சீனா உலகிற்கே அச்சுறுத்தலா?

லண்டன் பிரதமர் வேட்பாளர் இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் பேச்சு

சீனா உலகிற்கே அச்சுறுத்தலா?

உலகிற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக திகழ்கிறது சீனா என லண்டன் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார். போரிஸ் ஜான்சன் ராஜினாமாவிற்கு பிறகு நடைபெறும் பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் முன்னணி வகிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வேட்பாளரான ரிஷி சுனாக் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது இவ்வாறு கூறியுள்ளார்.

சீனாவும், சீன பொதுவுடைமை கட்சியும் பிரிட்டனின் பாதுகாப்புக்கும் உலகின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

பிரிட்டனில் செயல்பட்டு வரும் 30-க்கும் மேற்பட்ட கன்பூசியஸ் கல்வி நிறுவனங்கள் சீன மொழியான மண்டரினை பயிற்றுவிப்பதன் மூலம் சீன கலாச்சார பின்னணியில் தனது ஏகாதிபத்திய நலன்களை வளர்க்கிறது என்று குற்றம் சாட்டிய ரிஷி சுனாக் தான் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த நிறுவனங்களை இழுத்து மூடப்போவதாகவும் தெரிவித்தார். சீனாவின் அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்களை சமாளிப்பதற்கு ஒரு சர்வதேச கூட்டமைப்பை உருவாக்குவது மற்றும் லண்டன் உளவுத்துறையான MI5-ன் செயல்பாடுகளை துரிதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் தான் அதிக கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளரின் இந்த பேச்சு மொத்த தேர்தல் பிரச்சாரத்தின் திசை வழியையே திருப்பியுள்ளது. லண்டனின் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி இவைகளை காட்டிலும் சீன ஏகாதிபத்தியம் பற்றிய வேட்பாளரின் நிலைப்பாடு என்ன என்பது பற்றிய ஆவல் மக்களிடம் மேலோங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- செந்தளம் செய்திப் பிரிவு