இந்தியா மீது டிரம்ப்பின் கூடுதலான 25% வரிவிதிப்பு: மொத்த வரி 50% ஆக உயர்வு

விஜயன் (தமிழில்)

இந்தியா மீது டிரம்ப்பின் கூடுதலான 25% வரிவிதிப்பு: மொத்த வரி 50% ஆக உயர்வு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதன்கிழமை இரவு, இந்தியாவிடமிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மேலும் 25 சதவீத வரி விதிப்பதாக அதிரடியாக அறிவித்தார். இந்தியா தொடர்ச்சியாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதற்கான தண்டனையாகவே இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். ரஷ்யாவிடமிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ எண்ணெய் கொள்முதல் செய்வதன் மூலம், உக்ரைனில் விளாடிமிர் புதின் நடத்தி வரும் போருக்கு நிதியாதாரம் ஈட்டித் தரும் பிற நாடுகளும் இதுபோன்ற கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாகவே, உக்ரைன் போரில் ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்குள் சமாதான ஒப்பந்தம் எட்டப்படாத பட்சத்தில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இப்புதிய நடவடிக்கையின் காரணமாய், அமெரிக்கச் சந்தைக்குள் நுழையும் இந்தியப் பொருட்களின் மீதான மொத்த வரிச்சுமை தற்போது 50 சதவீதத்தை எட்டியுள்ளது. இது சீனாவுக்கு விதிக்கப்படும் வரியை விட 20 சதவீதமும், பாகிஸ்தானுக்கு விதிக்கப்படும் வரியை விட 31 சதவீதமும் அதிகமாகும்.

இந்த அபராத வரி விதிப்பு, அடுத்த 21 நாட்களுக்குள் அமலுக்கு வரும்.

இந்தியா இதற்கு சற்றும் தாமதிக்காமல், தீவிர கண்டனத்தைப் பதிவு செய்தது. ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகளை மட்டுமே காரணம் காட்டி, அமெரிக்கா இந்தியாவை அநியாயமாக குறிவைப்பதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கையை "நியாயமற்றது, ஆதாரமற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று இந்தியாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெளிவுபடுத்திவிட்டோம். எங்களின் எண்ணெய் இறக்குமதிகள் சந்தைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. 140 கோடி இந்தியர்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் தலையாய நோக்கம்,” என்று செய்தித் தொடர்பாளர் தொடர்ந்து வலியுறுத்தி பேசியிருந்தார்.

பல நாடுகள் தங்கள் தேச நலன்களைக் கருதி ரஷ்ய எண்ணெயைக் கொள்முதல் செய்து வரும் சூழலில், இந்தியா மீது மேலதிக வரிச்சுமையை அமெரிக்கா விதிக்கத் துணிந்தது ஒருபோதும், எந்தவொரு நாட்டிற்கும் நடக்கக்கூடாத நிகழ்வு என்று இந்திய அரசு மேலும் குறிப்பிட்டது.

இந்தியாவை கலங்கடித்த டிரம்ப்பின் 50% வரி விதிப்பு உத்தரவு

இன்றைய தினத்தின்(ஆகஸ்ட் 6,) தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓர் அதிகாரப்பூர்வ ஆணையில் கையெழுத்திட்டார். அதில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து நேரடியாகவோ அல்லது பிற நாடுகளின் துணையுடனோ கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதாகச் சுட்டிக்காட்டியிருந்தார். இக்காரணத்தாலேயே, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் மீது மதிப்புசார் சுங்க வரி (ad valorem duty) என்றழைக்கப்படும் பெரும் வரியை விதிப்பது அத்தியாவசியம் என டிரம்ப் தீர்மானித்திருப்பதாகப் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான வர்த்தக உறவில் நிலவிய சிக்கல்கள் குறித்து டிரம்ப் கடும் சீற்றத்துடன் கருத்துத் தெரிவித்த ஒருசில மணிநேரங்களுக்குப் பிறகே, இந்த புதிய 50 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது டிரம்ப், "இந்தியா ஒரு நேர்மையான வர்த்தகப் பங்காளியாக இருந்ததில்லை. முன்னதாக, 25 சதவீத வரி விதிப்பதற்கு தீர்மானித்திருந்தோம். ஆனால், அவர்கள் தொடர்ந்து ரஷ்ய எண்ணெயைக் கொள்முதல் செய்து வருவதால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் வரியை வெகுவாக உயர்த்தப் போகிறேன் என்று நான் நினைக்கிறேன்," என்று சற்றும் தயங்காமல் தெரிவித்தார்.

இத்தகைய கருத்துகள், இரு பெரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகளுக்கு இடையிலான உறவில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், அவை உலக அரசியலையும், பல நாடுகளின் பாதுகாப்புச் சூழலையும் அடியோடு புரட்டிப் போடும் வல்லமை கொண்டவை. . இந்த நடவடிக்கைகள் இந்தியா, ரஷ்யா, பிரேசில், ஒருவேளை சீனாவையும் நெருக்கமாக்கி, பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்தி, உலக அரசியல் களத்தையே மாற்றி எழுதும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

டிரம்ப் மேற்கொண்ட இம்மாற்றங்கள், பாகிஸ்தானுக்கு கணிசமாகக் குறைந்த வரி விகிதத்தை (தற்போது வெறும் 19 சதவிகிதமாக) வழங்கியிருக்கிறது. அத்துடன், பாகிஸ்தானின் உள்நாட்டு எண்ணெய் வளங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கான எதிர்காலத் திட்டங்களை உள்ளடக்கிய புதியதோர் ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டார்.

உற்ற நண்பன் இந்தியா மீது டிரம்ப்பின் வரித் திணிப்பு

ஜூலை 30 அன்று, இந்தியா 25 சதவீத சுங்க வரியைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்காக விதிக்கப்படவிருந்த, இன்னும் முழுமையாக வரையறுக்கப்படாத ‘அபராத’வரியோடு சேர்த்து இது விதிக்கப்படும்.

அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் பல நாடுகள் மீது "பரஸ்பர வரிகளை" அமல்படுத்தப்போவதாக டிரம்ப் விதித்திருந்த கெடுவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பு வெளியானது. இந்த வரித் விதிப்பு முதலில் ஏப்ரல் மாதமே அறிவிக்கப்பட்டிருந்தாலும், பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகை செய்யும் பொருட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவின் "கடுமையான, எரிச்சலூட்டும் பணமல்லாத வர்த்தகத் கட்டுப்பாடுகளையும்" டிரம்ப் கடுமையாகச் சாடினார்.

அவர் கூறுகையில், “இந்தியா நமது நண்பன்தான். ஆயினும், பல்லாண்டுகளாகவே, நாம் அவர்களுடன் மிகக் குறைந்த அளவிலேயே வர்த்தகம் மேற்கொண்டு வந்துள்ளோம். இதற்குக் காரணம், இந்தியாவின் சுங்க வரிகள் வானளாவிய உயரத்தில் இருப்பதே. உலகிலேயே மிகக் கடுமையான வரிகளைக் கொண்ட நாடுகள் சிலவற்றில் இந்தியாவும் ஒன்றாகும். மேலும், பணம் சாராத, மிகவும் கடினமான, எரிச்சலூட்டும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் பிற எந்த நாட்டையும் விட இந்தியாவிலேயே அதிகம்” என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா உட்படப் பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து பொருட்களைத் தொடர்ந்து வாங்கி வருவதை இந்திய அரசு சுட்டிக் காட்டியது.

'நாங்கள் மட்டுமா வாங்குகிறோம்...' என்று வாதிடும் இந்தியா

உலகச் சந்தையின் இன்றைய நிலை கருதி, ரஷ்ய எண்ணெயைக் கொள்முதல் செய்வது "தவிர்க்க முடியாத ஓர் அத்தியாவசியம்" என்று இந்தியா வலியுறுத்தியது. இதற்கிடையில், இந்தியாவை விமர்சிக்கும் பெரும்பாலான நாடுகள் அத்தியாவசியமற்ற பொருட்களுக்காகவே இருந்தபோதிலும் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன.

2024இல் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவிடமிருந்து 67.5 பில்லியன் யூரோ மதிப்புள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) வாங்கியதை இந்தியா ஓர் உதாரணமாகச் சுட்டிக்காட்டியது.

வரிகளை மேலும் பன்மடங்கு உயர்த்துவேன் என்று டிரம்ப் அச்சுறுத்தல்கள் விடுத்த வேளையில், உக்ரைன் போர் வெடித்த பிறகு இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியபோது, உண்மையில் அமெரிக்காவே இந்த இறக்குமதிகளை ஊக்குவித்தது என்பதை இந்தியா அமெரிக்காவுக்கு நினைவூட்டியது. யுரேனியம் ஹெக்ஸாஃப்ளோரைடு, பல்லேடியம், உரங்கள், ரசாயனங்கள் போன்ற பல பொருட்களை அமெரிக்கா இன்றும் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது என்பதையும் இந்திய அரசு அழுத்தந் திருத்தமாகச் சுட்டிக் காட்டியது.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள், அண்மைக் காலங்களாக ஒருவித உரசலுக்கும், சலசலப்புக்கும் உள்ளாகி வருகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன. இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது அமெரிக்கா விதிக்கும் சுங்க வரிகளைக் (இறக்குமதி வரிகள்) குறைப்பதுதான் இந்த பேச்சுவார்த்தையின் முதன்மை நோக்கமாக இருந்தது.

இருந்தபோதிலும், அமெரிக்க விவசாயிகளுக்காகத் உள்நாட்டு விவசாயச் சந்தையைத் திறந்துவிட வேண்டும் என்ற அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இருப்பினும், இந்தியாவின் விவசாயத் துறை விலை ஏற்ற இறக்கங்களுக்கு எளிதில் ஆளாகக்கூடியது என்பதால் அந்நியப் பொருட்களின் வருகை உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் என்று கூறி அமெரிக்காவின் அழுத்தமான கோரிக்கையை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது. இதன் காரணமாகத்தான், ‘காப்பு வரிக் கொள்கைகளைத் தவறாகப் பயன்படுத்தும் மோசமான நாடு’ என்று இந்தியாவை டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக்  குற்றஞ்சாட்டினார்.

கடந்த வாரத்தில், அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் NDTVக்கு அளித்த தகவலின்படி, டிரம்ப் விதித்த 25 சதவீத வரி, இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகச் சொற்பமான பாதிப்பையே ஏற்படுத்தும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) – அதாவது, ஒட்டுமொத்தப் பொருளாதார மதிப்பீடு – 0.2 சதவீதத்திற்கும் மேற்படாமல் குறைவதற்கு வாய்ப்புள்ளது என்று அவர்கள் மதிப்பிட்டனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார வல்லுநர், ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் இதேபோன்ற ஒரு மதிப்பீட்டை வெளியிட்டு, இந்த மந்தநிலை ஏறத்தாழ 0.3 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தார்.

ஆயினும், இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும், டிரம்ப் அறிவித்த 25 சதவீத ‘பரஸ்பர வரியை’ மட்டுமே கணக்கில் கொள்கின்றன. கூடுதலாக விதிக்கப்படக்கூடிய வேறு எந்தவிதமான ‘அபராத வரி’யின் தாக்கத்தையும் இவை கணக்கில் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.ndtv.com/world-news/trump-hits-india-with-additional-25-tariff-over-russian-oil-purchase-9032850

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு