காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது: ஐ.நா. விசாரணை
தமிழில்: வெண்பா

காசா (குட்ஸ் நியூஸ் நெட்வொர்க்) - காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்று முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகால குண்டுவீச்சு, படுகொலைகள், கட்டாய இடப்பெயர்வு, உதவிகள் நிறுத்தம், பட்டினி ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதி மீதான ஐ.நா. சுதந்திர சர்வதேச விசாரணை ஆணையம், இனப்படுகொலை நோக்கத்திற்கான தங்களது விசாரணைகளுக்கு வழிவகுத்த "சூழ்நிலைச் சான்றுகள்" இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
2023-ல் போர் தொடங்கியதிலிருந்து, சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முடிவு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக அந்த புதிய அறிக்கை கூறுகிறது: ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, அவர்களுக்குக் கடுமையான உடல் மற்றும் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது, ஒரு குழுவை அழிக்கும் நோக்குடன் வேண்டுமென்றே நிலைமைகளை உருவாக்குவது, பிறப்புகளைத் தடுப்பது.
"காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் இனப்படுகொலை நோக்கம் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கும் உள்ளது என இந்த ஆணையம் முடிவு செய்கிறது" என்று அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் உள்ளிட்டோரையும் இந்த அறிக்கை பொறுப்பாக்குகிறது; அவர்களின் அறிக்கைகள் மற்றும் அவர்கள் வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் அவர்களை அடையாளம் காட்டுகிறது.
இருப்பினும், இந்த விசாரணையின் முடிவுகளை X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் "போலியானது" என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது, மேலும் அறிக்கையை வெளியிட்டவர்கள் "ஹமாஸின் பதிலாள்களாகச் செயல்படுகிறார்கள்" என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதி மீதான சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் அனைத்து மீறல்களையும் விசாரிப்பதற்காக 2021-ல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் சுதந்திர சர்வதேச விசாரணை ஆணையம் நிறுவப்பட்டது.
இந்த மூன்று நபர் நிபுணர் குழுவிற்கு, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவரும், முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் தலைவருமான நவி பிள்ளை தலைமை தாங்குகிறார். இவர் ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான சர்வதேச தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல சர்வதேச மற்றும் இஸ்ரேலிய மனித உரிமை அமைப்புகள், சுதந்திர ஐ.நா. நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் பலரும், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்று அடித்து கூறுகின்றனர்.
இதற்கிடையில், சர்வதேச நீதிமன்றம் (ICJ), இஸ்ரேலியப் படைகள் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டி தென்னாப்பிரிக்கா தொடுத்துள்ள வழக்கை விசாரித்து வருகிறது.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://countercurrents.org/2025/09/israel-has-committed-genocide-in-gaza-un-inquiry/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு