ட்ரம்ப்பின் 50% வரிவிதிப்பால் 48 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதிகளுக்குப் பெரும் பாதிப்பு – மத்திய அரசு அறிக்கை

விஜயன் (தமிழில்)

ட்ரம்ப்பின் 50% வரிவிதிப்பால் 48 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதிகளுக்குப் பெரும் பாதிப்பு – மத்திய அரசு அறிக்கை

டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள இறக்குமதி வரிகளினால் விளையும் தாக்கம் குறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்த விளக்கவுரையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, ஏறத்தாழ 48.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் இந்த புதிய வரிச்சுமையின் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகும் என்று தெளிவுபடுத்தினார்.

வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறைக்கு வரும் வேளையில், சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தியப் பொருட்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை அன்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

தனது விரிவான பதிலுரையில், அமைச்சர் ஜிதின் பிரசாதா, வரும் 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல், குறிப்பிட்ட சில இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரிவிதிப்பும், ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல், மேலதிகமாக 25 சதவீத வரிவிதிப்பும், முக்கியமாக ரஷ்யாவிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ளதாக விவரித்தார். இதனால், குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் மொத்த வரிச்சுமை 50 சதவீதத்தை எட்டும் நிலை உருவாகியுள்ளது.

இந்திய நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதிலும், நமது உழவர்கள், உழைப்பாளர்கள், தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்தோருக்கும் முழுமையான ஆதரவை நல்குவதிலும் அரசு தனது அசைக்க முடியாத உறுதியுடனும் கவனத்துடனும் செயல்பட்டு வருகிறது என்று அவர் மேலும் எடுத்துரைத்தார். ஏற்றுமதியை மேம்படுத்துதல், புதிய வர்த்தகக் கூட்டணி நாடுகளைக் கண்டறிந்து ஏற்றுமதியைப் பன்முகப்படுத்துதல் போன்ற பல்துறை உத்திகளைக் கையாண்டு, வர்த்தக ரீதியான எதிர்மறைத் தாக்கத்தைக் குறைக்க, அரசு அத்தியாவசியமான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளும்.

"அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு குறித்து அரசு தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது," என்றும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்கா: இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தேசங்களும், ஒரு பல்துறை இருதரப்பு வர்த்தக உடன்பாட்டை (BTA) எட்டுவதற்காகத் தீவிரமாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. இதுநாள் வரை ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.

ஆறாம் கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காக, வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த தமது பயணத்தை அமெரிக்கக் குழுவினர் அண்மையில் தள்ளி வைத்துள்ளனர்.

இப்பேச்சுவார்த்தைகளின் போக்கில், இரு நாடுகளும் பொருட்களின் வர்த்தகத்தைச் சுலபமாக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசித்து வருவதாகவும், இதில் பிரச்சனைக்கு இடமளிக்காத சில வேளாண் பொருட்களிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜிதின் பிரசாதா விளக்கினார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதோடு, வணிகப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதே இரு நாடுகளின் தலையாய நோக்கம் என்று விளக்கினார்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.livemint.com/economy/donald-trump-50-percent-us-tariffs-on-india-to-affect-indian-exports-worth-48-billion-says-centre-11755607108171.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு