அறிவியல் ஆராய்ச்சித் துறையை தனியார்மயமாக்கும் மோடி அரசு
தமிழில் : வெண்பா
தனியார் துறை ஆராய்ச்சிக்கான அரசாங்கத்தின் ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு : பங்கு முதலீடுகளின் ஆதாரம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது
சிலர் இந்த நடவடிக்கையை வரவேற்றாலும், அறிவியல் துறைக்கு நிதி ஒதுக்கீடை அரசு குறைத்துள்ளது - அடிப்படை அறிவியல் ஆய்வுக்கு கூட ஆதரவுவளிப்பது இல்லை என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
2022 இல் வெளியிடப்பட்ட நிதிஆயோக் ஆய்வின்படி, இந்தியாவின் R&D செலவுகள் உலகிலேயே மிகக் குறைவு.
உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற குறுகிய கால திட்டங்களுக்கான (sunrise domains) தனியார் துறையின் ஆராய்ச்சியை அதிகரிக்க ரூ.1 லட்சம் கோடி அளவில் நிதிஒதுக்கீட்டை மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது அறிவியல் துறைக்கு நிதி ஒதுக்கீடை அரசு குறைத்துள்ளது - அடிப்படை அறிவியல் ஆய்வுக்கு கூட ஆதரவுவளிப்பது இல்லை என விஞ்ஞானிகள் மத்தியில் கவலையை எழுப்பியுள்ளது.
"ஆராய்ச்சியைத் தூண்டும் எந்தவொரு பெரிய முதலீடும் வரவேற்கத்தக்கது" என்று கல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் பார்த்தா மஜூம்தார் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், “ஆனால் அரசாங்கம் ஏன் தனியார் துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மட்டும் ஊக்குவிக்க விரும்புகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பட்ஜெட்டை ஒரே நேரத்தில் சீராக அதிகரித்திருந்தால் அதை நான் பெரிதும் வரவேற்பேன்,” என்றும் அவர் கூறினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான செலவீனத்தில் 1.2% அதிகரிப்பையும், சுகாதார ஆராய்ச்சிக்கான செலவீனத்தில் 0.7% அதிகரிப்பையும், உயிரித் தொழில்நுட்பத் துறைக்கான நிதியில் 16% நிதிவெட்டையும் இடைக்கால பட்ஜெட் முன்மொழிகிறது.
"பணவீக்க விகிதத்துடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பானது அதிகரிப்பே இல்லை; அது நிதிவெட்டுதான்" என்று ஐஐஎஸ்இஆர் கல்கத்தாவின் இயற்பியல் பேராசிரியர் அயன் பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் "இவ்வாறிருக்கையில் பங்கு முதலீடு (corpus money) எங்கிருந்து வரும்?" என்றார்.
பயோடெக்னாலஜி துறையின் செயலாளரான ராஜேஷ் கோகலே பத்திரிகையாளரிடம் கூறுகையில், கோவிட் தொடர்பான சில ஆய்வுகள் முடிவடைந்ததால் உயிரி தொழில்நுட்பத்திற்கான செலவு குறைக்கப்பட்டுள்ளது.
முந்தைய பட்ஜெட்டில், தேசிய கல்விக் கொள்கையின் (NEP) பரிந்துரைகளுக்கு ஏற்ப தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை (NRF) ஸ்தாபிப்பதற்கு ரூ.50,000 கோடி நிதிஒதுக்கீடை அரசாங்கம் முன்மொழிந்திருந்தது. இருப்பினும், இந்த முன்மொழிவின் கூறுகள் இன்றுவரை தெளிவாக இல்லை.
அனைத்து அமைச்சகங்களையும் ஈடுபடுத்தும் நோக்குடன், NRF வாரியத்தின் தலைமை அதிகாரியாக பிரதமர் செயல்படுவார்; மத்திய அறிவியல் - தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர், NRF-ன் துணைத் தலைவர்களாக செயல்படுவர்என மத்திய அரசு அறிவித்தது.
NRF-ன் அரசியல் தலைமை குறித்து விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர். மோடி அரசு, பஞ்ச-கவ்யம், 'இந்திய பாரம்பரிய அறிவு' போன்ற மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் செயல்பட்டது தொடர்பான அபாயத்தை சுட்டிக் காட்டினர்.
2022 இல் வெளியிடப்பட்ட நிதி ஆயோக் ஆய்வின்படி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான (R&D) செலவினங்கள் உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைவு.
R&Dக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5%க்கும் குறைவாக நிதி ஒதுக்குவது போதாது என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
முன்னதாக டாட்டா சன்ஸ் நிறுவன குழுமத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், கண்டுபிடிப்புத் தலைவராகவும் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் (இந்திய) ஆய்வு மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும் இருந்த கோபிசந்த் கத்ரகடா, “ஜிடிபியில் 0.5% சதவிகிதமோ அல்லது அதைவிட குறைவாக நிதி ஒதுக்குவதை விட ஆர் & டிக்காக எதையும் செலவிடாமல் இருப்பதே மேலானது” என்று இந்துஸ்தான் டைம்ஸிடம் கூறினார்.
மேலும் அவர், "நிதி ஒதுக்கீடு இவ்வளவு குறைவாக இருந்தால் எந்த பயனும் இருக்காது. நமது R&D செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆக வேண்டும்”, "ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம்" என்றும் பங்குமுதலீடு குறித்து குறிப்பிடுகிறார்.
- வெண்பா (தமிழில்)