வக்ஃப் சட்ட முடிவு அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு கிடைத்த வெற்றி என முஸ்லிம் அமைப்புகள் புகழாரம்
தமிழில்: வெண்பா

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், மனுதாரர்களின் முக்கிய வாதங்களில் சில "பெருமளவிற்கு" ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், வாரியம் தனது 'வக்ஃப் வாரியத்தை காப்போம்' பிரச்சாரத்தைத் தொடரும் என்று கூறியுள்ளது.
வக்ஃப் (திருத்த) சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையை தீர்மானிக்கும் மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்படும் வரை, அதன் மூன்று முக்கியப் பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் முடிவை முன்னணி முஸ்லிம் அமைப்புகள் "கவனத்துடன்" வரவேற்றுள்ளன.
ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானி, "நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இடைக்கால நிவாரணம், நம் நாட்டில் நீதி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்ற எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கருப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் வரை ஜமியத் உலமா-இ-ஹிந்த் தனது சட்டப்பூர்வ மற்றும் ஜனநாயகப் போராட்டத்தைத் தொடரும்," என்றார்.
திருத்தப்பட்ட வக்ஃப் சட்டம், "சமத்துவத்திற்கான உரிமையையும், எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தையும் வழங்கிய அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல்" என்று திரு. மதானி கூறினார். மேலும், இந்த இடைக்கால நிவாரணம் "அரசியலமைப்பின் ஆன்மாவுக்குக் கிடைத்த வெற்றி" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் (AIMPLB) செய்தித் தொடர்பாளர் சையத் காசிம் ரசூல் இலியாஸ் ஊடகங்களிடம் பேசுகையில், மனுதாரர்களின் சில முக்கிய வாதங்கள் நீதிமன்றத்தால் "பெருமளவிற்கு" ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், வாரியம் தனது 'வக்ஃப் வாரியத்தை காப்போம்' பிரச்சாரத்தைத் தொடரும் என்றார்.
திரு. இலியாஸ் கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, சொத்துரிமைகளைப் பாதுகாப்பதில் நிவாரணம் அளித்துள்ளது. இறுதித் தீர்ப்பு வரும் வரை வக்ஃப் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவோ அல்லது அதிகாரப்பூர்வ பதிவுகளில் மாற்றங்கள் செய்யவோ முடியாது. சட்டத்தின் 3C பிரிவின் செயல்பாட்டிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், ஒரு வக்ஃப் வாரியத்தை உருவாக்க யாருக்குத் தகுதி உள்ளது என்பதை ஒருதலைபட்சமாக முடிவு செய்யும் அதிகாரம் அரசு அதிகாரிக்குக் கிடையாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது," என்றார்.
வக்ஃப் சட்டத்தின் மீதான உச்ச நீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்திற்கு ஒரு நல்ல அறிகுறி, என்கிறார் கிரண் ரிஜிஜு.
"மத நிர்வாகத்தில் வெளிப்புறத் தலையீடுகள் குறித்த அபாயமான கவலைகளை" நீதிமன்றம் நிவர்த்தி செய்துள்ளது. மேலும், மத்திய வக்ஃப் கவுன்சிலில் (மொத்தமுள்ள 22 உறுப்பினர்களில்) நான்கு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது" என்று அவர் கூறினார். "ஒருவர் வக்ஃப் வாரியத்தை உருவாக்க, குறைந்தது ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தைப் பின்பற்றி வருகிறார் என்பதைக் காட்ட வேண்டும் என்ற தன்னிச்சையான நிபந்தனைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது," என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், முழு திருத்தத்தையும் நீதிமன்றம் ரத்து செய்யாதது குறித்து AIMPLB செய்தித் தொடர்பாளர் அதிருப்தி தெரிவித்தார். "இந்த முழுத் திருத்தமும் வக்ஃப் சொத்துக்களைப் பலவீனப்படுத்தவும் கைப்பற்றவும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு நகர்வு என்று வாரியம் கருதுகிறது. வக்ஃப் (திருத்த) சட்டம் 2025-ஐ முழுமையாக ரத்து செய்து, முந்தைய வக்ஃப் சட்டத்தை மீண்டும் கொண்டு வர நாங்கள் கோருகிறோம். முழு சட்டத்திற்கும் தடை விதிக்க மறுத்ததால், 'பயன்பாட்டின் அடிப்படையிலான வக்ஃப்' அங்கீகாரத்தை நீக்குவது மற்றும் இஸ்லாமிய சட்டத்தின் கோட்பாடுகளுக்கு எதிரான வக்ஃப் பத்திரத்தை கட்டாயமாக்குவது உள்ளிட்ட பல தீங்கு விளைவிக்கும் பிரிவுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன," என்று அவர் கூறினார்.
வக்ஃப் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு எங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிறது: எதிர்க்கட்சிகள்
முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான அகில இந்திய மஜ்லிஸ்-இ-முஷாவரத்தின் செயல் தலைவர் நவைத் ஹமீத், “இந்தத் தீர்ப்பு பாஜகவின் அரசியலமைப்பிற்கு விரோதமான நகர்வுகளுக்கு ஆதரவளிப்பது, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுக்கு ஒரு நினைவூட்டலாகும்" என்று கூறினார்.
வக்ஃப் சொத்தின் நிலையை மாவட்ட ஆட்சியர் அல்ல, வக்ஃப் தீர்ப்பாயம் தான் முடிவு செய்யும் என்பதை அவர் வரவேற்றார். மேலும், "வக்ஃப் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஒரு முஸ்லிமாகவே தொடர்வார்" என்பது குறித்தும் அவர் திருப்தி தெரிவித்தார்.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.thehindu.com/news/national/muslim-bodies-call-waqf-decision-victory-of-constitutions-spirit/article70052984.ece
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு