் வெற்றிகளைப் பாராட்டின, ஆயுத விற்பனையை வலுப்படுத்த முயன்றன" என்று அந்தக் குழு அதற்கு ஆதாரமாக இதை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், "இந்த மோதல்தான், சீனாவின் நவீன ஆயுத அமைப்புகளான HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு (air defense system), PL-15 வான்-வான் ஏவுகணைகள் (air-to-air missiles), மற்றும் J-10 போர் விமானங்கள் (fighter aircraft) ஆகியவை முதன்முறையாக நேரடியான போரில் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பமாகும், இது உண்மையான கள சோதனையாக செயல்பட்டது" என்று அறிக்கை எடுத்துரைக்கிறது.

இந்த இராணுவ ஆயுதங்களின் காட்சிப்படுத்தல், சீனாவின் வணிக நோக்கங்களுக்கும் உதவுகிறது என்று ஆய்வுக் குழு எச்சரிக்கிறது. இதன் மூலம், "ரஃபேல் ஜெட் விமானங்களை ஏற்கனவே கொள்முதல் செய்யும் இந்தோனேசியாவின் திட்டத்தை சீனத் தூதரக அதிகாரிகள் நிறுத்த வைத்துள்ளனர். இது மற்ற பிராந்திய நாடுகளின் இராணுவக் கொள்முதல்களில் சீனாவின் செல்வாக்கை மேலும் அதிகரித்துள்ளது".

இந்த நிகழ்வைச் சீனாவின் பிராந்திய உத்தியின் பின்னணியில் இருந்து இந்த அறிக்கை பார்க்கிறது. சீனா பாகிஸ்தானுக்கு இராணுவ தளவாடங்களை அதிகரித்து வருவதுடன், உளவுத்துறை மற்றும் செயல்பாட்டு இணைப்புகளையும் வலுப்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டுவதோடு இந்தியாவுக்கான பரந்த அச்சுறுத்தல்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

"அடிப்படையில், எல்லைத் தகராறுக்கு நீண்ட காலத் தீர்வைக் காண்பதில் சீனாவும் இந்தியாவும் முன்னுரிமை அளிக்கும் அளவுகளில் சமச்சீரற்ற தன்மை உள்ளது" என்று அறிக்கையின் மற்றொரு பகுதி குறிப்பிடுகிறது.

"இந்தியா எல்லைப் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வை விரும்புகிறது, அது சலுகையாகக் கருதப்படாத ஒரு தீர்வாகவும், சீனாவை உறுதியாக எதிர்கொள்ள வேண்டும் என்ற உள்நாட்டு அரசியல் அழுத்தத்தைப் போக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்" என்ற உண்மையைக் கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், "சீனா உயர் மட்ட, நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி பகுதித் தீர்வுகளை மட்டும் முன்னெடுக்கிறது" என்றும் அது கருதுகிறது.

"இந்தியா அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் உள்ள குழப்பத்தினால், குறுகிய கால தற்காப்பு நடவடிக்கையாகத்தான் சீனா-இந்தியாவின் 2025 உடன்படிக்கைகள் உள்ளதா, அல்லது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான நீண்ட கால மாற்றமா" என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறுகிறது.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://thewire.in/world/pakistans-military-success-over-india-in-its-four-day-clash-showcased-chinese-weaponry-us-congressional-panel

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு