இந்தியப் பெருங்கடலில் ஐரோப்பிய ஒன்றிய கடற்படை மற்றும் இந்தியக் கடற்படையின் கூட்டுப் பயிற்சி
விஜயன் (தமிழில்)

ஐரோப்பிய ஒன்றிய கடற்படைப் படையின் (EUNAVFOR) ATALANTA நடவடிக்கை பிரிவும், இந்தியக் கடற்படையும் இணைந்து இந்தியப் பெருங்கடலில் ஒரு மாபெரும் கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டன. கடல்சார் பாதுகாப்பில் நிலவும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டது.
கூட்டு நடவடிக்கைகளைத் திறம்படப் பயிற்சி செய்வதிலும், ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதிலும், கடற்கொள்ளையர் எதிர்ப்புத் உத்திகள், பணயக்கைதிகளை மீட்பதற்கான விரிவான பயிற்சிகள் மேற்கொள்வதில்தான் இதன் பிரதானக் குறிக்கோள் அமைந்திருந்தது.
கடற்கொள்ளையர் தாக்குதல் ஒத்திகை
2025 ஜூன் மாதத் தொடக்கத்தில், கடற்கொள்ளையர்கள் ஒரு வணிகக் கப்பலைத் தாக்குவது போன்றதொரு மாதிரிச் சூழ்நிலையை உருவாக்கி இரு தரப்பினரும் கச்சிதமாக ஒத்திகை பார்த்தனர். இந்திய மற்றும் ஐரோப்பிய கடற்படைகள் எத்தகைய சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்பட முடியும் என்பதைச் சோதித்தறிவதும், உறுதியான கடற்கொள்ளையர் எதிர்ப்பு உத்திகளை வளர்த்தெடுப்பதும் இதன் தலையாய நோக்கங்களாக அமைந்தன.
இரு தரப்பிலிருந்த போர்க்கப்பல்களும், விமானங்களும் இப்பயிற்சியில் முனைப்புடன் பங்கேற்றன. இத்தாலியின் அன்டோனியோ மார்செக்லியா கப்பல், ஸ்பெயினின் ரெய்னா சோஃபியா போர்க்கப்பல், மற்றும் இந்தியாவின் திரிகண்ட் போர்க்கப்பல் ஆகியவை இவற்றில் பங்கேற்றன. ஓர் இந்தியக் கடல்சார் ரோந்து விமானமும், ஒரு ஹெலிகாப்டரும் இப்பணிக்குத் துணைபுரியப் பயன்படுத்தப்பட்டன.
இப்பயிற்சியின்போது, கப்பல்களும் விமானங்களும் கைகோர்த்துச் செயல்பட்டு, நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்தன; உளவுத் தகவல்களைத் திரட்டின; பணயக்கைதிகளை மீட்க விரிவாகத் திட்டமிட்டன; மட்டுமல்லாது முழுமையான செயல்விளக்கத்துடன் நடவடிக்கையைத் திறம்பட மேற்கொண்டன.
இக்கடற்படைப் பயிற்சியும், அதனுடன் தொடர்புடைய துறைமுக வருகையும் ஸ்பெயினில் உள்ள ரோட்டாவில் அமைந்துள்ள ATALANTA நடவடிக்கைப் பிரிவு தலைமையகத்தால், இந்தியக் கடற்படையின் ஒத்துழைப்புடன் மிக நுட்பமாகத் திட்டமிடப்பட்டன.
ஒரு பாரிய முன்னேற்றம்
"இந்தக் கூட்டுப் பயிற்சி ஒரு பாரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது," என்று ATALANTA படைத் தளபதி (Force Commander) RDML டேவிட் டா போஸோ கூறினார். "ATALANTA படைகளும் இந்தியக் கடற்படையும் இவ்வளவு நுட்பமான, சிக்கலான பயிற்சிகளை கடலில் மேற்கொண்டது இதுவே முதல் முறை. இது நமக்கிடையே நாளுக்கு நாள் பெருகி வரும் ஒத்துழைப்பில் உள்ள சீரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது; கடல்சார் பாதுகாப்புக்கு இது அத்தியாவசியம்", என்றார் டேவிட் டா போஸோ.
பயிற்சிக்கு முன்னதாக ஐரோப்பியக் கப்பல்களைப் பார்வையிட்டபோது, இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர், ஹெர்வ் டெல்ஃபின், இந்தச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். "ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்தியப் பெருங்கடல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியத்துவம் இந்தியாவிற்கும் உண்டு. அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல், அன்றாடச் செயல்பாடுகளிலும் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் விரும்புகின்றனர்," என்று அவர் கூறினார். இந்தியப் பெருங்கடலையும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தையும் சுதந்திரமாகவும், தங்குதடையின்றியும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க, ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது அத்தியாவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய ஒன்றியம்-இந்திய கடல்சார் ஒத்துழைப்பில் புதிய பரிமாணம்
உலக வர்த்தகத்திற்கும் உலகளாவிய பாதுகாப்புக்கும் இந்தியப் பெருங்கடல் ஒரு முக்கிய கடல்வழிப் பாதையாகும். இப்பகுதியில் கப்பல்கள் தங்குதடையின்றி, பாதுகாப்பாகச் சென்று வர வழிவகுப்பது மிகவும் இன்றியமையாதது. கடற்கொள்ளை, ஆயுதக் கடத்தல், சட்டவிரோத மீன்பிடித் தொழில் போன்ற பல பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்த்து ஒன்றிணைந்து செயலாற்ற ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் சம்மதித்துள்ளன.
இந்தக் கடற்படைப் பயிற்சி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகும். ATALANTA கப்பல்கள் மே 26 முதல் மே 31, 2025 வரை மும்பையில் முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்ததை அடுத்து, இக்கூட்டுப்பயிற்சி நிகழ்ந்துள்ளது. துறைமுக அழைப்புகள் என அறியப்படும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்களின் இத்தகைய வருகைகள், பாதுகாப்பு ஒத்துழைப்பின் அத்தியாவசிய அங்கமாகத் திகழ்கின்றன. இவை கடற்படைகள் ஒன்றுக்கொன்று இணக்கத்துடன் செயல்பட துணைபுரிகின்றன.
மார்ச் மாதத்தில், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் நான்காவது கடல்சார் பாதுகாப்பு உரையாடலை நடத்தின. கூடுதலாக, அவை பெரும்பாலும் 'கடந்து செல்லும் பயிற்சிகளை' (PASSEX) மேற்கொண்டுள்ளன; வெவ்வேறு கடற்படைக் கப்பல்கள் ஒரே பிராந்தியத்தில் இருக்கும்போது செய்யப்படும் எளிய பயிற்சிகள் இவை. நெருக்கடிச் சூழல்களில் கடற்படைகள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு விரைவாக ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை உறுதிப்படுத்துவதே இவற்றின் தலையாய நோக்கம்.
சமீப காலங்களில், கடலில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஒத்துழைப்பு இந்தியப் பெருங்கடலுக்கு அப்பாலும் விரிவடைந்துள்ளது. கினியா வளைகுடா மட்டுமல்லாது ஏடன் வளைகுடாவிலும் கூட்டாகப் பயிற்சிகளை நடத்தியுள்ளன. ATALANTA-ஆல் ஒருங்கிணைக்கப்படும் ஐ. நா.வால் செயல்படுத்தப்படும் உலக உணவுத் திட்டக் கப்பல்களுக்கான பாதுகாப்புப் பணிகளிலும் இந்தியக் கடற்படை துணை நிற்கிறது.
முடிவுரை
இந்தியப் பெருங்கடலில் நடந்த ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா இடையிலான இந்தக் கூட்டு கடற்படைப் பயிற்சி, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தகுந்த மைல்கல்லாகும். நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், இந்தியப் பெருங்கடலையும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தையும் பாதுகாப்பானதாக, சுதந்திரமானதாக, தங்குதடையற்றதாக வைத்திருக்க ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் உறுதி பூண்டுள்ளன. கடல்வழியில் நியாயமான சட்டதிட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான இவற்றின் பொதுவான உறுதிப்பாட்டையும், எதிர்காலக் கூட்டுச் செயற்பாடுகளுக்கு ஒரு பலமான அடித்தளம் உருவாகியிருப்பதையும் இந்தப் பயிற்சி எடுத்துக்காட்டுகிறது.
விஜயன் (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு