"இந்தியா: மோடிக்கான கேள்விகள்" - பிபிசி ஆவணப்படம்

தமிழில் : விஜயன்

"இந்தியா: மோடிக்கான கேள்விகள்" - பிபிசி ஆவணப்படம்

2002-ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்திற்கு மோடியே “முழுப் பொறுப்பாவார்” என்று இங்கிலாந்து அரசு நடத்திய இரகசிய விசாராரண ஒன்றில் தெரியவந்துள்ளதாக பிபிசியின் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் கலவரத்தால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளே விசாரணையை துவங்குவதற்கு வழிவகுத்தது என இங்கிலாந்து நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா ஆவணப்படத்தில் பேசியுள்ளார்.

“இந்தியா: மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான ஆவணப்படம் இந்தியப் பிரதமர் மோடிக்கும், நாட்டில் உள்ள இசுலாமிய சிறுபான்மையினர்களுக்கும் இடையிலான தீராப் பகைமை குறித்து ஆராய்கிறது. மேலும், “1000 பேருக்கும்” அதிகமானோர் பிப்ரவரி மற்றும் மார்ச் 2002-ல் நடந்த குஜராத் கலவரத்தின் போது கொல்லப்பட்டனர். இது போன்றதொரு பெரிய மதக் கலவரம் வெடித்ததில் மோடியின் பங்கு குறித்து “விசாரணை அறிக்கையில் சொல்லப்பட்ட தகவல்களை” ஆராய்கிறது.

கரசேவகர்கள் சென்று கொண்டிருந்த ரயில் கோத்ரா ரயில்நிலையத்தில் இருந்தபோது பிப்ரவரி 27,2002-ம் ஆண்டு எரிக்கப்பட்டது; இதில் 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்தே கலவரம் வெடித்துள்ளது. அதில் 790 இஸ்லாமியர்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 223க்கும் அதிகமானோர் காணமல் போய்விட்டதாக சொல்லப்படுகிறது; 2,500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என 2005ல் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

BBC Two தொலைக்காட்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் புதிய தொடரின் முதல் பாகம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பதிவிடப்படாத அல்லது வெளியிடப்படாத முன்னர் “தடைசெய்யபட்டதாக” குறிப்பிடப்பட்ட இங்கிலாந்து அரசின் விசாரணை அறிக்கை பற்றி விவரமாக இத்தொடரில் காண்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் எழுத்துக்கள் தொடர் உருப்படங்களாக ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் “நரேந்திர மோடியே முழுப் பொறுப்பு” என்று விசாரணை அறிக்கை குறிப்பிடுவதையும் இதில் காட்டியுள்ளனர்.

“இனப் படுகொலைக்கான அத்தனைக் கூறுகளும்“ இடம்பெற்ற “திடடமிட்ட வன்முறையே” அடுத்தடுத்து கலவரங்கள் நிகழ்வதற்கு காரணம் என அறிக்கை கூறுகிறது.

குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து அரசாங்கம் கொதித்து போய்விட்டதாகவும் அதன் காரணமாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. “இந்த நிகழ்வு குறித்து நான் மிகவும் கவலையடைந்திருந்தேன். எங்கள் நாடு (இங்கிலாந்து) இந்தியாவுடன் நல்லுறவு கொள்டுள்ள முக்கியமான நாடாக இருப்பதானால் நான் தனிப்பட்ட முறையில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டேன். அதே நேரத்தில் இதை நாங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு கையாள வேண்டியிருந்தது” என ஆவணப்படத்தில் ஜாக் ஸ்ட்ரா நினைவுகூர்ந்து கேமரா வாயிலாக பேசியிருப்பார். விசாரணைக் குழு நேரடியாக குஜராத்திற்கே சென்று அங்கு என்ன நடந்தது எனத் தாங்களாகவே கண்டறிந்து வரும் வகையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மாணித்தோம். அவ்வகையில் அக்குழு செம்மையான அறிக்கையை உருவாக்கித் தந்தது.”

கலவரங்களின் எண்ணிக்கை சொல்லப்பட்டதை விட அதிகமான இடங்களில் நிகழ்ந்துள்ளது; “அரசியல் காரணங்களுக்காக” கலவரம் தூண்டப்பட்டதால் “திசையெங்கும் திட்டமிடப்பட்ட முறையில் கண்ணில்பட்ட இஸ்லாமியப் பெண்களெல்லாம் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.” என இங்கிலாந்து அரசிடம் விசாரணைக் குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இந்துக்கள் வாழும் பகுதியிலிருந்து இஸ்லாமியர்களை துடைத்தொழிக்க வேண்டும்” என்ற நோக்கத்திற்காகவே கலவரம் தூண்டப்பட்டுள்ளது என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “சந்தேகத்திற்கிடமின்றி இதற்கு மோடியே காரணம்” என ஆவணப்படம் குற்றஞ்சாட்டுகிறது.

“குறைந்தபட்சம் 2,000 பேராவது இந்தக் கலவரத்ததில் கொல்லப்பட்டிருப்பார்கள்; இவர்களில் பெரும்பகுதியினர் இஸ்லாமியர்களே; இஸ்லாமிய மக்களை குறிவைத்து திட்டமிட்ட முறையில், அரசியல் காரணங்களுக்காக கலவரம் தூண்டப்பட்டுள்ளதால் தான் இதை இனப்படுகொலை எனக் கூறுகிறோம்” என்று தன்னை  அடையாளங் காட்டிக்கொள்ள விரும்பாத இங்கிலாந்து நாட்டின் முன்னாள் தூதர் ஒருவர் இந்த ஆவணப்படத்தில் கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்(VHP) அமைப்பின் பெயரும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “வி.எச்.பி என்ற இந்துத் தீவிரவாத அமைப்பே இந்தக் கலவரத்தை திட்டமிட்ட முறையில் தலைமையேற்று நடத்தியுள்ளது என்றே பரவலாக தெரியவந்தது என முன்னாள் தூதர் கூறியுள்ளார். “நம்மை யாரும் தண்டிக்கமாட்டார்கள்” என்ற ஒரு வாய்ப்பான சூழ்நிலையை” மாநில அரசு உருவாக்கித் தராமல் இப்படியொரு பெருங்கலவரத்தை நிச்சயமாக வி.எச்.பியாலும் அதன் கூட்டு அமைப்புளாலும் நிகழ்த்தியிருக்க முடியாது என்கிறார்.

“எதையும் செய்தாலும் நம்மால் தப்பித்து விட முடியும் என்ற போக்கே கலவரத்தை உருவாக்குவதற்கான புறச்சூழலை தோற்றுவித்துள்ளது” என ஆவணப்படம் குற்றஞ்சாட்டுகிறது.

“காவல்துறையை செயல்படவிடாமல் செய்ததிலும், கமுக்கமாக இந்துத்துவ தீவிரவாதிகளை கலவரத்திற்கு தூண்டியதிலும் முதலமைச்சராக இருந்த மோடி கிட்டதட்ட நேரடியாகவே செயல்பட்டார் என்பது மிக மோசமான குற்றச்சாட்டுகளாக இருக்கிறது” என்று முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா பிபிசியின் ஆவணப்படத்தில் பேசியிருப்பர். மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையை செயல்படவிடாமல் தடுத்தது என்பது “படுமோசமான அரசியல் சதி நடந்தள்ளதையே எடுத்துக்காட்டுகிறது” என்பதோடு மோடி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்றார். மேலும், 'ஒரு வெளியுறவு அமைச்சராக என்னால் அச்சமயத்தில் ‘சில சட்டப்படியான விசயங்களை’ செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்ட்டிருந்தேன்  எனக் கூறினார். நாங்கள் இந்தியாவுடனான அரசியல் உறவுகளை துண்டித்துக் கொள்வதற்கு முயலவில்லை. எனினும் மோடியின் நற்பெயருக்கு இது பெரும் களங்கத்தையே ஏற்படுத்தியுள்ளது என்பதையும் மறுக்கவில்லை” என்று பேசினார்.

2002-ஆம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரத்தில் இரத்தக்களரி ஏற்படுவதை தடுப்பதற்கு தவறிய குற்றச்சாட்டின் காரணமாக இங்கிலாந்து அரசு மோடியை ராஜ்ஜியரீதியில் புறக்கணிக்க துவங்கியதை கடந்த அக்டோபர் 2012-ல் தான் நிறுத்தியது. இதே காலக்கட்டத்தில் ஐரோப்யிய ஒன்றியமும் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தியது என பிபிசியின் ஆவணப்படம் தெரிவிக்கிறது. “கலவரத்தை தூண்டுவதில் அமைச்சர்கள் நேரடியாகவே இறங்கி வேலைசெய்தனர் என்றும் காவல் துறையின் மூலம் எவ்வித குறுக்கீடும் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றும் விசாரணை அறிக்கை கண்டறிந்துள்ளது.

“நரேந்திர மோடியை பொறுத்தவரையில் ஊடகங்களுடன் இணங்கி பழக விரும்பாதவராக இருந்தார். எங்களைப் போன்ற பத்திரிக்கையாளருடன் பேட்டியளிப்பதே கூட அவருக்கு சவாலான விஷயமாக இருந்தது. மக்களைக் கவரக்கூடிய, அதிக செல்வாக்குடையவராக மட்டுமல்லாது அச்சுறுத்தக்கூடிய நபர் என்று காட்டுவது போல என்னிடம் பேசினார்” என்று கலவரம் குறித்து மோடியிடம் பேட்டி கண்ட பிபிசியின் செய்தியாளர் ஜில் மெக்கிவிரிங் கூறியுள்ளார்.

கலவரத்திற்கு பிறகு “தொடர் வன்முறையால்” குஜராத் மாநிலமே வன்முறைக் காடாக மாறியிருப்பது பற்றி மெக்கிவிரிங் மோடியிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார், இதற்கு அவர் “உங்களுக்கு கிடைத்த தகவலை முதலில் நீங்கள் சரிபார்க்க வேண்டும் என நினைக்கிறேன். எங்கள் மாநிலம் அமைதிப் பூங்காவாகவே திகழ்கிறது” என்று பதிலளித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சட்ட, ஓழுங்கை காக்கத் தவறியதாக அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பிய போது, “இது முழுக்க முழுக்க திரித்துக் கூறப்பட்டவையாகும்; உங்களது ஆய்வுமுறையை நான் ஏற்கவில்லை.” ‘இந்தியர்களாகிய எங்களுக்கு வெள்ளையர்களாகிய நீங்கள் மனித உரிமைகள் பற்றி பாடம் எடுக்க முயற்சிக்க கூடாது” என்று பதிலளித்துள்ளார்.

இவ்வாறிருக்க, நீங்கள் செய்தவற்றில் இதை வேறு மாதிரி செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று எதை நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது “ஊடகங்களை கையாள்வது பற்றிய விசயத்தில் நான் வேறு மாதிரி செயல்பட்டிருக்கலாம் என்பதாக” அவர் கூறினார்.

“மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை நல்லிணக்கம் ஏறபடுவதற்கு வாய்ப்பே இல்லை” என்று இங்கிலாந்து அரசின் விசாரணை அறிக்கையில் இருந்தவற்றை மேற்கோள்காட்டி ஆவணப்படம் முடிந்துரைத்தது.

பிபிசியால் தயாரித்து வெளியிடப்பட்ட ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களுமே இந்தியாவில் இன்னும் வெளியிடப்படவில்லை.

“குஜராத் கலவரங்களுக்கு பின்னால் பெரிய சதித்திட்டங்கள் இருப்பதாக ஏதும் தெரியவில்லை” என்று கடந்த ஜீன் 2022-ல் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இசான் ஜாப்ரி கலவரத்தின் போது கொல்லப்பட்டதற்கும், மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் அப்பழுக்கற்றவர் என்று (உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட) சிறப்பு புலனாய்வுக் குழு வழங்கிய நற்சான்றை எதிர்த்து அவரது மனைவி ஜாகிய ஜாஃப்ரி தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு “அதிகாரத்தின உச்சாணியில் இருந்தவர்கள் பெரிய சதித்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று அடுக்கடுக்காக வைக்கப்பட்ட குற்றசாட்டுகளெல்லாம் மணல்கோட்டையை போல சரிந்து விழுந்தள்ளது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

- விஜயன் 

(தமிழில்)

மூலக்கட்டுரை : 

https://m.thewire.in/article/communalism/bbc-documentary-gujarat-riots-modi-directly-responsible