அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய திட்டத்தை வெளியிட்ட பிரிக்ஸ்
வெண்பா (தமிழில்)
அமெரிக்க டாலருக்குப் பதிலீடாக பிரிக்ஸ் வகுத்துள்ள திட்டம், ரஷ்யா 2025 மாஸ்கோ நிதி மன்றத்தை (Moscow Financial Forum) நடத்தியபோது, தீவிரமான உத்வேகம் பெற்றது. அப்போது பிரிக்ஸ், பிரத்யேக விலைமதிப்பற்ற உலோக பரிமாற்ற மையத்தை (precious metals exchange) அறிவித்தது. இந்த தளமானது, தங்கம், பிளாட்டினம், வைரங்கள் மற்றும் அருமண் தாதுக்கள் மூலம் நாடுகள் தங்களது பரிவத்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இதன் மூலம் லண்டன் உலோகப் பரிமாற்றம் (London Metal Exchange) மற்றும் ஸ்விஃப்ட் (SWIFT) போன்ற மேற்கத்திய அமைப்புகளை முழுவதுமாகத் தவிர்க்க முடியும்.
அமெரிக்க டாலரை மாற்றுவதற்கான பிரிக்ஸ் திட்டமானது, உலகளாவிய அருமண் தாதுக்களின் இருப்புகளில் (rare earth metal reserves) 72% கட்டுப்பாட்டை பிரிக்ஸ் கூட்டமைப்பு கொண்டிருப்பதை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்துகிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்கது. பழைய முறையிலான காகித நாணயத்தை (traditional fiat currency) புதிதாக அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, பிரிக்ஸின் புதிய நாணய அணுகுமுறையானது வள மேலாதிக்கம் (resource dominance), தங்கத்தின் உண்மையான கையிருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 68% வர்த்தகம் டாலரைத் தவிர்த்து நடைபெறுவதாலும், அமெரிக்க டாலர் 1973-க்குப் பிறகு அதன் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாலும், பிரிக்ஸ் அமெரிக்க டாலரை மாற்ற முடியுமா என்ற கேள்வி இனி வெறும் கோட்பாட்டு ரீதியானது அல்ல.
டாலர் நீக்கமும் (De-Dollarization) புதிய நாணய நடவடிக்கைகளும் டாலருக்கு சவால் விடுகின்றன.
விலைமதிப்பற்ற உலோகங்கள் பரிவர்த்தனை உத்தி
இந்த விலைமதிப்பற்ற உலோகங்கள் பரிமாற்ற மையம், முக்கியமான பண்டங்களுக்கான (critical commodities) சுதந்திரமான விலை நிர்ணயத்தை (independent pricing) நிறுவுகிறது. பல தசாப்தங்களாக, லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் (London Bullon Market Association), வெளிப்படைத் தன்மையற்ற பிரிட்டிஷ் வங்கிகள் மூலம் தங்கத்தின் விலையை நிர்ணயித்து வந்தது. உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யா உலகளவில் ஐந்தாவது பெரிய தங்க இருப்பை வைத்திருந்தபோதிலும், இந்த அமைப்பிலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டது.
அமெரிக்க டாலரை மாற்றுவதற்கான பிரிக்ஸ் திட்டமானது, வெளிப்படையான சந்தை வர்த்தகம் மற்றும் உண்மையான பரிவர்த்தனைகளின் அடிப்படையில் தமக்கான சொந்த பரிமாற்ற மையத்தை உருவாக்குவதை உள்ளடக்கியது. இந்த தளமானது, சீனாவின் CIPS நிதிபரிவத்தனை அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது. ஸ்விஃப்ட்டின் (SWIFT) உதவி தேவைப்படாத, நாடு கடந்த பரிவர்த்தனைகளை இது அனுமதிக்கிறது. இந்தப் பரிமாற்றத்தின் வர்த்தக அளவு, மேற்கத்திய வர்த்தகத் தடைகளை பொருத்தமற்றதாக ஆக்கும். மேலும், அரசியல் தலையீடுகளுக்கு அஞ்சாமல், நாடுகள் இந்த சந்தைகளை அணுக முடியும்.
வளங்களின் மீதான மேலாதிக்கம் இந்த மாற்றத்திற்கு ஆதரவளிக்கிறது
பிரிக்ஸ் கூட்டமைப்பு அருமண் தாது இருப்புகளில் 72% ஐ கட்டுப்படுத்துவதுடன், உலகளவில் அவற்றில் 75% ஐ பதப்படுத்துகிறது. இது அவற்றுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கை (substantial leverage) அளிக்கிறது. இந்தக் கூட்டமைப்பு 70% கோபால்ட், EV பேட்டரிகளுக்கான 50% நிக்கல், அதிவேக ஏவுகணைகளுக்கான (hypersonic weapons) 91% நியோபியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தற்போது, உலகின் நியோபியம் விநியோகத்தில் 98% ஐ பிரேசில் உற்பத்தி செய்கிறது. மேலும் பிரிக்ஸ், உலகளாவிய எண்ணெயில் 40%, தானிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு, 12,500 டன்களுக்கு மேல் தங்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
வெளிநாட்டு மத்திய வங்கிகளின் (foreign central banks) தங்க இருப்புகளை ஷாங்காய் தங்கப் பரிமாற்றகம் (Shanghai Gold Exchange) மூலம் வைத்திருக்க சீனா இப்போது முன்வருகிறது. 2022 இல் அமெரிக்கா ரஷ்யாவின் 300 பில்லியன் டாலர்களை முடக்கிய பிறகு, பிரிக்ஸின் இந்த புதிய நாணயக் கட்டமைப்பு (new currency framework), மாற்று வழிகளைத் தேடும் நாடுகளை ஈர்க்கிறது. பிரிக்ஸ் அமெரிக்க டாலருக்குப் பதிலீடு செய்ய முடியுமா என்பது, இந்த வள ஆதிக்கம் (resource stranglehold) மற்றும் பழைய அமைப்புகளிலிருந்து விலகிச் செல்ல விரும்பும் நாடுகளையே பெரிதும் சார்ந்துள்ளது.
டாலரின் சரிவு வேகமெடுக்கிறது
டாலர் அரை ஆண்டுக்குள் 10 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்தது. 1973 இல் தங்க அளவுகோல் கைவிடப்பட்ட பின்னர் இதுவே மிக மோசமான வீழ்ச்சியாகும். பிரிக்ஸ் டாலர் நீக்க (de-dollarization) நடவடிக்கைகளால், 68% வர்த்தகத்தில் டாலர் இடம்பெறவில்லை. மேலும் ரஷ்யா-சீனா வர்த்தகத்தில் 90% உள்நாட்டு நாணயங்களைப் பயன்படுத்துகின்றன. உலகளாவிய டாலர் இருப்புக்கள் 58 ஆகக் குறைந்துள்ளன. இது 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய சரிவாகும்.
படிக்கவும்: பிரிக்ஸ் கூட்டமைப்பால் டாலர் ஆதிக்கத்தை வீழ்த்த முடியுமா? - சமரன் கட்டுரை
இதை எழுதும்போது, ஒரு அவுன்ஸ் தங்கம் 3,900 டாலருக்கு வர்த்தகமானது. ஆனால் கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) இது 5000 ஆக உயரும் என்று கணித்துள்ளது. சவுதி அரேபியா இப்போது 12 சதவீதம் எண்ணெய் வர்த்தகத்தை யுவானில் ஏற்றுக்கொள்கிறது. தங்க அளவுகோல் மற்றும் புதிய நாணய வழிமுறைகள் டாலரின் ஆதிக்கத்தை அழித்து வருகின்றன. வளர்ந்து வரும் நாடுகளில் டாலர் நீக்க முயற்சி வேகம் பெறுவதாலும், இந்த போக்குகள் துரிதப்படுத்துவதாலும், பிரிக்ஸ் அமெரிக்க டாலருக்குப் பதிலீடு செய்யுமா என்பது மேலும் மேலும் நம்பத்தகுந்ததாகிறது.
ஆப்பிரிக்காவும் வளர்ந்து வரும் சந்தைகளும் இணைகின்றன
ஆப்பிரிக்க நாடுகள் இந்த விலைமதிப்பற்ற உலோக பரிமாற்ற மையத்திற்கும் (precious metals exchange) கட்டமைப்பிற்கும் ஆதரவாக அணிவகுத்து நிற்கின்றன. லாங்கன்ஜோ (Longanjo) எனப்படும் அங்கோலா அருமண் திட்டம், 80 மில்லியன் டாலர் மதிப்புடையது. இது மின்சார வாகனங்கள் மற்றும் காற்றாலை விசையாழிகளில் (wind turbines) உலகின் காந்த உலோகத் தேவையில் (magnet metal requirement) 5 சதவீதத்தை வழங்கும். அருமண் பதப்படுத்தும் வசதிக்காக 400 மில்லியன் டாலர்களை நைஜீரியா ஏற்கனவே முதலீடு செய்துள்ளது. மேலும் அந்நாட்டின் சுரங்கத் துறை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜிடிபியில் 10% சதவீத அளவுக்கு உயரும். ஆப்பிரிக்க நாடுகள் அரசியல் செல்வாக்கிலிருந்து (political leverage) தப்பிப்பதற்காக இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்.
அமெரிக்க டாலருக்குப் பதிலீடு செய்வதற்கான பிரிக்ஸின் திட்டம், மேற்கத்திய ஆதிக்கம் செலுத்தும் மாடல்களுக்குப் பதிலாக, வளர்ச்சி மாடல்கள் மூலம் செல்வம் மாற்றப்படுவதை செயல்படுத்தும். இதனால் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடுகள் பெரிதும் பயனடையும். வள பரிமாற்ற அமைப்பு மூலம் அமெரிக்க டாலரை மாற்றுவதென்ற நோக்கத்துடன் பிரிக்ஸ் உலக நிதிபரிமாற்றத்தை மாற்றியமைக்கிறது. முக்கியப் பொருட்கள் மீதான கட்டுப்பாடு, டாலர் நீக்கம் ஆகியவை வர்த்தகத்தில் 68% சதவீதம் அளவிருக்கும் இவ்வேளையில், புதிய நாணயக் கருத்தாக்கம் மேற்கத்திய நிதி மேலாதிக்கத்திற்கு (Western financial hegemony) நேரடியான சவாலை கொடுக்கிறது.
உண்மையான பண்ட இருப்புக்கு சமமான தங்க அளவுகோலை நோக்கிய இந்த நகர்வு, உலகம் வர்த்தகம் செய்யும் விதத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த நடவடிக்கைகள் டாலரை இல்லாமலாக்கும் அளவிற்கு செல்கின்றன.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://watcher.guru/news/brics-just-unveiled-the-plan-to-replace-us-dollar-worldwide
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு