இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கிடையில் போடப்பட்ட ஓஸ்லோ உடன்படிக்கை என்பது என்ன?

ஓஸ்லோ உடன்படிக்கை கையெழுத்தாகி முப்பதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. வாக்குறுதியளிக்கப்பட்ட சமாதான நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரவில்லை.

இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கிடையில் போடப்பட்ட ஓஸ்லோ உடன்படிக்கை என்பது என்ன?

Disclaimer: செந்தளம் வலைதள அரசியல் நிலைப்பாட்டில் இருந்து விமர்சனத்துடன் வாசிக்குமாறு கோருகிறோம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் முப்பதாண்டுகளுக்கு முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் மிக முக்கியமான உடன்படிக்கையாக ஒஸ்லோ உடன்படிக்கை கருதப்படுகிறது. இஸ்ரேலைச் சேர்ந்த யிட்சாக் ராபின் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த யாசர் அராபத் ஆகியோர்களே இந்த ஒப்பந்தந்தில் கையெழுத்திட்டுள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையை ஒப்புக்கொண்டதை உணர்த்தும் வகையில் இருநாட்டுத் தலைவர்களும் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் முன்னிலையில் கைகுலுக்கிக்கொண்டனர். சமாதானத்தை இரு தரப்பும் பரஸ்பரம் வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்த நிகழ்வைத் தொடர்ந்து, கையெழுத்திட்ட இருநாட்டுத் தலைவர்களுடன் சேர்ந்து அப்போது இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சராக இருந்த ஷிமோன் பெரஸுக்கும் அடுத்த ஆண்டே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால், உடன்படிக்கைகளில் செய்யப்போவதாகச் சொன்ன சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. பாலஸ்தீனிய மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் இஸ்ரேல் அரசின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு நீடிக்கவே செய்தது. மேலும் பாலஸ்தீனிய மக்களுக்கென்று தனியொரு அரசு அமைக்கப்படுவதற்கான பேச்சுக்கூட துவங்கப்படவில்லை. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் பற்றியும், அது ஏன் தோல்வியடைந்தது என்பது பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் பின்வருமாறு:

ஓஸ்லோ உடன்படிக்கை என்பது என்ன?

ஒஸ்லோ I என அழைக்கப்படும் முதல் ஒஸ்லோ ஒப்பந்தம் செப்டம்பர் 13, 1993-இல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் முதன்முறையாக பாலஸ்தீன  தரப்பிலிருந்த தலைமைகளையும், இஸ்ரேலிய தரப்பிலிருந்த தலைமைகளையும் பரஸ்பரம் அங்கீகரித்ததோடு, பல பத்தாண்டுகளாக நீடித்துவந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாக்குறுதியையும் அளித்தது.

ஒஸ்லோ II என அழைக்கப்படும் இரண்டாவது ஓஸ்லோ ஒப்பந்தம், செப்டம்பர் 1995 இல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் சமாதான நடவடிக்கைகளை எவ்வாறெல்லாம் செயல்படுத்தலாம் என்றும் அதன் அம்சங்கள் குறித்தான கூடுதல் விவரங்களையும் வழங்கியது.

பாலஸ்தீனிய மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு இஸ்ரேலிய மக்களுடன் ஒன்றிணைந்த ஒற்றை பாலஸ்தீனிய அரசை நிறுவுவதே ஒஸ்லோ உடன்படிக்கையின் முதன்மை நோக்கமாகும். காலங்காலமாக பாலஸ்தீனியர்களுக்கே உரிமைப்பட்டதாயிருந்த அவர்களின் சொந்த மண்ணில் 1948-இல் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் அரசு (பாலஸ்தீனியர்களால் நக்பா என்று அழைக்கப்படும் நிகழ்வு) பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை அங்கீகரிக்கும் என்பதே இதன் பொருள். இருப்பினும், இந்த உரிமைகளும்கூட காலங்காலமாக பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வந்த ஒரு சில குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மீதமுள்ளவை இஸ்ரேலின் இறையாண்மையின் கீழ்தான் இருக்கும் என்றும் ஒப்பந்தம் கூறுகிறது.

இந்த இலக்கை அடைய, ஒப்பந்தங்களில் பல வழிமுறைகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்துன. 1967ல் இருந்து சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் படிப்படியாக வெளியேறுவது, அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனிய தலைமைகளின் கீழ் நிர்வாக அதிகாரம் மாற்றப்படுவதும் இதில் அடங்கியிருந்தது. இருந்தபோதிலும், ஜெருசலேம் யாருக்குரியது என்பதிலும் (கிழக்கிலுள்ள பாதி பாலஸ்தீனிய நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது), இஸ்ரேலிய அரசின் சட்டவிரோத குடியேற்றங்கள் போன்ற பிரச்சினைகளுக்கும் எதிர் வருங்காலங்களில் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகாண்பது என்று இடைக்காலமாக முடிவெடுக்கப்பட்டது.

உடன்படிக்கையின்படி பாலஸ்தீனிய அதிகார சபை (PA) உருவாகுவதற்கு வழிவகுத்தது, இது மூன்றாகப் பிரிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பகுதி  A மற்றும் B யில் நிபந்தனைகளுக்குட்பட்ட முறையில் ஆட்சி செய்வதற்கான ஒரு தற்காலிக அமைப்பாகும். இருப்பினும், உடன்படிக்கையின்படி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும்கூட இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.

இன்று, ஓஸ்லோ ஒப்பந்தங்கள் தங்கள் நோக்கங்களில் தோல்வியடைந்துவிட்டதாகவே பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலான பிரதேசங்களை இஸ்ரேல் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோடு, சுதந்திரமான பாலஸ்தீன அரசையும் ஏற்கவில்லை. போர் நடந்துவரும் சமயத்திலும்கூட பாலஸ்தீனியர்கள்  தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர்.

இந்த உடன்படிக்கைகளை எதிர்த்தவர்கள் யார்?

இந்த ஒப்பந்தத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பாலஸ்தீனியர்களுக்கு சலுகைகளை வழங்க விரும்பாத வலதுசாரி இஸ்ரேலியர்கள், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடனான (PLO) எல்லாவித உடன்படிக்கைகளுக்கும் எதிராக போராடத் துவங்கினர். PLO ஒரு "பயங்கரவாத அமைப்பு" என்று அவர்கள் முத்திரை குத்தினார்கள். இஸ்ரேலிய பகுதிகளிலிருந்து குடியேறிய மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படுவதற்கே இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று அவர்கள் பீதியைக் கிளப்பினர்.

1995 இல் இரண்டாவது ஓஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ராபின் படுகொலைக்கு பிறகு இந்த எதிர்ப்பு மிகவும் தீவிரமாக எழத் துவங்கியது. இஸ்ரேலைச் சேர்ந்த யிட்சாக் ராபின் இறப்பதற்கு முன்பு, அவரின் உயிருக்கு அச்சுறுத்தலாக கருதப்பபட்ட இடாமர் பென்-க்விர் தான், தற்போது இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறார்.

பாலஸ்தீனிய தரப்பில், ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் உள்ளிட்ட குழுக்கள் இரு நாடுகளின் உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது சொந்த மண்ணிலே அகதிகளாக்கப்பட்டு பாலஸ்தீனிய மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவர்களின் பூர்வீக பகுதிகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான உரிமையை இந்த ஒப்பந்தம் மறுக்கிறது என்று அவர்கள் உறுதியாக நம்பினர். பாலஸ்தீனியத்தில்  கலை விமர்சகராகவும், செயல்பாட்டாளராகவும், நன்கு அறியப்பட்ட அத்தேசத்து மக்களின் விமர்சனக் குரலாக ஓங்கி ஒலித்து வந்தவருமான எட்வர்ட்  என்பவர், " முதலாம் உலகப் போரின் முடிவில் ஜெர்மனிக்கு எதிராக போடப்பட்ட வெர்சைல்ஸ் ஒப்பந்தம் போல பாலஸ்தீனியர்களை மண்டியிட வைப்பதற்கான கருவியாக உருவாக்கப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம் ஒரு பாலஸ்தீனிய வெர்சைல்ஸ்" என்று விவரித்தார்.

இதையும் படிக்கலாம்: ஓஸ்லோ உடன்படிக்கை : இறந்தே பிறந்த குழந்தை

உடன்படிக்கை எவ்வாறு முறிந்தது?

பாலஸ்தீனிய மண்ணில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தது; மேற்குக் கரையின் பெரும் பகுதியிலிருந்து இராணுவத்தை திரும்பப் பெறுவதற்கு மறுத்தது; பாலஸ்தீனிய ஆட்சிக்குட்பட்ட முழுமையான நிர்வாகத்தின் கீழ் இருந்த வாழிடங்களில்கூட இஸ்ரேலிய ராணுவத்தின் கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் தொடர்ந்து நடத்தேறி வந்ததால், ஒஸ்லோ ஒப்பந்தங்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டன.

ராபினின் மரணத்திற்குப் பிறகு, தற்போதைய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஏரியல் ஷரோன் உட்பட, உடன்படிக்கைகளை எதிர்த்த பல இஸ்ரேலிய தலைவர்கள் ஆட்சிக்கு வந்தனர். 2000 முதல் 2005 வரையில் நடந்த இரண்டாவது இன்டிப்தா எனப்படும் பாலஸ்தீனிய மக்களின் எழுச்சி இயக்கம்  பெரும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. அதன்பிறகு, இரு தரப்பிலுமே குறிப்பாக பாலஸ்தீனிய தரப்பில் ஒப்பந்தத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த முனைப்பு காட்டப்படவில்லை.

ஓஸ்லோ உடன்படிக்கைகள் இப்போது எவ்வாறு பார்க்கப்படுகிறது?

பத்தாண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முயற்சிகளும் தோல்வியடைந்தன. மேலும் ஒப்பந்தங்களில் இடைக்காலத் தீர்வாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஷரத்துகளே நிரந்தரத் தீர்வாக மாறிவிட்டன. மேற்குக் கரையில் இஸ்ரேலிய அரசு சட்டவிரோதமாக நடத்தி வந்த குடியேற்ற நடவடிக்கைகளை சட்டப்படி விரிவுபடுத்துவதற்கான கருவியாக ஒஸ்லோ உடன்படிக்கையை இஸ்ரேல் பயன்படுத்திக் கொண்டது என்பதாகவே பல பாலஸ்தீனியர்கள் நம்புகின்றனர்.

ஒஸ்லோ ஒப்பந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்ததால், இஸ்ரேலும் தனது பங்கிற்கு குடியேற்றத்திற்கு வேண்டிய உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மூன்று மடங்காக உயர்த்தியது. 1993 மற்றும் 2000 க்கு இடையில் மட்டும், மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய மக்கள்தொகையின் எண்ணிக்கை மிகவேகமான வளர்ச்சியை எட்டியது என்று இஸ்ரேலிய அமைதி பிரச்சாரகர் Dror Etkes கூறுகிறார்.

இன்று, இஸ்ரேலிய அரசாங்கத்தில் தீவிர வலதுசாரி சக்திகள், மதவாத மற்றும் தீவிர தேசியவாத அரசியல்வாதிகளே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பாலஸ்தீனிய பகுதிகளில் குடியேற்றத்தை புகுத்தி வருபவர்களுக்கு இவர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. சில மாதங்களுக்கு முன்புதான், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான புதிய வீடுகள் கட்டுவதற்கு அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளில் சட்ட விரோத குடியேற்றத்தை அதிகரிக்கும் வகையில்  இந்தாண்டு ஜனவரியிலிருநது 12,855 வீடுகளுக்கு அனுமதியளித்து  இஸ்ரேல் அரசு புதிய சாதனையை படைத்துள்ளது  என்று Peace Now என்ற இஸ்ரேலிய இடதுசாரி இயக்கம் கூறியுள்ளது.

முப்பது ஆண்டுகளுக்குப் மேல் ஆகிவிட்டது, பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய தலைவர்களுக்கு இடையிலான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியடைந்தே வந்துள்ளது. பாலஸ்தீனிய அரசு உருவாக்கத்திற்கான முன்னெடுப்புகள் என்பது குறுகிய காலத்திலோ அல்லது அதற்கு பிந்தைய காலத்திலோ கூட சாத்தியமில்லை என்பதாகவே தெரிகிறது. மேற்குக் கரை மீதான அதிகாரமும் இங்கொன்றும் அங்கொன்றுமாக உள்ளது. "திறந்தவெளி சிறைச்சாலை" என்று பலர் அழைக்கும் அளவுக்கு காசா பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலை பொறுத்தமட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமைக் விட்டுக்கொடுக்கும் திட்டம் இல்லை. அனைத்து பிரச்சினைக்குமான தீர்வாக பார்க்கப்பட்டட தனித்தனி அரசுகள் அமைப்பதற்கான திட்டமும்கூட இனி எக்காலத்திலும் நடைமுறைக்கு வரப்போவதில்லை என்றே இஸ்ரேலிய பாலஸ்தீன மக்கள் பலரும் நம்புகிறார்கள்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை : https://www.aljazeera.com/news/2023/9/13/what-were-oslo-accords-israel-palestinians