மேதக் கலவரத்தின் பின்னணி என்ன? தெலுங்கானாவில் இந்துத்துவ சக்திகள் தலைதூக்குவது ஏன்?
தமிழில் : விஜயன்
“எங்கள் ஊரில் இதுபோன்ற மோசமான சம்பவம் இதற்கு முன்பு நடந்ததே இல்லை. எப்போதுமே மேதக் அமைதிப் பூங்காவாகத்தான் இருந்துள்ளது,” என்று மின்ஹஜ் உல் உலாமா மதராசாவின் தலைமையாசிரியராக இருக்கும் பர்கத் அகமத் கூறினார். மத்திய தெலுங்கானாவில் உள்ள மேதக் நகரில்தான் இந்த மதராசா அமைந்தள்ளது.
பர்கத் அகமதின் மதராசா உட்பட இரண்டு மதராசாவில் வதைப்பதற்காக பசுக்களை பிடித்து வைத்திருப்பதாக கூறி பாஜக, வி.எச்.பி. குண்டர்கள் பக்ரித் பண்டிகை துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது ஜீன் 15ந் தேதி தனது கண் முன்பாகவே அரங்கேற்றப்பட்ட மதக் கலவரத்தை பற்றித்தான் பேசுகிறார்.
The Quint பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பர்கத் அகமது கூறியது யாதெனில்:
“ஒவ்வொரு வருடமும் பக்ரித் பண்டிகையின் போது காளைகள் பலிகொடுப்பதென்பது வழக்கமான நிகழ்வுதான். காளைகள் மட்டுமே பலி கொடுக்கப்படும். பசுக்கள் வதைக்கப்படுவதில்லை. மேதக் நகர் முழுவதுமே இதேதான் நடைமுறை. எங்கள் வசமிருப்பது காளைகள் என்பதை நிரூபிப்பதற்குண்டான மருத்துவச் சான்றிதழை எடுத்துக் காண்பிக்க தாயராக இருப்பதாக கூறியும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பசுக்களை பிடித்து வைத்திருப்பதாகக் கூறி அதை கோசாலைக்கு கூட்டிச் செல்ல வேண்டுமென அச்சுறுத்தல் விடுக்கத் தொடங்கினர்”.
பலமணி நேரமாக இருதரப்பும் முறுக்கிக் கொண்டு இருந்த நிலையில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து 14 இந்துக்கள், 28 இஸ்லாமியர்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
இஸ்லாமியர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் காயமடைந்த இஸ்லாமியர்களுக்கு சிகிச்சையளித்து வந்த எலும்பியல் மருத்துவமனையின் உடைமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டன.
“மருத்துவமனையின் முகப்பு வாயிலில் அமைந்திருந்த கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டன. பான் மசாலா கடையும், பழக் கடையும் நொறுக்கப்பட்டன,” என்று தி குவிண்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் மேதக் நகரின் காவல் கண்காணிப்பாளராக இருக்கும் பி. பாலா சுவாமி கூறினார். பாஜகவின் இளைஞரணி மாவட்டத் தலைவர் சதீஷ், மேதக் நகரின் பாஜக தலைவர் எம். நாயம் பிரசாத், பாஜகவின் மாவட்டத் தலைவர் கத்தம் ஸ்ரினிவாஸ் முதலானோரும் இதில் கைது செய்யப்பட்டனர்.
மேதக் நகரில் வன்முறை வெடிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான், மேதக் மாவட்டத்தின் மற்றொரு பகுதியிலும் மதக் கலவரம் வெடித்தது. அதேபோல, அருகிலிருந்த மேத்சல்-மல்ஹஜ்கிரி மாவட்டத்தில் மார்ச் மாதமும் ஒரு மதக் கலவரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் அயோத்தியில் ராமருக்கு பிரான பிரதிஷ்டை செய்யும் நிகழ்வின் போதும் இஸ்லாமியர்கள் மீது பல வன்முறை தாக்குதல்கள் ஏவப்பட்டுள்ளன.
இது போன்ற சம்பவங்களுக்கு பின்னால் நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும் தானே?
மேதக் நகரில் நடந்தது என்ன?
ஜீன் 17ந் தேதி வரவிருந்த பக்ரித் திருநாளையொட்டி சில நாள்களுக்கு முன்பே 40 காளைகளை பலி(குர்பானி)கொடுப்பதற்காக எங்கள் மதராசாவில் வாங்கி வைத்திருந்தோம் என்று தி குவிண்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பர்கத் அகமது கூறினார்.
எங்கள் மதராஸாவிற்கு பின்னால் அமைந்துள்ள ஏரிக்கரைக்கு அருகில் காளை மாடுகள் ஜீன் 15 அன்று மேய்ந்து கொண்டிருந்தது. சரியாக காலை பத்து மணி அளவில், “18 முதல் 25 வயது வரை இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மேய்ந்து கொண்டிருந்த காளைகளை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த எங்கள் பணியாளர் ஒருவர் என்னிடம் தெரிவித்தபோது, என்ன நடக்கிறதெனப் பார்ப்பதற்காக நானும் உடன் சென்றேன்”.
எந்தவொரு அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாதென நினைத்து நானும் மதராசாவின் செயலாளர் ஆரிஃப் சம்தானியும் சேர்ந்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டோம்.
“நான்கு போலிஸ்காரர்கள் வந்தார்கள். இங்குள்ள மாடுகளில் பசுக்கள் இல்லவே இல்லை. காளைகளைத்தான் வாங்கி வந்துள்ளோம். காளைகளை வைத்திருப்பது சட்டவிரோதமானதல்ல என்பதை எடுத்துக் கூறினோம். அதைக் கேட்ட போலிஸ்காரர்கள் எதற்காக பிரச்சனை செய்கிறீர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் கேட்டனர். இவர்களிடமுள்ள மாடுகளில் பசுக்களும்தான் உள்ளது, அதை உடனடியாக கோசாலைக்கு கூட்டச் செல்ல வேண்டும் என அவர்கள் வற்புறுத்தினர்” என்று பர்கத் அகமத் தெரிவித்தார்.
“ஒவ்வொரு வருடமும் செய்வது போல, எங்களிடம் இருப்பது காளகைள்தான் என்பதை உறுதி செய்வதற்கு மருத்துவச் சான்றிதழ்களை காண்பிப்பதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம்” என்பதே அகமதுவின் கூற்றாக இருந்துள்ளது.
தெலுங்கானாவில் பசுக்களையும், கன்றுகளையும் கொல்வது சட்டவிரோதமானது என 1977 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தெலுக்கானா பசு வதைத் தடுப்பு மற்றும் விலங்கு பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது. உரிய அதிகாரிகளிடம் சான்று பெற்ற பிறகு குறிப்பிட்ட வயதுடைய காளைகளை மட்டும் பலிகொடுப்பதற்கு இந்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இரு பிரிவினரிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். “ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மதராசாவிலிருந்து வெளியேறினால் மட்டுமே நாங்கள் காவல் நிலையத்திற்கு வருவோம் என்பதை தெளிவாக கூறிவிட்டோம். ஆனால், இங்குள்ள மாடுகளை கோசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர்களும் விடாப்பிடியாக பேசினர்” என்கிறார் அகமது.
இரு தரப்பும் முறுக்கிக் கொண்டிருந்த பேச்சுவார்த்தை மதியம் மூன்று மணி வரைக்கும் நீண்டது. இதற்கிடையிலேயே, இருதரப்பிலும் ஆட்கள் குவிந்து கொண்டே இருந்தனர். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அருகில் கூடாரம் அமைத்து முற்றுகையிட ஆரம்பித்துவிட்டனர்.
மதியம் 3.30 மணியிருக்கும். மேதக் நகரின் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்தார். இரு தரப்பினரையும் அமைதியாக கலைந்து செல்லும்படி உத்தரவிட்டார்.
“உங்களிடமுள்ள மாடுகளை காவல் துறையிடம் சில மணி நேரம் ஒப்படையுங்கள்; மருத்துவ பரிசோதனைக்கு பிறகு உங்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுவதாக வற்புறுத்துக் கூறினார். அருகிலிருந்த கல்யாண மண்டபத்திற்கு மாடுகளை ஓட்டிச் சென்றார்கள்,” என்கிறார் அகமது.
இஸ்லாமியர்கள் வசமிருந்த மாடுகளில் எதுவுமே பசுக்கள் அல்ல என்று மேதக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தி குவிண்ட் பத்திரிக்கையிடம் பேசியபோது உறுதிபட கூறினார். “அங்கிருந்த எல்லாமே காளை மாடுகள்தான். இதை முன்பே எங்களால் உறுதி செய்ய முடிந்தது,” என்றார் அவர்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட பாஜகவின் மாவட்ட தலைவர் ஸ்ரினிவாஸிடம் பேசிய போது, “அங்கு பசு மாடுகள் இருக்கவில்லை என்பதை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். அங்கிருந்தவை எல்லாம் இளம் காளைகள். அவற்றின் வயது குறைவாக இருந்ததே எங்களுக்கு பிரச்சனை. அவை இளங்காளைகள் அல்ல என்பதை மருத்துவச் சான்றிதழ் மூலம் நிரூபிக்க வேண்டியது அவர்களின்(இஸ்லமியர்களின்) கடமை” என்று தெரிவித்தார்.
இன்னொரு மதராசாவில் இதுபோன்றொரு சம்பவம் நடந்தது
அருகில் ரஹிமாபாத்தில் அரேபியா மதினா உல் உலூம் மதராசாவில் பசு மாடுகளை பிடித்து வைத்திருப்பதாக கூறி பசுக் காவலர்கள் போல வேடம் தரித்துக கொண்டு ஒரு கும்பல் பிரச்சனையை கிளப்பிக் கொண்டிருந்தது.
சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் உண்மையறியம் குழு வெளியிட்டிருந்த அறிக்கையை குவின்ட் பத்திரிக்கை ஆராய்ந்த போது பின்வருவனவற்றை அறிந்த கொள்ள முடிந்தது:
“மாலை 5-6 மணி இருக்கும், ரஹிமாபாத்தில் அமைந்திருந்த மதீனா உல் உலூம் மதராஸாவைச் ஒரு கும்பல் முற்றுகையிட்டனர். மதராஸாவிற்கு அருகிலேயே 11 காளைகள் மேய்ந்து கொண்டிருந்தன. வேண்டுமென்றே குழப்பத்தை உருவாக்கும் நோக்கில் இந்துத்துவ கும்பல் மாடுகளை பிடித்து வைத்திருக்கிறார்கள், அவற்றை கோசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அதே நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்தார்கள். பசுக்களை வதைக்காதீர் வதைக்காதீர் என்று கொக்கரிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.”
இந்துத்துவ கும்பல் கையில் கட்டைகளையும், இரும்புத் தடிகளையும் எடுக்க ஆரம்பித்தவுடன் நொடிப் பொழுதில் பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. “(அவர்கள்) இஸ்லாமியர்கள் மீதும், அவர்களின் உடைமைகள் மீதும் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துவிட்டனர்; இதில் 7 இஸ்லாமியர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக,” உண்மையறியும் குழு வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேதக்கில் இருந்த மின்ஹஜ் உல் உலூம் மதராஸாவின் செயலாளர் ஆரிஃப் சம்தானிக்கு தலையிலும், உடம்பிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர் நவீன் இவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்த போது “150 முதல் 200 பேர் கொண்ட கும்பல் - பாஜக மற்றும் பாஜகவின் இளைஞரணி குண்டர்கள் - மேதக்கில் இருந்த எலும்பியல் மருத்துவமனையை அடித்து நொறுக்கினார்கள், ஒரு மருத்துவரின் கார் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளனர்” என்று உண்மையறியும் குழுவின் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
“மருத்துவமனையிலிருந்து எங்கள் மீது கற்களை வீசத் தொடங்கினார்கள், அதனால்தான் நாங்களும் பதிலுக்கு தாக்கத் தொடங்கினோம்” என்கிறார் பாஜகவின் மாவட்ட தலைவர் கத்தம் ஸ்ரினிவாஸ்.
“எங்கள் ஆட்கள் பொறுமையிழந்துவிட்டனர். கோபத்தில் செய்வதறியாது அவர்களின் உடைமைகள் சிலவற்றை சேதப்படுத்தினர். யார் யார் எவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள் என்பது எனக்கு தெரியாது” என்கிறார் ஸ்ரினிவாஸ்.
எப்படியோ கலவரத்தை காவல் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றபோதிலும், “அவர்கள் முன்கூட்டியே விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், வன்முறை தாக்குதலை தடுத்திருக்க முடியும்” என்கிறார் அகமது.
ஆனாலும், பக்ரித் பண்டிகையை கொண்டாடும் வகையில் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட காளைகள் உரிய நேரத்தில் ஒப்படைக்கப்படவில்லை.
“பக்ரித் பண்டிகை முடிந்து இரண்டு நாள்கள் கழித்துதான் எங்களது மாடுகளைப் நாங்கள் பார்கக முடிந்தது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 1,000 பேர் குர்பானி நேர்த்திக்கடனில் பங்குபெற முடியாமல் போனது. இதுமட்டுமல்லாது, இஸ்லாமிய இளைஞர்கள் சிறையில் இருந்த காரணத்தினாலும், இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரணத்தாலும் எங்களில் பலர் ரம்ஜான் பண்டிகையையும் கொண்டாடவில்லை,” என்றார் அகமது.
“எந்த பண்டிகை வருவதற்கு முன்பும் மத நல்லிணக்க குழு மூலமாக இரு மதத்தவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். வன்முறை சம்பவம் நடந்த தினத்தன்றுதான், இஸ்லாமியர்களும், இந்துக்களும் பங்கேற்கக்கூடிய இதுபோன்றதொரு கூட்டத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். ஒவ்வொரு பண்டிகையின் போதும், இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்தாலும், கூட்டமாக சேர்ந்து கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, பக்ரித் போன்ற பண்டிகைகளுக்கு முக்கியமாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் ஏற்பாடு செய்யப்படும்,” என்கிறார் மேதக் காவல் கண்காணிப்பாளர்.
“சரியான நேரத்தில் காவல்துறை தலையிட்டு கலவரத்தை கட்டுக்கள் கொண்டு வந்தனர். மேலும், வன்முறைகள் தூண்டப்படாமல் இருப்பதற்காக சட்டப்படி காளைகளை எங்கள் பாதுகாப்பில் எடுத்துக் கொண்டோம். ஆனால், இங்கு குழப்பம் விளைவித்த அதே நபர்கள் அருகிலிருந்த மற்றொரு மதராஸாவிற்கு சென்று பிரச்சனையை பெரிதுபடுத்திவிட்டனர். பக்ரித் பண்டிகை முடிந்து இரண்டு நாள்கள் கழித்து நாங்கள் காளைகளை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டோம்.” என்கிறார் பி. பால சுவாமி, எஸ்.பி.
மேதக் ஏன் கலவர பூமியாக மாறியது?
கடந்த பத்தாண்டுகளில், தெலுங்கானாவில் பாஜகவின் வளர்ச்சி நிதானமானதாக இருந்தாலும் நிச்சயமானதாக இருந்திருக்கிறது. 2014-ல் ஒரு எம்.பி. என்ற நிலையிலிருந்து, 2023ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 எம்.எல்.ஏ.க்களும் 2024-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8 எம்.பி.க்களும் உருவாகியுள்ளனர்.
மதக் கலவரங்கள் அதிகரிப்பதற்கும், தெலுங்கானாவில் பாஜகவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கும் நெருங்கிய தொடர்பிருப்பாக, மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ஆர். பிருத்வி ராஜ், குவிண்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
“தென் மாநிலங்களில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கு பாஜக அதிக ஆர்வம் காட்டுவது ஊரறிந்த உண்மை. கர்நாடகத்திற்கு பிறகு தெலுங்கானவை பிடிப்பதுதான் அவர்களின் அடுத்த இலக்காக இருந்தது. தெலுங்கானவில் வளர வேண்டுமென உறுதியாக இருக்கிறார்கள், பாஜகவின் காலடி படாத இடங்களில் கூட தாமரைச் சின்னமுடைய கொடிக் கம்பங்கள் பறக்க விடப்பட்டுள்ளன, வன்முறைச் சம்பவங்கள் ஏவப்படுகின்றன. அதில் ஒரு பகுதியாகத்தான் மேதக்கில் நடந்த கலவரமும் அரங்கேற்றப்பட்டது.”
2024ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் மேதக் தொகுதியில் பாஜகவின் முதல் எம்.பி.யாக எம். ரகுநந்தன் ராவ் வெற்றி பெற்றுள்ளார். வன்முறையில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டுள்ளார், கைது செய்யப்பட்டுள்ள இந்து கலவரக்காரர்களுக்கு ஜாமீனும் வாங்கிக் கொடுத்துள்ளனார். ஒரு காலத்தில் இவர் பாரத ராஷ்ட்ர சமிதியின்(BRS, முன்பு தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி-TRS என்று அறியப்பட்டது) முக்கியத் தலைவராக இருந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
“மேதக் எம்.பி.யாக ரகுநந்தன் வெற்றி பெற்றதற்கும் மதக் கலவரத்திற்கும் நேரடியாக தொடர்பு உண்டு என்பதை உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், பாஜகவிடம் அதிகாரம் இருக்கிற போது இந்துத்துவ வெறியை தூண்டுவது, மக்களை மதத்தின் அடிப்படையில் துண்டாடுவது போன்ற செயல்களை பாஜகவினர் துணிந்து செய்வார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது,” என்கிறார் பிரித்வி ராஜ்.
கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சியின் பூர்வீக கோட்டையாக விளங்கிய மேதக் தொகுதியில் ரகுநந்தன்ன் எம்.பி.யாக வெற்றி பெற்றதென்பது பி.ஆர்.எஸ். கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேதக் பகுதியில் உள்ள சில சட்டமன்ற தொகுதிகளில் குறிப்பாக கஜ்வல், சித்திபேட், சிர்சில்லா போன்ற தொகுதிகளில் கே. சந்திர சேகர ராவ், அவரின் மருமகன் ஹரிஷ் ராவ், மற்றும் அவர் மகன் கே.டி.ராமா ராவ் போன்றவர்களே எம்.எல்.ஏ.வாக இருந்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
சித்திபேட், கஜ்வல், சிர்சில்லா பகுதிகளின் சுற்றுவட்டாரத்தில்தான் துப்பக்கா சட்டமன்றத் தொகுதியும் அமைந்துள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்பு, நவம்பர் 2020ல், நடந்த துப்பக்கா இடைத்தேர்தலில் ரகுநந்தன் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதென்பது கே. சந்திர சேகர் ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சிக்கு பேரிடியாக அமைந்தது.
அன்று பலவீனாமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இவரின் வெற்றி கசப்பானதாக இருந்தாலும், டி.ஆர்.எஸ். தலைமைக்கு பேரதிர்ச்சியை பரிசாக தந்தது. கே.சந்திர சேகர் ராவ்-ன் வேலம்மா சாதியை பின்புலமாக கொண்ட ரகுநந்தன் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அன்றைய டி.ஆர்.எஸ். அரசாங்கத்தின் மீது விவசாயிகளுக்கு ஏற்பட்டிருந்த பெருங்கோபமும், இவருக்கு அவர்களின் ஆதரவும் கிடைத்ததே வெற்றிக்கு முதன்மையான காரணமாக இருந்தது.
ஒரு மாதத்திற்கு பிறகு, 2020ல் பெருநகர ஹைதரபாத் மாநகரத் தேர்தலில் பாஜகவின் ஆதிக்கம் விரிவடைவதற்கு வேண்டிய உந்துசக்தியாக இந்த இடைத்தேர்தல் உதவியது என்று சொல்வது மிகையாகாது.
2023-ல் நடந்த தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் துப்பாக்கா தொகுதியில் ரகுநந்தன் மீண்டும் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறவில்லை என்றாலும் அப்பகுதியில் இந்துத்துவ கருத்தியலை விதைப்பதற்கான முயற்சியில் ஒரு போதும் பாஜகவினருக்கு பின்னடைவு ஏற்படவில்லை என்றே சொல்லாம்.
தெலுங்கானாவில், ‘இந்துத்துவத்தின் அடையாளமாக’ சத்திரபதி சிவாஜியை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்பட்டு வருவதை ஓர் உதாரணமாக சொல்லலாம். ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்பு, சிவாஜி சிலை முன்பு யாரோ சிறுநீர் பெய்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக சந்திர சேகர ராவ்-ன் தொகுதியான கஜ்வலில் ஏற்பட்ட மதக் கலவரத்தை தொடர்ந்து தெலுங்கானா காவல்துறை ரகுநந்தனை தடுப்புக் காவலில் வைத்திருந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, தனது துப்பக்கா தொகுதியில் ஒரு சிவாஜி சிலையை ரகுநந்தனே நிறுவியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
“உண்மையில் சொல்லப்போனால், வலதுசாரியினர் முன்னிறுத்துவது போல் தெலுங்கானாவில் சிவாஜியை இந்துத்துவத்தின் அடையாளமாக எவரும் பார்ப்பதில்லை, குறிப்பாக சத்திரபதி சிவாஜியை மன்னராக கொண்டாடப்படும் மகாராஷ்டிராவின் எல்லையோரமாக அமைந்துள்ள வடக்கு தெலுங்கானா பகுதியிலும் இதே நிலைமைதான் நிலவுகிறது. எவ்வளவுதான், இந்துத்துவ கருத்தியலை பரப்புவதற்கு சிவாஜியை ஒரு குறியீடாக முன்னிறுத்துவது பொருத்தமானதாக இருந்தாலும், வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோமானால் சத்திரபதி சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிரான மன்னரல்ல என்பதை எவரும் எளிதாக ஒப்புக் கொள்ள முடியும்.” என்கிறார் பிரித்வி ராஜ்.
ஒரு வருடத்திற்கு முன்பு, பாஜகவின் எம்.எல்.ஏ. ராஜா சிங் என்பவர் மத்திய தெலுங்கானாவில் உள்ள மேதக் நகரில் சிவாஜி சிலை ஒன்றை திறந்து வைத்தார். இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறியூட்டும் பேச்சுக்களை பேசி இழிபெயரை பெற்றவராக அங்கு அறியப்படுகிறார்.
ஜீன் 15 சம்பவத்திற்கு பிறகு, ஊடகவியலாளர்களை சந்தித்த ரகுநந்தன் இவ்வாறு பேசியுள்ளார்:
“காவல் கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த மாவட்ட காவல்துறையும் மேதக் பகுதியில் சட்ட ஒழுங்கை காபாற்றத் தவறிவிட்டனர். மேதக் கலவரத்தின் போது அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட தவறிய காவல் துறையினர் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”
“இந்துக்களுக்கொரு சட்டமும், இஸ்லாமியர்களுக்கு ஒரு சட்டமும்” இருப்பது போல காவல் துறையினர் நடந்து கொள்வதாக ரகுநந்தன் குற்றம் சாட்டுகிறார். இது தொடர்பாக அவரிடம் பேசுவதற்காக தி குவிண்ட் பத்திரிக்கை கோரிக்கை வைத்துள்ளது. அவரிடம் பதில்கள் வரும்பட்சத்தில் இச்செய்தி புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
“மேதக் பகுதியில் ஒரு எம்.பி.யை பெற்றிருப்பதால் திட்டமிட்டே, வேண்டுமென்றே மதவெறியூட்டும் பேச்சுகளை பரப்பி வருகின்றனர். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பெற்றுவிட்டதால் இங்கு எப்படியாவது மதக் கலவரத்தை தூண்டிவிட வேண்டுமென துடிக்கின்றனர்.” என்று காங்கிரஸ் கட்சியின் சிறுபாண்மையினரணித் தலைவர் அஃபீஷ் தி குவிண்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு, மேதக்கின் பத்தன்சேரு பகுதியில் ஒரு மதக் கலவரம் ஏற்பட்டது. அதன் பிறகு, இவ்வளவு பெரிய அளவிலான மதக் கலவரம் எதுவும் நடந்ததில்லை. மேதக் ஒரு அமைதிப் பூங்காவாகத்தான் இத்தனை ஆண்டுகளும் இருந்துள்ளது” என்கிறார் அஃபீஷ்.
மேதக் மதக் கலவரத்தை விதிவிலக்கானதாக பார்க்கக்கூடாது
ஜனவரி மாதம், அயோத்தியில் ராமருக்கான பிரானபிரதிஷ்டை செய்யும் நாள் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், பரவலாக மதக் கலவரம் நடநத் மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று. நாராயணபேட்டை மாவட்டத்திலுள்ள கோஸ்கி நகரில், வலதுசாரிகளெல்லாம் ஒன்று சேர்ந்து பேரணியாக சென்றுள்ளனர். அப்போது “மசூதியின் வெளியே பட்டாசுகள் வெடித்து, மசூதிக்குள் மஞ்சள் வீசப்பட்டது” என்று இந்த சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி குவிண்ட் பத்திரிக்கை சார்பாக, FIR நகலை வாங்கிப் பார்த்த போது, “பேரணியில் விசிறி எறியப்பட்ட காகிதங்கள்”, மசூதிக்குள்ளும் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய மேதக் மாவட்டத்திலிருந்து பிரிந்த சங்கரெட்டி மாவட்டத்திலும் பதட்டமான சூழல் நிலவியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்லாமிய பழக்கடை வியாபாரி ஒருவரின் கடை தீக்கிரையாக்கப்பட்டதாகவும் செய்திகளில் கூறப்பட்டது.
“பேரணியில் சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் செருப்பு வீசியதாகவும், அதைக் கண்டித்து ஒரு மணி நேரம் பேரணியில் சென்றவர்கள் ஆக்ரோஷமாக சாலை மறியலில் ஈடுபட்டனர். பேரணிக் கும்பல்களால் ஒரு நபரின் கடையும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது,” என்று ஜின்னாராம் காவல் நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் தி குவிண்ட் பத்திரிக்கையிடம் பேசியுள்ளார்.
மற்ற மாவட்டங்களுக்கு மத்தியில் அடிலாபாத், கரிம் நகர், நிஜாமாபாத் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு தெலுங்கானாவிலும், நடந்த சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜகவின் செல்வாக்கு எந்தளவிற்கு வளர்ந்துள்ளது என்பது முன்னமே நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பல பகுதிகளும் - போதன் மாவட்டத்தில் உள்ள பாயின்ஷா நகர் போன்ற பகுதிகளும் மதக் கலவரம் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளாக இருக்கிறது. கடந்த காலங்களில்கூட பல மதக் கலவரங்களும் நடந்துள்ளது.
மசூதிக்கு அருகில் கிராமத்திலிருந்து வந்திருந்த சில பேர் ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் விதமாக பாட்டுக் கச்சேரி நடத்துவது போல பாடல்களை ஒலிக்க விட்டது தொடர்பாக இந்து-முஸ்லிம்களுக்கு இடையில் மதக் கலவரம் வெடிக்கும் நிலை உருவானது. இது சென்ற ஆண்டு மார்ச் 25 அன்று, ஹைதராபாத் எல்லையோரமாக அமைந்துள்ள மேத்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்திலுள்ள கட்கேசல் நகரின் செங்கிசேர்லா பகுதியில் நடந்துள்ளது. 2024ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ஏத்தலா ராஜேந்தர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்கஜ்கிரி தொகுதியில்தான் கட்கேசர் பகுதி உள்ளது. இப்போதைய தெலுங்கானா முதல்வர் எ. ரெவந்த் ரெட்டிதான் மல்கஜ்கிரி தொகுதியின் முன்னாள் எம்.பி.யாக இருந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
மதக் கலவரத்தில் சம்பந்தப்பட்ட இரு மதத்தவர்களையும் காவல் துறை தடுப்புக் காவலில் வைத்திருந்த நிலையில், காவல்துறையினரை கண்டிக்கும் விதமாக அடுத்த நாளே வலதுசாரி பிரிவினர் ஒரு பேரணியை நடத்திய போது மறுபடியும் கைகலப்பு ஏற்பட்டது.
மதக் கலவரங்கள் தேர்தலில் என்ன மாதிரியான தாக்கங்களை உண்டு பண்ணுகிறது?
பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த கே.டி. ராமா ராவ் X தளத்தில் மேதக் கலவரம் பற்றி எழுதியபோது, “கடந்த 9.5 ஆண்டுகளாக கே. சந்திர சேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடந்த வரைக்கும் மேதக் அமைதிப் பூங்காவாகத்தான் இருந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
“இப்போது, காங்கிரஸ் ஆட்சியில், சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்படுவதில்லை. கடந்த காலங்களில் எந்தவொரு மதக் கலவரமும் நடக்காத அமைதிப் பூங்காவாக இருந்த மேதக் நகரம் கூட இன்று மதக் கலவர பூமியாக மாறியிருப்பது வெட்கக்கேடான விசயம்” என்று எழுதியிருக்கிறார்.
அசாவுதின் ஓவைசி தலைமையிலான AIMIM கட்சியுடன் கே. சந்திர சேகர் ராவ் நெருங்கிய கூட்டணி வைத்திருக்கிறார்; இந்துத்துவக் கருத்தியலை அரசியல் அதிகாரத்தில் அமர வைக்கத் தேவையில்லை என்று கூறினாலும் ‘உண்மையான இந்து’ கொள்கையை முன்னெடுப்பதாகவும் கூறி வருகிறார் KCR. இவரது ஆட்சியில்தான் இந்துத்துவ சக்திகளின் செயல்பாடுகள், பசுப் குண்டர்களின் தாக்குதல்கள், மதவெறியூட்டும் பேச்சுகளும் மெல்ல மெல்ல அதிகரித்து வந்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
“கே. சந்திர சேகர் ராவ் ஆட்சியில் மதக் கலவரம் குறைவாக நடந்திருந்தாலும், ஆட்சியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கு முதன்மையான எதிர் கட்சியாக நிற்க வேண்டுமென முயலும் பாஜகவிற்கு தேர்தலில் இவரது கட்சி பின்னடைவைச் சந்தித்திருப்பது பாஜகவிற்கே பலம் சேர்ப்பதாக அமையும்.” என்று சியாசட் பத்திரிக்கையில் ஆலோசனை வழங்கும் ஆசிரியராக பணியாற்றும், ஹைதராபாத்தில் உள்ள மூத்த பத்திரிக்கையாளர் மிர் ஆயூப் அலி கான் கூறுகிறார்.
டிசம்பர் 2023ல் நடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடும் போது 2024ல் நடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்தளவே அதிகரித்துள்ளது(40 சதவீதத்திற்கும் குறைவு). ஆனால், BRS கட்சியின் வாக்கு சதவீதம் 37 சதவீதத்திலிருந்து 17 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதுவே, பாஜகவை எடுத்துக்கொண்டால் 14 சதவீதத்திலிருந்து 35 சதவீதம் தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ளது. BRS கட்சியின் வாக்குகள் நேராக பாஜகுவிற்கு சென்றுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
“BRS கட்சியின் இடத்தை நிரப்புவதற்கு எந்த கட்சியாவது வரும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஒன்றிய அரசாங்கத்தின் ஆதரவும் இருப்பதால் பாஜக அந்த வெற்றிடத்தை நிரப்பி வருகிறது” என்கிறார் ஆயுப் அலி கான்.
தெலுங்கானா பாஜக கடந்த காலங்களில் எடுத்த முயற்சிகளுக்கு பந்தி சஞ்சய் குமார், ஜி. கிஷான் ரெட்டி போன்ற மக்கள் செல்வாக்குடைய தலைவர்கள் பாஜகவிற்கு கிடைத்துள்ளனர்; இவர்களுக்கு ஒன்றிய அரசாங்கத்தில் பதவி பரிபாலனங்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்கிறார் ஆயூப் அலி கான்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவெறியூட்டும் பேச்சுக்களை பேசி இழிபெயரை சம்பாதித்த(குறுகிய கால கைது, இடைநீக்கத்திற்கு பிறகும்) ராஜா சிங் போன்ற தலைவர்கள் கூட தெலுங்கானாவில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வளர்ந்து வருகின்றனர்.
குழப்பமும், பதற்றமும் எங்கு நடந்தாலும், முதல் நபராக சம்பவ இடத்திற்கு செல்வது இவர்களாகத்தான் இருக்கும் என்றிகார் ஆயூப் அலி கான்.
கடந்த பத்தாண்டு காலங்களில் தெலுங்கானாவில் பாஜகவின் கண்கூடான வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதற்கு பின்வரும் உதாரணத்தை பற்றி ஆயூப் அலி கான் பேசுகிறார்:
“சார்மினார் அருகில் அமைந்துள்ள (பாக்யலெட்சுமி) கோவிலை எடுத்துக் கொள்வோம். 35 வருடத்திற்கு முன்பு இப்படியொரு கோவிலே அங்கு இருக்கவில்லை. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று முக்கியதுவமுடைய நினைவுச் சின்னமாக இருக்கும் சார்மினாரின் ஒரு பகுதியிடத்தை ஆக்கிரமித்தபடி ஒரு மிகப் பெரிய கோவில் தளமாக இது மாற்றப்பட்டுவிட்டது.”
“இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? பாக்யலட்சுமி அம்பாள் மீதான பக்தியில் இக்கோவிலை இவர்கள் விரிவுபடுத்தவில்லை; மாறாக, ஹைதராபாத்தில் மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி மதவெறியூட்டும் துரோகத்தனமான, படுபயங்கரமான திட்டத்தின் ஒரு பகுதியாக இக்கோவிலை இவர்களாக பெரிதுபடுத்தி வந்துள்ளனர். ஹைதராபத்திற்கு வரும் எந்தவொரு பாஜக மந்திரியும் பாக்யலட்சுமி கோவிலுக்கு வராமல் செல்வதேயில்லை,” என்கிறார் ஆயுப் அலி கான்.
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தை பாக்யாநகர் என்று பெயர் மாற்றம் செய்வோம் என்பன போன்ற வாக்குறுகளை பாஜக தலைவர்கள் கடந்த காலங்களில் கொடுத்துள்ளனர் என்பதையும் சேர்த்தே நாம் இப்பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும்.
“ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அட்சி வகுப்புவாத கலவரங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையென்றால், இதுபோன்ற சூழலில் பாஜகவின் வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடுவதால் அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சிக்கு பேராபத்தாக மாறிவிடும்” என்பதையும் ஆயூப் அலி கான் சுட்டிக் காட்டினார்.
AIMIM கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாவுதின் ஓவைசியும் சமீபத்தில் பேசியபோது, ரேவந்த ரெட்டி தலைமையிலான 7 மாத ஆட்சியில் வகுப்புவாத கலவரங்கள் அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்பது குறித்து தெலுங்கானா காங்கிரஸ் ஆராய வேண்டுமென வலியுறுத்தினார். “மேதக்கில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டிருந்தால் பிரச்சனை இந்தளவிற்கு பெரிதாகியிருக்காது,” என்கிறார் ஓவைசி.
தெலுங்கானாவில், எதிர்வருங்காலங்களில் எவ்வித கலவரமும் நடப்பதை தடுப்பதற்கு வகுப்புவாத கலவரத் தடுப்பு மசோதவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் உடனடியாக சட்டமாக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
(மீனாட்சி சசிக்குமார்)
- விஜயன் (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு