டிரம்ப் விதித்துள்ள சுங்க வரிகள்: இந்திய வணிகங்கள் மீதான தாக்கம் – விரிவான பார்வை

விஜயன் (தமிழில்)

டிரம்ப் விதித்துள்ள சுங்க வரிகள்: இந்திய வணிகங்கள் மீதான தாக்கம் –  விரிவான பார்வை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை(ஜுலை 30) அன்று ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இந்தியாவிடம் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது கூடுதலாக 25 சதவீத காப்பு வரியும், அதனுடன் ஓர் அபராத வரியும் விதிக்கப்படவுள்ளது. இந்த புதிய வரி விதிப்புகள் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தொடர்ச்சியாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் போர் தளவாடங்களை கொள்முதல் செய்து வருவதே இந்த அபராதத்திற்கான அடிப்படைக் காரணம் என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து இன்னும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு பலருக்கும் எதிர்பாராத ஒன்றாகவே அமைந்தது. இந்த முடிவின் முக்கியத்துவத்தையும், அதன் தாக்கத்தையும் பின்வரும் கேள்வி-பதில்கள் விவரிக்கின்றன.

சுங்க வரி என்றால் என்ன?

சுங்க வரி என்பது, ஒரு நாட்டின் அரசு பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கும் ஒரு கட்டாய இறக்குமதி வரியாகும். பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனமே (இறக்குமதியாளர்) இந்த வரியை அரசுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. சாதாரணமாக, வணிகங்கள் இந்தச் செலவை பொருளின் இறுதி விலையுடன் சேர்த்து விடுவதால், இதன் சுமை இறுதியில் நுகர்வோரின் மீது சுமத்தப்பட்டு, அவர்களுக்கு அதிக விலை செலுத்த நேர்கிறது.

இந்தியா மீது எவ்வளவு சுங்க வரி அறிவிக்கப்பட்டுள்ளது?

இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து பொருட்களைக் கொள்முதல் செய்வதன் காரணமாகவே, இந்தியப் பொருட்களின் மீது 25 சதவீத வரியும், அதனுடன் ஒரு அபராத வரியும் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால், இந்த அபராதத்தின் அளவு எவ்வளவு அல்லது அது எந்த முறையில் வசூலிக்கப்படும் என்பது குறித்து அமெரிக்கா இன்னும் தெளிவுபடுத்தவில்லை. 25 சதவீத சுங்க வரி மற்றும் அபராத வரி தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை வெள்ளை மாளிகை வெளியிடும் பட்சத்தில், கூடுதல் விவரங்கள் முழுமையாக வெளிவரும்.

தற்போது, இந்தியப் பொருட்கள் எதிர்கொள்ளும் வரிகள்:

ஏப்ரல் 2 அன்று அறிவிக்கப்பட்ட 10 சதவீத வரி, இது அனைத்து வகை பொருட்களுக்கும் பொதுவானது.

எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களின் மீது 50 சதவீத வரி.

வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் மீது 25 சதவீத வரி.

இந்த வரி விதிப்புகள், ஏற்கனவே இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டு வரும் வரிகளோடு கூடுதாக சேர்த்து விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, ஜவுளிப் பொருட்களுக்கு தற்போது 6 முதல் 9 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், புதிதாக சேர்க்கப்படும் 25 சதவீத வரியுடன் சேர்த்து, அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு தோராயமாக 31 முதல் 34 சதவீதம் வரை சுங்க வரி செலுத்த வேண்டியிருக்கும். மேலும், விதிக்கப்படவுள்ள அபராதமும் இந்தச் செலவை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யலாம்.

சுங்க வரிகளை அமெரிக்கா விதிப்பதன் பின்னணி என்ன?

இந்தியாவுடனான தனது வர்த்தகத்தில் அமெரிக்கா பெரும் பற்றாக்குறையைச் சந்திப்பதாகக் கூறுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் உயரிய வரிகளே இதற்குக் காரணம் என்றும், இது அமெரிக்கத் தயாரிப்புகளை இந்தியச் சந்தையில் விற்பனை செய்வதைக் கடினமாக்குகிறது என்றும் அது குற்றம் சாட்டுகிறது.

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பரிமாற்றத்தின் அளவு

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், அமெரிக்கா, இந்தியாவின் சரக்கு வர்த்தகத்தில் மிக முக்கியப் பங்காளியாகத் திகழ்ந்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஏறத்தாழ 18% அமெரிக்காவை நோக்கியே பயணித்தன. அதேசமயம், இந்தியாவின் இறக்குமதியில் சுமார் 6.22% மட்டுமே அமெரிக்காவிலிருந்து வந்தன. ஒட்டுமொத்தமாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் அளவு, இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 10.73% பங்கைக் கொண்டிருந்தது.

2024-25ம் நிதியாண்டில், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தக மதிப்பு 186 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. அமெரிக்காவிற்கு 86.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குகளை இந்தியா ஏற்றுமதி செய்த நிலையில், சுமார் 45.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளவற்றை இறக்குமதி செய்து, 41 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக உபரியைப் இந்தியா ஈட்டியது.

சேவைகளைப் பொறுத்தவரை, இந்தியா அமெரிக்காவிற்கு 28.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சேவைகளை ஏற்றுமதி செய்த நிலையில், 25.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சேவைகளைப் பெற்றது. இதன் வாயிலாக 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் சேவை உபரி இந்தியாவிற்கு கிட்டியது.

மொத்தத்தில், அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உபரி சுமார் 44.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், கல்வி, டிஜிட்டல் சேவைகள், நிதிச் சேவைகள், உரிமைத்தொகைகள் மற்றும் ஆயுத வர்த்தகம் போன்ற பிற துறைகளையும் கணக்கில் கொண்டால், அமெரிக்காவிற்கு உண்மையில் ஒட்டுமொத்தமாக 35 முதல் 40 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உபரி நிலவுவதாகச் சில வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முக்கிய வர்த்தகப் பொருட்கள் யாவை?

2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்த முக்கியப் பொருட்கள் பின்வருமாறு:

மருந்துகள், உயிரியல் பொருட்கள் (8.1 பில்லியன் அமெரிக்க டாலர்)

தொலைத்தொடர்பு சாதனங்கள் (6.5 பில்லியன் அமெரிக்க டாலர்)

விலைமதிப்பற்ற, அரை-விலைமதிப்பற்ற கற்கள் (5.3 பில்லியன் அமெரிக்க டாலர்)

பெட்ரோலியப் பொருட்கள் (4.1 பில்லியன் அமெரிக்க டாலர்)

வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் (2.8 பில்லியன் அமெரிக்க டாலர்)

தங்கம் மற்றும் பிற நகைகள் (3.2 பில்லியன் அமெரிக்க டாலர்)

ஆயத்த ஆடைகள் மற்றும் அணிகலன்கள் (2.8 பில்லியன் அமெரிக்க டாலர்)

இரும்பு மற்றும் எஃகுப் பொருட்கள் (2.7 பில்லியன் அமெரிக்க டாலர்)

அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த முக்கியப் பொருட்கள் பின்வருமாறு:

கச்சா எண்ணெய் (4.5 பில்லியன் அமெரிக்க டாலர்)

பெட்ரோலியப் பொருட்கள் (3.6 பில்லியன் அமெரிக்க டாலர்)

நிலக்கரி மற்றும் கற்கரி(Coke) (3.4 பில்லியன் அமெரிக்க டாலர்)

வெட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்கள் (2.6 பில்லியன் அமெரிக்க டாலர்)

மின் இயந்திரங்கள் (1.4 பில்லியன் அமெரிக்க டாலர்)

விமானம், விண்கலம் மற்றும் அவற்றின் பாகங்கள் (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்)

தங்கம் (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்)

இந்தச் சுங்க வரிகள் வர்த்தகத்தை எவ்வாறு பாதிக்கும்?

இறக்குமதி வரிகள், பொருட்களை வாங்கும் நாட்டில் அவற்றின் விலையை உயர்த்தும். மேலும், பங்களாதேஷ் (35%), வியட்நாம் (20%), தாய்லாந்து (36%) போன்ற இந்தியாவின் போட்டி நாடுகளுக்கு விதிக்கப்படும் வரிகளும், பொருட்களின் தரம் போன்ற பிற காரணிகளும் வர்த்தகப் போக்கைப் பெரிதும் பாதிக்கின்றன.

ஆடைகள், காலணிகள் (தோல் மற்றும் தோல் அல்லாத வகைகள்), ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தரைவிரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற அதிக மனித உழைப்பு தேவைப்படும் இந்தியப் பொருட்கள், இந்த வரிகளால் கடுமையான சவால்களைச் சந்திக்க நேரிடலாம் என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்தாக உள்ளது.

ஆகஸ்ட் 1 முதல், இந்தியாவின் முக்கியப் பொருட்களின் மீது அமெரிக்கா விதிக்கவுள்ள சுங்க வரிகளின் நிலை என்ன?

  • தொலைத்தொடர்புச் சாதனங்களுக்கு 25% சுங்க வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கு 30% முதல் 38.5% வரை சுங்க வரி விதிக்கப்படும். (தற்போதைய நிலவரப்படி இது 5% முதல் 13.5% வரை உள்ளது.)
  • உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கு 29% முதல் 30% வரை சுங்க வரி விதிக்கப்படும். (தற்போதைய நிலவரப்படி 14% முதல் 15% வரை உள்ளது.)
  • ஆடை வகைகளுக்கு 12% சுங்க வரியுடன் கூடுதலாக 25% வரி விதிக்கப்படவுள்ளது.
  • ஆகஸ்ட் 1 முதல், ஒருவித அபராத வரியும் விதிக்கப்படக்கூடும்.

இந்தியா அதிகபட்ச சுங்க வரிகள் விதிப்பதாக கூறும் டிரம்ப்பின் குற்றச்சாட்டுகள் உண்மையானதா?

அமெரிக்காவும் சில குறிப்பிட்ட பொருட்களின் மீது அதிகப்படியான வரிகளை வசூலிக்கிறது; அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

பால் பொருட்கள் – 188%

பழங்கள் மற்றும் காய்கறிகள் – 132%

காபி, தேநீர், கொக்கோ மற்றும் நறுமணப் பொருட்கள் – 53%

தானியங்கள் மற்றும் உணவுப் பதப்படுத்துதல்கள் – 193%

எண்ணெய் வித்துக்கள், கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள் – 164%

பானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் – 150%

கனிமங்கள் மற்றும் உலோகங்கள் – 187%

ரசாயனப் பொருட்கள் – 56%

இந்தியாவின் சராசரி சுங்க வரி 17% ஆக இருக்கும் நிலையில், இது அமெரிக்காவின் சராசரியான 3.3%ஐ விடப் பன்மடங்கு அதிகம் என்பது கண்கூடு. இருப்பினும், இந்தியாவின் இந்த விகிதம் தென் கொரியா (13.4%) மற்றும் சீனா (7.5%) போன்ற பிற பெரிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகளின் விகிதத்திற்கு இணையாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://m.economictimes.com/news/economy/foreign-trade/impact-of-trump-tariff-on-indian-businesses-explained-/articleshow/123012521.cms

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு